உங்கள் ஆற்றலை மேம்படுத்த உதவும் வழிகாட்டியைக் கண்டறிவது எப்படி?

வழிகாட்டி

இராமகிருஷ்ணர்-விவேகானந்தர், காந்தி-வினோபா பாவே, தோனி-கோலி என இந்திய நாடு பல சிறந்த வழிகாட்டி-மாணவ உறவுகளை பார்த்துப் போற்றியுள்ளது. எண்ணம், செயல், தியாகம் என்று சாதனைக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டு சிறந்த மனிதர்களாகத் திகழ்ந்தவர்கள், தங்கள் வழிகாட்டியிடமிருந்து நிறைய கற்று வந்துள்ளனர்.  இந்த சிறந்த மனிதர்கள் அனைவரும் தங்கள் வெற்றிக்கு காரணமாகத் தங்கள் வழிகாட்டிகளை பலமுறை குறிப்பிட்டுள்ளனர். என்னதான் மிகுந்த திறமை படைத்த மனிதராக இருந்தாலும், அவரின் திறமையை சீர்படுத்தி சரியான திசையில் செலுத்த ஒருவர் தேவைப்படுகிறார். அந்த வழிகாட்டியின் எண்ண ஓட்டமும் மாணவனின் எண்ண ஓட்டமும் ஒன்றாக இல்லை என்றாலும், மாணவனின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டு அவரை வழிநடத்தும் சிறந்த பண்பு கொண்டவராய் அந்த வழிகாட்டி அமைய வேண்டும்.

இப்படிப்பட்ட சிறந்த பண்பு கொண்ட வழிகாட்டியைக் கண்டறிவது  எவ்வாறு?

முதலில் ஒரு சிறந்த வழிகாட்டிக்கு இருக்க வேண்டிய  குணங்கள் என்னவென்று பட்டியலிடுவோம்.

நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருத்தல்

உங்கள் வழிகாட்டி உங்களது நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருத்தல் வேண்டும். உங்கள் வெற்றியைத் தன் வெற்றியாகக் கருதுபவராக இருக்க வேண்டும். அது உங்களின் நோக்கத்தை மேம்படுத்தும்.

வழிகாட்டல்

உங்கள் துறையில் சிறந்த அனுபவம் உடையவராய் இருத்தல் அவசியம். அனுபவம்தான் சிறந்த ஆசிரியர். அனுபவம் அவருக்கு கற்றுக்கொடுத்ததை, அவர் உங்களுக்குக் கற்றுத்தர வேண்டும்.

குறை தீர்த்தல்

மனதளவில் உங்களுக்கு எழும் குறைகளைத் தீர்த்து வைப்பவராக அவர் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு உங்களைப் புரிந்து வைத்திருக்கும் நபரையே நீங்கள் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உத்வேகம்

உங்கள் வழிகாட்டி உத்வேகம் உடையவராய், உங்களை ஊக்குவிப்பவராய் இருத்தல் வேண்டும். நீங்கள் சோர்ந்து போகும் போது உங்களை உற்சாகப்படுத்திட வேண்டும்.

இதெல்லாம் சரிதான், ஒரு நல்ல வழிகாட்டியைக் கண்டறிய நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

சிந்தனைத் தெளிவும், தீராத பசியும்

ஒரு துறையில், அல்லது ஒரு செயலில் உங்களுக்கு ஒரு வழிகாட்டி தேவை என்றால், வெல்வதற்கான தெளிவான சிந்தனை ஓட்டம் தேவை. தெளிவான சிந்தனை ஓட்டம், உங்களுக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிவதில் முக்கியப் பங்காற்றும். அது உங்களுக்குத் தெரிந்துவிட்டால், என்ன கற்க வேண்டும் என்று எளிதில் முடிவு செய்து உங்கள் வழிகாட்டியை நாடலாம். இது மட்டுமன்றி வேண்டியதைக் கற்கும் வரை வழிகாட்டியைப் பின்தொடரும் தீராத பசி இருந்தால், உங்களுக்கு உதவ அவருக்கும் ஒரு தூண்டுதலைத் தரும்.

உங்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் இருப்பவர்களிடம் நன்றாகப் பழகுவது

உங்களின் வழிகாட்டி, உங்களை விட வயதில் மூத்தவராக இருக்க வேண்டுமென்றோ, உங்களை விட மேல் பதவியில் இருக்க வேண்டுமென்றோ அவசியமில்லை. உங்களுக்குத் தேவையான பதிலை உங்கள் குழந்தைகூட இரண்டே நிமிடத்தில் சொல்லிச் சென்றுவிடும். எனவே, அனைவரிடமும் நல்ல உறவை வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஆர்வமிருக்கும் துறையில் இயங்கும் மனிதர்களை சமூக வலைத்தளங்கள் மூலம் கண்டுபிடித்துப் பேசிப் பழகுங்கள்.

வழிகாட்டியை நாடுவது

ஒரு மனிதரைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவரை உங்கள் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள விழைகிறீர்கள் என்றால்,  அதனைப் பற்றி, அவரிடம் பேசுவது முதல்படி. அவரிடம் பேசும் போது உங்கள் நோக்கத்தையும் தேவையையும் தெளிவாகக் கூறி, அவருக்குப் புரிய வைக்க வேண்டும். மேலும், அவரைக் கவர வேண்டும் என்பதற்காகத் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. தேவையானவற்றை மட்டும் பேச வேண்டும்.

வழிகாட்டுதல் – இரு முனை வாள்

ஒருவர் உங்களுக்கு வழிகாட்டியாக உதவ முன் வருகிறார் என்றவுடன் ஆனந்தமடைந்து அப்படியே முயற்சியை நிறுத்துவது கூடாது. ஒவ்வொரு சந்திப்பிற்குப் பின்னும், அடுத்த சந்திப்பிற்குள் என்னென்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் ஆலோசனை கேட்பது, அவர்  கூறுவதைப் பின்பற்றி அவருக்கு மரியாதை தருவது என்று அந்த உறவை சரியான திசையில் எடுத்துச் சென்று பயன்பெறுங்கள்!!

நல்ல ஒரு வழிகாட்டி சினிமாவுல மட்டுமல்ல, நிஜத்திலும் நிச்சயம் அமைவர்!

ம. சக்கர ராஜன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!