வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (21/02/2017)

கடைசி தொடர்பு:14:28 (21/02/2017)

முட்டை ஓட்டில் பிரமாண்ட ஓவியம்... சத்யபாமா பல்கலைக்கழக மாணவி கின்னஸ் சாதனை..!

சத்யபாமா மாணவி கின்னஸ் சாதனை

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் பயிலும் நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி மேரி சௌம்யா, 15,045 முட்டை ஓடுகளைப் பயன்படுத்தி பிரமாண்ட ஓவியம் வரைந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 

சிறுவயதிலிருந்தே கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தவருக்கு முட்டை ஓடுகளின் மீது வரையப்படும் ஓவியங்களில் தனிப்பிரியம். பத்தாம் வகுப்பு படிக்கும்போதிருந்தே முட்டை ஓடுகளின் மீது வரைவதை பொழுதுபோக்காக வைத்திருந்தார். உலக அளவில் மிகப்பெரிய சுவரோவியம் அதுவும் முட்டை ஓடுகளைப் பயன்படுத்தி வரைந்தால் என்ன என்றொரு ஐடியா அவர் மனதில் ஃப்ளாஷ் அடிக்க உடனடியாக களத்தில் இறங்கினார். 

முட்டை ஓடுகளைத் தயார் செய்வது, வர்ணம் தீட்டுவது என தன் வேலையை இரண்டு பகுதிகளாக பிரித்துக் கொண்டு மொத்தம் நான்கு மாதங்கள் இந்த ஓவியத்தை உருவாக்க எடுத்துக் கொண்டார். 

முட்டையில் மஞ்சள் கரு, வெள்ளை கருவை நீக்குவது, நான்கு முறை கழுவுவது, காயவைப்பது என முட்டை ஓடுகளைத் தயார் செய்வதற்கே நாள் ஒன்றுக்கு ஆறு மணி நேரம் என நான்கு மாதங்களை செலவு செய்தார். பிறகு 288 சதுரஅடி ப்ளைவுட்டில் வரையத் தொடங்கினார்.  அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை முட்டை ஓடுகளில் வண்ணம் தீட்டி அதை ப்ளைவுட்டில் ஒட்டி “Just fill the Plate with the Right food” மற்றும் ”Fudo e Pretious” (Food is Precious) என்ற இரு வாசகங்கள் அடங்கிய ஓவியத்தை வரைந்து முடித்தார். இதை ஒட்டுவதற்கு மட்டுமே கிட்டத்தட்ட 30 கிலோ பசை தேவைப்பட்டது. 18 லிட்டர் பெயின்ட் உபயோகித்து 15,045 முட்டைகள் மூலம் உருவாக்கப்பட்ட இந்த பிரமாண்ட ஓவியத்தை,  “முட்டை ஓடுகளை வைத்து வரையப்பட்ட மிகப்பெரிய சுவரோவியம்” என்று கின்னஸ் புத்தகம் மற்றும் லிம்கா புத்தகம் இதனை அங்கீகரித்துள்ளன.

இந்த ஓவியத்தினை தனது பெற்றோருக்கும், தனது கனவு நினைவேற துணை நின்ற சத்யபாமா யுனிவர்சிட்டிக்கும் அர்ப்பணிப்பதாக சௌம்யா தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க