இனி தனிநபர் தாக்குதல்கள் பற்றிக் கவலை வேண்டாம்..! ட்விட்டரின் புது வசதி

ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களின் வளர்ச்சி, கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அபரிமிதமாக பெருகிக் கொண்டே இருக்கிறது. 'ஒரு சாதாரண மனிதனால் என்ன செய்துவிட முடியும்!' என்ற நிலை மாறி இன்று, சோஷியல் மீடியாவின் தாக்கத்தால் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டங்கள் சோஷியல் மீடியா மூலமாகதான் வளர்த்தெடுக்கப்பட்டது. இளைஞர்களின் போராட்டம் தமிழக சட்டமன்றத்தில் 'அவசரச் சட்டம்' தாக்கல் செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடக்கும் அளவுக்கு வெற்றியும் கண்டது.

ஏதாவதொரு சோஷியல் மீடியா தளத்தில் கூட கணக்கு வைத்துக்கொள்ளாத மனிதர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சோஷியல் மீடியாக்களின் வளர்ச்சி பலம் பெருகிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மறுபுறம் அவதூறுகளும் வன்மங்களும் கட்டுக்கடங்காமல் வளர்ந்துகொண்டு தான் இருக்கின்றன.

ஃபேஸ்புக்கில் உண்மைக்குப் புறம்பாக பரப்பப்படும் 'ஃபேக் நியூஸ்' எனப்படும் போலிக்கதைகளால் மக்களிடையே தேவையற்ற பதற்றமும், நம்பகத்தன்மைக் குறைவும் ஏற்படுகிறது. தனி நபரைப் பொறுத்தவரை மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். நிறுவனங்கள் வர்த்தக ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த ஃபேஸ்புக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முதல் படியாக ஃபேஸ்புக் சமீபத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இனி ஃபேஸ்புக்கில் கட்டுக்கதைகளைப் பரப்பினால் அதை பயனர்களே தடுத்து நிறுத்த முடியும்.

ட்விட்டர்

இன்னொரு மிகப்பெரிய சோசியல் மீடியாவான ட்விட்டர், அவதூறுகளையும், தனிமனிதத் தாக்குதல்களையும் தடுத்து நிறுத்துவதற்காக ஒரு முக்கியமான விஷயத்தைச் செய்துள்ளது. இதன் மூலம் இனி உங்கள் மீது யாராவது தனிமனிதத் தாக்குதல்களில் ஈடுபட்டாலோ, அவதூறாகப் பேசினாலோ அதன் மூலமாக ஏற்படும் மன உளைச்சலில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

ட்விட்டரில் இதற்கு முன் கருத்தொற்றுமை இன்றி ஒருவரை அன்-ஃபாலோ செய்திருப்பீர்கள். ஆனால் அவர் விடாப்பிடியாக உங்களைத் துரத்தி வந்து மென்சன் டேப்பில் உங்களை வறுத்தெடுத்துக் கொண்டிருப்பார். நோட்டிஃபிகேஷன் டேப்பில் அவரது ட்வீட் உங்களுக்கு காட்டிக்கொண்டே இருக்கும். ஒருகட்டத்தில் வெறுத்துப்போய் அவரை ப்ளாக் செய்தாலும் அவரது கடைசி மென்சன் உங்கள் நோட்டிஃபிகேஷன் டேப்பில் இருந்துகொண்டே இருக்கும். மேலும், புதிதாய் ஒரு போலிக் கணக்கின் மூலம் வந்து மீண்டும் தொல்லை கொடுப்பார்கள். பெண்களைப் பொறுத்தவரை, முன்பின் தெரியாத நபர்கள் சிலர் தொடர்ந்து ஆபாசமாக மென்சன் செய்து தொல்லை கொடுப்பார்கள். இதனால் அவர்கள் வெறுத்துப்போய் ட்விட்டரே வேண்டாமென்று தங்கள் கணக்கை நீக்கிவிட்டு சென்றுவிடுவார்கள். இதற்கெல்லாம் ஒரு சின்ன தீர்வு கண்டிருக்கிறது ட்விட்டர்.

கருத்தொற்றுமை இல்லாத ஒருவரை நீங்கள் அன்-ஃபாலோ செய்துவிடும் பட்சத்தில், மீண்டும் அவர் உங்களை மென்சன் செய்து வம்பிழுத்தாலோ / அவதூறாகப் பேசினாலோ, அவரை 'மியூட்' (Mute) செய்தால் போதுமானது. அதன்பின் அவரது மென்சன் உங்கள் நோட்டிபிகேசன் பக்கத்தில் இனி காண்பிக்காது. இதன் மூலம் அறிமுகமில்லாதவர்கள் செய்யும் அவதூறுத் தாக்குதல்களிலிருந்தும் உங்களை தற்காத்துக் கொள்ள முடியும். இந்த வசதியை ட்விட்டர் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

- கருப்பு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!