50 நிமிடங்களில் 3 பரோட்டா சாப்பிட்டால்.. வாழ்நாளுக்கும் பரோட்டா ஃப்ரீ! எங்கே? | A Paratha shop Gives life long free Paratha, if the customer eats 3 Parathas in 50 minutes

வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (19/02/2017)

கடைசி தொடர்பு:12:58 (19/02/2017)

50 நிமிடங்களில் 3 பரோட்டா சாப்பிட்டால்.. வாழ்நாளுக்கும் பரோட்டா ஃப்ரீ! எங்கே?

‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தில் சூரி, ‘கோட்டையெல்லாம் அழி; திரும்பப் போடு’ என்று மாவு தீர்ந்து போகும் அளவிற்கு பரோட்டா சாப்பிடுவாரே ஞாபகம் இருக்கிறதா? சினிமாவில் மட்டும்தான் போட்டிக்கு பரோட்டா சாப்பிடுவதெல்லாம் நடக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். பக்காவாக‘பரோட்டா சாப்பிடும் போட்டி’ நடைபெறும் ஒரு புகழ்பெற்ற ஹோட்டலே இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பரோட்டா சூரி

ஹரியானா மாநிலம், ரோக்தக்கில் அமைந்துள்ளது மேற்படி ‘பரோட்டா ஃபேமஸ்’ ஹோட்டல். அவர்களுடைய பேச்சுவழக்கில் ‘பராத்தா’. இந்த ஹோட்டலின் சிறப்பே பரோட்டாக்கள்தான். சொல்லப் போனால் பரோட்டாவிற்காக ஹோட்டலா, ஹோட்டலுக்காக பரோட்டாவா என்று பட்டிமன்றமே நடத்தலாம். அந்தளவிற்கு ‘ஒன்லி பரோட்டா’ உணவகம் இந்த ‘தபஸ்யா பராத்தா ஜங்ஷன்’ ஹோட்டல். இங்குதான் அந்தப் ‘படுபயங்கர’ போட்டி நடைபெறுகிறது ஃப்ரண்ட்ஸ்.

சாப்பிடற போட்டியா? நான் ரெடி...நான் ரெடி என்று பறக்காதீர்கள் பரோட்டா பிரியர்களே. முதலில் போட்டியின் விதிகளைப் பற்றியும், அதன் சூட்சுமங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கப்புறம்தான் நீங்கள் பரோட்டா சூரி ஆகமுடியுமா, முடியாதா என்பதெல்லாம். 

போட்டி விதிமுறையின்படி, ஒரு நபர் 50 நிமிட கால அளவுக்குள் 3 பரோட்டாக்களைச்  சாப்பிட்டாக வேண்டும். ’மூன்றே மூன்று பரோட்டாதானே கப்புனு பிச்சு, சால்னா தொட்டு வயித்துக்குள் தள்ளிடலாம்’என்று நினைத்தால் கொஞ்சமே கொஞ்சம் தார் சாப்பிட்டு வயிறு வீங்கிக் கிடக்கும் வடிவேலுவின் போட்டோவை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் சாப்பிடப் போகும் ஒரு பரோட்டாவின் சராசரி அளவு 24 இன்ச். அதாவது, ஒரு பரோட்டாவிற்கான மாவில் உங்கள் கணவனோ, மனைவியோ தாராளமாக நான்கு பரோட்டாக்கள் போட முடியும்.

அப்புறம்...?.’நீங்கள் மட்டும் மூன்று பரோட்டாக்களை முக்கி முக்கி, ஐம்பது நிமிடங்களுக்குள் சாப்பிட்டுவிட்டால் உங்களுக்கு வாழ்நாள் முழுவதற்குமான பரோட்டாக்கள் ஃப்ரீ...ஃப்ரீ. அதுமட்டுமின்றி, ஒரு லட்ச ரூபாய்க்கு இன்ஷூரன்ஸும் எடுத்துத் தருகிறோம்’ என்று ஆர்வமூட்டுகிறார் ‘தபஸ்யா பராத்தா’ ஹோட்டல் ஓனர் முகேஷ். 

பரோட்டா சூரி

கோதுமை மாவை நன்றாகப் பிசைந்து, நான்கு பரோட்டாக்களுக்குத் தேவையான மாவினை ஒரே உருண்டையாக உருட்டிக் கொள்கிறார்கள். அதை நன்றாகத் தேய்த்து, இரண்டு பெரிய பரோட்டாக்களைத் தயார் செய்கிறார்கள். ஒரு பரோட்டாவின் நடுவில் காய்கறி, மசாலா, உருளைக்கிழங்கு கலந்த கலவையைப் பெரிய உருண்டையாக வைத்து நிரப்பி, மற்றொரு பரோட்டாவை மேலே போட்டு மீண்டும் நன்றாக சப்பாத்திக் கட்டையால் தேய்த்து அப்படியே பெரிய ராட்சச சைஸ் அடுப்பில் சுட்டு எடுக்கிறார்கள். பரோட்டா வேகும்போதே, அதன்மீது ஒரு கால்படி நெய்யை வேறு கொட்டுகிறார்கள். நறுக்கிய உலர்ந்த திரட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா எக்ஸ்ட்ராவாக மேலே தூவப்படுகின்றன. இதைப்பார்க்கும்போதே நமக்கு முக்கால் வயிறு நிறைந்துவிடும். பரிமாறும்போது கூடவே தயிர்ப் பச்சடி, வெண்ணெய், க்ரீன் சட்னி. 

’ஊரே உக்கார்ந்து சாப்பிட்டாலும்...’ என்பதுபோல முதல் பரோட்டாவினைப் பாதி முடிக்கும்போதே முதல் பாலில் அவுட் ஆகும் பேட்ஸ்மேன் போல டயர்டாகி அமர்ந்துவிடுகின்றனர் போட்டியாளர்கள். ஆனால், இந்த ரணகளப் போட்டியிலும் இதுவரை இரண்டு பேர் வெற்றிவாகை சூடியுள்ளனர் என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. அஸ்வினி குமார், மகாராஜா ஆகியோர்தான் அந்த இருவர். அஸ்வினி குமார் 40 நிமிடங்களில் 3 பரோட்டாக்களையும், மகாராஜா 50 நிமிடங்களில் 4 பரோட்டாக்களையும் சாப்பிட்டு ‘பரோட்டா கிங்’ என்று நிரூபித்துள்ளனர். 

’ஒரு நாளைக்கு 150 பரோட்டாக்களுக்கும் மேல் இங்கு விற்பனையாகிறது. கிட்டதட்ட 50க்கும் மேற்பட்ட வெரைட்டிகளில் எங்களிடம் பரோட்டாக்கள் கிடைக்கும். உருளை - வெங்காயம், உருளை -காலிஃப்ளவர், ஆனியன், சீஸ், ஆனியன் காட்டேஜ் சீஸ் பரோட்டா, காளிஃப்ளவர் சீஸ் பரோட்டா என்று அந்த லிஸ்ட் ரொம்பப் பெரியது. தினமும் பரோட்டா விற்பனைக்கு எங்களுக்கு 50 முதல் 60 கிலோ மாவு, 50 முதல் 60 கிலோ உருளைக்கிழங்கு, 40 முதல் 50 கிலோ வெங்காயம், 2 முதல் 3 கிலோ உலர்ந்த பருப்புகள், பழங்கள் தேவைப்படுகின்றன’ என்று பிரமிப்பூட்டுகிறார் முகேஷ்.

அப்புறமென்ன? உணவுப்பிரியர்கள் ஹரியானாவிற்கு ஒரு பரோட்டா ட்ரிப் அடிச்சு, தபஸ்யா பரோட்டாவை ருசி பார்க்க வேண்டியதுதான் பாக்கி பாஸ்!

- பா.விஜயலெட்சுமி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close