குறும்பு மாணவன், துப்பாக்கி மிரட்டல், காலி டப்பா, ஆப்பிள்... செம ரகளை ஸ்டீவ் ஜாப்ஸ்! #SteveJobs #apple

ஏப்ரல் 1 , 1976 அந்த 21 வயது இளைஞன், உடன் அவனைவிட 5 வயது அதிகமுள்ள இளைஞன் இருவரும் சேர்ந்து 1,300 டாலர் மூலதனம் போட்டு அந்த நிறுவனத்தைத் தொடங்கினார்கள். அது கம்ப்யூட்டர் தயாரிக்கும் சிறிய நிறுவனம். கம்ப்யூட்டர்கள் அலுவலகப் பணிகளுக்குப்,பிரம்மாண்ட உருவத்தில் அறையை அடைத்துக் கொண்டிருக்கும் காலம் அது. அந்தக் காலத்தில் தனிமனிதர்களால் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டரை  வடிவமைத்து விற்க இந்த இளைஞர்கள் என்ன முட்டாளா?

அதிலும் அந்த இளைஞன் ரொம்பவும் மோசம். ‘தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்பவன். படிக்கும்போதே செம ரகளை மாணவன். ஒற்றை  புரோகிராமிங்கூட எழுதத் தெரியாதவன். ஒருநாள் பள்ளியில் ,"அனைவரும் நாளை வரும்போது செல்லப்பிராணிகளையும் எடுத்து வாருங்கள்" என எழுதி வைத்து இவன் செய்த சேட்டையில் பள்ளிக்கூடம் முழுவதும் கோழி, ஆடு, பூனை , நாய் என நிரம்பிக் கிடந்த நாளை நினைத்தால் அவன் அப்பா, அம்மாவுக்குக் கதிகலங்கும்.

ஒருநாள் 'LIFE' மாத இதழில் நைஜீரிய மக்களின் மெலிந்த பசி கொண்ட மக்களைப் பார்த்துவிட்டு வேகமாக சர்ச்சுக்கு ஓடிப் போய் பாதிரியாரிடம், "ஏன் இப்படி கடவுள் பாரபட்சமாய் உயிர்களைப் படைத்துள்ளார் ஃபாதர்?" என்றான். "உனக்கு இது புரியாது" என்ற பதிலைக் கேட்டவுடன், “எனக்குப் புரியாதது தேவையுமில்லை” என்று மதத்தைக் கைவிட்டவன் அவன்.

இந்த இரு இளைஞர்கள் ஆரம்பித்த அந்த நிறுவனத்தின் இரண்டாவது மாடல் கம்ப்யூட்டர் ஆறு வருடங்களில் 751 மடங்கு லாபத்தை ஈட்டித் தந்தது. இன்றளவிலும் அமெரிக்க தொழில்முன்னேற்ற வரலாற்றில் மிக முக்கிய இடம், அந்த நிறுவனத்துக்கு இருக்கிறது. இருவரில் வயது மூத்த இளைஞர் ஸ்டீவ் வாஸ்னியாக். இரண்டாவது இளைஞன் ஸ்டீவ். ஆம், ஸ்டீவ் ஜாப்ஸ். அந்த நிறுவனத்தின் பெயர் 'ஆப்பிள்'. சிறப்பான மனிதர்களாகக் கருதப்படுபவர்களுக்கு இருந்த எந்தக் குணமும் ஸ்டீவ் ஜாப்ஸிடம் இல்லை. சொல்லப் போனால் மிக வெறுக்கத்தக்க மனிதராக அவரின் சுற்றத்தாரிடம் பெயர் வாங்கியவர். 

ஸ்டீவ் ஜாப்ஸ்

1955 ல் ஜாண்டாலி-ஜோயன் என்ற சிரிய-அமெரிக்க ஜோடிக்குப் பிறந்த ஸ்டீவ் , பால் ஜாப்ஸ்-க்ளாரா இணையருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார். வளர்ப்புத் தாய்-தந்தை இருவருமே அன்பைக் கொட்டி ஸ்டீவ்வை வளர்த்தனர். ரேடியோ மற்றும் டிவி-களின் உபகரண பாகங்களை வாங்கி அசெம்பிள் செய்வதில் தீரா ஆர்வம் கொண்டிருந்தார். தன் நண்பன் வாஸூடன் சேர்ந்து ப்ளூ பாக்ஸ் என்னும் டெலிபோன் ஹேக்கிங் கருவியைத் தயாரித்து துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட அனுபவமெல்லாம் உண்டு. கல்லூரியில் பட்டமெல்லாம் படித்துவிட்டு சாமியார்களைத் தேடிப் புறப்பட்ட கதையைத் தெரிந்து கொண்டால் ரொம்பவும் ஆச்சர்யமாக இருக்கும். இந்தியாவில் ஏழு மாதங்கள் சுற்றி இமயமலையில் நீம் கரோலி பாபாவைப் பார்க்க மொட்டைத் தலையுடன் லைந்தார் ஸ்டீவ். பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகம்தான், தாம் அதிக முறைதான் படித்த புத்தகம் என்கிறார். பின்நாளில் அவர் புத்த மதத்துக்கு வந்தடைந்தார்.

ராபர்ட் என்ற ஆன்மிகக் குருவின் ஆப்பிள் தோட்டம் மிகவும் பிடித்திருந்ததாகவும், நிறுவனத்துக்கு ஆப்பிள் என்று பெயர் வைக்க அதுவும் ஒரு காரணம் என்றும் ஸ்டீவ் சொல்லியிருக்கிறார். ஆப்பிள் -1 என்ற மாடல்தான்  ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கம்ப்யூட்டர். Personal Computer என்ற வகையில் முதல் முயற்சி அதுதான். முழுக்க முழுக்க அதை வடிவமைத்தது வாஸ். ஸ்டீவ் விற்பனையைப் பார்த்துக் கொண்டார். நல்ல வரவேற்பு இருந்தது. ஆப்பிள் - 2 வில் நிச்சயம் நம் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிளாஸ்டிங் கேசிங் கொடுத்து அழகாய் உருவாக்கினார். சுத்தமாய் முதலீடு இல்லாத அன்றைய ஆப்பிள் நிறுவனத்தில் மூன்றே மூன்று கம்ப்யூட்டரை வடிவமைத்து அந்த வருடம் நடந்த கம்ப்யூட்டர்  கண்காட்சியில் ஸ்டால் முழுக்க வித்தியாசமான அலங்கரிப்புடன்  ஆப்பிள்-1 , ஆப்பிள்-2 மாடல்களைப் பார்வைக்கு வைத்தார். ஆப்பிள் 2 வின் தோற்றத்தில் மயங்கிய மக்கள் எக்கச்சக்கமாய் ஆர்டர்களைக் குவித்தனர்.

அங்கு ஏராளமான பெட்டிகள். ‘வடிவமைத்ததே மூன்று கம்ப்யூட்டர்தானே...?’ - வாஸ் சந்தேகமாய் கேட்டார்.

"இத்தனை பெட்டிகளில் என்ன இருக்கிறது?” 

"வெறும் காலி டப்பாக்கள்" என்று கூலாய்ச் சொன்னார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆர்டர்கள் குவிய, அதன்பிறகு தயாரித்து அனுப்பினார்கள். அந்த மாடல்தான் அடுத்த பதினாறு ஆண்டுகளுக்கு Personal Computer யுகத்தில் மிக முக்கிய பங்கு வகித்தது. ஆப்பிள் நிறுவனம் விஸ்வரூபம் எடுத்தது.

Steve Jobs

தன் பேச்சிலும், செயலிலும் மெஸ்மரிசம் செய்வதில் ஸ்டீவ் கெட்டிக்காரர். பெர்சனல் வாழ்க்கையில் சில சர்ச்சைகள் இருந்தாலும், மூளைக்காரர். வித்தியாசமான ஆசாமி. பெரிய வீடு கட்டினார். ஏராளமான படுக்கையறைகளைக் கொண்ட அந்த வீட்டில் கட்டில்கள் மட்டும் இருக்கவில்லை. சுவரில் ஐன்ஸ்டீன் படமும், நீம் கரோலி பாபாவின் படமும் ஒட்டப்பட்டிருந்தது. 

ஆப்பிள் வடிவமைக்கும் கம்ப்யூட்டர்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவினாலும், ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு 1984-ல் வெளியான 'மக்கின்டாஷ்' என்ற மாடலின் மேல் அளவுக்கதிக நம்பிக்கை இருந்தது. இதில்தான், மென்பொருள் உருவாக்கத்தில்  பில்கேட்ஸ் உடன் முதல் கூட்டணி வைத்தார் (பின்பு பில்கேட்ஸ்  மென்பொருள் உரிமத்தை வேறு கம்பெனிக்குக் கொடுத்ததாக ஸ்டீவ்  வழக்குத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் வென்றது வேறு விஷயம்.)

மக்கின்டாஷ் விளம்பரம் வித்தியாசமானதாய் இருக்கவேண்டும் என்று ஹாலிவுட்டின் மிக முக்கிய இயக்குனரான ரிட்லி ஸ்காட்டை அணுகினார். அந்த விளம்பரம் உலகெங்கும் பேசப்பட்டாலும் மக்கின்டாஷ் தோல்வியைத் தழுவியது. ஆனால் லெட்டர் பிரஸ் முறையை மாற்றி பதிப்புத் துறையில் மிக முக்கிய மாற்றத்தைச்  செய்தது.

NeXT

1988-ல் 'NeXT' என்ற மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கி  தோல்வி; PIXAR அனிமேஷன் நிறுவனத்தில் இணைந்து ஆரம்பத்தில் தோல்வி; பின் அசுர வளர்ச்சி என ஜாப்ஸின் அத்தியாயங்கள் நெடும் பக்கங்கள் கொண்டவை.1991-ல் லாரன் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டபின், 1997-ல் ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தில் பொறுப்பேற்றார் ஜாப்ஸ். காந்தி , சாப்ளின், ஐன்ஸ்டீன் என பல ஆளுமைகளின் படங்களில் 'Think Different' என்ற எழுத்துகள் தாங்கிய பதாகைகளுடன் விளம்பரம் செய்ய ஆரம்பித்தார் ஜாப்ஸ். 1998-ல் வெளியான ஐமேக் மாடலுக்காகத்தான் அந்த விளம்பரம். அது விற்பனையில் சக்கைப் போடு போட்டது. அடுத்தடுத்து ஆப்பிள் ஸ்டோர், ஐபாட் என தொட்டதெல்லாம் வெற்றி. ஒருவரியில் அடக்க முடிவதல்ல அந்த வெற்றி. பின்னால் ஏகப்பட்ட தழும்புகள்.

2003-ல் ஸ்டீவ் ஜாப்ஸுக்குத் தீராத வயிற்றுவலி . கணையம், கல்லீரல் என அனைத்தையும் பாதித்திருந்த புற்றுநோய் அவரை ரணமாக்கியது. சிறுநீரக அறுவைசிகிச்சை எல்லாம் நடந்தபின் கடைசி நாட்களை எண்ணத் துவங்கினார்.தன் மகள்களுடனும், மகனுடனும், மனைவியுடனும் நேரம் செலவழித்தார். தன் வாழ்நாளில்  திருமண நாளையே கொண்டாடாதவர், கடைசித் திருமண நாளை 2011-ல்  கொண்டாடினார். மகனின் பட்டமளிப்பு விழாவைப் பார்க்க விரும்பி, பார்க்கவும் செய்தார். 2011 ஆகஸ்டில் நடந்த ஆப்பிள் மாநாட்டில் பில்கேட்ஸுடன் கலந்து கொண்டார். அன்று க்ளவுட் கம்ப்யூட்டிங்கை அறிமுகம் செய்து வைத்தார். அதுதான் அவர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி.  அக்டோபர் 5,2011-ல் மரணித்தார் ஸ்டீவ்.

ஆச்சர்யமாய் இருக்கிறது,Personal Computer வரலாற்றில் முதன்முதலில் கம்ப்யூட்டர் வாங்கியவர்களில் 36% பேர் ஆப்பிளை வாங்கியவர்கள்தான். ஒருவகையில் இரண்டு தலைமுறையின் செயல்பாட்டை நிர்ணயித்த மாபெரும் மூளைக்காரர், தனக்குத் தோன்றியதைச் செய்தார். அதற்காக உழைத்தார். எப்போதும் ஒரு பொருளின் தரத்தையே ஆணித்தரமாய் நம்பினார். ஆச்சர்யமான உள்ளுணர்வு கொண்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இந்த ஆச்சர்ய மனிதனுக்கு இன்று பிறந்தநாள்.

 

 - ஜீ.கார்த்திகேயன்

(மாணவ பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!