வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (21/02/2017)

கடைசி தொடர்பு:17:06 (21/02/2017)

சொப்பன சுந்தரியாகிய நான்!

சொப்பன சுந்தரி

ன்புத் தோழர்களுக்கு வணக்கம்!

நான் சொப்பன சுந்தரி பேசுகிறேன்.

என் பிரச்னையை உள்வாங்கிக்கொள்ளும் அளவுக்கு நீங்கள் இதைப் பொறுமையாகப் படிப்பீர்கள் என நம்புகிறேன். சமீபத்தில், நான் சந்தித்த அவமானத்தைப் போல பல சகோதரிகளும் அனுபவத்திருக்கக் கூடும். நீங்கள் உங்கள் இடத்தில் இருந்து பார்க்காமல், நான் சொல்ல வருவதை என்னிடத்தில் இருந்து பார்ப்பீர்கள் என திடமாய் நம்பி எழுதுகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வளவு தாமதமாக வந்து, இதையெல்லாம் பேச என்ன அவசியம் இருக்கிறது என்றுகூட நீங்கள் கேட்கலாம். ஜல்லிக்கட்டு எழுச்சியின்போது இளைஞர்களின் மீது எனக்கு ஏற்பட்ட மாண்புமிகு மரியாதையின் காரணமாகவே என் மனதில் பட்ட இதையெல்லாம் அப்படியே எனக்குள்ளாகவே மறைத்துவைத்துக்கொண்டு, இப்போது இதைப் பகிர்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல்போன ஒரு குழந்தையின் புகைப்படம் வாட்ஸ் அப்பில் வந்துகொண்டிருந்தது. அதற்கடுத்த சில நாட்களிலேயே அந்தக் குழந்தை மிகக் கொடூரமாய் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட செய்தியும் வந்து விழுகிறது. இதற்குக் காரணம், பாலியல் வறட்சியோ அல்லது வேறு ஏதாவதுகூட இருந்துவிட்டுப் போகட்டும். இப்படியான தருணங்களில் மட்டும் சமூக வலைதளங்களிலும், மீடியா முன்னிலையிலும் பொங்கி எழும் பிரபலங்களும், படைப்பாளிகளும் தங்கள் படைப்புகள் குறித்து எந்த அளவுக்கு சமூக அக்கறை எடுத்துக்கொள்கிறோம் எனக் கொஞ்சமாவது யோசிக்கிறோமா? நெஞ்சம் கனத்த இந்தப் பொழுதில்தான் சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் மறக்காமல் நினைவில் வந்துபோகிறது.

அன்றைய நெரிசலான ஒரு பேருந்துப் பயணத்தில், ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெளியான 'சென்னை- 28-II ' படத்தின் 'சொப்பணசுந்தரி’ பாடல், இளைஞன் ஒருவனின் செல்போன் ரிங் டோனாக ஒலித்துக்கொண்டிருந்தது. சங்கடம், கோபம், எரிச்சல் எனப் பல பெண்கள் முகம் மாற, இச்சைப் பொருளாக இசையுடன் கோக்கப்பட்ட சொப்பன சுந்தரி, பாடலில் பாவமாகக் கரைந்துகொண்டிருந்தாள்! கூடவே நானும்!

 

 

சொப்பன சுந்தரி

 

பல வருடங்களுக்கு முன் வெளிவந்த 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சி வசனம், ‘சொப்பன சுந்தரியை யாரு வச்சிருக்கா?’ என்பது. இங்கே இதை நகைச்சுவை என்று குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும். இப்படியான பெண்களை இழிவுசெய்யும் வசனங்களைத்தான் நாம் நகைச்சுவையாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

அடிப்படையில் கேட்கவேண்டிய முதல் கேள்வி இதுதான். ‘வச்சிருப்பது’ என்பது என்ன? இதற்கு நீங்கள் வெளிப்படையாகவோ அல்லது சென்சார் போட்ட வார்த்தைகளாலோ விளக்கம் கொடுத்துவிட்டுப் போய்விடுவீர்கள். ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் கொண்டிருக்கும் சமூகத்துக்கு உடன்பாடில்லாத உறவுக்கு‘வச்சிருக்கிறது' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆண், பெண் என இருவருடனும் சம்பந்தப்பட்ட இந்தச் சொல்லில், அந்தப் பெண் சீர்கெட்டவள், ஏளனத்துக்கு உரியவள் என்ற பொருள் தொணிக்க, அந்த ஆணுக்கு அது ஆண்மையின் ஓர் அடையாளமாகவே கொள்ளப்படுகிறது. பெரும்பாலும். ஆண்களுக்காகவே கட்டமைக்கப்பட்ட வார்த்தை சுகபோகத்தில், இது மற்றொரு வகை.

சுந்தரி

சரி விஷயத்துக்கு வருகிறேன். சொப்பனசுந்தரி என, ஒரு பெண்ணின் பெயரில் புனையப்பட்ட இந்த வசனத்தையோ, பாடலையோ அதே பெயர் கொண்ட பெண் ஒருத்தி பொதுவெளியில் பலபேர் முன்னிலையில் கேட்க நேரும்போது, அவள் மனநிலை என்னவாக இருக்கும் என்பதைக் கொஞ்சமாவது யோசித்திருக்கிறீர்களா? இது மட்டுமா? இன்னும் 'மீனாகுமாரி' முதல் 'புஷ்பா புருஷன்' வரை, நீங்கள் நினைத்தால் எந்தப் பெண் பெயரும் இங்கு இச்சைப் பொருளாகி, ஏளனப் பொருளாகிவிடுகிறது படைப்பாளிகளே.

படைப்பாளிகள் மட்டுமா சுட்டிக்காட்டப்படவேண்டியவர்கள்? திரைப்படங்களில் ஆரம்பித்து, நட்சத்திர விடுதிகள், திருவிழாக்கள், அரசியல் மேடைகள் என பெண்ணுடலை போதையாக்கும் போக்கு இங்கு சர்வசாதாரணம்.

நீங்கள், பொத்தாம் பொதுவாய் ரசனை என்கிற பெயரில் நெம்பித் தள்ளும் வலுவற்ற உங்கள் வார்த்தைகளால், இங்கே நூதனமான பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக நேரிடும் பெண்கள் குறித்து நீங்கள் அறிவீர்களா? ஷேர் ஆட்டோ பயணம், ரயில் நிலையத்தில் காத்திருக்கும் நேரம், அலுவலகத்தில் அருகருகில் அமர்ந்திருக்கும் சூழல்களில் எல்லாம், ஓர் ஆண் தன் அருகில் உள்ள பெண்ணை நேரடியாகச் சீண்டியோ, அவளிடம் தவறான எண்ணத்துடன் பேசியோ அவளுக்குப் பாலியல் தொல்லை தரவேண்டியதில்லை. உங்கள் புண்ணியத்தில், அவள் கேட்கும்படியான ஒலியில் நீங்கள் அருளிய அயிட்டம் பாடல்களைத் தொடர்ந்து அவன் ஒலிக்கவிட்டாலே போதும். 'குத்துவெளக்கு குத்துவெளக்கு சத்தியமா நான் குடும்பக் குத்துவெளக்கு', 'அழகா பொறந்துபுட்டேன் ஆறடி சந்தனக்கட்ட' என அவளை அருவருப்பில் முகம் சுளிக்கவைக்க முடியும். இதில், அவள் பெயர் படைப்பாளிகளுக்குப் பிடித்துப்போன மீனாக்குமாரியாகவோ, புஷ்பாவாகவோ, சொப்பணசுந்தரியாகவோ இருந்துவிட்டால்... நெருப்பில் விழுந்த புழுதான் அவள் நிலை. தவிரவும், சொப்பன சுந்தரிகளின் தகப்பன், கணவன், சகோதரன், அம்மா, அக்கா என அவள் குடும்பத்துக்கே நீங்கள் தரும் மனவேதனைக்கு என்ன நஷ்டஈடு கொடுக்க முடியும் உங்களால்?

இதைப் படிக்கும்போது, 'சினிமா பாட்டுல வர்ற பேருக்கெல்லாம் பொங்கி எழுந்தா என்ன பண்ணுறது?' என்ற மனநிலை உங்களுக்கு இருக்குமானால், அடுத்தடுத்து வரவிருக்கும் ஆபாச பாடல்களில், உங்கள் வீட்டுப் பெண்களின் பெயர்கள் பயன்படுத்தப்படும் சூழலை நினைத்துப் பார்க்கவும். உங்கள் அன்புத் தங்கை செல்லும் கல்லூரிப் பேருந்தில், சக மாணவர்கள் அவள் பெயரில் ஹிட் ஆன அந்த குத்துப்பாட்டை ஸ்பீக்கரில் வைத்து குதூகலத்துடன் கேட்பார்கள். உங்கள் மனைவியின் அலுவலகத்தில், அவர் பெயரிலான பாடலை அவருக்கு வேண்டாத சக ஊழியர் ரிபீட் மோடில் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். உங்கள் செல்ல மகளின் பள்ளித்தோழர்கள், அவள் பெயரைக் கூவி விற்கும் அந்த அடல்ட்ஸ் ஒன்லி பாடலாலேயே அவளைக் கேலி செய்வார்கள். அப்போதும் உங்களுக்குத் தோன்றுமா, 'சினிமா பாட்டுல வர்ற பேருக்கெல்லாம் பொங்கி எழுந்தா என்ன பண்ணுறது?' என்று.

சக மனுஷியின் உடலை மட்டுமல்ல, அவள் பெயரைக் கூட விட்டுவைக்காமல் இச்சைப் பொருளாக்கி, ஏளனமாக்கி, இழிவாக்கும் சமூகப் பொறுப்பற்ற தன்மையை, ரசனை என்று உங்களால் சொல்ல முடியுமென்றால்... இந்தத் தீமை உங்களுக்கு வரும்போது தெரியும் அதன் வேதனை!

- இப்படிக்கு சொப்பனசுந்தரி

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க