வெளியிடப்பட்ட நேரம்: 00:22 (19/02/2017)

கடைசி தொடர்பு:09:41 (19/02/2017)

இந்த ஞாயிற்றுக்கிழமையை ஸ்பெஷலாக்குங்களேன்! #SpecialSunday

Sunday

      விடுமுறை என்றாலே உற்சாகம்தான். அதுவும் ஞாயிற்றுக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம். ‘Sunday டோய்...’ என்று தனி உற்சாகமே வந்துவிடும். வாரத்தில் ஆறு நாள் உழைக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிப்பதே அந்த ஒரு நாள் விடுப்பு தான். வாரம் முழுக்க மண்டைக்குள் ஓடும் குதிரைக்கு அன்று மட்டும் தான் ஓய்வு. அன்றைய நாளை பெரும்பாலும் ஓய்வு எடுத்து மட்டுமே கழிக்க விரும்புவோம். ஒருசிலர் அந்த ஒரு நாளைத் தன் வாழ்க்கை புத்தகத்தின் பொன் பக்கமாக சேகரிக்க முனைவர். வாழ்வை அனுபவித்து வாழும் அவர்களை போன்றோருக்கான டிப்ஸ் இதோ!

$ ஒரு நாள் லீவா..பாச்சுலரா...’நமக்கு வாய்த்த அடிமைக’ளுடன் ஒரு நாள் பயணமாக அருகில் உள்ள தீம் பார்க்குக்கோ மாலுக்கோ சென்று சுற்றி வரலாம். இல்லை நண்பர்கள் வீட்டுக்குக் கூட சென்று வரலாம். நண்பனின் குடும்பத்திற்கும் மகிழ்ச்சி. நமக்கும் மகிழ்ச்சி. நீங்கள் இருப்பது ஹாஸ்டல் என்றால்.. ஒருநாள் வழக்கமான சாப்பாட்டில் இருந்து எஸ்கேப். நண்பர்களைச் சந்திக்கச் செல்லும்போது அவர்களுடன் பேச, அவர்களுக்குப் பிடித்தமான சப்ஜெக்டை மனதில் அசைபோட்டபடி செல்லுங்கள். நிச்சயம் சிறப்பான அனுபவமாக இருக்கும்.   

 

$  `என்ன பாஸ்.. மால்.. ஃப்ரெண்ட்ஸ்னு சின்ன ஐடியாவா சொல்றீங்க..?’ எனும் கட்சியா?  “ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல” என்பது உங்கள் தாரக மந்திரமாக இருக்கும் பட்சத்தில் அருகில் இருக்கும் மலை சார்ந்த பிரதேசத்திற்கு ஒரு விசிட் அடிக்கலாம். யாரும் வேண்டாம். அவற்றின் உயரம் உங்களை பிரமிக்க வைக்கும். உடலுக்கும், மனதுக்கும் செம ரிஃப்ரெஷாக இருக்கும்.  மலை ஏற்றம்,காட்டில் ஒரு நாள் தங்குதல் போன்ற அட்வென்ச்சர் ட்ரிப்பாக அதை மாற்றலாம்.  

$  நம் கூட்டத்தில் இருக்கும் எப்படியும் ஒரு நண்பன் பட ஸ்ரீகாந்த்தாக இருப்பான். அவனைப் பிடியுங்கள். ‘டேய்.. உன் கேமராவோட வாடா ஸ்டிரீட் ஃபோட்டோகிராஃபிக்கு போகலாம்’ என்று அழையுங்கள். நாலு தெருவுக்கு சுத்தின மாதிரியும் ஆச்சு. சில அழகியலான விஷயங்களைப் பார்த்தமாதிரியும் ஆச்சு. 

நமக்கு பாதி உறவுகளே தெரிவதில்லை. பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஒரு விசிட் அடித்துவிட்டு  வரலாம். குழந்தைகளுக்கு உறவின் பெயர்கள் தெரியவும் அன்பில் நனையவும் நிறைய வாய்ப்புண்டு.  பாட்டி கதையும், அத்தையின் கிண்டலும் போனஸாகக் கிடைக்கலாம்.

வீட்டில் எல்லாரும் சேர்ந்து இருக்கும் ஒருநாளை மனம் விட்டுப் பேச பயன்படுத்தலாம்.இன்றைய சூழலுக்கு பெரிதும் “வான்டட்” விஷயம் இது. பிள்ளைகளை தினசரி ஓட்டத்தில் கவனிக்க முடிவதில்லை என்பது குறையாய் இருப்பின், அதைக் களையும் நாளாய் இது அமையும். ஒருவாரக் கதையை கேட்கவும் சொல்லவும் செய்ய ஒரு வாய்ப்பு. அப்படிப் பேசும்போது உங்கள் ஃபோனை அவுட் ஆஃப் ரீச்சில் வைங்க பாஸ்.

குழந்தைகள் புதிதாய் ஏதேனும் முயற்சிக்க இந்த நாளைப் பயன்படுத்தலாம். ஓவியம், பாடல், பேச்சு என்று அவர்களை எதாவது செய்யச் சொல்லி ரசியுங்கள். வாராவாரம் இதைச் செய்து பாருங்கள். ஒருகட்டத்தில் அவர்களின் ஸ்பெஷல் திறமை என்னவென்பது தெரியும்.

இந்த ஐடியாக்கள் எல்லாம், படிக்க ரொம்ப சாதாரணமான ஐடியாக்களாகத்தான் இருக்கும். ஆனால் இவற்றில் ஒன்றிரண்டையாவது சீரியஸாக எடுத்துக்கொண்டு ஃபாலோ செய்துபாருங்கள். மாற்றம்.. முன்னேற்றம்.. ஸ்பெஷல் சண்டே என்றிருக்கும்! திங்கட்கிழமையை உற்சாகமாக எதிர்கொள்ளலாம்!

  

- கோ.ப.இலக்கியா

மாணவ பத்திரிகையாளர் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்