Published:Updated:

உங்கள் குழந்தையை ஒரு பொம்மையைப் போல தயார் செய்யாதீர்கள்!

உங்கள் குழந்தையை ஒரு பொம்மையைப் போல தயார் செய்யாதீர்கள்!
உங்கள் குழந்தையை ஒரு பொம்மையைப் போல தயார் செய்யாதீர்கள்!

உங்கள் குழந்தையை ஒரு பொம்மையைப் போல தயார் செய்யாதீர்கள்!

ன்றைய கால சூழலில் கூட்டுக் குடும்பம் என்பது அரிதாகி, தனிக்குடும்பங்கள் அதிகரித்து வருகிறது. ஒரு வீட்டிற்கு ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளே இருக்கின்றனர். அதனால் வீட்டில் குழந்தைகள் ராஜ்ஜியமே. அவர்களுக்கு பிடித்த மாதிரியே வீட்டில் நடக்கும். வீட்டிலுள்ளவர்களும் நடந்து கொள்வார்கள். என்ன கேட்டாலும் கிடைக்கும். வீட்டில் அம்மாவுடன் சுற்றித்திரிந்த குழந்தை 2 அல்லது 2.5 வயதானதும் பள்ளிக்குள் அடியெடுத்து வைக்கிறது. பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றதுமே அழுது அடம் பிடிக்கும். காலையில் எழுந்திருக்க வைத்து, டாய்லெட் போக வைத்து, பல் துலக்கி, குளிக்க வைத்து, சாப்பிட வைத்து, யூனிபார்ம் மாட்டி,ஷூ போட்டு ஸ்கூல் பஸ் அல்லது வேனில் தள்ளுவதற்குள் அம்மா, அப்பா படும் பாடு சொல்லி மாளாது. ஸ்கூலில் விட்ட பின்னர் தான் பெற்றோர் எதையோ சாதித்ததைப் போல் உணர்வர். ஸ்கூலுக்கு சென்றாலும் அங்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் குழந்தைகள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி வாந்தி எடுத்து ஆசிரியரையும், ஆயாவையும் படாதபாடு படுத்தி விடுவார்கள். அவர்களாக விரும்பி பள்ளிக்கு செல்லும் வரை பெற்றோர், ஆசிரியர் என பலருக்கும் சிரமம் தான். 

நம்ம செல்ல குட்டீஸ்கள் எல்லாம் ஸ்கூலுக்கு போய்ட்டு வர்றாங்க. அவங்கள எப்படி ஸ்கூலுக்கு கிளப்பணும். ஸ்கூல் விட்டு வந்ததும் எப்படி அவங்கள கவனிக்கணும். ஸ்கூல்ல இருந்து என்ன மாதிரியான பிரச்னைகள் வரும்? குழந்தைகள் படிக்க துவங்கும் போது என்ன மாதிரியான சிரமங்கள் வரும்? அதனை எப்படி எதிர் கொள்ளலாம் என்பதைப் பற்றி மதுரை மனோதத்துவ நிபுணர் ராணி சக்கரவர்த்தி சொல்வதைக் கேட்கலாம்: ‘குழந்தைங்க பள்ளிக்கு போகும் போது தான் சமூகத்துல முதல் தடவையாக நுழைய போறாங்க. ஸ்கூல்னா மிஸ் திட்டுவாங்க. மத்த பிள்ளைகள் சண்டை போடுவாங்க. அமைதியா இருக்கணும். நல்லா படிக்கணும்.பேசக்கூடாது. இப்படி நிபந்தனைகளோட நெகடிவ்வா பேசாம நீங்க முதன் முதல்ல ஸ்கூலுக்கு போகப் போறீங்க. அங்க உங்களுக்கு நிறைய ப்ரண்ட்ஸ் கிடைப்பாங்க. எல்லார்கிட்டையும் நல்லா பழகணும். அன்பா நடந்துக்கணும். மிஸ் ரொம்ப நல்லவங்க. ஸ்கூல்ல எல்லாரும் உங்களை நல்லா வச்சுக்குவாங்க. அங்க விளையாடலாம். மிஸ் நிறைய புது விஷயங்கள் சொல்லித் தருவாங்க. கத்துக்கணும் என பாசிட்டிவா பேசி ரிலாக்சாக ஸ்கூலுக்கு செல்ல தயார் படுத்தணும். ஸ்கூல்குள்ள குழந்தைங்க போனதும் குழந்தைகளுக்குள்ள சின்ன சண்டை, ஒருத்தரை, ஒருத்தர் அடிப்பது, கடிப்பது வரலாம். உங்க குழந்தைங்க உங்களுக்கு எப்படி செல்லமோ? அதே மாதிரி ஒவ்வொரு வீட்டு குழந்தைகளும் அந்தந்த வீட்டுக்கு செல்லம் தான். அதனை பெரிது படுத்தாமல் பாசிடிவ்வா சமாளிக்கணும். ஸ்கூலுக்கு கிளப்பும் போது அவதி, அவதியா பொம்மையை ரெடி பண்ற மாதிரி செய்யக்கூடாது. ஆரம்பத்தில் குழந்தைகளை கிளப்புவதற்கென தனியாக நேரம் ஒதுக்கணும். அவங்களே ப்ரஷ் பண்ண, டாய்லெட் போக என தங்கள் வேலைகளை தாங்களே செய்ய கற்றுத் தரணும். குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளையே சாப்பாடாக வழங்க வேண்டும். 

பள்ளியை விட்டு வந்ததும் பள்ளியில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி கேட்க வேண்டும். சின்ன, சின்ன விஷயங்களையும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். தனிக்குடும்பங்களில் தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தையெல்லாம் கிடையாது. அப்பா, அம்மா இருவரும் வேலைக்கு போறவங்களா இருக்காங்க. இல்லாட்டி அப்பா வேலைக்கு போய்டுவாரு. அம்மா வீட்ல வேலை பார்ப்பாங்க. வீட்டு வேலையை செய்யணும்னேனு டிவியை போட்டு உட்கார வச்சுடுவாங்க. இல்ல செல்போன், லேப்டாப், வீடியோ கேம்னு கைல வச்சுட்டு இருப்பாங்க. இது மாதிரி அதிகப்படியான எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்பாடு குழந்தைகளோட மூளையில ஹைப்பர் ஆக்டிவ்வை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. இதனால் கவனச்சிதறல் அதிகமாகுது. துறுதுறுப்பு அதிகமாகுது. ஆங்கிரி பேட் கேம் விளையாடுறது, கார்ட்டூன் சேனல்கள் அதிகமா பார்க்கும் போது நாளடைவில் குழந்தைகள் ஒரு மாய உலகில் இருப்பது போல் பாவித்துக் கொள்வார்கள். இதனால் குழந்தைகளோட குழந்தைத்தன்மை போயி எதற்கெடுத்தாலும் கோபம், டென்சன் வருது. அளவுக்கு அதிகமா அடம் பிடிக்கிறது அதிகமாகுது. வீட்டில் குழந்தைகள் இருக்கின்ற ஒவ்வொரு நேரமும், பெற்றோர்கள் உடன் இருப்பது போல் அமைப்பது அவசியம். ஓடி, ஆடி விளையாடுதல், ஒளிந்து விளையாடுதல் அவசியம். அப்போது தான் அவர்களிடம் இருக்கின்ற பிடிவாதம், கவனச்சிதறல் குறையும். 

பள்ளிக்கு சென்றதும் சில குழந்தைகளுக்கு கற்பதில் சிரமம் இருக்கும். இக்குழந்தைகளால் ஒரு 5 முதல் 10 நிமிடம் கூட உட்கார இயலாது. கவனச்சிதறல் அதிகமாக இருக்கும். கற்றலில் ஆர்வம் இல்லாமல் குறைவாக இருக்கும். ஆனால் நல்ல தெளிவாக பதிலளிக்கும் திறமையும், அறிவுக்கூர்மையும் அதிகமாக இருக்கும். கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். எழுத்துக்களை எழுதுவதிலும், வார்த்தைகளை உச்சரிப்பதிலும் சிரமம் இருக்கும். எழுத்துக்களை தலைகீழாக எழுதுவது, கோட்டின் மேல் எழுதாத சூழல் இருக்கும். எல்லாக் குழந்தைகளும் துவக்கத்தில் இதே மாதிரி எழுதுவார்கள். ஒரு 6 அல்லது 8 மாத பயிற்சிக்குப் பின்னர் சரியாக எழுதுவார்கள். 

கற்றலில் குறைபாடு(லேர்னிங் டிஸ்எபிளிட்டி) உள்ள குழந்தைகள் தொடர்ந்து இந்த தவறுகளை செய்வதைக் காணலாம். இக்குழந்தைகளை அடிக்கக்கூடாது. அவர்களைப் புரிந்து கொள்ள முயல வேண்டும். சிலருக்கு இடது கை பழக்கம் இருக்கும். அப்பழக்கத்தை வலது கை பழக்கமாக மாற்ற முயலக்கூடாது. இவர்களிடம் நீச்சல், டான்ஸ், மியூசிக் என ஏதாவது ஒரு திறனில் அபரிமிதமான ஆற்றல் இருக்கும். இவர்கள் எந்தத் துறையில் ஆர்வமாக உள்ளனர் என்பதைக் கண்டறிந்து அத்திறனை வளர்க்க வேண்டும். அதோடு கொஞ்சம், கொஞ்சமாக பொறுமையுடன் படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களை படிப்பதற்கு கட்டாயப்படுத்தாமல் ஆர்வமூட்ட வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள் இவர்களை புரிந்து கொள்ளாமல் ஸ்லோ லேனர்ஸ், லோ அச்சீவர்ஸ், டிஸ்லெக்சியா என குறை சொல்வர். மற்ற குழந்தைகள் முன்பு மட்டம் தட்டுவார்கள். அவ்வாறு செய்வதை பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது. 

ஆசிரியர்கள் இக்குழந்தைகளை தனிமைப்படுத்தாமல் ஊக்குவித்து கற்றுத்தர வேண்டும். ஆய்வுப்படி 100 குழந்தைகளில் 2 அல்லது 3 பேருக்கு கற்றலில் குறைபாடு இருக்கிறது. அப்படியானால் பெரும்பாலனவர்களுக்கு இப்பிரச்னை இருக்கிறது என்றே அர்த்தம். இவர்கள் எதுக்குமே லாயக்கில்லாத படிக்காத முட்டாள் என நினைத்தால் தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டீன், வால்ட் டிஸ்னி, மைக்கேல் ஏஞ்சலோ இன்னும் எத்தனையோ பேர் இந்த வகையை சேர்ந்தவர்களே. இவர்களை பெற்றோர்கள் புரிந்து கொண்டு நல்ல மனோதத்துவ நிபுணரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெற்று பயிற்சி வழங்க வேண்டும். ஆலோசனைப்படி பொறுமையுடன் பாடம் கற்றுத் தந்து, அவர்களிடம் இருக்கும் தனித்திறமையை மேம்படுத்தினால் நாளடைவில் கற்பதில் ஏற்படும் குறைபாடு படிப்படியாக குறையும். அதனை விடுத்து படிப்பு மட்டுமே பிரதானம். படிக்கவில்லை என அடித்து துன்புறுத்துதல், மற்றவர்கள் முன்பு கேவலமாக பேசுதல் என செய்தால் எதிர்காலத்தில் மனநோயாளியாகவோ, குற்றவாளியாகவோ மாற வாய்ப்புள்ளது" என்றார். 

குழந்தை என்பது நமது உடலில் இருந்து உருவான ஜீவன். அதற்கென தனியாக அனைத்து உறுப்புகளும் உள்ளன. அதே போல் அதற்கென விருப்பு, வெறுப்புகள் உள்ளது. அதனை பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரிந்து கொள்ள வேண்டும். நமது தேவைகளையும், ஆசைகளையும் குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. அவர்களின் தனித்திறனை, ஆற்றலை கண்டறிந்து ஊக்குவித்து மேம்படுத்த உதவ வேண்டும். 

- ஆர். ஜெயலெட்சுமி,

அடுத்த கட்டுரைக்கு