வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (19/02/2017)

கடைசி தொடர்பு:11:55 (20/02/2017)

‘சிங்கம்’ சூர்யா மாதிரி ஃப்ளைட்டை ஓவர்டேக் செய்யும் உலகின் அதிவேக 10 கார்கள்! #DriveFast

‘இப்படியெல்லாம் நடக்க முடியுமா?!’ என்று நீங்கள் ஆச்சரியப்படும் ஒரு விஷயம், நிச்சயம் தமிழ் சினிமாக்களில் நடக்கும். அதிலும் கார்களைக் காலி பண்ணி ஜோலியை முடிப்பதிலும், காமெடி செய்வதிலும் தமிழ் சினிமாவுக்கு அரிய பங்குண்டு. சுந்தர்.சி.யும் ஹரியும் இதில் தெறி ரகம். ‘ஆம்பள’ படத்தில் 1,900 கிலோ உள்ள சுமோவை கடல் மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரம் அடிகளுக்குப் பறக்கவிட்டு வீலிங் பண்ணுவது... கோவை சரளாவிடம் அடி வாங்கிய வடிவேலு மாதிரி ‘கிறு கிறு கிறு’வென கார்களைச் சுத்தவிடுவது.... என்று காருக்குக் கண் மட்டும் இருந்தா ‘வேணாம் வலிக்குது... அழுதுருவேன்’னு புலம்பியிருக்கும். பறக்கும் கார்களெல்லாம் உண்டு என்றாலும், படங்களில் காண்பிப்பது வேற லெவல்ல இருக்கும். 

கார்

லேட்டஸ்ட்டாக வெளிவந்த சூர்யாவின் ‘சிங்கம் 3’ படத்தில், டொயோட்டா ஃபார்ச்சூனர் கார், ஹரிக்கும் சூர்யாவுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. பின்னே... 200 கி.மீ வேகத்தில் ரன்வேயில் சென்று கொண்டிருக்கும் விமானத்தை, ஃபார்ச்சூனர் கார் எதிர்ப்புறமாக வந்து ஓவர்டேக் செய்கிறது என்றால் சும்மாவா? டவுன்பஸ்ஸில் இருந்து வேடிக்கை பார்ப்பதுபோல், ‘யார்றா அவன்; நம்மளையே ஓவர்டேக் பண்றான்’னு ஃப்ளைட்ல பைலட்டுங்க எல்லாம் ஆச்சரியத்தோட பார்க்கிறதெல்லாம்... ஃபார்ச்சூனருக்குக் கிடைத்த பெருமையே அன்றி வேறென்ன? ‘ஃபார்ச்சூனரின் அதிகபட்ச வேகமே 160தான்... அதிலும் 0-100 கி.மீ போறதுக்கே 14 செகண்ட் ஆகிடும்... இது எப்படி ஃப்ளைட்டை ஓவர்டேக்’ என்பதை மறந்துவிட்டு விஷயத்துக்கு வருவோம். நிஜத்தில் இப்படி ரன்வேயில் விமானங்களை முந்துகிற கார்கள் இருக்கின்றனவா? 

ஆம்! இதற்குப் பெயர் ஹைப்பர் கார்கள். கிட்டத்தட்ட விமானத்தையே ஓவர்டேக் செய்யக்கூடிய வேகம் கொண்ட டாப்-10 ஹைப்பர் கார்களைப் பற்றி ஒரு ட்ரெய்லர்...


1. கொயினிக்ஸேக் அகேரா R
விலை: சுமார் 10 கோடி
டாப் ஸ்பீடு: 440 கி.மீ
இன்ஜின்: 5.0 லிட்டர், 8 சிலிண்டர்

கார்

‘இது ஏதோ வீட்டு உபயோகப் பொருள் நிறுவனம் மாதிரி இருக்கே’ என்று நினைத்தீர்கள் என்றால்... பிறகு ரொம்பவும் வருத்தப்படுவீர்கள். ஒருவகையில், இந்த ‘கொயினிக்ஸேக்’ கார் நிறுவனத்தை சிவகார்த்திகேயன் என்றுகூடச் சொல்லலாம். அதாவது, ஷார்ட் பீரியட்டில் மிகப் பெரிய ஓப்பனிங் கிடைத்தது மாதிரி ‘கொயினிக்ஸேக்’ நிறுவனம், மார்க்கெட்டில் இருக்கும் சூப்பர் மற்றும் ஹைப்பர் கார்களுக்குச் செமத்தியான போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் ‘அகேரா R’ என்னும் இந்த மாடல், வெறித்தனத்தின் உச்சம். புகாட்டி, ஃபெராரி, மெக்லாரன் போன்ற அதிவேக சூப்பர் கார்களையே பின்னுக்குத் தள்ளிவிட்டு ‘உலகின் அதிவேக கார்’ என்ற டேக்குடன் முன்னால் பறக்கிறது அகேரா. 5 லிட்டர், ட்வின் டர்போ சார்ஜ்டு, DOHC அமைப்பு கொண்ட இந்த இன்ஜினில் 8 சிலிண்டர்கள் இருக்கின்றன. இதன் பவர் 1,140 bhp. டார்க் 165 kgm. வெறும் 2.5 விநாடிகளில் 0-100 கி.மீயை எட்டும் என்றால், இதன் வேகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். மூச்சை அடக்கிக் கொள்ளுங்கள். 0-400 கி.மீ-யை வெறும் 11 விநாடிகளுக்குள் கடக்கும் இந்த அகேரா R. 

இந்தப் பேய் வேகத்துக்குக் காரணம், இதிலுள்ள டூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன்தான். கியர் ஷிஃப்ட்டிங்கும் ஆக்ஸிலரேஷனும் மின்னலுக்கு அண்ணன் வேகத்தில் நடப்பதால், இந்த வேகம் சாத்தியமாகிறது. அடுத்த வருடம் வரும் புதிய காரில், கார்பன் ஃபைபர் வீல்கள் சேர்க்க இருக்கிறதாம் கொயினிக்ஸேக். அப்படியென்றால், விமானம் இல்லை... ஜெட் வேகம்தான்!


2. ஹெனெஸ்ஸி வெனோம் GT
விலை: சுமார் 8.8 கோடி
டாப் ஸ்பீடு: 435 கி.மீ
இன்ஜின்: 7.0 லிட்டர், 8 சிலிண்டர்

கார்

லோட்டஸ் EXIGE காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இதுதான் உலகின் இரண்டாவது வேகமான கார். இதன் டாப் ஸ்பீடு, மணிக்கு 435 கி.மீ. அகேரா காரைவிட வெறும் 5 கி.மீதான் குறைவு. ஆங்கிலத்தில் ‘பீஸ்ட்’ என்று ஒரு வார்த்தை உண்டு. அதாவது, 'மிருகத்தனமான குணம் கொண்ட' என்று அர்த்தம். தோற்றத்திலும் இது அப்படியே! கண்ணை மூடித் திறப்பதற்குள் 2.8 விநாடிகளில் இது 0-100 கி.மீயை எட்டிவிடும். இதில் இருப்பது 8 சிலிண்டர், 7.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின். இன்ஜினுக்கு உள்ளே இருக்கும் அப்கிரேடு செய்யப்பட்ட இன்டர்கூலரும், சிங்கிள் க்ளட்ச் ஷிஃப்ட் சிஸ்டமும் இதற்கு பக்கா பார்ட்னர்கள். அகேராவைவிட 5 கி.மீ மட்டுமே வேகம் குறைவாக இருந்தாலும், விலையில் பல லட்சங்கள் அதைவிடக் குறைவு.

3. புகாட்டி வெய்ரான் சூப்பர் ஸ்போர்ட்
விலை: சுமார் 11.42 கோடி 
டாப் ஸ்பீடு: 431 கி.மீ
இன்ஜின்: 8.0 லிட்டர், 16 சிலிண்டர்

கார்

‘பைக்னா டுகாட்டி; கார்னா புகாட்டி’ என்றொரு ஆட்டோமொபைல் வழக்கே உண்டு. ஆம்! கார் என்றாலே அது புகாட்டிதான். மல்ட்டி மில்லியனர்கள் ஆகத் துடிக்கும் மில்லியனர்களின் கனவு கார் புகாட்டியாகத்தான் இருக்கும். காரணம், வேகமானவற்றில் முக்கியமானது புகாட்டி சூப்பர் ஸ்போர்ட்தான். ரேஸுக்கு ராஸி, பாடி பில்டிங்குக்கு அர்னால்டுபோல தொடர்ச்சியாக வேகப் போட்டியில் சாம்பியன் பட்டம் தட்டியது புகாட்டிதான். அதேபோல், முதன் முதலில் 400 கி.மீ வேகத்தைத் தொடும்படி தயாரிக்கப்பட்ட காரும் இதுவே! சில டெக்னிக்கல் குழப்படிகளால் கொயினிக்ஸேக் கார்களிடம் புகாட்டி பின்வாங்கியதை உலகமே ‘உச்’ கொட்டியது. கோபமான புகாட்டி, தனது சூப்பர் ஸ்போர்ட் என்னும் அதிவேக காரைப் பறக்க விட்டது. இதில் அகேராவைவிட 3,000 சிசி அதிகபட்சமாக, அதாவது 8,000சிசியில் 16 சிலிண்டருடனும், 1,200bhp பவரிலும் இதன் இன்ஜின் உருவாக்கப்பட்டது. 0-100 கி.மீ-யை 2.4 விநாடிகளில் கடந்தாலும், அகோரா காரைவிட 9 கி.மீ பின்தங்கியிருக்கிறது புகாட்டி வெய்ரான் சூப்பர் ஸ்போர்ட்.


4. 9FF GT9-R
விலை: சுமார் 8 கோடி
டாப் ஸ்பீடு: 413.5 கி.மீ
இன்ஜின்: 4.0 லிட்டர், 6 சிலிண்டர்

கார்

‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ பால்வாக்கரை நினைவிருக்கிறதா? அவரின் ஃபேவரைட் காரான போர்ஷே 911 காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதுதான் இந்த 9FF GT9-R. போர்ஷே என்றாலே ஜெர்மனிதானே! ஜெர்மன் தயாரிப்பான இது, புகாட்டி வெய்ரான் காரைவிட வேகம் அதிகமாகவும், புகாட்டி வெய்ரான் சூப்பர் ஸ்போர்ட்டைவிட குறைவான வேகமும் கொண்ட கார். இரட்டை இலக்கத்தில் 3 சிலிண்டர்களைக்கொண்டு படுக்கைவசமாக அமைக்கப்பட்டிருக்கும் இதன் இன்ஜின், வெறும் 4.0 லிட்டர்தான். ஆனால், பவர் விஷயத்தில் புகாட்டி கார்களுக்கு இணையாக 1,120 bhp கொண்டிருக்கிறது. 16 விநாடிகளில் 305 கி.மீ வேகத்தை எட்டும் இந்த காரை, நல்ல சாலைகளில் விரட்டினால், கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்தில் சென்னையில் இருந்து மதுரையை ரீச் ஆகலாம். ‘டூ கலர்ஸ்தான் ஆப்ஷன்.. இதில் அலாய் இந்த டிசைன்தான் வரும்’ போன்ற கண்டிஷன்கள் எல்லாம் இதில் கிடையாது. உங்களுக்குப் பிடித்த கலரில், டிஸைனில் நீங்கள் காரை விரும்பினால், உங்கள் விருப்பப்படியே 9FF GT9-R டெலிவரி கிடைக்கும்.


5. SSC அல்ட்டிமேட் AERO
விலை: சுமார் 4 கோடி
டாப் ஸ்பீடு: 412 கி.மீ
இன்ஜின்: 6.3 லிட்டர், 8 சிலிண்டர்

கார்

வட அமெரிக்காவின் (SSC) ‘ஷெல்பி சூப்பர் கார்’ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த நிறுவனத்தின் தயாரிப்புதான் இந்த அல்ட்டிமேட் AERO. SSC-க்கு அப்படி என்ன ஸ்பெஷல்? 2007-ல் இருந்து 2010 வரை தொடர்ந்து 4 வருடம் உலகின் அதிவேக காரைத் தயாரித்த நிறுவனம் என்று கின்னஸில் பெயர் வாங்கிய நிறுவனம் SSC. ஆனால், அதெல்லாம் புகாட்டி சூப்பர் ஸ்போர்ட் கார் வருவதற்கு முன்னால். இருந்தாலும், 2013-ல் நடந்த கின்னஸ் ரெக்கார்டில், ஒரு சின்ன டெக்னிக்கல் குளறுபடியால் புகாட்டி பின்வாங்க, 2013-ன் வேகமான கார் என்று பெயரெடுத்து SSC-யைக் காப்பாற்றியது இந்த அல்ட்டிமேட் AERO. 6.3 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ்டு 8 சிலிண்டர் இன்ஜினும், 1,287 bhp பவரும் கொண்ட இது, GT9-R காரைவிட, வேகப்போட்டியில் 1.5 கி.மீதான் பின்தங்கியிருக்கிறது. இதன் வேகத்தில் புளகாங்கிதம் அடையும் வாடிக்கையாளர்கள் இருந்தாலும், பாதுகாப்பு விஷயத்தில் அல்ட்டிமேட் AERO காரில் நிறைய பேர் திருப்தியடையவில்லை.


6. கொயினிக்ஸெக் CCR & CCX 
விலை: 6.7 கோடி
டாப் ஸ்பீடு: 390 கி.மீ
இன்ஜின்: 4.7 லிட்டர், 8 சிலிண்டர்

கார்

டாப்-10 வேகப்போட்டியில் மீண்டும் ஒருமுறை கொயினிக்ஸெக். காரணம், இந்த CCR கார். புகாட்டி வெய்ரான் வருவதற்கு முன்பு இதுவும் ‘வேகமான கார்’ டைட்டிலைத் தட்டியது உண்மைதான். மிட் ரேஞ்ச் ஸ்போர்ட்ஸ் காரான இந்த காரை, ஒருதடவை இத்தாலியில் உள்ள ‘நர்டோ ரிங்’ ரேஸ் டிராக்கில் இதன் டாப் ஸ்பீடான 390 கி.மீ-ல் விரட்டி ட்ரையல் பார்த்தார் மைக்கேல் ஷூமேக்கர். அதற்குப் பிறகு CCR-ன் மவுசு இதன் டாப் ஸ்பீடை விட அதிகமாக எகிறியது. ஃபெராரி, மெக்லாரன் விரும்பிகள் எல்லாம் செட்டாக CCR-க்கு டிரான்ஸ்ஃபர் ஆனார்கள். வேகப் போட்டியில் மெக்லாரனைப் பின்னுக்குத் தள்ளியது இந்த CCR. 806 bhp பவரும், 4.7 லிட்டரையும் கொண்ட இந்த ட்வின் டர்போ இன்ஜின், 8 சிலிண்டர் கொண்டிருக்கிறது. 3.7 விநாடிகளில் 100 கி.மீ-யை எட்டும் இந்த கொயினிக்ஸெக் CCR போலவே, CCX காரும் தெறி ரகம்தான். CCX-ம் இந்த வேகப் போட்டியில் டிஸ்டிங்ஷன் அடிக்கிறது.


7. மெக்லாரன் F1
விலை: தயாரிப்பில் இல்லை
டாப் ஸ்பீடு: 387 கி.மீ
இன்ஜின்: 6.1 லிட்டர், 12 சிலிண்டர்

கார்

ரஜினி ஒரு படத்தில் ‘கூல்’ என்பாரே... அது மெக்லாரனுக்குப் பொருந்தும். உலகின் ‘கூலான கார்’ என்று சொல்லப்படும் மெக்லாரனின் ஸ்பெஷலே, இதன் இன்டீரியர் டிஸைன்தான். இந்த காரின் சீட்கள் மொத்தம் 3. மற்ற கார்களில் இருப்பதுபோல், வல/இடப் பக்கம் என்றில்லாமல், டிரைவர் சீட் நட்ட நடுவே சிங்கிளாக இருப்பதை உலகமே கூலாகப் பார்க்கிறது. தங்க நிறத்தில் ஜொலி ஜொலிக்கும் இந்த காருக்கு ரசிகர்கள் எக்கச்சக்கம். ஆனால், இது தயாரிப்பில் இல்லை. ஆனால் கடந்த 2013-ல், 066 என்னும் சேஸி எண் கொண்ட மெக்லாரன் மாடல், அதிகபட்சமாக 56 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. கார்பன் ஃபைபர் பேனல் கொண்டு, மிகச் சரியான ஏரோ-டைனமிக் டிசைனில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த மெக்லாரன் F1, ஓடாது... பறக்கும். இதை அடிப்படையாக வைத்துத்தான் ஃபார்முலா-1 கார்கள் தயாரிக்கப்பட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 6.1 லிட்டரும், 670 bhp பவரும் கொண்ட இந்த மெக்லாரன்... 12 சிலிண்டர் இன்ஜின் கொண்ட கார். 23 வயது ஆனாலும், ரஜினி-கமல் மாதிரி இன்றும் வேகப்போட்டியில் நின்று விளையாடுவது மெக்லாரனின் ஸ்பெஷல்.


8.ஸென்வோ ST-1
விலை: 4.79 கோடி
டாப் ஸ்பீடு: 375 கி.மீ
இன்ஜின்: 6.8 லிட்டர், 8 சிலிண்டர்

கார்

‘மூர்த்தி சிறுசு; கீர்த்தி பெருசு’ - இந்தப் பழமொழி ஸென்வோ நிறுவனத்துக்குப் பொருந்தும். டேனிஷ் நிறுவனமான இதில் தயாரிக்கப்படும் கார்கள் அனைத்துமே ஹேண்ட்மேடாக, அதுவும் குறைவான நபர்கள் கொண்ட சின்னக் குழுவால் தயாரிக்கப்படுபவை. அதனால், இதன் ஃபிட் அண்ட் ஃபினிஷ் மற்றும் தயாரிப்புக் குறைபாடுகளில் இதுவரை எந்த கம்ப்ளெய்ன்ட்டுமே வராததற்கு... வெல்டன் ஸென்வோ! 2009-ல் அறிமுகமான இந்த காரின் டாப் ஸ்பீடு 375 கி.மீ. 100 கி.மீ-யை வெறும் ‘3 எண்றதுக்குள்ள’ தொட்டுவிடும். மெக்லாரனுக்குப் பிறகு ஷார்ப்பான ஏரோ-டைனமிக் டிசைன் கொண்ட ST-1 - நேரான சாலை என்றால், வெறும் ‘10 எண்றதுக்குள்ள’ டாப் ஸ்பீடான 375 கி.மீ-யைத் தொட்டுவிடுமாம். 6,800 சிசியும், 8 சிலிண்டரும், 1,104bhp பவரும் இதற்கு தெறி பார்ட்னர்ஷிப் கொடுக்கின்றன. கிட்டத்தட்ட 4.79 கோடி ரூபாய்க்குக் கிடைக்கும் இதில் டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல், கீலெஸ் என்ட்ரி சிஸ்டம் போன்ற அம்சமான விஷயங்களும் இருக்கின்றன.


9. பகானி ஹூயரா
விலை: சுமார் 7.12 கோடி
டாப் ஸ்பீடு: 370 கி.மீ
இன்ஜின்: 6 லிட்டர், 12 சிலிண்டர்

கார்

தனது ஸோண்டா கார்கள் மூலம், 1,999-ம் ஆண்டில் இத்தாலியில் அடியெடுத்து வைத்தது பகானி நிறுவனம். ‘நடிப்புனா கமல் மாதிரி இருக்கணும்’ என்பதுபோல், ‘கார் பில்டு குவாலிட்டினா பகானி மாதிரி இருக்கணும்’ என்று குறுகிய காலத்தில் பெயரெடுத்தது பகானி. இத்தாலிய கார்களுக்கு, ஏற்கெனவே உலகில் நல்ல பெயர். இதில் பகானியும் சேர்ந்துகொள்ள, உற்சாகமாக அதிவேக கார்களைத் தயாரித்தது இந்நிறுவனம். அதில் லேட்டஸ்டாக 2016 மார்ச்சில், ஜெனிவா மோட்டார் ஷோவில் ஹூயராவைக் காட்சிக்கு வைத்தது. ‘இது ஹைப்பர் காரா’ என்று பார்ப்பவர்கள் அனைவரும் வியந்து போனார்கள். காரணம், கட்டுமானத் தரம் மட்டுமல்ல; ஹைப்பர் கார் ஸ்டைலும் பகானியின் ஸ்பெஷல். நிஜமாகவே ஹைப்பர் காராகவே வந்தது ஹூயரா. 6,000 சிசி, 12 சிலிண்டர், 730bhp பவர் என்று அதிரடியான பெர்ஃபாமென்ஸைக் காட்டும் ஹூயரா, ஹஅரி பீட்டை ஏற்றும் ஹைப்பர் கார் அல்லாமல் வேறென்ன?


10. ஆஸ்ட்டன் மார்ட்டின் ONE-77
விலை: 9.38 கோடி
டாப் ஸ்பீடு: 354 கி.மீ
இன்ஜின்: 7.3 லிட்டர், 12 சிலிண்டர்

கார்

ஆஸ்ட்டன் மார்ட்டின் என்றால் ஞாபகம் வராது; ஜேம்ஸ்பாண்ட் கார் என்றால் ‘ஓ... அதுவா’ என்று மெடுல்லா ஆப்லேங்கேட்டாவை ரீவைண்ட் செய்வார்கள். ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ்பாண்டின் ஃபேவரைட் கார், பிரிட்டிஷ் தயாரிப்பான ஆஸ்ட்டன் மார்ட்டின்தான். ஆனால், இது அதையெல்லாம்விட வேற லெவல் ஆஸ்ட்டன். இது தயாரிக்கப்படும் பிளாட்ஃபார்மே வேறு! மெக்லாரன்போல் லைட் வெயிட்டான கார்பன் ஃபைபரும் அலுமினியமும் கொண்டு மோனோகாக் சேஸியில் தயாரிக்கப்பட்டிருக்கும் இது, மணிக்கு 354 கி.மீ வேகம் வரை பறக்கும். ‘அதென்ன ONE-77’ என்றொரு கேள்வி உங்கள் மனதில் முளைக்கலாம். அதற்குப் பதில் இதுதான். மொத்தம் 77 கார்கள் மட்டும்தான் இந்த மாடலில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 2012-லேயே இதன் 77-வது கார் விற்பனையாகிவிட்டது. இனிமேல், ஆஸ்டன் மார்ட்டின் ONE-77 மாடலில் பார்ட்-2 ஏதாவது வந்தால் பார்க்கலாம்.

- தமிழ்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்