வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (24/02/2017)

கடைசி தொடர்பு:15:15 (24/02/2017)

‘‘ஒரு காருக்காக நீங்களும் ஜெயிலுக்குப் போயிடாதீங்க!’’ - நடராசனுக்கு சசிகலா அட்வைஸ்!

‘கல்யாணம் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்’ என்பதோடு ‘கார் வாங்கிப் பார்’ என்பதையும் இப்போது சேர்த்துக்கொள்ள வேண்டும். நடுத்தரவாசிகளுக்கு கார் விஷயத்தில் தவணைத் தொந்தரவுகள் என்றால், பிரபலங்களுக்கு 'ரெய்டு' பிரச்னை. புரியலையே என்கிறீர்களா? எல்லாம் வெளிநாட்டுக் கார் மோகம். பெரும்புள்ளிகள் வெளிநாட்டுக் கார் விஷயத்தில் ரெய்டில் மாட்டிக்கொண்டு தவிக்கும் சீஸன் இது. முன்பு ஒருமுறை ஸ்டாலினின் ஹம்மர் காருக்காக CBI ரெய்டு வந்தது. இப்போது CBI ரெய்டில் சிக்கிக்கொண்டு தவிப்பவர், சசிகலாவின் கணவர் நடராசன். இவரைச் சிக்கலில் தள்ளியிருப்பது டொயோட்டா லெக்ஸஸ் CS300 என்னும் 1994 மாடல் கார்.

சசிகலா

சரி; அப்படியென்றால், வெளிநாட்டுக் கார்களை இந்தியாவில் ஓட்டுவது சட்டப்படி குற்றமா? 

இல்லை; முறைப்படி அதற்கென வரி கட்டிவிட்டால், நீங்கள் ஃபெராரியில் உசிலம்பட்டியில்கூட சவாரி செய்யலாம். இந்திய கார்களின் சந்தை மதிப்பு உயர வேண்டும் என்பதற்காகத்தான், அரசாங்கம் கடுமையான வரி விதித்திருக்கிறது. அதாவது, வெளிநாட்டுக் கார்களை இறக்குமதிசெய்தால், அதற்கென 170%-ல் இருந்து 200% வரை சுங்கவரி செலுத்த வேண்டும். பைக்குகள் என்றால், 140%. அதாவது, வெளிநாட்டில் விற்கப்படும் ஒரு கோடி ரூபாய் காரை இந்தியாவில் நீங்கள் முறைப்படி ஓட்ட வேண்டும் என்றால், கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும். இதனால் அரசாங்கத்துக்குப் பெருத்த லாபம் கிடைக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், தனவான்களுக்கு இதெல்லாம் ஒரு மேட்டரா? ‘ஜஸ்ட் லைக் தட்’ இதை, டீல் செய்யும் கோடீஸ்வரர்களும் இருக்கிறார்கள்; 'ஜஸ்ட் லைக் தட்' - இந்த விஷயத்தை டீலில் விட்டவர்களும் இருக்கிறார்கள். இந்த இரண்டிலுமே, அநேகமாக சென்னை முதல் இடமாக இருக்கலாம்.

சசிகலா

அந்த வகையில், லண்டனில் இருந்து நடராசன் வாங்கியதாகச் சொல்லப்படும் டொயோட்டா லெக்ஸஸ் CS300 என்னும் 1994 மாடல் வெளிநாட்டுக் காரின் அப்போதைய விலையே இரண்டு கோடி ரூபாய்! ‘‘நடராசன் இந்த காரை இந்தியாவுக்கு இறக்குமதி செய்த விதத்தில் சில கோடிகள் அரசுக்கு நஷ்டம்!’’ என்று நடராஜனுடன் சேர்த்து மொத்தம் 4 பேரைக் குற்றவாளியாக்கியிருக்கிறது CBI. அங்கேதான் நடராசனின் ட்விஸ்ட்டே இருக்கிறது. ‘‘இது, புது கார் இல்லை; பாஸ்கரன் கல்யாணத்துக்கு கிஃப்ட்டாக வந்ததால், இதைப் பழைய கார் லிஸ்ட்டில்தான் சேர்க்க வேண்டும்!’’ என்று அதற்கான ஒரிஜினல் இன்வாய்ஸைக் காண்பிக்கிறார் நடராசன். 

பழைய கார் என்றால், அதற்கான வரி விதிப்பு 40% வரை குறையலாம். கடுப்பான CBI, மீண்டும் சில ரெய்டுகளைப் போட்டு, ‘‘இல்லை; இது 1994 மாடல் பிராண்ட் நியூ கார்தான். இது, மிகப் பெரிய எக்கனாமிக் அஃபென்ஸ். அரசாங்கத்தை ஏமாற்றிய நடராசனுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும்’’ என்று மீண்டும் கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறது. 

சசிகலா

முன்பு சசியும் ஜெ-வும் அடிக்கடி வழக்கு விஷயமாக, நீதிமன்றத்துக்கும் சிறைக்கும் அலைந்ததுபோல, நடராசன் இந்த விஷயமாக கோர்ட்டும் காருமாக அலைந்துகொண்டிருக்கிறார். இப்போது, இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதி எஸ்.பாஸ்கரன், பிப்ரவரி 27-க்கு இதற்கான வாய்தாவைத் தள்ளிவைத்திருக்கிறார். 

டெய்ல்பீஸ்: சசிகலாவுக்குத் தண்டனை கிடைத்த அன்று, ஜெயிலுக்குப் போவதற்கு முன்பு உறவினர்களைச் சந்திக்க அனுமதி கேட்டு வெளியே வந்தனர் சசியும் இளவரசியும். அப்போது, ‘மந்தையில் பிரிந்த இரண்டு ஆடுகள் மீண்டும் சந்தித்துக்கொண்ட நிகழ்வாய்’ சசிகலாவும் கணவர் நடராசனும் கோர்ட்டுக்கு வெளியே சந்தித்ததை ர.ர.க்களே வியக்கிறார்கள். ஏனென்றால், இப்படி பொதுவெளியில் இருவரும் சந்திப்பது மிகவும் அரிதான விஷயமாம். அப்போது, கணவரைப் பார்த்துக் கண்கலங்கிய சசிகலா, ‘‘உடம்பைப் பார்த்துக்கோங்க. நான் வர்ற வரைக்கும் எடப்பாடி பார்த்துக்குவாரு. எனக்குத்தான் விதி இப்படி தலையில எழுதிடுச்சு. உங்க கார் மேட்டர் என்னாச்சு? நீங்களாவது அந்த கார் விஷயத்துல சிக்காம உஷாரா நடந்துக்கோங்க!’’ என்று வாஞ்சையாக (!) அட்வைஸ் செய்து வழியனுப்பினாராம்.

- தமிழ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்