வெளியிடப்பட்ட நேரம்: 18:09 (01/03/2017)

கடைசி தொடர்பு:18:31 (01/03/2017)

இந்த கோடீஸ்வரரின் ஆசைக்கு 4 ஆண்டுகளில் 500 மிருகங்கள் பலி..!

கோலியத் மெதுவாக... மிக மெதுவாக நடந்து கொண்டிருந்தான். அவன் உலகம் மிகவும் சிறியது. அதற்குள் இப்படித் தான் அவன் மெதுவாக நடந்து கொண்டே இருப்பான். சுவற்றை ஒட்டியிருந்த அந்த கரன்ட் கம்பியை அவன் கவனிக்கவில்லை. அவனின் மிருதுவான கால்கள் அதைத் தொட்டவுடன்... ஒரு நொடி தான். யாராலும் உடைக்க முடியாத தன் ஓட்டுக்குள் தலையை இழுத்துக் கொள்ள முயற்சிக்கிறான். உயிர் வாழ்ந்திட போராடுகிறான். ஆனால், அனைத்தும் ஒரு நொடியில் கருகிவிடுகிறது. கோலியத் ஒரு அழகான ஆமை. 

மிருகங்கள் மிருகக்காட்சி சாலை பிரிட்டன்

மெதுவாக நகர்ந்து செல்லும் கோலியத்...

மிஸ்காவும், நடஸ்ஜாவும் அழகான பனிச் சிறுத்தைகள். எப்போதும் விளையாடிக் கொண்டேயிருக்கும் சிறு பிள்ளைகள். அந்த நாள் காலை அவர்களின் கூண்டில் இருவரும் இறந்து கிடந்தார்கள். 

அந்த சிங்கம் 7 குட்டிகளை ஈன்றிருந்தது. கருவறைக் கடந்து உலகைப் புதிதாகப் பார்த்த சந்தோஷத்தில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. ஆனால், இந்த உலகில் அவர்களுக்குச் சரியான இடம் இல்லை, உணவில்லை. சில நாட்களிலேயே 7 பேரும் இறந்து போனார்கள். போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் 7 சிங்கக்குட்டிகளுமே ஆரோக்கியமாக பிறந்தவைதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

3 வயது காண்டாமிருகம் இண்டியானா. தன்னைவிட வலிமையான காண்டாமிருகம் சுவற்றில் வைத்து நசுக்கியதில்... நசுங்கிப் போய் உயிரிழந்தான். 

மிருகங்கள் மிருகக்காட்சி சாலை பிரிட்டன்

அன்றொரு நாள் காலை... மிஸ்காவும், நடஸ்ஜாவும் இறந்துக் கிடந்தார்கள்...

2013-ம் ஆண்டு மன அழுத்தத்தில் தவித்துக் கொண்டிருந்தான் படாங் என்ற 14 வயது புலி. என்ன நினைத்தானோ தெரியவில்லை, தனக்கு உணவளிக்க வந்த காவலர் சாரா மெக்லே மீது பாய்ந்துவிட்டான். சாரா ரத்த வெள்ளத்தில் இறந்து போனார். அதன் பின்னர் 3 ஆண்டுகள் சரியாக சாப்பிடாமல், தனிமையில் உடலும், மனமும் சோர்ந்து போய் புழுங்கிக் கொண்டிருந்த படாங் கருணைக் கொலை செய்யப்பட்டான். 

இதுமட்டுமில்லை... இன்னும், இன்னும் நிறையக் கதைகள். அணில் குரங்கு இறந்து போனது, நரிக்குட்டி கருகிப் போனது, தவறான உணவுகளால் உடல்நலம் பாதிப்படைந்து ஒட்டகச்சிவிங்கி இறந்து போனது, அலிசியா  என்ற புலி தொண்டையில் சிக்கிய கறித்துண்டின் காரணமாக மூச்சுத் திணறி இறந்தது என கடந்த 4 ஆண்டுகளுக்குள்ளாகவே மட்டும் 500 மிருகங்கள் உயிரிழந்திருக்கின்றன. இல்லை... உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றன. 

இவை கற்பனைக் கதைகள் அல்ல. பிரிட்டனின் கம்ப்ரியாவில் இருக்கும் "சவுத் லேக்ஸ் சஃபாரி ஜூ" வில் (South Lakes Safari Zoo) நடந்த கொடூரங்கள். 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த மிருகக்காட்சி சாலையின் உரிமையாளர் டேவிட் கில். பிரிட்டனின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர். 

மிருகங்கள் மிருகக்காட்சி சாலை பிரிட்டன்

இப்படியான தொடர் மரணங்கள் நடப்பதைக் கவனித்து சில தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மிருகக்காட்சி சாலையில் ஆராய்வுகளை மேற்கொண்டார்கள். அதில் " இடமின்மை, அதிகக் கூட்டம், சரியான உணவின்மை, மிருகங்களின் இயற்கை குறித்த புரிதலின்மை, மருத்துவ வசதிகளின்மை மற்றும் அளவுக்கதிகமான பணம் சேர்க்கும் ஆசை" ஆகியவை தான் இந்த மரணங்களுக்கான காரணங்கள் என்று சொல்லியிருக்கிறது. 

தற்சமயம் கிட்டத்தட்ட 1500 மிருகங்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. 2013-ல் மெக்லே இறந்தபோதே இந்த மிருகக் காட்சியின் மீது சில புகார்கள் வந்தன. மெக்லே இறப்பிற்கு நீதிமன்றமும் 4,50,000 யூரோக்கள் அபராதம் விதித்தது. ஆனால், பிரச்னை வந்த போதெல்லாம் பணம் கொடுத்து தன் மீதும், தன் மிருகக்காட்சி சாலையின் மீதுமான புகார்களை கலைந்திருக்கிறார் டேவிட் கில் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இன்னும் சில தினங்களில் மிருகக்காட்சியின் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும், இந்த மிருக்கக்காட்சிக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென பல இயற்கை ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். ஆனால், ஏனோ பொது மக்கள் மத்தியில் எதிர்ப்பு மனநிலை குறைவாகவே இருக்கிறது. இந்த மிருக்கக்காட்சி சாலையில் இருக்கும்பொழுது போக்கு அம்சங்கள் குறித்து இணையத்தில் பெருமையாகப் பேசப்பட்டு வருகிறது. 

மிருகங்கள் மிருகக்காட்சி சாலை பிரிட்டன்

மனிதர்களை மிருகங்கள் புரிந்து கொள்ளும் அளவுக்குக் கூட, மனிதர்களால் மிருகங்களைப் புரிந்து கொள்ள முடிவதில்லை என்பது தான் நிஜம். காட்டின் ராஜாவாக இருக்கும் சிங்கங்களை காட்சிப் பொருளாக்குவது, பரந்து விரிந்து கிடக்கும் காடுகளில் பயணிக்கும் புலிகளை சில அடிகள் கொண்ட கூண்டில் அடைப்பது, மரமேறி குதித்து, வெகுவேகமாக ஓடி வேட்டையாடும் சிறுத்தைகளுக்கு சில கறித் துண்டுகளைப் போட்டு பேலியோ டயட்டில் வைப்பது என மிருகங்களை மனிதர்களாக்க நினைக்கும் நொடியிலேயே மனிதர்களுக்கான வீழ்ச்சி தொடங்கிவிடுகிறது. 

வனங்களில் வனாந்திரமாக சுற்றியிருக்க வேண்டிய மிருகங்கள் சின்னக் கூண்டுகளில் அடைக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டது ஆகப்பெரும் வன்முறை. கோலியத், மிஸ்கா, நடஸ்ஜா, அலிசியா, இண்டியானா, படாங்... என கூண்டுகளில் கண்களை மூடிய நண்பர்களின் ஆன்மாவாவது கூண்டுகளைச் சுற்றாமல், காடுகளில் சுதந்திரமாக சுற்றி அலையட்டும். சுற்றி, சுற்றி அலையட்டும். சுற்றிக் கொண்டே இருக்கட்டும்...

  - இரா. கலைச் செல்வன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்