Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘மதங்களும் சில விவாதங்களும்’ - மதங்களின் ஆதி அந்தங்களை அலசும் ஆவணம்

மனிதனின் முதல் கண்டுபிடிப்பு கடவுள்தான். ஆதிமனிதன், இடிக்கும்,  நெருப்புக்கும் அஞ்சி அவற்றை வணங்க ஆரம்பித்து அது வளர்ச்சிபெற்று இன்று இத்தனை மதங்களாகப் பரிணமித்து நிற்கிறது. ஆதிமனிதனின் உள்ளத்தில் பதிந்த ‘தொல் உணர்வு’ தனக்கு மேலே இருக்கும் ஒன்றைக் குறித்த பயம். அது நம்முடைய ஒவ்வொரு செல்லிலும் பதிந்திருக்கிறது. எனவேதான் அதைக் கடப்பதற்கு மதங்களின் ஆதி அந்தங்களை அலசும் ஆவணம் இது.

மதங்களும் சில விவாதங்களும்

இளமையில் நாத்திகமும் முதுமையில் ஆத்திகமும் பொது இயல்பு. அது மரணபயம் சார்ந்தது என்பதை அறிவோம். அந்தவகையில் தருமி தனது நாற்பதுகளுக்கு மேல் தீவிர நாத்திகரானது என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு விஷயம். அறிவியல் கற்றதனால், அறிவியல் முறையில் சிந்திப்பது ஒரு காரணம் என்று எப்படிச் சொல்வது? எத்தனையோ அறிவியல் அறிஞர்களே ஆத்திகர்களாக இருந்திருக்கிறார்களே! ஆக, அவரே கூறுவதுபோல் இதுவொரு மிகக் கடினமான பரிணாம வளர்ச்சிதான்.

என் சிறுவயதில் நடந்த நிகழ்வொன்று. 80-களின் பிற்பகுதி, எனக்குப் பன்னிரண்டு பதிமூன்று வயதிருக்கலாம். வீதிகளில் திராவிடக் கொள்கைப் பிரசாரம் செய்வார்கள். அப்போது ஒரு நோட்டீஸ் கொடுக்கப்படும். அதி்ல், திராவிடக் கட்சியின் கொள்கைகளை விளக்கி மேடையில் பேசுவார்கள் மற்றும் நாள் குறித்த விவரம் இருக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட விஷயம் என் கவனத்தை எப்போதும் ஈர்த்தது, ‘கடவுள் இல்லையென்பதை நிரூபிக்கும் விதமாக கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் ஒருவர் கைவிடுவார்’ என்றிருக்கும். நானும் சில நண்பர்களோடு ஓரிருமுறை அந்நிகழ்வுக்குச் சென்றிருக்கிறேன்.

ஒருபக்கம் பேச்சாளர்கள் பேசிக்கொண்டிருக்க மறுபக்கம் பெரியதொரு கொப்பரையில் எண்ணெய் சூடாகிக் கொண்டிருக்கும். பெரும்பாலும் இந்நிகழ்ச்சி மாலைக்கு மேல் ஆரம்பித்து இரவு நேரத்தில் நடக்கும் என்பதால் எங்களால் முழுமையாகப் பார்க்க முடியாது, நான் பார்த்த வரையில் யாரும் அந்தக் கொப்பரைக்குள் கைவிட்டதே இல்லை. நாங்கள் அதற்காகக் காத்திருக்கையில் எங்களை அழைக்க வீட்டிலிருந்து யாரேனும் வந்துவிடுவார்கள். ஒருமுறை என் நண்பன் அப்துல் ரசாக் என்பவனுடன் அங்கே வேடிக்கை பார்க்கச் சென்றிருந்தேன். சிறிதுநேரத்தில் நண்பனின் தந்தை எங்களை அழைக்க வந்தார். எங்கள் இருவரின் வீடுகளுக்கும் மிக அருகில், தெருமுக்கில் மேடை போட்டு அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. எனவே யாரேனும் அந்தச்சட்டிக்குள் கைவிடும்வரை பொறுத்திருக்கச் சொல்லி அவரைக் கெஞ்சினோம். அவரோ ஆத்திகர். நாங்கள் அங்கே இருந்ததே அவருக்குக் கடுப்பு, “ஏண்டா கடவுள் எண்ணச்சட்டிக்குள்ள இருக்காருன்னு எங்கடா சொல்லியிருக்கு? உள்ள கையை விட்டுட்டு இல்லேன்னு சொல்றதுக்கு. கிளம்புங்கடா.” என்று அதட்டினார். அப்போது எரிச்சலோடும் துக்கத்தோடும் அங்கிருந்து அகன்றாலும் பின்நாட்களில் அந்த வார்த்தை என்னை யோசிக்க வைத்திருக்கிறது. ‘ஆமாம்! கொதிக்கிற எண்ணெய்க்குள் கைவிட்டுவிட்டு கடவுள் இல்லை என்று எப்படி நிரூபிக்க முடியும்?’ என்று நினைத்துச் சிரித்துக் கொள்வேன். திராவிடக் கொள்கைகளை விளக்கும் கூட்டங்கள் அதன்பிறகு என்னை ஈர்க்கவில்லை.

ஆனால், பதின்ம வயதைக் கடந்தபின் வாசிப்பின் காரணமாக ஆத்திகன் என்ற நிலையிலிருந்து ‘இரண்டுங்கெட்டான்’ (Agnostic) நிலைக்கு வந்திருந்தேன். அப்போதும் திராவிடக்கட்சிகள் இந்து மதத்தை மட்டுமே கேள்விக்குள்ளாக்குவதும் இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதம் குறித்து எதுவும் பேசாமல் இருப்பதுவும் (இப்போதும் அப்படித்தானே) அவர்களுடைய சிந்தனை மற்றும் நேர்மை குறித்த கேள்விகளை எழுப்பியது. ‘நான் சார்ந்த மதம் குறித்து முதலில் கேள்வி எழுப்புகிறேன். இதுதான் பெரும்பான்மை மதம். இதில்தான் சாதி இருக்கிறது,’ (எல்லா மதங்களிலும் சாதி/இனம் இருக்கிறது) என்று பல்வேறு விளக்கங்களை அவர்களின் நிலைப்பாட்டுக்குக் காரணமாகக் கூறினாலும் அவ்விளக்கங்கள் உண்மையில் எனக்குப் போதுமானதாக இல்லை. உண்மைக்காரணம் அதில்லை என்று தோன்றியது. பொதுவாக இந்து மதத்தில் நாத்திகம் பேசினால் பலத்த எதிர்ப்புகள் ஏதும் எழுவதில்லை. அதனால்தான் திராவிடக் கட்சிகள் இந்து மதத்தோடு தங்கள் `சேவையை’ நிறுத்திக் கொள்கின்றன.

தருமி இந்த இடத்தில்தான் ‘உண்மையான’ நாத்திகராகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். அவரது கேள்விகள் இந்துமதம் முதல் ஆபிரகாமிய மதங்கள் வரை நீள்கிறது. கேள்விகளும் தர்க்கபூர்வமானவை, அறிவியற் பூர்வமானவை. வடைச்சட்டிக்குள் கைவிட்டுவிட்டு, ‘எங்கே காணோம்!’ என்று கேட்பது போல அபத்தமானவை அல்ல. முதலில் அவர் இம்மதங்கள் சார்ந்த அனைத்து நூல்களையும் தெளிவாக, முழுமையாக வாசித்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. எழுத்தாளர் தருமி

ஏன் எந்தக் கடவுளும் உலக மக்கள் அனைவருக்குமான கடவுளாக இல்லை? ஏன் எல்லோருமே அந்தந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த கடவுளாக இருக்கிறார்கள்? நிலைமை இப்படியிருக்க மதத்தைப் பரப்ப வேண்டும் என்பதற்காகத்தானே கடவுள் வாக்கென்று சொல்லப்படும் ‘புனிதப் புத்தகங்கள்’ எழுதி / திருத்தி எழுதப்படுகின்றன? – நியாயமான கேள்விகள்தான். பதில்தான் யாரிடமும் இல்லை.

இந்து மதத்தில் எப்போதுமே இரண்டு பிரிவுகளுண்டு. பிராமணர்களுக்கான இந்து மதம், அல்லாதவர்களுக்கான இந்து மதம். பெருந்தெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாட்டை தனக்குள் இழுத்து எவ்வாறு அதன் அடையாளத்தைச் சிதைக்கிறது என்பதை முருகன் என்ற சிறுதெய்வம் வழி அறிந்துகொள்ள முடிகிறது. ஆரம்பத்தில் சிறு குழுக்களின் தெய்வமாக இருந்த முருகன் பிறகு சிவனுக்கு மகனாக்கப்பட்டு, விநாயகருக்கு அண்ணனாக்கப்படுகிறார். அவர் சிறு தெய்வத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு பெருந்தெய்வமாக்கப் பட்டதற்குச் சான்றுகள் உள்ளன (வள்ளியை மணப்பது அவர்களைத் திருப்திப்படுத்த என்றே நினைக்கிறேன். போலவே, சைவ-வைணவச் சண்டையை நிறுத்த திருமலை நாயக்கரால் உண்டாக்கப்பட்டதுதான் மீனாட்சி கல்யாணம்). இது இந்து மதத்தில் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் ஒரு தேர்ந்த யுக்தி. இந்து மதம் என்றழைக்கப்படும் சனாதன மதம் தனக்கு ஒவ்வாததைக்கூடத் தனக்குள் விழுங்கிச் சீரணித்துவிடக் கூடியது. பௌத்தமும் சமணமும் அதற்கான கடந்தகாலச் சான்றுகள். இப்போது மெதுவாக அது புத்தரை விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒன்று என்கிறது. நாத்திகவாதமும் அதுபோலத்தான். இந்துத் தத்துவப் பிரிவுகளில் ‘சார்வாகம்’ எனும் உலகாயதமும் ஒரு பிரிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு சீரணிக்கப்பட்டுவிட்டது. பௌத்தம் மற்றும் சமணத்தின் கொல்லாமை உட்பட பல்வேறு கூறுகளை இந்துமதம் தனக்குள் உள்வாங்கிக் கொண்டுள்ளது. இப்படி மாற்றங்களுக்கு உள்ளாவதன் அரசியல் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியதே. இது அனைத்து மதங்களுக்கும் பொருந்தும்.

நிலமை இப்படியிருக்க அனாதி காலமாக தங்களது மதம் ‘கற்போடு’ உள்ளது என்று நம்பி வாதிடுவதை என்ன மனநிலை என்று கொள்வது? பௌத்தம் இல்லையென்றால் கொல்லாமை, கருணை, அன்பு இவற்றையெல்லாம் இந்நிலப்பரப்பில் இருந்த மதங்கள் பேசியிருக்குமா என்பதே கேள்விதான். பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் இந்துமதம், தோன்றிய இனத்தை மட்டுமே உயர்த்தி மற்ற இனங்களைத் தாழ்த்தும் கிறித்துவ, இஸ்லாம் மதங்கள் என சக மனிதர்களிடையே கூட சகிப்புத்தன்மையே இல்லாத மதங்கள் அன்பை எப்படிப் போதிக்க முடியும் என்ற கேள்விக்கு ‘அப்படியெல்லாம் இல்லை’ என்று சொல்லி தங்களின் புனிதப் புத்தகத்தைத் தோண்டித் துருவி ஏதேனும் ஒற்றை வரியைப் பெருமிதமாக எடுத்துக் காண்பிப்பார்கள். 

புத்தகத்தில் திருத்த வேண்டிய விஷயங்கள் என நான் நினைப்பது: மேற்கோள் காட்டப்பட்டுள்ள புத்தகங்களின் பட்டியலைத் தனி இணைப்பாகக் கொடுத்திருக்கலாம். அது பலருக்கு உதவியிருக்கும். புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் இணைக்கப்பட்டுள்ள மூன்று கட்டுரைகள் உண்மையில் தேவையில்லை என்றே தோன்றுகிறது. அவை புத்தகம் பேசிக்கொண்டிருக்கும் விஷயத்திலிருந்தும் சற்றே விலகிச்செல்கிறது. நிச்சயமாக இதுவொரு தடைதான். அதிலும் ஜமாலன் எழுதியுள்ள கட்டுரை என்ன சொல்ல வருகிறது என்று யாருக்கும் உடனே புரிந்துவிடாத வகையில் எழுதப்பட்டுள்ள சிறப்பான கட்டுரை.

புத்தகத்தில் இன்னுமொரு திருத்தப்படவேண்டிய அம்சம், அதிலுள்ள ஆங்கிலம். பெரும்பாலான விஷயங்கள் தமிழில்தான் பேசப்படுகிறது என்றாலும் முக்கியமான சில இடங்களில் திடீரென்று ஆங்கிலம் நுழைவது வாசிப்புக்கு ஒரு தடைதான். உதாரணமாக பக்கம் 54-இல் 13-ம் எண்ணுள்ள பத்தி ஆங்கிலத்தில் ஆரம்பிக்கிறது, தொடர்ந்து தமிழில், ‘இதற்கு நான் பதில் சொல்லவேண்டுமா?’ என்று கேட்கிறார். ஆங்கிலம் தெரியாத ஒருவர் இதை எப்படிப் புரிந்து கொள்வார்? போலவே பக்கம் - 64-இல் உள்ள 8-ம் எண் கொண்ட பத்தியும் அவ்வாறே உள்ளது. மற்றுமொரு இடத்தில் முகம்மது நடத்திய போர்களை ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறார். அவரது மனைவிகளின் பெயர்கள் பட்டியலில் சில ஆங்கிலம். இதெல்லாம் வாசிப்புக்கான தடைகள். வலைப்பூவில் அவர் எழுதும்போதே இதைக் குறிப்பிட்டிருக்கிறேன். மேலும், வலைப்பூவில் எழுதும்போது சுட்டிகள் கொடுப்பது சரி புத்தகத்தில் எதற்கு? பதிலாக தேடவேண்டிய சொற்களை அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் கொடுக்கலாம். அடுத்த பதிப்பில், இக்குறைகளை நிவர்த்தி செய்து,  புத்தகத்திலுள்ள ஆங்கிலப் பத்திகளைத் தமிழாக்கம் செய்து வெளியிடுவதன் மூலம் இப்புத்தகத்தை பரந்த வாசிப்புக்கு எடுத்துச் செல்லவும், அதன்மூலம் நிறைய எதிரிகளை உருவாக்கிக் கொள்ளவும் அவருக்குச் சாத்தியப்படும்.

சாதிகளை உருவாக்கி அவற்றை இன்றளவும் பாதுகாத்து, அதையொரு மேட்டிமையாக மாற்றிக்கொண்டுள்ள இந்துமதம் குறித்து விமர்சிக்கும்போதும், அறிவியல் என்ற விஷயத்தையே அடியோடு ஒதுக்கிவிட்டு புனிதப்புத்தகங்களில் சொல்லியிருப்பதே உண்மை என்று நம்பி வாதிடும் பிற மதங்கள் குறித்துப் பேசும்போதும், தர்க்க ரீதியிலான கேள்விகளைக் கேட்பது அவசியமாகிறது. மதம் என்ற போர்வையில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், அடக்குமுறைகள் ஒருபுறம், ஏழைகளாக இருப்பதே சிறப்பானது என்றும் இறப்புக்குப் பின்னான சொர்க்கம் அவர்களுக்கே வாய்க்கும் என்று கூறியபடி அவர்களிடம் இருக்கும் ஒன்றிரண்டு காசுகளைக்கூட கடவுளின் பெயரால் களவாடிச் சுரண்டுவது மறுபுறம். இப்படியான சூழ்நிலையில் அபத்தமான வாதங்களை விடுத்து தருமி போல சரியான கேள்விகளைக் கேட்க வேண்டியதுதான் இன்றைய தேவை என்று நம்புகிறேன். 

உலகில் ஏன் இத்தனை மதங்கள்...?

-ஶ்ரீதர் ரங்கராஜ் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement