சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஃபேக் நியூஸ் பின்னே இருக்கும் அரசியலும், ஆபத்தும்! #FakeNews | Politics and dangers behind the fake news spread on social media

வெளியிடப்பட்ட நேரம்: 10:13 (17/02/2017)

கடைசி தொடர்பு:15:26 (17/02/2017)

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஃபேக் நியூஸ் பின்னே இருக்கும் அரசியலும், ஆபத்தும்! #FakeNews

நீங்கள், வாட்ஸ்அப்பிலோ அல்லது ஃபேஸ்புக்கிலோ உண்மையான தமிழனாக இருந்து, ஷேர் செய்யும் ஃபேக் நியூஸ்களால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படுகின்றன என என்றாவது யோசித்ததுண்டா? 

ஃபேஸ்புக்கில் ஃபேக் நியூஸ்

உங்களுக்கு ஒரு சிறிய உதாரணம். கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத் பகுதியில் திடீரென ஒரு போட்டோவும் செய்தியும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து நாய் மாமிசத்தை போலீசார் கைப்பற்றியதாகச் சொன்ன செய்திதான் அது. உடனே  வைரலாகிறது இந்த விஷயம். எப்போதும் கூட்டம் நிரம்பிவழியும் அளவுக்கு பிரபலமான அந்தக் கடை, அடுத்தடுத்த நாட்களில் வெறிச்சோடிப்போகிறது. சமூக வலைதளங்களில் பரவிய செய்திகளால் அதிர்ச்சியடைந்த மாநகராட்சி அதிகாரிகள், உடனே அந்த உணவகத்தின் மாதிரிகளை எடுத்து சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். இறுதியில் அந்தச் செய்தி போலியானது எனத் தெரியவருகிறது.

சில நாட்களில், இந்தப் போலியான செய்தியைப் பரப்பிய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்படுகிறார். சமூக வலைதளங்கள் வேறு வேலையைப் பார்க்கப் போய்விட்டன. ஆனால், அந்த உணவகத்தின் வியாபாரம், நம்பகத்தன்மை அனைத்துமே ஒரே நாளில் சிதைந்துவிட்டன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஒருவேளை அதேபோன்றதொரு செய்தி நம்மூரிலும் வந்திருந்தால், நாமும் இதையேதான் செய்திருப்போம். 

நீங்கள் சாதாரணமாக, ஏதோ ஒரு நொடியில் பகிரும் செய்திகளினால், மறைமுகமாக ஏற்படும் பிரச்னைகள் இப்படித்தான் இருக்கின்றன. 

ஜனகணமன பாடல் யுனெஸ்கோவால் சிறந்த தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது, பீமன் மகனான கடோத்கஜனின் நிஜமான எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது, குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் பரவிவிட்டது, திருநள்ளாறு கோயிலின் மேலே வரும்போது செயற்கைக்கோள் நின்றுவிடும், இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் தாக்கும் என நாசா அறிவிப்பு (வதந்தியால் ரொம்பப் பாதிக்கப்பட்டது நாசாவாகத்தான் இருக்கும்!), இந்தக் குழந்தையின் புகைப்படத்தை ஷேர் செய்தால் ஃபேஸ்புக் ஒரு ரூபாய் கொடுக்கும், இந்த சாமி படத்தைப் பகிர்ந்தால் நல்லது நடக்கும், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 1000 ரூபாய் நோட்டு, இந்த லிங்க்கை ஷேர் செய்தால் 3 ஜி.பி இலவச டேட்டா கிடைக்கும், மோடி இளைஞர்களுக்காக 10 ஜி.பி டேட்டா அனைவருக்கும் இலவசமாகத் தருகிறார், இலங்கைத் தமிழர்களுக்காக ஐ.நா.சபை வாக்கெடுப்பு நடத்துகிறது, 99 ரூபாய்க்கு 4G போன்...ஸ்ஸ்ஸ்..படிக்கும் போதே கண்ணைக் கட்டுதா? இது எல்லாமே இன்னும் கூட பரப்பப்பட்டுக்கொண்டிருக்கும் வதந்திகள். இவற்றுள் பாதி வதந்திகளுக்கு, குறைந்தது ஐந்து வயது இருக்கும்.

இவற்றில் பெரும்பாலானவற்றைப் பார்த்தால் 'அட...இதையெல்லாம் பார்த்தாலே பொய்ன்னு தெரியுதே... இதை எல்லாம் படிக்காத பாமரர்கள்தான் பரப்புவாங்க'ன்னு நீங்கள் கேட்கலாம். ஆனால், இதனை பாமரர்கள் மட்டுமல்ல, மெத்தப் படித்த மேதாவிகளே இதனைப் பரப்புகின்றனர் என்பதுதான் வேதனை. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் க்ரூப்களில் இருக்கும் அனைவருமே இதனை ஒருமுறையாவது பார்த்திருப்பீர்கள். 

Fake News

இவையெல்லாம் ஒருவகையான உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் கட்டுக்கதைகள் என்றால், இன்னொரு பக்கம் அதிர்ச்சியை அளிக்கும் செய்திகளும் பரவிவருகின்றன. தடுப்பூசி போட்டால் ஆபத்து, 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது, புதிய 1000 ரூபாய் நோட்டுக்கள் போன்றவை எல்லாம் இந்த ரகத்தில் அடங்கும். இதனை நிஜமாகவே நம்புபவர்கள் நிலையை என்றாவது எண்ணிப்பார்த்தீர்கள் என்றால், இதன் ஆபத்து புரியும். இதற்கு சரியான உதாரணம் 10 ரூபாய் நாணயம் தொடர்பான செய்தி. ஏற்கெனவே உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என நிஜமாகவே அறிவித்து மக்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது மத்திய அரசு.

அதற்கடுத்த சில நாட்களில் 10 ரூபாய் நாணயமும் செல்லாது என செய்தி வந்தால் அவர்கள் மனம் எப்படி இருக்கும்? உடனே நம்பிவிடுவார்கள் இல்லையா? அப்படி நடந்தவைதான் 10 ரூபாய் நாணயங்களை பலரும் வாங்க மறுத்த சம்பவங்கள். உடனே அது தொடர்பாக அரசு தெளிவுபடுத்த, பிரச்னை முடிந்தது. உண்மை என்ன என்று அறியாமல், யார் அனுப்பினார்கள் என்றே தெரியாமல், அது யாரைப் பாதிக்கும் என்ற தெளிவுகூட இல்லாமல், நீங்கள் பகிரும் செய்திகள் எங்கோ இருக்கும் ஒருவரைப் பாதிக்கிறது. போலிச் செய்திகளின் மீது இருக்கும் ஈர்ப்பு மற்றும் சுவாரஸ்யம் காரணமாக மக்கள் மத்தியில் விரைவாகப் பரவியும்விடுகிறது. ஆனால், எது பொய், எது உண்மை எனப் பகுத்தறியும் குணம் கூடவா நம்மிடம் மங்கிவிட்டது? 

இதில் அடுத்த கட்டம்தான் அரசியல், வணிகம், சினிமா சார்ந்த வதந்திகள். தங்களது போட்டி நிறுவனங்கள், எதிர்க்கட்சிகள், பிடிக்காத நடிகர்கள் ஆகியோரை வீழ்த்துவதற்காக, அவர்கள் மீது வதந்திகள் திட்டமிட்டுப் பரப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் பணம் முழுக்க வெளிநாடுகளுக்குச் செல்கிறது, இந்த நடிகர் நிவாரணத்துக்காக ஒரு பைசா கூடத் தரவில்லை என வரும் வதந்திகளையும் செவ்வனே பரப்பிவிடுகிறோம். இதனால் உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால், யாரோ சிலர் லாபம் அடைகின்றனர் என்பது உண்மைதானே? தற்போது இதன் அடுத்த கட்டமாக இணையத்தில் உருவெடுத்திருப்பதுதான் ஃபேக் நியூஸ் எனப்படும் போலிச் செய்திகள். உண்மைக்குப் புறம்பான செய்திகளை, நிஜமான செய்தி போன்றே சமூக வலைதளங்கள், இணையதளங்கள் மூலமாகப் பரப்பி, மக்களை ஏமாற்றுவதுதான் இவர்களின் நோக்கம்.

இதன்பின்னே வணிகரீதியான, அரசியல்ரீதியான லாபங்களும் இருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. தற்போது கூகுள், ஃபேஸ்புக் போன்ற தளங்கள் இவற்றை எதிர்த்து நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. இணையம் சார்ந்த பழக்கவழக்கங்கள் நம்மிடையே அதிகரித்து வரும் நிலையில், இப்படிப் பரவும் போலிச் செய்திகளினால் நிஜ வாழக்கையிலும் பிரச்னைகள் எதிரொலிக்கின்றன. உதாரணமாக ஒரு கட்சி தன்னை நல்லவிதமாகக் காட்டிக்கொள்ள வேண்டுமெனில், தங்கள் கொள்கைகளை மட்டுமே பரப்ப வேண்டும் என்பதெல்லாம் இல்லை. எதிர்க்கட்சிகளின் மீது இதுபோன்ற போலியான புகார்களைப் பரப்பினாலே போதும். அந்தக் கட்சிக்கு புனித அந்தஸ்து கிடைத்துவிடும். ஒரு நிறுவனம் தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டுதான் சந்தையில் ஜெயிக்க வேண்டும் என்பதில்லை. இதுபோல போட்டி நிறுவனங்களின் மீது, வீண் அவதூறுகளைப் பரப்பினாலே வாடிக்கையாளர்களை ஈர்த்துவிடலாம். வணிகம், அரசியல், வன்மம் என வெறுப்புகளாலும், ஏதேனும் பலனை எதிர்பார்த்துமே இந்தப் போலிச் செய்திகள் உருவாகின்றன. 

சமூக வலைதளங்கள்

தற்போது ஃபேஸ்புக்கில் மட்டுமே கணக்கில் கொள்ளமுடியாத அளவிற்கு போலிச் செய்திகளைப் பரப்பும் பக்கங்களும், வீடியோக்களும் பரவிவருகின்றன. இதுபோன்ற நேரங்களில் செய்திகளின் உண்மைத் தன்மைக்காக மக்கள் நம்புவது ஊடகங்களைத்தான். ஆனால் ஊடகங்கள் கூட, சில நேரம் இவற்றால் பாதிக்கப்பட்டுவிடுகின்றன. இப்படி உருவாகும் அனைத்து செய்திகளுமே உங்கள் உணர்ச்சியை மையப்படுத்தியே உருவாக்கப்படுகின்றன. உங்கள் தேசபக்தி, பாரம்பர்யங்கள் மீதான் பெருமித உணர்ச்சி ஆகியவற்றைக்கொண்டுதான் இவை வலம் வருகின்றன.

முன்பு ஒரு பொருளை விற்க வேண்டுமென்றால், அதன் பெருமைகளைச் சொல்லி விளம்பரம் செய்வார்கள்; ஒரு பிரபலத்தைக் கொண்டு விளம்பரம் செய்வார்கள்; ஆனால் இப்போது,  அதற்கு அவசியமே இல்லை. 'இந்தப் பொருளை நீங்கள் வாங்கினால், எங்கோ இருக்கும் ஒரு குழந்தை உணவு உண்ணும்', 'எங்கள் பொருட்களை வாங்கி, இந்தியப் பொருளாதரத்தை உயர்த்துங்கள்; அந்நிய நாட்டுப் பொருட்களை புறக்கணியுங்கள்' எனக்கூறி உங்கள் தேசபக்தியையோ, மனிதாபிமானத்தையோ லேசாக சுண்டிவிட்டாலே போதும். அவர்கள் நோக்கம் நிறைவேறிவிடும். அதே நோக்கம்தான் இந்த ஃபேக் நியூஸ்களின் பின்னேயும் இருக்கின்றன. ஒன்று உங்களை ஏமாற்ற வேண்டும்; அல்லது உங்களைப் பயன்படுத்தி லாபம் அடையவேண்டும்.

எனவே, நீங்கள் வாட்ஸ்அப்பில் அல்லது ஃபேஸ்புக்கில் அனுப்பும் ஒவ்வொரு செய்தியையும், ஒருமுறை உங்களுக்குள் சிந்தித்துவிட்டே பகிருங்கள். தேவையற்ற, வீண்பழி சுமத்துகின்ற, நம்பகத்தன்மையற்ற செய்திகள் உங்களை வந்து சேர்ந்தால் கூடப் பரவாயில்லை; அடுத்தவருக்கு சேரும்படி ஷேர் செய்யாதீர்கள்.  இணைய உலகில் மறைந்திருக்கும் இந்தக் கண்ணிகளில் இருந்து இனியாவது விடுபடுவோம்! 

- ஞா.சுதாகர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்