Published:Updated:

இந்த நாட்டில் நந்தினிகளுக்கு நீதி கிடைக்காது!

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்த நாட்டில் நந்தினிகளுக்கு நீதி கிடைக்காது!
இந்த நாட்டில் நந்தினிகளுக்கு நீதி கிடைக்காது!

இந்த நாட்டில் நந்தினிகளுக்கு நீதி கிடைக்காது!

அரியலூர் மாவட்டம், சிறுகடம்பூரை சேர்ந்த பதினாறு வயது சிறுமி நந்தினி. காதலன் மணிகண்டன் மற்றும் அவனது நண்பர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரத்தை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டோம். மணிகண்டனால் கர்ப்பமாகி, திருமணத்துக்கு வற்புறுத்திய நந்தினியை, இப்படி பலாத்காரம் செய்தார்கள். தடயங்களை மறைக்கும்விதமாக பிறப்புறுப்பை பிளேடால் கிழித்து, மிகக் கொடூரமான முறையில் கொலைசெய்து கிணற்றில் வீசியெறிந்தார்கள். அந்தக் குற்றத்தில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த வழக்கின் போக்கு... பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் குறித்து சிலரிடம் பேசினோம்.

வழக்கறிஞர் அருள்மொழி, '‘நந்தினி வழக்கில் குற்றவாளி எவ்வளவு கொடூரமாக நடந்திருக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும். பெண் குழந்தைக்குதான் அறிவுரை. ஆண் குழந்தை எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற மனநிலையில் இருந்து பெற்றோர் மாற வேண்டும். ஆணும்

பெண்ணும் ஒருவரை ஒருவர் எப்படி மதிக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தர வேண்டும். குழந்தைப் பருவத்தில் இருந்து 'நன்றாகப் படி... சிறந்த கல்லூரியில் சேர்... வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் வாங்கு' என்ற போக்கில் இருந்து கொஞ்சம் மூச்சுவாங்கி, பயனுள்ள வாழ்க்கையை வாழக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இலக்கியங்கள், கதைகள் வாசிப்பது, ஜாதி, மத, இன பேதம் இல்லாமல் பழகக் கற்றுத்தர வேண்டும். வீடுகளில் டிவியின் முன் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டாலே குழந்தைகளுடன் பேசுவதற்கு நிறைய நேரம் கிடைக்கும். குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும். இது அடிப்படையில் குற்றம் இழைக்கிற மனநிலைக்கு ஆளாகாமல் தடுக்க உதவும். மனிதன் உருவாவது என்பது நிலத்தைப் பண்படுத்துவது போலதான். இதனை குடும்பத்தில் இருந்து துவக்க வேண்டும். சமூகம் என்பது குடும்பங்களின் சேர்க்கை. தனிமனிதர்களின் கூட்டம் கூட்டமாக சேரும்போது நாம் செய்கின்ற குற்றம் வெளிப்படாது என்ற சமூகச் சிந்தனை தவறு. அவ்வாறு தவறு செய்யத் துணிகின்ற தனிமனிதனை திருத்த வேண்டும்.

சமூகத்தில் நடைபெறுகின்ற விஷயங்கள் பற்றி பேசும்போது பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சொல்வதை தவிர்க்க வேண்டும். குற்றத்தை எதிர்க்கும் மனத்துணிவு வேண்டும். குற்றவாளியை பற்றி அதிகமாக பேச வேண்டும். அந்தக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சுமத்துவது என்பதே குற்ற மனநிலைதான். சிறுமி ஹாசினி கொலையில்கூட அப்பா, அம்மா விட்டுவிட்டு போகலாமா என்ற வாதத்தை முன்வைத்தார்கள். வீட்டின் வெளியில் விளையாடும் குழந்தைக்குக்கூட பாதுகாப்பு இல்லை என்பது எப்பேர்பட்ட அவலம். இதற்கு சமூகமாகிய நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கொலை செய்யப்படுகின்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஏழைகளாகவும், தலித்களாகவும் இருந்துவிட்டால் அவர்களுக்கு எந்தக் கதவும் எளிதாகத் திறப்பதில்லை. காவல்துறை, நீதிமன்றம் என அனைத்திலும் காலதாமதம். பாதுகாப்பில்லாத குடும்பம் குற்றவாளியின் மிரட்டல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை, நீதிமன்றத்தைத் தட்டி தட்டி கை உடைந்து போகின்றனர்'' என்கிறார்.

சிறுவர், சிறுமியர் மீதான பாலியல் வன்புணர்ச்சி தமிழகத்தில் மட்டும் 60 முதல் 65 சதவீதம் நடைபெறுகிறது. நந்தினி விஷயத்தில் அவரது உடல் நிர்வாணமாக, அழுகிய நிலையில் மீட்டெடுக்கப்பட்டது. அவரின் தாய், மணிகண்டன் மீது சந்தேகம் இருப்பதாக டிசம்பர் 29-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பெண் கடத்தல் என வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு பதிலாக, காணவில்லை எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி எனப் பெற்றோரால் அடையாளம் காட்டப்பட்ட மணிகண்டனையும் கைது செய்யாமல் விசாரித்து அனுப்பிவிட்டனர். இந்த வழக்கின் விசாரணையைப் பார்த்தால், அரசியல் பின்னணி இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. விசாரணையின்போது எவ்வித அச்சமும் இல்லாமல் மணிகண்டன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இப்போது, மணிகண்டன் உட்பட உடந்தையானவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிப்புக்குள்ளான மகளை இழந்த பெற்றோரைப் பார்த்து தாயின் வளர்ப்பு சரியில்லை எனக் குறை கூறும் அவலம் நடந்துவருகிறது.

''நம் சமூகத்தில் பாதிக்கப்பட்டவரையே குற்றவாளி ஆக்குகிறோம். இது குற்றவாளியை நியாயப்படுத்தும் ஆதரவுக் குரல்களாக உள்ளன. இம்மாதிரியான பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்களில் பெண்கள் அணியும் ஆடையைக் காரணம் சொல்கின்றனர். பாலியல் வன்புணர்வில் குழந்தைகள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் ஆடை சரியில்லை என எப்படிச் சொல்ல இயலும்? வயதான பெண்கள்கூட பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் அணிந்த ஆடை ஆபாசம் என்பதா? குற்றவாளியை வளர்த்த பெற்றோரை யாரும் வளர்ப்பு சரியில்லை எனக்கூறுவது இல்லை.

கடந்த ஆண்டில் மட்டும் தூத்துக்குடி புனிதா, மதுரை சரண்யா, கடலூர் சந்தியா, சிவகங்கை முத்துலட்சுமி, அகதிகள் முகாமில் வினிதா, தேனி நந்தினி, வேலூர் சோனியா, கலைச்செல்வி என வரிசையாக பாலியல் வன்புணர்வால் கொலை செய்யப்பட்டது உலுக்கி உள்ளது. தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 700 பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்படுகின்றனர். இதில் 20 சதவீதம் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு வழக்கு நடைபெறுகிறது. இது பெரிய சமூகக்கேடான விஷயம். பல வழக்குகள் சந்தேக மரணமாக மாற்றப்படுகிறது. இறுதியாக, குற்றம் இழைத்தவர்களில் 7 சதவீதத்தினருக்கு மட்டுமே தண்டனை கிடைக்கிறது. பல வழக்குகள் பாதியிலேயே நின்றுவிடுகிறது. பணம் வாங்கித் தருகிறேன் என காவல் நிலையத்திலேயே கட்டப்பஞ்சாயத்து செய்யப்பட்டு முடிக்கப்படுகிறது.

அடித்தட்டு மக்கள், ஏழை மக்கள், தலித் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளானால் போலீசார் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்றனர். அடித்தட்டு மக்கள் என்றால் தெருநாய்களை, காக்கா - குருவியைப் பார்ப்பதுபோல பார்க்கின்றனர். இந்த அப்பாவிகளுக்கு நீதியும் விரைவில் கிடைப்பதில்லை. நிர்பயா வழக்குக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட வர்மா கமிஷன் இம்மாதிரியான வழக்குகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. நடைமுறையில் ஆயிரக்கணக்கான வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ளது. இதேபோல தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக கணவனால் தாக்கப்பட்ட பெண்கள் 130 பேர் மரணம் அடைகின்றனர். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை மற்றும் ஜாதிய வன்முறையால் அதிகளவில் கொலை செய்யப்படுகின்றனர்.

பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளானவர்களுக்கு முறைப்படியான நடைமுறைகள், மருத்துவப் பரிசோதனைகள் நடைபெறுவது இல்லை. பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்தினருக்கு 20 நாட்களுக்கு பிறகுதான் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. அதற்குள் தடயங்கள், காயங்கள் காணாமல் போய்விடுகின்றன. சமீபத்தில் நாங்கள் மதுரை, சென்னை உட்பட நான்கு இடங்களில் நடத்திய ஆய்வில் 110 பாலியல் வன்புணர்ச்சி வழக்குகளில் எப்ஐஆர் பதிவு செய்யப்படவிலை. நந்தினி வழக்கில் ஒவ்வொரு கட்சியினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகின்றனர். பெண்ணுக்கான உண்மையான பாதிப்பு பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க நாம் மீண்டும், மீண்டும் பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி, பாதுகாப்பு என்றே வலியுறுத்துகிறோம். பாதிப்புக்குக் காரணமான ஆண்களை சுதந்திரமாக விட்டுவிடுகிறோம். ஆண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்க வேண்டும். பெண் குழந்தைகளிடம் பழகும் விதம், சமமாக நடத்தும் விதம் பற்றி பேச வேண்டும். நட்பு, காதல், பாலியல் சீண்டலுக்கு இடையேயான வித்தியாசத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த நிலை மாறும். அதுவரை நந்தினிகளுக்கு நீதி கிடைக்காது'' என்று கொதிக்கிறார் எவிடென்ஸ் கதிர்.

எல்லாவற்றையும் மீறி நந்தினிகள் காப்பாற்றப் பட வேண்டும்.

 - ஆர். ஜெயலெட்சுமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு