அம்மா பாசம்... தோழியின் நேசம்...சிம்பன்ஸி கனகோவின் கண்ணீர் கதை..!

அவள் எங்கோ வெறித்துப் பார்த்தபடியே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அந்தக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, திரும்புகிறாள். ஆனால், அவள் பார்வை கதவை நோக்கியதாக இல்லை. உள்ளே வந்த அந்தப் பெண், ஜப்பானிய மொழியில் ஏதோ சொல்கிறார். அவள்... கொஞ்சம் சிரிக்கிறாள். புதர்களுக்கிடையில் இருந்து தன் முழு உருவத்தை வெளிக்காட்டுகிறாள். மரங்களின் கிளைகளிலும், கூண்டின் கம்பிகளிலும் தொங்கியபடியே தாவி, குரல் வந்த இடத்திற்கு வருகிறாள். கம்பியில் தொங்கியபடி அந்தப் பெண்ணை கால்களால் தொட்டு விளையாடுகிறாள். அவள் மனிதக் குரங்கு எனப்படும் சிம்பன்ஸி இனத்தைச் சேர்ந்தவள். அவளைப் பார்த்தால் தெரியாது அவளுக்கு வயது 24 என்பது. அவளைக் கூர்ந்து கவனிக்காவிட்டால் தெரியாது, அவளுக்கு கண்கள் தெரியாது என்பது. அவள் பெயர் கனகோ...

சிம்பன்ஸி ஜப்பான் கனகோ

1992ல் கனகோ பிறந்த போது சாதாரணமாகத் தான் இருந்தாள். அவள் பிறந்தது ஒரு மிருக காப்பகத்தில். கனகோ பிறந்த 156வது நாள், அவளின் தாய் கனே மருத்துவப் பரிசோதனைக்காக தனியாக அழைத்துச் செல்லப்பட்டார். நான்கு நாட்களுக்குப் பின்பு கூண்டுக்கு திரும்பிய கனே, ஏனோ கனகோவை தன்னிடம் நெருங்கவிடவில்லை. அன்று முதல் மனிதர்களின் அரவணைப்பிலேயே வளர்ந்து, வாழ்ந்து வருகிறாள் கனகோ. 

சிம்பன்ஸி ஜப்பான் கனகோகனகோ மற்ற சிம்பன்ஸிகளைப் போன்றவள் அல்ல என்பதை வெகு சீக்கிரமே கண்டுபிடித்து விட்டனர் காப்பகத்திலிருந்த மருத்துவர்கள். மனிதர்களுக்கு ஏற்படும் டவுன் சின்ட்ரோம்  போன்ற ஒரு குறைபாட்டால் அவள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. மனிதர்களுக்கு 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கும். அதில் 21வது குரோமோசோம் ஜோடியில் கூடுதலாக ஒரு இணை இருந்துவிட்டால் டவுன் சின்ட்ரோம் பாதிப்பு ஏற்படும். அதே போல, 24 ஜோடி குரோமோசோம்களைக் கொண்ட சிம்பன்ஸிகளுக்கு 22வது ஜோடியில் கூடுதல் இணை இருந்தால் ட்ரைசோமி 22 (Trisomy 22) என்ற குறைபாடு ஏற்படும். இதற்கு முன்னர் முதன்முறையாக இது போன்ற குறைபாட்டோடு இருந்த ஒரு சிம்பன்ஸி 1969யில் பதியப்பட்டது. ஆனால், பிறந்து இரண்டு வருடங்களுக்குள்ளாகவே அது இறந்துவிட்டது. உடல் மற்றும் மூளை வளர்ச்சியை தடை செய்யும் இந்த குறைபாட்டோடு இருக்கும் ஒரே சிம்பன்ஸி கனகோ மட்டுமே.

தன்னுடைய 7 வயதில் கண் பார்வையை இழந்தாள் கனகோ. அதனால், பிற சிம்பன்ஸிகளிடம் கனகோவால் சரிவர பேசிப் பழக முடியவில்லை. நீண்ட காலத்திற்கு தனிமையிலேயே வாழ்வைக் கழித்தாள். இயற்கையின் ஆச்சரியமாய், சில ஆண்டுகளுக்கு முன்னர் காப்பகத்திற்கு வந்த ரோமன் என்கிற சிம்பன்ஸி கனகோவிடம் நன்றாகப் பழக ஆரம்பித்தாள். தற்போது தினம் சில மணி நேரங்கள் ரோமனோடு நேரத்தை செலவிட்டு வருகிறாள் கனகோ. 

ரோமனோடு சேர்ந்த பிறகு தான், சிரிக்கவே ஆரம்பித்தாள் கனகோ. ஆனால், இப்போது அந்த சிரிப்பும் நீண்ட காலத்திற்கு இருக்கப் போவதில்லை. அவளின் சிரிப்பு மட்டுமல்ல.. அவளும் கூடத் தான். சமீபத்தில் கனகோவிற்கு இதய நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவள் உயிர் வாழ்தலின் சாத்தியங்கள் நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருகிறது. காடுகளைக் காணவில்லை, காதலை அனுபவிக்கவில்லை, வாழ்தலை ருசிக்கவில்லை... ஆனால், இறத்தலை ரசிக்க கிளம்பிவிட்டாள் கனகோ. ஒளி இழந்து, ஒலி கொண்டு வாழ்ந்து வந்த கனகோவின்  வாழ்வில் மொத்தமாய் இருள் சூழ இருக்கிறது. 

சிம்பன்ஸி ஜப்பான் கனகோ

கனகோவைப் பார்த்துக் கொள்ளும் அந்த காப்பக பெண் பச்சை நிற தோலும், சிகப்பு நிற சதையும் கொண்ட அந்த தர்பூசணியைக் கொடுக்க... அதை அத்தனை மகிழ்ச்சியோடு விளையாடியபடியே ரசித்து, ருசித்து சாப்பிடுகிறாள் கனகோ... அடுத்தக் கூண்டிலிருந்து  தன் தோழியை  சிரித்தபடியே பார்த்துக் கொண்டிருக்கிறாள் ரோமன். 

  - இரா. கலைச் செல்வன்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!