Published:Updated:

வைல்டு லைஃப் போட்டோகிராபியில் ஆர்வமா? அப்போ... இதெல்லாம் ரொம்ப முக்கியம்

வைல்டு லைஃப் போட்டோகிராபியில் ஆர்வமா? அப்போ... இதெல்லாம் ரொம்ப முக்கியம்
வைல்டு லைஃப் போட்டோகிராபியில் ஆர்வமா? அப்போ... இதெல்லாம் ரொம்ப முக்கியம்

வைல்டு லைஃப் போட்டோகிராபியில் ஆர்வமா? அப்போ... இதெல்லாம் ரொம்ப முக்கியம்

‘வைல்டு லைஃப் போட்டோகிராபி’ சவால் நிறைந்தது. பல நாள் காத்துக் கிடந்தாலும் சில சமயங்களில் நாம் எதிர்பார்க்கும் புகைப்படம் கிடைப்பதில்லை. சில சமயங்களில், எதிர்பாராமல் வியக்கும் வகையில், ஒரு விநாடியில் புகைப்படம் கிடைத்து விடும். வைல்டு லைஃப் போட்டோகிராபியை பொறுத்தவரை, எப்போதும் ஏமாற்றத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் முயற்சிக்கத் தவறவே கூடாது. சோர்வும் அடையக் கூடாது. காட்டில் நாம் பார்ப்பது எல்லாமே படம்தான். கொஞ்சம் தைரியம், மிகுந்த ஆர்வம், சளைக்காமல் நடப்பதற்குத் தயாராக இருந்தால் ‘வைல்டு லைஃப் போட்டோகிராபி’-யில் நீங்களும் கலக்கலாம். 

இன்னொரு விஷயமும் இந்தக் கலைக்கு அவசியத் தேவை. அது நல்ல கேமரா கிட். 24 to 70 mm 2.8 Lens, Macro lens 100 mm 2.8, 300mm lens போன்றவைகள் இருந்தால் நல்லது. Extra Battery. Extra Camera Card கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். படங்கள் Hi resolution -ல் எடுக்கப்படுவது முக்கியம். அப்போதுதான் படங்களை நாம் வேண்டிய அளவுக்கு பெரியதாக பிரின்ட் செய்யமுடியும். 

காடுகள் ஆபத்தானது. பாம்புகள், பூச்சிகள் எந்த இடத்திலும் இருக்கலாம். அதனால், கால்களில் நல்ல தடிமனான பூட் அணிந்திருக்க வேண்டும். அட்டைப்பூச்சி ஏறாத Leech socks அணிவது முக்கியம். புகையிலைப்பொடியை சாக்ஸ் மீது தடவிக் கொள்ளவது நல்லது. அதை எப்போதும் ஸ்டாக் வைத்திருக்க வேண்டும். இது தவிர கத்தி, தீப்பட்டி, உறங்குவதற்கான பெட், திசை காட்டும் கருவி, டார்ச்லைட், ஹெட் லைட், டென்ட் போன்றவையும் அவசியம். வழிகாட்ட வன ஊழியர் உடன் இருக்க வேண்டும். இதுவெல்லாம் இருந்தால் நாம் குறைந்த பட்சம் வைல்டு லைஃப் போட்டோகிராபிக்கு முயற்சிக்கலாம். 

தமிழகத்தைப் பொறுத்தவரை முதுமலை, தெங்குமரஹாடா, கர்நாடகாவில் பண்டிப்பூர், கேரளத்தில் சைலன்ட் வேலி, பரம்பிகுளம் போன்ற காடுகளில் வைல்டு லைஃப் போட்டோகிராபிக்காக சென்ற அனுபவம் உண்டு. பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளுக்குள் செல்ல அனுமதி கிடையாது. தனியார் வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. அதனால், வனத்துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும். வனத்துறையினர் காடு வழி தெரிந்தவர்களை பாதுகாப்புக்காக நம்முடன் அனுப்புவார்கள். பத்திரிகை பணிகளுக்கிடையே இதையும் செய்ததால், எனக்கு பெரிய அளவில் புகைப்படங்கள் கிடைக்கவில்லை என்றாலும் நல்ல அனுபவங்கள் கிடைத்தன.  

முக்கியமாக காடுகள் அளிக்கும் உற்சாகத்துக்கு ஈடு இணை எதுவுமே இல்லை. ஆனால், ஆபத்து நிறைந்தது என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதுமலையில் நிகழ்ந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. மசினகுடி அருகே யானைகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம். கூட்டமாக யானைகள் நின்று கொண்டிருந்தன. படம் எடுத்துக் கொண்டிருக்கும் சுவாரஸ்யத்தில் கூட்டத்தில் இருந்து ஒரு யானை மட்டும் தனியாக பிரிந்து சென்றதை கவனிக்கவில்லை. அந்த யானை எங்களுக்கு வலப்புறத்தில் இருந்து எங்களை விரட்ட ஆரம்பித்தது. 

திடீரென்று பிளிறல் சத்தம். மிரண்டு போன நாங்கள் ஓட ஆரம்பித்தோம். எங்களுடன் வந்த நண்பர் மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை செய்தவர். ஆஜானுபாகுவான தோற்றம் உடையவர். அவரால் ஓட முடியவில்லை. நாங்கள் வந்த வாகனம் அருகில் தார் சாலையில் நின்று கொண்டிருந்தது. நான் ஓடி விட்டேன்... 'அண்ணா வந்துடுங்க வந்துடுங்க’ என கத்தினோம். அவரால் ஓட முடியவில்லை. தார் சாலையில் ஏறியவரால் அதற்கு மேல் நகர இயலவில்லை. அப்படியே நின்று விட்டார். யானையும் சாலையை நெருங்குகிறது. 'அவ்ளோதான் இன்றைக்கு முடிந்தது' என கதறுகிறேன். அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் சாலையில் சுற்றுலா வேன் ஒன்று மிக வேகமாக கிராஸ் செய்ய அதில் யானை டைவெர்ட் ஆகி அப்படியே நின்று விட்டது. மயிரிழையில்தான் நண்பர் தப்பித்தார். அந்த வேன் மட்டும் வரவில்லையென்றால், யானையிடம் நண்பர் பிடிபட்டிருப்பார். 

அதனால், வைல்டு லைஃப் போட்டோகிராபியை பொறுத்தவரை எவ்வளவு சுவராஸ்யமான நிகழ்வாக இருந்தாலும் நாலா திசைகளிலும் கவனம் இருக்க வேண்டும். பாறை இடுக்குகள், புல்வெளிகளில் கால் வைக்கும் போதும் கவனம் தேவை. பாம்புகள் இருக்கலாம். ஆர்வக் கோளாறில் ஒரு முறை அப்பர்பவானி காடுகளுக்குள் சிறு கத்தி கூட இல்லாமல் சென்று மாட்டிக் கொண்டோம். யானைகள் இருப்பதை மோப்ப சக்தியால் அறியும் திறன் இருந்தாலும் நல்லது. 

அதிகாலை 5 மணிக்கே காட்டுக்குள் புகுந்து விட வேண்டும். பொறுமை மிக அவசியம். காட்டில் நீங்கள் மிருகங்களையோ, பறவைகளையோ பார்த்தால் அமைதியாக புகைப்படங்கள் எடுக்க வேண்டும். மூச்ச்ச்... மீறி சத்தம் எழுப்பினால், அவைகள் ஓடி விடக் கூடும். வன விலங்குகளுக்கு மன அழுத்தத்தை தரக் கூடிய எந்த விஷயத்திலும் ஈடுபடக் கூடாது. அவற்றின் வாழ்விடங்களுக்குள் நாம் சென்றிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வது மிக அவசியம். வைல்டு லைஃப் போட்டோகிராபி தொடர்பான புத்தகங்களில் இடம் பெற்றுள்ள புகைப்படங்களை புரட்டிப் பார்ப்பதும் நமது அறிவை வளர்க்க உதவும். காடுகளைப் பற்றிய அறிவும் முக்கியம். 

சரி வைல்டு லைஃப் போட்டோ எடுப்பதால் என்ன லாபம்... கேள்வி எழுகிறதா? முதலில் ஹாபியாக பார்க்கப்பட்ட வைல்டு லைஃப் போட்டோகிராபி இப்போது வருவாய் தரக் கூடியதாகவும் மாறியிருக்கிறது. பல ஆண்டுகளாக நாம் காட்டுக்குள்ளே கிடந்து அரிய வகைப் புகைப்படங்களை எடுத்திருப்போம். அவற்றைக் கொண்டு கண்காட்சி நடத்தினால், அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி வேறு எதுவும் தராது. இப்படியெல்லாம் நாம் புகைப்படம் எடுத்துள்ளோமோ? என நம்மை நாமே பாராட்டிக் கொள்வோம். 

இயற்கை, வன உயிரின ஆர்வலர்கள் நாம் எடுத்த புகைப்படங்களை வாங்கவும் முன்வருவார்கள். நண்பர் ஒருவர் பெங்களூருவில் பத்திரிகை ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தார். வைல்டு லைஃப் போட்டோகிராபியில் கில்லாடி. விடுப்பு நாள்களில் காட்டில்தான் கிடப்பார். ஒரு கட்டத்தில் பணிக்கு ‘குட்பை’ சொல்லிவிட்டு, முழு நேரமாக வைல்டு லைஃப் போட்டோகிராபியில் இறங்கினார். தான் எடுத்த புகைப்படங்களை கொண்டு 'தத்துவமாசி' என்ற பெயரில் இந்தியா முழுவதும்  இப்போது கண்காட்சி நடத்துகிறார்.

பெங்களூருவிலும் கோழிக்கோட்டிலும் வைல்டு லைஃப் போட்டோகிராபி, போட்டோ ஜர்னலிசத்துக்கு கல்லூரி ஆரம்பித்துள்ளார். வைல்டு லைஃப் போட்டோகிராபிக்கு ஏராளமான விருதுகளும் அறிவிக்கப்படுகின்றன. தமிழகத்தின் தலைசிறந்தவைல்டு லைஃப் போட்டோகிராபராக அறியப்பட்டவர் மறைந்த  நடேசாச்சர்யா அய்யம் பெருமாள். இவர் கிட்டத்தட்ட 1,500 கண்காட்சிகளை நடத்தியிருக்கிறார். 200 விருதுகளை வென்றிருக்கிறார். 

என்ன வைல்டு லைஃப் போட்டோகிராபிக்கு நீங்களும் தயாராகி விட்டீர்களா? 

- எம்.குமரேசன்

புகைப்படம்: என்.பி.ஜெயன்

அடுத்த கட்டுரைக்கு