உலகின் முதல் பறக்கும் கார் விற்பனைக்கு... விலை என்ன? | World's first commercially made flying car for sale

வெளியிடப்பட்ட நேரம்: 19:18 (18/02/2017)

கடைசி தொடர்பு:19:15 (18/02/2017)

உலகின் முதல் பறக்கும் கார் விற்பனைக்கு... விலை என்ன?

பறக்கும் கார்

கமர்ஷியலாக அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் உலகின் முதல் பறக்கும் கார் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது PAL-V லிபர்டி (Liberty). £4,25,000 என்ற விலையில் (உள்ளூர் வரிகள் இல்லாமல்) கிடைக்கக்கூடிய இந்த பறக்கும் காரின் இந்திய மதிப்பு, ஜஸ்ட் 3.56 கோடி ரூபாய்தான் மக்களே! 2018-ம் ஆண்டு இறுதிமுதலாக PAL-V Liberty-ன் டெலிவரிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தவகை கார்களின் விதிமுறைகளைப் பின்பற்றி, பறக்கும் காரான லிபர்டியைத் தயாரித்திருப்பதாகக் கூறியுள்ள PAL-V நிறுவனம், `விமானப் போக்குவரத்து மற்றும் சாலைப் போக்குவரத்தின் வரலாற்றில் இது ஒரு மைல்கல்’ எனத் தெரிவித்துள்ளது.

பறக்கும் கார்

முதற்கட்டமாக லிபர்டி பயனீர் எடிஷன் (Liberty Pioneer Edition) எனும் ஸ்பெஷல் எடிஷனில் களமிறங்கும் இந்த கார், 90 மட்டுமே தயாரிக்கப்பட உள்ளன. Flight Instruction Session, Power Heating, Personalisation Options, CarbonFibre Detailing போன்ற பல வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. 90 கார்களில் சரிபாதி எண்ணிக்கை, ஐரோப்பியாவில் விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது. இவற்றின் டெலிவரிகள் முடிந்த பிறகு,  லிபர்டி ஸ்போர்ட் (Liberty Sport) மாடலின் தயாரிப்புப் பணிகள் ஆரம்பமாகும் என PAL-V நிறுவனம் தெரிவித்துள்ளது. $3,99,000 என்ற விலையில் (உள்ளூர் வரிகள் இல்லாமல்) கிடைக்கக்கூடிய இந்த வேரியன்ட்டின் இந்திய மதிப்பு, 3.34 கோடி ரூபாய். இதன் விலை குறைவாக இருப்பதற்கு, இந்த வேரியன்ட்டுடன் வழங்கப்படும் குறைவான Personalisation Option-களே காரணம். ஆனால் Flying Lessons, Power Heating, Carbonfibre Detailing ஆகியவை இதனுடன் வழங்கப்படும் என்பது ஆறுதல். 

பறக்கும் கார்

பறக்கும் காரான லிபர்டி, ஆட்டோ போல மூன்று சக்கரங்களை மட்டுமே கொண்டிருக்கிறது; கார் பறப்பதற்குத் தேவையான றெக்கைகள், காரின் கூரை மேலே பொசிஷன் செய்யப்பட்டுள்ளன. இந்த செட்-அப், இரண்டு Dual Propulsion - Rotax வகை இன்ஜின்களைக் கொண்டிருக்கும் GyroCopter விமானத்தை நினைவுபடுத்துகின்றன. இரண்டில் ஒரு இன்ஜின் சாலைப் பயன்பாட்டுக்கும், மற்றொன்று ஆகாயத்தில் பறப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இங்கே இருக்கக்கூடிய பெரிய Rotor, 664 கிலோ எடையுள்ள இந்த காரை மேலெழுப்புவதற்கு உதவுகிறது. இன்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ள பிளேடுகள், இந்த பறக்கும் காருக்குத் தேவையான உந்துசக்தியைத் தருகின்றன. இரண்டு பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய லிபர்டி, தாழ்வான சஸ்பென்ஷனைக் கொண்டிருக்கிறது. 

பறக்கும் கார்

சாலைப் பயன்பாட்டில் இருந்து பறப்பதற்குத் தயாராக, லிபர்டி காருக்கு 5 முதல் 10 நிமிடங்களே தேவைப்படும் என PAL-V நிறுவனம் கூறினாலும், காரின் ஓட்டுநர்தான் பின்பக்கத்தில் மடிந்த நிலையில் இருக்கும் இரண்டு Rotor பிளேடுகளை, வெளியே எடுத்து விரித்துவிட வேண்டும். இந்நேரத்தில் காரின் கூரையில் இருக்கும் றெக்கைகள் தானாக விரிந்துவிடும். ஆக கார் பறப்பதற்கு ரெடி! லிபர்டியை ஓட்டுவதற்குப் பிரத்யேகமான லைசென்ஸ் தேவை என்பதுடன், பறக்கும்போது நினைத்த மாத்திரத்தில் இதனை தரையில் இறக்கிவிட முடியாது. எந்த தடைகளும் இல்லாத 90-200x20 மீட்டர் இடமானது, லிபர்டி டேக்-ஆஃப் ஆவதற்கும் தரையிறங்குவதற்கும் தேவைப்படும் என்கிறது PAL-V நிறுவனம். எனவே Small AirStrip, AeroDome, Glider Site, UltraLight AirField ஆகியவை இதற்கு ஏற்றதாக இருக்கும் என நம்பலாம். மேலும் 246 கிலோ எடையைச் சுமக்கும் திறன் இருப்பது ப்ளஸ். 

பறக்கும் கார்

லிபர்டி பறக்கும்போது வெளிப்படுத்தும் சத்தம், சிறிய விமானம் மற்றும் ஹெலிகாப்டர் போன்றவற்றைவிடக் குறைவாகவே இருக்கும் என  PAL-V நிறுவனம் தெரிவித்துள்ளது. காராகப் பயன்படுத்தும்போது, 100bhp பவரை வெளிப்படுத்துகிறது லிபர்டியின் இன்ஜின். சாலையில் அதிகபட்சமாக 160 கி.மீ வேகம் வரை செல்லக்கூடிய லிபர்டி, 0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 9 விநாடிகளில் எட்டிவிடுகிறது. லிட்டருக்கு 11 கி.மீ மைலேஜ் தரும் லிபர்டியின் 100 லிட்டர் டேங்கை ஒருமுறை நிரப்பினால், கிட்டத்தட்ட 1,314 கி.மீ தூரம் வரை செல்ல முடியும். பறக்கும்போது 3,500 மீட்டர் உயரம் வரை செல்லக்கூடிய லிபர்டி, அதிகபட்சமாக 180 கி.மீ வேகத்தை எட்டுகிறது. இதற்கு லிபர்டியில் இருக்கும் 200bhp பவரை வெளிப்படுத்தும் இன்ஜினே காரணம். சாலைப் பயன்பாட்டை விட ஆகாயத்தில் அதிக வேகம் செல்லும் லிபர்டி, மைலேஜில் பின் தங்கிவிடுகிறது -  500 கி.மீ தூரம் மட்டுமே அதிகபட்சம் பறக்க முடியும். அதாவது ஒரு மணி நேரத்துக்கு 26 லிட்டர் எரிபொருளை (Euro 95, Euro 98, E10, Avgas) பயன்படுத்துகிறது லிபர்டி! 

பறக்கும் கார்

நெதர்லாந்தில் அசெம்பிள் செய்யப்படும் இந்த பறக்கும் காரின் பாகங்கள், பலநாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. இத்தாலியில் லிபர்டியின் டிஸைன் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2009 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் இந்த காரின் மாதிரிகளைக் கொண்டு, டெஸ்ட்டிங் பணிகள் நடைபெற்றன. ''பல ஆண்டு உழைப்பிற்குப் பிறகு, தொழில்நுட்ப ரீதீயாகப் பல இன்னல்களைத் தாண்டியே, எங்களது அணி இந்தப் புதுமையான பறக்கும் காரைத் தயாரித்திருக்கிறது. உலகெங்கும் இவ்வகை கார்களுக்கு இருக்கும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றியே லிபர்டியை வடிவமைத்துள்ளோம்'' என PAL-V நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Robert Dingemanse கூறியுள்ளார். 

இந்த காரின் வீடியோ உங்கள் பார்வைக்கு:

– ராகுல் சிவகுரு

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்