வெளியிடப்பட்ட நேரம்: 09:34 (24/02/2017)

கடைசி தொடர்பு:09:33 (24/02/2017)

களிமண் தோசை சுடும் ஜோதிகா! - எ கற்பனை அபவுட் பாலா ஃப்லிம்

யக்குநர் பாலாவின் அடுத்த படத்தில் ஜோதிகா நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பாலா படங்களில் ரியாலிட்டி ஆஃப் மேக்கிங் பக்காவாக இருக்கும் என்பது நாம் அறிந்ததே. அதற்காக, அவர் படங்களில் வேலைபார்க்கும் அனைவரையும் போட்டுப் பிழிந்தெடுப்பார் என்பதும் உலகறிந்த விஷயம். லைலாவையே 'பிதாமகன்' படத்தில் சிறப்பாக 'நடிக்க'வைத்த பாலாவுக்கு 'மொழி' ஜோதிகாவையெல்லாம் அவரது வட்டத்துக்குள் கொண்டுவருவது எளிதான வேலைதான். ('கனவுக்கன்னி' லைலா ரசிகர்கள் மன்னிக்க...)

ஜோதிகா

ஜோதிகா அவர்போக்கில், '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்' என ஹவுஸ் ஒயிஃப் கேரக்டர்களில் தோசை சுட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க, 'பாலா என்ன பாடுபடுத்தப் போகிறாரோ..' என சூர்யாவே உள்ளுக்குள் கொஞ்சம் ஜெர்க்காகியிருப்பார். பாலா அவர் இயக்கப்போகும் இந்தப் படத்திற்கு இன்னும் பெயரே வைக்கலையாம். அதனாலென்ன..? நாமளே கோட்டைக் கிழிச்சுக் கதையையும் எழுதிடுவோம் வாங்க... 

'களிமண்ணைக் கையில் கொடுத்தாலே அதுக்குத் தேசிய விருது வாங்கிக் கொடுத்திடுவார் பாலா'ன்னு ஒரு பேச்சு தமிழ் சினிமா வட்டாரத்தில் பரவலா இருக்கு. அங்கே இருந்தே கதைக்கான லீட் பிடிப்போம். 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து... தாமிரபரணித் தண்ணி ஊத்தி... சேர்த்து சேர்த்து செஞ்சது இந்த பொம்ம...'னு முரளி பாடின அந்தப் புண்ணிய பூமிதான் கதைக்களம். மண்பானைகள் செய்யும் குடும்பத்துப் பொண்ணு ஜோதிகா. 'மேக்கிங் ஆஃப் ரியாலிட்டி'க்காக ஒரு மூணு மாசம் தஞ்சாவூர்ப் பக்கம் டென்ட் போட்டு, ஜோதிகா மூஞ்சியில களிமண்ணையும் செம்மண்ணையும் கலந்து பூசிவிட்டு உச்சிவெயிலில் காய வைக்கிறோம். விறகுக்கட்டைத் தலையில் தூக்கிக் கொடுத்து காட்டுக்கும் வீட்டுக்கும் நடக்க வெச்சு உடம்பை ஏழு சுத்து இளைக்க வைக்கிறோம். ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி சூர்யாவுக்கே அடையாளம் தெரியாம மாத்துறோம். 

கதை (கற்பனை) :

அந்த ஊரிலேயே பெரிய பண்ணையார் ஒருத்தர் இருக்கார். அவர்தான் வில்லன்னு தனியா வேற சொல்லணுமா? பானை செய்யுறவங்களோட உழைப்பையெல்லாம் சுரண்டிக் காசாக்கிட்டுக் கால்வயிறுக் கஞ்சியோட பசி பட்டினியில் எல்லோரையும் தவிக்க விடுறார் அந்தப் பண்ணையார். அங்கே களிமண்ணை உருட்டி இட்லி, தோசை சுடும் சின்னப்புள்ளையாக ஜோதிகாவைக் காட்டுகிறார்கள். அப்படியே பத்துப் பதினைஞ்சு வருசம் கழிச்சுப் படம் தொடருது. பல வருசமா தட்டிக் கேட்க ஆள் இல்லாம கூழைக்கும்பிடு போட்டே பழகின குடும்பங்கள் இருக்கிற ஊரில் அந்தத் தலைமுறை இளைஞன் (இன்னும் பெயர் வெளியிடப்படாத ஹீரோ) தான் எதிர்த்துப் போராடத் துணிஞ்சு களத்தில் இறங்குறான். அவ்வளவு பெரிசா ஒண்ணும் கேக்கலை. பாவம் அந்தநேரத்துல பண்ணையார் என்ன கோவமா இருந்தாரோ தெரியலை. அதிகாரம் செல்லுபடியாகாத சூழ்நிலை வந்ததும் வழக்கம்போல ஹீரோவோட கழுத்து நரம்பை முறிச்சுப் பக்கவாதத்தில் படுக்க வெச்சிடுறாங்க. 

ஜோதிகா

அதுவரை அமைதியாக இருந்த நாயகி ஜோதிகா, தன் காதலன் படுத்த படுக்கையானதைப் பார்த்துப் பொங்கி எழுந்துடுறாங்க. ஹீரோவுக்குப் பழைய கஞ்சியைக் கரைச்சு வாயில் ஊத்துற காட்சிகளில் எல்லாம் சோகத்தைப் பிழிஞ்சு சாறெடுக்கிறார் இயக்குநர். இயக்குநரின் சினிமா மரபுப்படி படத்தில் ஒரு கிழவி இருக்கணும்ல. இந்தப் படத்தில் அதுதான் கதாநாயகனோட அப்பத்தா. அது கதாநாயகியின் குமட்டில் இடித்து, நூற்றாண்டாகத் தொடரும் அடிமைத்தனத்தைப் புட்டுப் புட்டு வைக்க, பண்ணையாருக்கு எதிராகப் போராடத் தயாராகிறார் ஜோதிகா. 

'வேணாம்மா... அவுக பெரிய எடம்...' எனத் தடுக்கும் சொந்தக்காரங்களையெல்லாம் காலால் எத்திவிட்டுக் கூந்தலை அள்ளி முடிகிறார் ஜோ. அடுத்தடுத்த காட்சிகளில் அனல் பறக்க, ஆங்காங்கே பானைகளும் பறக்கின்றன. பண்ணையாரின் கொடுமை இன்னும் அதிகமாகிறது. ஐடியா கொடுத்த அப்பத்தாவை ஆள் வைத்துத் தூக்குகிறார். வயதானவர் என்றுகூடப் பார்க்காமல் சின்னப்புள்ளைகளோடு கிரிக்கெட் விளையாடச் சொல்லிக் கொடுமைப் படுத்துகிறார். 'அவுட்'னா என்னனு கூடத் தெரியாமல் முழிக்கும் அப்பத்தாவை பண்ணையாரோடு இருக்கும் பெரிசுகள் வகைதொகையில்லாமல் கலாய்க்கின்றனர். 

நடப்பதையெல்லாம் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ஒரு கட்டத்தில் உக்கிரமாகக் கிளம்பும் ஜோதிகா அடுத்து அந்தப் பண்ணையாரைப் பழிவாங்கித் தன் இனத்துக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரா..? அவரது காதலன் பக்கவாதத்திலிருந்து மீண்டாரா..? என்பதையெல்லாம் திரையில் பார்க்கலாம். கதையே வேறமாதிரி இருந்தால் கவலை வேண்டாம். அடுத்த படத்தில் இதேபோன்றதொரு கதையை எதிர்பார்க்கலாம். பாலா என்ன சொல்வாரோனுதான் பயமா இருக்கு. 

 

- விக்கி 

கிராஃபிக்ஸ் : எம்.செய்யது முகம்மது ஆசாத்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்