வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (27/02/2017)

கடைசி தொடர்பு:15:17 (27/02/2017)

இன்னும் எத்தனை நாளைக்கு தோழர்..? - ஃபேஸ்புக் பஞ்சாயத்துகள்!

நீங்க ஃபேஸ்புக் பயன்படுத்துறீங்களா? அப்படிப் பயன்படுத்துனா இவங்களை எல்லாம் நிச்சயமா நீங்க பார்த்திருப்பீங்க. இவங்கள யாருன்னு யோசிக்கிறீங்களா? ஃபேஸ்புக் எதுக்குனே தெரியாம அவங்களா எதையோ பண்ணிட்டு இருப்பாங்களே, அவங்களேதாங்க. உங்க ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கிற ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம். அப்படி அவங்க என்னதான் பண்ணுவாங்க? வாங்க தெரிஞ்ச கதையையே தெரிஞ்சுக்குவோம்!

பேஸ்புக்

ஷேர் விரும்பி :

நீங்க உங்களோட முகப்புத்தகத்தை அதுதாங்க ஃபேஸ்புக்கு, அதை திறந்தாலே இப்படி இருக்கும். “Mahesh shared this photo, Mahesh shared that photo, Mahesh shared…, Mahesh shared…” அப்படினு கண்ணுல பாக்குற எல்லா போஸ்ட்டையும் ஒரு ஃப்ரெண்ட் ஷேர் பண்ணி வச்சிருப்பான். நம்ம ஃபேஸ்புக்-ல எல்லாமே அவன் போஸ்ட்டாவே இருக்கும். “யாருடா இந்த மகேஷ்? யாருடா இந்த மகேஷ்?” இப்படி நம்ம புலம்புற அளவுக்கு ஷேர் பண்ணுறானே அவன்தான் அந்த ஷேர் பைத்தியம். தம்பி இனி நீங்க ஷேர் பட்டன்ல கை வையுங்க, கையை வெட்டுறேன்.

டேக் விரும்பி:

ஷேருக்கு அடுத்து டேக். ஃபேஸ்புக் நோட்டிபிகேஷனை திறந்தால், அதுல, “Ajith tagged you in his photo, Ajith tagged you in his post,…” இப்படி வரிசையா நோட்டிஃபிகேஷன் இருக்கும். அப்படி என்னதான் நமக்கு டேக் பண்ணியிருக்கான்னு ஆவலோட கிளிக் பண்ணி பார்த்த அவனோட போட்டோவ போட்டு, நம்மளை டேக் பண்ணி வச்சிருப்பான். நம்மளை மட்டும் இல்லாம நம்ம கூட ஒரு ஐம்பது பேரை சேர்த்து டேக் பண்ணியிருப்பான். “ஏன்டா சம்பந்தமே இல்லாம என்னை டேக் பண்ண?”னு கேட்டா, “சும்மா! லைக் வாங்க மச்சான்”னு சொல்லுவான். எதுக்குடா இந்த வெட்டி விளம்பரம்?

லைக் விரும்பி: 

அடுத்து உங்களை ரொம்ப டார்ச்சர் பண்ணுற ஒரு ஃப்ரெண்ட், இந்த லைக் பைத்தியம்தான். ஏதோ அவன் போடுற போட்டோவுக்கு 100 லைக் விழுந்தா அவனுக்கு ஆஸ்கர் விருது தரப் போற மாதிரியே லைக்குக்காக நம்ம உயிரை வாங்குவான். லைக் வாங்குறதுக்காக, அவனோட போட்டோல, அவனோட ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்குற ஒருத்தரைக் கூட விடாம எல்லாரையும் டேக் பண்ணி, இன்பாக்ஸ்ல வந்து லைக் போடச்சொல்லி சாவடிப்பான். அவன்தான் இந்த லைக் பைத்தியம்.

ஸ்டேட்டஸ் விரும்பி:

அடுத்து உங்களுக்கு தொல்லை கொடுக்குற ஒரு ஃப்ரெண்ட் இந்த ஸ்டேட்டஸ் பைத்தியம். தினமும் ஸ்டேட்டஸ் போட்டே தொல்லை பண்ணுவான். சாப்பிட்டா ஸ்டேட்டஸ், பஸ்ல ஏறினா ஸ்டேட்டஸ், பஸ்ஸை விட்டு இறங்கினா ஒரு ஸ்டேட்டஸ், லவ் செட்டானதுக்கு ஒரு ஸ்டேட்டஸ், அதுக்கு அப்புறம் பிரேக் அப் ஆனதுக்கும் ஸ்டேட்டஸ். இப்படி எல்லாத்துக்கும் ஸ்டேட்டஸ் போட்டே சாவடிப்பான். சாகும்போதுகூட “Going to die”னு ஸ்டேட்டஸ் போடுவான் போல. அண்ணே நீங்க நல்லா வருவீங்கணே! ரொம்ப நல்லா வருவீங்க! 

“அட என்னடா இது, ஃபேஸ்புக்ல இருக்க எல்லாருமே நமக்குத் தொல்லை கொடுக்குறவங்கதானா? ஒருத்தன்கூட நமக்கு நல்லது பண்றதுக்கு இல்லையா?”னு இவங்களை எல்லாம் பார்த்துட்டு நம்ம அப்படி யோசிக்கும்போது, நல்ல உள்ளம்கொண்ட ஜீவன் ஒருத்தன் வருவான். நாம போட்ட போஸ்ட் ஒண்ணு விடாம எல்லாத்துக்கும் லைக் போட்டு, நல்ல விதமா கமெண்ட் பண்ணுவான். இவன்தான் அந்த நல்ல ஜீவன்!

உங்களுக்கு தொல்லை கொடுக்குறவங்களை எல்லாம் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருந்து நீக்குங்க! இந்த மாதிரி நல்ல உள்ளங்களுக்கு எல்லாம் ப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுங்க! மகிழ்ச்சியா இருங்க மக்கா!

- முரளி.சு
மாணவப் பத்திரிகையாளர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்