‘கானா பாடல்களைக் கொண்டாட்டங்களுக்கு பாடலாமே தவிர...’ - 'மரண கானா' விஜி | Marana Gana Viji interview

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (01/03/2017)

கடைசி தொடர்பு:16:15 (01/03/2017)

‘கானா பாடல்களைக் கொண்டாட்டங்களுக்கு பாடலாமே தவிர...’ - 'மரண கானா' விஜி

‘‘கடற்கரை மணலுல நட்டுவெச்ச வௌக்குல
அன்னக்கூடை தட்டிக்கின்னு அவுத்துவிட்ட கானா
குப்பத்துல நம்ம ஜனம் கூடி நின்னுக் கூத்தடிக்க
ஒத்தயில மெட்டுகட்டி எத்துவுட்ட கானா
ஏழு கட்ட, எட்டு கட்ட தேவையில்ல இதுக்கு
எத்தனையோ ரகம்தான் இதுலகூட இருக்கு

கானா பொறந்த ஊருதான் மதராசு
அட இவனுக்கு இருக்கு செம மாஸு
ஆல் கானா... அட்டு கானா... தீப கானா...

ஜிகிரி கானா.... மரண கானா ... இது அஞ்சு வகைடா
யாரு வேணா எப்ப வேணா எங்க வேணா பாட
இது சினிமா பாட்டு இல்ல வாழ்க்கை முறைடா...''

கே.கே.நகர் சிவன் பார்க்கின் உள்ளே ஒலிக்கிற தாளமும் இசையும் அரைகிலோ மீட்டர் தாண்டியும் அதிர்கிறது. 
ராப் ஸ்டைல் பாடல்களைக் கேட்டதும், ‘போயஸ் கார்டன்’ புகழ் சோஃபியா அண்ட் கோவாக இருக்குமோ என்று எட்டிப் பார்த்தால்... கானாவை ராப் ஸ்டைலில் மாற்றி வாசித்துக் கொண்டிருந்தவர்கள்  ‘மாத்தியோசி' இசைக் குழுவினர்.
மண்டையோடு பதித்த டாலரும், மோதிரமும் பளீரிட, கலரிங் செய்யப்பட்ட சிகப்பு முடியுடன், அதே மண்டையோட்டுப் படம் பதித்த தப்பட்டையுடன் சிரித்தபடி வரவேற்கிறார் மரணகானா விஜி.

மரண கானா விஜி


இறப்பு வீடுகளில் மரண கானா பாடியே பிரபலமான விஜி, ‘அனேகன்' படத்தில் ‘டங்கா மாரி' பாடிய பிறகு சினிமாவிலும் பிஸி.  தன்னைப்போலவே மாற்றுத்திறனாளிகளை வைத்து 'மாத்தி யோசி' என்கிற பெயரில் ஒரு இசைக்குழுவை ஆரம்பித்திருக்கிறார் விஜி. அந்தக் குழுவைச் சேர்ந்த பலரும் ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்... நட்பாலும் இசையாலும் இணைந்தவர்கள்.

‘‘பிச்சை எடுக்கறதுக்காக உருவாக்கப்பட்ட குழந்தை நான். மாற்றுத்திறனாளியா பிறந்ததாலயோ, வேற காரணத்தினாலயோ என்னை எங்கம்மா, அப்பா அநாதையா விட்டுட்டுப் போயிட்டாங்க. ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலைமையிலயும் சாவை ஜெயிச்சு அந்த நாளைக் கடத்தறதுதான் என் லட்சியமா இருந்தது. என்னை மாதிரியே என் வயசு மாற்றுத்திறனாளிக் குழந்தைங்களோடு பிச்சை எடுக்கிற தொழில்லேருந்து தப்பிச்சு வந்து வடசென்னையில ஒரு சுடுகாட்டுக்குள்ள வாழ்ந்த நாள்களை இன்னும் நான் மறக்கலை. 

நினைவு தெரிஞ்ச நாள் வரை எனக்கு பெயரே இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில இருந்த என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு, இரக்கப்பட்டு சாப்பாடு வாங்கித்தந்த நல்ல இதயத்தின் ஞாபகார்த்தமா எனக்கு விஜினு நானே பெயர் வச்சுக்கிட்டேன்....’’ 
பாக்குக் கறை படிந்த பற்கள் தெரிய, பெரிதாகச் சிரித்தபடி மரணகானா விஜி சொல்லும் அறிமுகக்கதையே மனசை கனக்கச் செய்கிறது.
பல காலம் பெயரின்றி வாழ்ந்தவர், இன்று பட்டப் பெயருடன் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானதுதான் வினோதம்.

‘‘நான் வாழ்ந்த ராயபுரம், கல்மண்டபம், மெரினா மாதிரியான இடங்கள் கானாவுக்குப் பிரபலமானவை. என்னோட ஏழாவது வயசுலேருந்து கானா பாடிட்டிருக்கேன். முதல் முதல்ல இறப்புக்குப் பாடினபோது, எனக்கு அஞ்சு ரூபாயும், ஒருவேளை பழைய சோறும்தான் கூலி. வயதான ஒருத்தரோட இறப்புக்குப் பாடினேன். அப்போ என் குரல்ல அவ்வளவு முதிர்ச்சி இல்லை. கானாமீது அந்த வயசுலயே எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு காரணமா, நிறைய பயிற்சிகள் எடுத்துக்கிட்டேன்.

முறைப்படுத்தப்படாத கலைகள்ல ஒன்று கானா. இப்படித்தான் பாடணும்னு அதுக்கு எந்த வரையறையும் இல்லை. எப்படி வேணா பாடலாம். யார் வேணா பாடலாம். ஆனா வாழ்வியல் முறையைத் தெரிஞ்சுக்கிட்டுப் பாடணும். அது தெரிஞ்சு நானாகவே இந்தக் கலையில என் ஆர்வத்தை வளர்த்துக்கிட்டேன்...’’ என்கிற விஜி, மரண கானா பாடல்களால் புகழின் உச்சம் தொட்டவர். என்றாலும், பிறவகை கானாக்களிலும் பட்டையைக் கிளப்புகிறார்.

‘‘கானாவுல அட்டு கானா, ஆளு கானா, ஜிகிரி கானா, தீப கானா, மரண கானானு அஞ்சு வகை இருக்கு.  அட்டு கானாங்கிறது சினிமா பாட்டை உல்டா பண்ணிப் பாடறது. ஆளு கானாங்கிறது நாங்களே ராகம் போட்டு வரிகள் எழுதி, தாளம் போட்டுப் பாடறது. போதை வஸ்துக்களை மையப்படுத்திப் பாடறது ஜிகிரி கானா. எங்க முன்னோர்கள் பாடினதை எடுத்துப் பாடறது தீப கானா. இறப்பு வீடுகள்ல இறந்தவங்களைத் துதித்துப் பாடறது மரண கானா.’’

கானாவின் வகைகளை விளக்கும் விஜி, டங்கா மாரி பாடல் வாய்ப்பு தேடி வந்த தருணத்தை நினைவுகூர்கிறார்.
“சமூகக் கருத்துகளை முன்வைத்து கானா பாடறது என் வழக்கம். முதன்முதல்ல சென்னை சங்கமம் நிகழ்ச்சியில பாடினேன். அதுல என்னைப் பார்த்துட்டுத்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எனக்கான நிறைய வாய்ப்புகளைத் தந்தாங்க. அப்புறம் பெரியார் மேடைகளில் பாடினேன். அடுத்து திரைப்பட வாய்ப்பு. இத்தனை வருடங்கள்ல நானா போய் யார்கிட்டயும் வாய்ப்பு கேட்டு நின்னதில்லை. சினிமா வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. அப்படிக் கிடைச்ச வாய்ப்புதான் ‘அனேகன்' படத்துல ‘டங்கா மாரி’ பாட்டு. கே.வி.ஆனந்த் சார், அந்தப் பாட்டுக்காக நிறைய குரல்களைத் தேடியிருக்கார். என் குரல் அதுக்குப் பொருத்தமா இருக்கும்னு நினைச்சுக் கூப்பிட்டார். 'ஒரு பாட்டு பாடிட்டீங்கன்னா நீங்க சினிமாவுல எங்கேயோ போயிடுவீங்கனு ஆசை வார்த்தைகளைச் சொல்லாம, `இப்படி ஒரு பாட்டு இருக்கு... உங்களால பாட முடியுமா'னு கேட்ட அவரோட அணுகுமுறை பிடிச்சது.. அந்தப் பாட்டு ஹிட் ஆகி எனக்குப் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது...’’

மரண கானா விஜி- மாத்தி யோசி இசைக்குழு

விஜிக்கு திரைப்படங்களில் கானா கையாளப்படுகிற விதத்தில் மிகுந்த அதிருப்தி இருக்கிறது.

‘‘சினிமாக்கள்ல உண்மையான கானா வந்ததில்லைங்கிறது என் கருத்து. கானாங்கிற ஒரு கலையை எடுத்து அதை ஹார்மோனியப் பெட்டிக்குள்ள நசுக்கி அழகான வார்த்தைகளைப் போட்டுப் பாட வைக்கிறாங்க. அது கானா கிடையாது. கானாங்கிறது செப்பு கலக்காத தங்கம். அதை நாங்க எங்கக் கொண்டாட்டங்களுக்குப் பாடலாமே தவிர, திரைப்படங்களுக்குப் பாட முடியாது. அது புரியாதவங்களுக்குத் தவறான அர்த்தத்தைக் கொடுத்துடும். 

1968-ல தான் முதல்ல சினிமாவுக்குள்ள கானா வந்தது. 'பொம்மலாட்டம்' படத்துல வாலி சார் வரிகள்ல மனோரமா ஆச்சி பாடின 'வா வாத்தியாரே ஊட்டாண்ட...' பாடல்தான் அது. அந்தக் காலத்துல சென்னையில என்ன மாதிரியான வார்த்தைகள் எல்லாம் வாய்மொழி வரலாறா இருந்ததோ, அதை எல்லாம் கோத்து எழுதப்பட்ட அழகான பாடல் அது. 1992-ல கானாங்கிற வார்த்தையை வச்சு சங்கீதப் பயிற்சி பெறாத குரல்ல ஆதித்யன் இசையமைப்புல 'அமரன்' படத்துல 'போட்டாலே விறுவிறுக்கும்' பாட்டு வந்தது. 1995ல 'தலைவாசல்' படத்துல சில பாடல்கள் வந்தது. சினிமாவுல கானாவுக்கான இடம் இன்னும் முழுமையா கிடைக்கலை...'' 

வருத்தம் பகிர்பவர், கானாவையும் மாற்றுத்திறனாளிகளின் திறமைகளையும் இணைக்கிற வகையில்தான் 'மாத்தியோசி' குழுவைத் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறார்.  வெறுமனே மேடைக் கச்சேரிகள் செய்கிற கமர்ஷியல் குழுவாக இல்லாமல், மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் குழுவாகவும் செயல்படுமாம். குழுவின் முதல் பிரமாண்ட முயற்சியாக ஐந்து பாடல்களைக் கொண்ட ஆல்பம் ஒன்றையும் தயாரித்திருக்கிறார்கள். 

‘‘2008ல விஜய் டி.வியில 'கதையல்ல நிஜம்' நிகழ்ச்சியில மரணகானா விஜியோட பேட்டியைப் பார்த்தேன். நானும் வடசென்னைக்காரன். அந்த வகையில விஜியைப் பத்தி ஓரளவுக்குத் தெரியும். அந்தப் பேட்டியைப் பார்த்ததும் இவர்மேல உள்ள மதிப்பு அதிகமாச்சு. இவரைத் தேடிப்போய் சந்திச்சேன். முதல் அறிமுகத்துலயே அவரோட அக்கறை வியக்க வச்சது. 'நாமெல்லாம் மாற்றுத்திறனாளிகளா இருந்தாலும் வாழ்க்கையில ஒரு நிலைக்கு வந்துட்டோம். அப்படி வர முடியாத மத்தவங்களுக்கும் நாம ஏதாவது செய்யணும்'னு சொன்னார். வெறுமனே சாப்பாடு கொடுக்கிறது, உதவிகள் செய்யதோட நிறுத்திக்காம, அவங்களோட திறமைகளை வெளியில கொண்டு வரும்படியான முயற்சியா இருக்கணும்னு பேசினோம். அப்பதான் மாற்றுத்திறனாளிகளுக்கான இசைக்குழு ஆரம்பிக்கிற ஐடியா வந்தது. கூடவே இன்டர்நேஷனல் தரத்துல ஒரு ஆல்பமும் பண்ணலாம்னு யோசிச்சோம். நண்பர்கள் நாங்க எல்லாரும் சேர்ந்து சொந்தக் காசை போட்டு இந்த ஆல்பத்தைத் தயாரிச்சு வச்சிருக்கோம். இன்னும் ரெண்டு மாசத்துல ரிலீஸ்'' என்கிறார் அஸீஸ் அஹமது. 'மாத்தி யோசி' குழுவின் ராப்பரான இவர், பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. இன்று ஐடி ஊழியர்.

மரண கானா விஜி

‘‘ரொம்ப வறுமையான குடும்பப் பின்னணியிலேருந்து வந்தவன் நான். காமாட்சிஅம்மன் விளக்கு வெல்டிங் செய்யறதுதான் வேலை. படிச்சுக்கிட்டே அந்த வேலையைப் பார்த்து, அதுல வந்த வருமானத்தை வச்சுதான் மேற்படிப்பை முடிச்சேன். எம்.பி.ஏ முடிச்சிட்டு போலாரிஸ் கம்பெனியில புராஜெக்ட் மேனேஜரா வேலை பார்க்கிறேன். நானும் அஸீஸ் அஹமதுவும் கல்லூரிக் காலத்து நண்பர்கள். கல்லூரியில நடக்கிற விழாக்கள்ல நானும் கவிதைகள் வாசிக்கணும், பாடணும்னு ஆசைப்பட்டிருக்கேன்.  ஆனா ஒரு மாற்றுத்திறனாளியா அது எனக்கு சாத்தியப்படலை. அஸீஸ் மூலமா விஜியோட அறிமுகம் கிடைச்சது. இந்தக் குழுவுல இணைஞ்ச பிறகு எங்க உலகமே விரிவடைஞ்சது மாதிரி இருக்கு....  இப்பவும் வெல்டிங் வேலையை மறக்கலை. நேரம் கிடைக்கிறபோது செய்யறேன். அதுல வரும் வருமானத்தை வச்சு ஏழை மாற்றுத்திறனாளிகளோட படிப்புக்கு உதவிகள் பண்றேன்...'' என்கிற ஜெகன்னாதனும் ஐடி ஊழியர்தான். மாத்தியோசி குழுவின் பாடலாசிரியர் இவர்.

‘‘நான் பிறந்து வளர்ந்ததும் வடசென்னையிலதான். அஸீஸும் ஜெகனும் நானும் பால்யகால நண்பர்கள். நான் படிப்பை முடிச்சதும் அவங்க மூலமா எனக்கும் ஐடி கம்பெனியில வேலை கிடைச்சது. அது மட்டுமே போதுமாங்கிற தேடல் இருந்தது. மாற்றுத்திறனாளிகளைப் பரிதாபத்தோடும் இரக்கத்தோடும் பார்க்கிறதை மாத்தணும்னு நினைச்சோம். இவங்களோடு சேர்ந்து நானும் இந்தக் குழுவில் இணைஞ்சேன். வெளி உலகத்தை எட்டிப் பார்க்கவே பயந்துக்கிட்டிருந்த காலம் மாறி, இன்னிக்கு மாத்தியோசி குழுவுக்குள்ள வந்ததும் உலகத்தையே ஜெயிக்கலாம்ங்கிற அளவுக்குத் தன்னம்பிக்கை வந்திருக்கு’’ என்கிற மகேஷ், மாத்தியோசியின் தபேலா கலைஞர்.

‘‘இன்னிக்கு கோயில் விழாக்கள், மேடை நிகழ்ச்சிகள்னு நான் பாடாத இடம் இல்லை. ஆனா ஆரம்ப காலத்துல என்னோட விசிட்டிங் கார்டைகூட கை நீட்டி வாங்க மறுத்திருக்காங்க. என்னைக் கூப்பிட்டுப் பேசுவாங்க. நான் எழுந்து போனதும் அந்த இடத்துல தண்ணி தெளிப்பாங்க. சென்னை சாலைகள்ல சக்கரம் வச்ச வண்டியில கைகளைத் தேய்ச்சுக்கிட்டு நகர்ந்தவன் நான். இன்னிக்கு சொந்த கார்ல போயிட்டு வரும் அளவுக்கு வளர்ந்திருக்கேன்னா, காரணம் கானா என்ற என் கலைத்தாய். டங்கா மாரி பாடின பிறகு பல நாடுகளுக்கும் போயிட்டு வந்துட்டேன். அந்தப் பாட்டு கொடுத்த ரீச் அப்படி. ஆனாலும் இன்னிக்கும் நான் இறப்பு வீடுகள்ல பாடறதைத்தான் பெருமையா நினைக்கிறேன்.

ஒரு மாற்றுத்திறனாளியா ரொம்ப அடிமட்டத்துலேருந்து வந்த வாழ்க்கை என்னுடையது. ஒவ்வொரு மாற்றுத்திறனாளியோட வாழ்க்கையும் ஒரு போராட்டம்தான். ஒவ்வொரு இடத்துலயும் தனக்கான அங்கீகாரங்களைக் கேட்டுப் போராடிக்கிட்டே இருக்க வேண்டிய நிலையிலதான் இருக்கோம். மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில சின்னதா ஒரு மாற்றத்தையாவது ஏற்படுத்திடணும்னுதான் இந்தக் குழுவை ஆரம்பிச்சிருக்கோம். இசைப் பின்னணி இல்லாத யாரும் இதுல இணையலாம். அவங்களுக்குப் பயிற்சிகள் கொடுத்து கை தூக்கி விடறது எங்க பொறுப்பு. முதல் முயற்சியா ஒரு ஆல்பம் தயாரிச்சிருக்கோம். இந்த ஆல்பம்ல அஞ்சு பாட்டு இருக்கு. அஞ்சுமே அஞ்சு வகை. நாட்டுப்புறப் பாட்டு, வந்தே மாதரம் போல தேசப்பற்றுப் பாடல், மெலடி, வெஸ்டர்ன் ஜாஸ், கானா கலந்த ராப்னு இதுல எல்லாமே இருக்கும்.

`மாத்தியோசி' குழுவை இன்னும் பெரிய அளவுல வளர்க்கணும். வெறுமனே கானா பாடிட்டுப் போகாம, மரம் நடறதோட முக்கியத்துவம், அழிஞ்சுக்கிட்டு வரும் பாரம்பரிய கலைகளைக் காப்பாத்த வேண்டிய அவசியம்னு சமூக அக்கறை சார்ந்த விஷயங்களுக்கான பாடல்களை தயார் செய்து மக்கள் கூடும் இடங்களில் எங்க குழு சார்பா பாடப் போறோம்...’’ அக்கறையாகச் சொல்கிற விஜிக்கும் அவரது குழுவினருக்கும் இன்னொரு பெருங்கனவும் இருக்கிறது.

'கருப்பு உலகம்' என்ற பெயர்ல எங்க வாழ்க்கையை ஒரு சினிமாவா எடுக்கறதுக்கான முயற்சிகளை ஆரம்பிச்சிருக்கோம். நான் ஏன் வாழறேன்னு தனக்கே தெரியாத மனிதர்களைப் பத்தின கதை. மரணகானா விஜி புரொடக்ஷன்ஸ் என்ற பேனர்ல ரெஜிஸ்டர் பண்ணி வச்சிருக்கோம். எங்கக் குழுவோட அல்டிமேட் இலக்கு அதுவாகத்தான் இருக்கும். அதேபோல கானா, கிராமியப்பாட்டு, ஒப்பாரி, ஒழவு, தெம்மாங்கு மாதிரி நாட்டாறு வழக்குல உள்ள இசையை சொல்லிக் கொடுக்க ஒரு அகாடமி ஆரம்பிக்கிற ஐடியாவும் இருக்கு..’’ 

ஆர்.வைதேகி
படங்கள் : சரவணகுமார்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்