Published:Updated:

‘ரூ.30 லட்சம் கொடு! இல்லையெனில்...' பாவனாவுக்கு மிரட்டல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘ரூ.30 லட்சம் கொடு! இல்லையெனில்...' பாவனாவுக்கு மிரட்டல்!
‘ரூ.30 லட்சம் கொடு! இல்லையெனில்...' பாவனாவுக்கு மிரட்டல்!

‘ரூ.30 லட்சம் கொடு! இல்லையெனில்...' பாவனாவுக்கு மிரட்டல்!

தமிழ், மலையாள சினிமா உலகின் முன்னணி கதாநாயகியான பாவனாவை, காரில் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமைசெய்த சம்பவத்தில், அவரிடம் டிரைவராகப் பணியாற்றியவரே முக்கியக் குற்றவாளி எனத் தெரியவந்துள்ளது.

நடிகை பாவனா, தற்போது ஜீன்போல்லால் இயக்கும் ‘ஹனிபி–2’ என்ற மலையாளப் படத்தில் நடித்துவருகிறார். கடந்த 17–ம் தேதி திருச்சூரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ‘டப்பிங்’ பணிக்காக இரவு 8 மணி அளவில், படக்குழுவினர் ஏற்பாடுசெய்த காரில் கொச்சிக்குச் சென்றுகொண்டிருந்தார். மார்ட்டின் என்பவர் காரை ஓட்டியுள்ளார். நெடும்பஞ்சேரி அருகே பாவனா சென்ற கார், மற்றொரு கார் மீது மோதியது. ஓட்டுநர் மார்ட்டின் காரை விட்டு இறங்கியுள்ளார். மற்றொரு காரில் வந்தவர்கள் மார்ட்டினை அடித்து, அவரைத் தங்கள் காரில் ஏற்றினர். 

பின்னர், தங்கள் காரை ஓட்டுமாறு மார்ட்டினிடம் சொல்லிவிட்டு, பாவனா இருந்த காரில் ஏறிக்கொண்டனர். பிறகு, பாவனாவை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளனர். அதனை வீடியோ, புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ‘இதை, இணையத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், ரூ.30 லட்சம் தர வேண்டும்’ என பாவனாவை மிரட்டியுள்ளனர். பலரிவட்டம் அருகே வந்ததும் பாவானாவின் காரில் இருந்து இறங்கி, மார்ட்டின் ஓட்டிவந்த தங்கள் காரில் ஏறி தப்பிவிட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்களிடம் பாவனா போராடியுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமைகுறித்து பாவனா, இயக்குநர் லாலுக்கு போனில் கதறியுள்ளார். அவர் நெடுமஞ்சேரி காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். 

நெடுமஞ்சேரி போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே, பாவனாவுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. போலீஸ் விசாரணையில், இந்தச் சம்பவத்தில் பாவனாவின் டிரைவர் மார்ட்டினுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. சுனில்குமார் என்ற பல்சர் சுனி, வடிவேல் பிரதீப், மணிகண்டன், பிஜேஷ், சலீம் ஆகியோர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

சுனில்குமார் தான் இந்தக் கும்பலுக்குத் தலைவன். இவர், பாவனாவின் முன்னாள் டிரைவர். இவர் மீது பல வழக்குகள் விசாரணையில் உள்ளன. சுனில்குமாரின் கிரிமினல் பின்புலம் தெரியவந்ததும், பாவனா அவரை வேலையைவிட்டு நீக்கியுள்ளார். அதன்பின், மார்ட்டின் பாவனாவிடம் வேலைக்குச் சேர்ந்துள்ளார். கொடுமை என்னவெனில் மார்ட்டின், சுனில்குமாரின் நண்பர். மார்ட்டின் பின்புலத்தை ஆராய்ந்த போலீஸார், இந்தச் சம்பத்தில் அவருக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகித்தனர். 

விசாரணையை முடுக்கிய போலீஸார், டிரைவர் மார்ட்டினைக் கைதுசெய்தனர். இதில் தொடர்புடைய மேலும் இருவர் கோவையில் நேற்று கைது செய்யப்பட்டனர். சுனில்குமார் இன்னும் பிடிபடவில்லை. ஆனால், அவரது போன் உரையாடல்களை ஆராய்ந்தபோது, இந்த சம்பவத்துக்குப் பின், கேரளத் திரையுலகின் ஆறு முக்கிய பிரமுகர்களிடம் அவர் பேசியது தெரியவந்துள்ளது. அதில் ஒருவர், முன்னணி தயாரிப்பாளர். எனவே, இதில் மேலும் பலருக்குத் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

நடிகை பாவனாவிடம் அத்துமீறி நடந்துவிட்டு, இந்தக் கும்பல் இரண்டாகப் பிரிந்துள்ளது. ஒரு குழு தமிழகத்துக்கு வந்துள்ளது. சுனில்குமார் உள்ளிட்ட மூன்று பேர் கேரளாவில்தான் பதுங்கியுள்ளனர். இவர்களைப் பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். பாலியல் ரீதியாகத் துன்புறத்தி, அதைப் படம் எடுத்து, அதைக் காட்டியே 'பிளாக் மெயில்' செய்து பணம் பறிப்பதே  இந்தக் கும்பலின் நோக்கம். தனக்குக் கிடைக்கும் பணத்தில் ரூ.15 லட்சத்தை மற்றவர்களுக்கும் பங்கிட்டுத் தருவதாக சுனில்குமார் ஆசை காட்டியுள்ளார். அதனால், மற்றவர்களும் சுனில்குமாருக்கு உடந்தையாக இருந்துள்ளனர். ஆனால், பாவனா தைரியமாக போலீஸை அணுகியதால், கும்பலின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. 

முக்கியக் குற்றவாளியான சுனில்குமார் 17 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியவர். குடும்பத்துடன் தொடர்பில்லை. எப்போதாவதுதான் சொந்த ஊருக்குச் செல்வார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அதன்பின் அங்கு செல்லவில்லை. ஆனால், மலையாளத் திரையுலகில் முக்கிய நடிகர், நடிகைகளிடம் டிரைவராகப் பணி புரிந்ததாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் முகேஷிடமும் சுனில்குமார் டிரைவராகப் பணிபுரிந்துள்ளார். முகேஷ், 'சுனில்குமாரின் கிரிமினல் பின்புலம் எனக்குத் தெரியாது' என இப்போது கூறியுள்ளார்.

​-எம்.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு