Published:Updated:

பணம் மட்டும்தான் வாழ்க்கையா? அமெரிக்க வாழ்க்கைக்காக டெக்கிகள் இழக்கும் விஷயங்கள்!

பணம் மட்டும்தான் வாழ்க்கையா? அமெரிக்க வாழ்க்கைக்காக டெக்கிகள் இழக்கும் விஷயங்கள்!
பணம் மட்டும்தான் வாழ்க்கையா? அமெரிக்க வாழ்க்கைக்காக டெக்கிகள் இழக்கும் விஷயங்கள்!

பணம் மட்டும்தான் வாழ்க்கையா? அமெரிக்க வாழ்க்கைக்காக டெக்கிகள் இழக்கும் விஷயங்கள்!

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட பிறகு, இந்திய டெக்கிகளின் அமெரிக்க கனவும் அதிகரித்தது. அனுபவமிக்க  ஒரு தொழில் நுட்ப வல்லுநர் அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ.60 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். சில சமயங்களில் கணவர் ஒரு இடத்திலும் மனைவி 1,500 கி.மீ தொலைவில் உள்ள மற்றொரு நகரத்திலும் கூட பணிபுரிகின்றனர். முடிந்த வரை, விரைவாக பணம் சம்பாதித்து விட்டு தாய்நாடு திரும்பிவிட வேண்டுமென்பதுதான் காரணம்.

சரி... அப்படியென்றால் எப்படிதான் குடும்பத்தை நடத்துகின்றனர் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா?. வார இறுதியில் சந்தித்துக் கொள்கின்றனர். கணவரும் மனைவியும் கார் வைத்திருப்பார்கள். இருவருக்கும் பொதுவான ஒரு நகரத்தில் ஹோட்டல்களில் சந்தித்துக் கொள்கின்றனர்.  கணவர் 700 கி.மீ கார் ஓட்ட வேண்டும். மனைவியும் 700 கி.மீ கார் ஓட்ட வேண்டும். கார்கள் மின்னல் வேகத்தில் ஓட்டலாம் என்பதால் 4, 5 மணி நேரத்தில் சென்று விடுவார்கள். இதுதான் பெரும்பாலான அமெரிக்கா செல்லும் இந்திய டெக்கிகளின் வாழ்க்கை முறையாக இருக்கிறது.

இவ்வளவு ஏன்... குழந்தை பெற்றுக் கொள்வதைக் கூட தள்ளிப் போடுகின்றனர்..ஸ்ரீனிவாஸ்-  சுநயானா தம்பதியர் கூட தங்கள் அமெரிக்க வாழ்க்கையை திட்டமிட்டுதான் நடத்தி வந்துள்ளனர். இந்த வருடம்தான் குழந்தை பெற்றுக் கொள்ளவும் முடிவு செய்திருக்கின்றனர். ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு வாழ்க்கை நகர்த்திக் கொண்டிருந்த நிலையில்தான் அமெரிக்கர் ஒருவரின் இனவெறிக்கு ஸ்ரீனிவாஸ் பலியாகி விட்டார்.    

இந்தியாவில் 10 ஆண்டுகள் வேலை பார்த்தால், ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரைதான் டெக்கிகளால் சம்பளமாக பெற முடியும். அதுவே அமெரிக்காவில் ரூ. 60 லட்சம் என்பதால், டெக்கிகளுக்கு  அமெரிக்க கனவு இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. சிறிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் கூட, அமெரிக்கா செல்ல எப்போதாவது வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கத் தொடங்குகின்றனர். அதற்கேற்ற வகையில் 40 சதவீத இந்திய ஐ.டி நிறுவனங்களும் அமெரிக்க நிறுவனங்களைச் சார்ந்துதான் இயங்குகின்றன. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய ஐ.டி டெக்கிகளில் ஆந்திரா மாநிலத்தை சார்ந்தவர்கள் அதிகம். அடுத்து தமிழர்கள். 

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக  பதவியேற்ற பிறகு, முதலில் ஹெச்1பி விசா அளிப்பதில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தினார்.ஆண்டுக்கு 1,30,000 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் சம்பளம் பெறும் வெளிநாட்டவர்தான் இனிமேல் ஹெச் 1 பி விசா  பெற முடியும் . பெரும்பாலான இந்தியர்களின் ஆண்டு வருமானம் 60 ஆயிரம் டாலர்கள்தான். இனிமேல் ஹெச் 1 பி விசா பெறுவதும் குறைந்து விடும். இது போன்ற சட்ட திட்டங்களால் இந்திய டெக்கிகளின் அமெரிக்க கனவு குறையத் தொடங்கியுள்ள நிலையில்தான் கன்ஸாஸ் சிட்டி  துப்பாக்கி சூடும்  அச்சத்தை விதைத்திருக்கிறது. 

கலிபோர்னியாவில் உள்ள சிலிக்கான்வேலியில்தான் இந்திய தொழில் நுட்ப வல்லுநர்கள் குவிந்து கிடக்கின்றனர். அடிக்கடி கருத்தரங்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்தியாவில் இருந்து பல கார்ப்பரேட் சாமியார்களும் சென்று யோகா கற்றுக் கொடுக்கின்றனர். இந்திய நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இது போன்ற சமயங்களில் கூடும் இந்தியர்கள் தாய்நாடு  திரும்புவது குறித்துதான் அடிக்கடி பேசிக் கொள்வார்களாம்.

அமெரிக்காவில் 16 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு கடந்த ஆண்டு தாய்நாடு திரும்பி விட்ட,  பாரத் ரெட்டி என்பவர் ,'' அமெரிக்காவில் பெரு நகரங்களில் மட்டும்தான் முன்பெல்லாம் இனவெறியை காண முடிந்தது. இப்போது சிறிய நகரங்களிலும் ஏன் கிராமங்களிலும் கூட இனவெறியுடன் மக்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. குடியரசுக் கட்சிதான் இனவெறிக்கு வித்திட்டது. ஒபாமா ஆட்சிக் காலத்தில் அடங்கியிருந்த இனவெறிக் குழுக்கள் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் எழுச்சி பெற்றிருக்கின்றனர்'' என்கிறார். 

ஒரு காலத்தில் சிலிக்கான் வேலி நிறுவனங்களில் இந்தியர்கள் பெரும் பதவியில் வகித்துள்ளனர். ஆனால் இப்போது அப்படியில்லை. பெரும்பதவி வகித்த இந்தியர்கள் தாய்நாடு திரும்பி விட்டனர். அப்படி தாய்நாடு திரும்பியவர்களில் 30 சதவீதம் பேர் கிரீன் கார்டு பெற்றவர்கள். பெரும்பதவி வகித்த இந்தியர்கள் தாய் நாடு திரும்ப முக்கிய காரணமாக இருப்பது தங்களது குடும்பத்துக்கோ, அடுத்த தலைமுறையினர் வசிக்கவோ... ஏற்ற நாடாக  அமெரிக்கா இல்லை என்று கருதுவதுதானாம். அமெரிக்கா செல்ல ஏன் ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்வி அவர்களிடத்தில் கேட்கப்பட்டால், பணத்தை நோக்கி கை காட்டுவதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாகவும் தோன்றவில்லை! 

-எம்.குமரேசன்

அடுத்த கட்டுரைக்கு