சரோஜினி தேவி சிறைவாசம் அனுபவித்தது இதற்குத்தான்! - நினைவு தின சிறப்புப் பகிர்வு | Sarojini Devi Memorial Day Special Article

வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (02/03/2017)

கடைசி தொடர்பு:07:43 (02/03/2017)

சரோஜினி தேவி சிறைவாசம் அனுபவித்தது இதற்குத்தான்! - நினைவு தின சிறப்புப் பகிர்வு

சரோஜினி

''என் வாழ்க்கையில் நான் இந்தப் பரந்த, தேசிய சகோதரத்துவத்தைக் கடைப்பிடிக்க முயல்கிறேன். நான் வங்காளத்தில் பிறந்தவள்; ஆனால், சென்னைக்குச் சொந்தமானவள். ஒரு முஸ்லிம் நகரத்தில் வளர்ந்தேன்; அங்கேயே மணம் புரிந்து மணவாழ்க்கையை நடத்தினேன். எனவே, நான் வங்காளியும் அல்ல; சென்னைக்காரியும் அல்ல; ஹைதராபாத்காரியும் அல்ல. நான் ஓர் இந்தியப் பெண்.'' - இந்த எழுச்சிமிகு வரிகளைத் தன் எண்ணத்தில்கொண்டு, தேசிய உணர்வுடன் வாழ்ந்து மறைந்தவர் கவிக்குயில் சரோஜினி தேவி. அவருடைய நினைவு தினம் இன்று. 

சுதந்திரக் களத்தில் குதித்த கவிக்குயில்!

'அன்பே...
விண்வெளியில் நிலா
உலா வருகிறது!
உடுக்கணங்கள் ஒளி சிந்துகின்றன...
இரவு ஆகிவிட்டது,
விழித்திருந்து மற்றவருக்கு
அல்லல் தராதே! 
நீலமணி நிகர்த்த 
கண்மணிகளை மூடித் தூங்கு!
என் பாட்டுகள் - உன் செவிகளில் 
இசைப்பதுபோல் - உனக்குக் 
கனவுகள் வந்து இன்புறுத்தும்!' 

- என்று ஆரம்பத்தில் இப்படிக் கவிதைகள் எழுதிய அந்தக் கவிக்குயில், ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவைப் பார்த்த பிறகு,

'போரும் பூசலும்
நிறைந்துள்ள இடங்களில் 
மறத்தையும் அறியாமையையும் 
அன்பு வெல்க!
வாளேந்திப் போர் வீரர்கள் 
போர்முனை நண்ணினால் - நான்
என் இனிய பாடல்களை 
ஏந்திச் செல்வேன்!'
 

- என்று சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஏற்ற கவிகளைக் கனலாய்க் கொட்டிக் களத்தில் குதித்தது.

பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் எழுச்சி உரை!

1918-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ் மாகாண அரசியல் மாநாட்டில் கலந்துகொண்ட சரோஜினி தேவி, ''குழந்தைகளைப் பராமரிப்பதும் கணவரைக் கவனிப்பதும் மங்கையரின் கடமைதான். கடமையாற்றி ஒழிந்த நேரத்தில், உலகத்துக்கு ஆற்றவேண்டிய பணிகளையும் கவனித்தால் என்ன... அது தவறு, என்று சாத்திரம் கூறுகிறதா... 'என் வீடு, என் வாசல், என் குழந்தைகள்' என்றே எல்லோரும் இருந்துவிட்டால், மக்களுக்குச் சேவை செய்வது யார்? சகோதரிகளே... சொந்தக் கடமைகளை வழுவாது கவனியுங்கள். அத்துடன், பொதுப் பணி ஒன்றை ஏற்கவேண்டியதும் உங்கள் கடமையாகும்'' என்று பெண்களுக்குப் பொதுப் பணியாற்ற அன்புக் கட்டளையிட்ட அவர், மறுபுறம் இளைஞர்களுக்கு இப்படி ஊக்கமளித்தார். 

சரோஜினி தேவி''இளைஞர்களே... உங்கள் விருப்பும் பற்றும், உங்கள் மாகாணத்துடன்; நகரத்துடன்; சாதியுடன்; சாதியின் உட்பிரிவுடன்; கல்லூரியுடன்; வீட்டுடன்; வீட்டின் உறவினர்களுடன்... இப்படி இறுதியில் உங்களுடனேயே நின்றுவிடுகின்றன. இந்தச் சுயநலத்தை... தன்னை மட்டும் காத்துக்கொண்டு மற்றவரைப் பாராமல் ஒதுங்கும் தன்மையை... நீங்கள் கைவிட வேண்டும். நாடு முழுவதையும், மக்கள் அனைவரையும், எல்லாப் பகுதியினரையும், எல்லா மதத்தினரையும், எல்லோரையும் சகோதரர்களாய்க் கருதி, சர்வஜன சகோதரத்துவத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்'' என்று, அவர் உரைத்த உரை... இன்றும் இளைஞர்களுக்கு உந்துசக்தியாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறது. 

''அதிக்கிரமச் செயல்களுக்கு தண்டனை கிடைக்கும்!''
 
மகாத்மாவைத் தன் ஆசானாக வணங்கிய சரோஜினி... ஒருமுறை அவரிடம், ''இந்த ஏழைப் பக்கிரியைப் பராமரிப்பதற்காக, நாடு ஏராளமாகச் செலவு செய்ய வேண்டியுள்ளது'' என்று பரிகாசம் செய்தார். அதையெல்லாம் கண்டுகொள்ளாத மகாத்மா, அவரை ஒரு குழந்தையாகவே பாவித்தார். அவர் மீது மிகுந்த அன்பும், நம்பிக்கையும் வைத்திருந்தார். அவரை, 'இந்தியாவின் கவிக்குயில்' எனப் புகழ்ந்தார். அதனால்தான் மகாத்மா,  'தம் கருத்துகளை விளக்கமாக உலகத்துக்கு உரைக்கவல்லவர் அவர் மட்டுமே' என்று நம்பினார். அதன்படியே தம் பிரதிநிதியாக அவரை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தார். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் தென்னாப்பிரிக்கா சென்ற சரோஜினி, ''இந்தியாவில் ஓர் இந்தியன் இருக்கும்வரை வெள்ளையரின் அதிக்கிரமச் செயல்களுக்கு எதிர்ப்பும் தண்டனையும் கிடைத்தே தீரும்'' என்று சொல்லி, அங்கிருந்த இந்தியர்களை உற்சாகப்படுத்தினார். 

காந்தியுடன் சரோஜினி தேவி...

மகாத்மாவுக்கு நிகரான சரோஜினி தேவி!

சரோஜினி தேவியின் வெளிநாட்டுப் பயணத்துக்கு வெற்றி கிடைக்கும் வகையில், அங்கிருந்த இந்தியர்களிடம் விழிப்பு உணர்வு ஏற்பட்டது. இதனையடுத்து, இந்தியாவுக்குத் திரும்பிய சரோஜினி தேவிக்கு பம்பாயில் (மும்பை) பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் கூடிய காங்கிரஸ் மகாசபையில், தென்னாப்பிரிக்க இந்தியர்கள் சார்பாகக் கலந்துகொண்ட டாக்டர் அப்துல் ரஹ்மான், ''தென்னாப்பிரிக்க இந்தியராகிய நாங்கள், உங்களுக்கு மகாத்மாவைக் கொடுத்துள்ளோம். அவருக்கு நிகராக விளங்கும் சரோஜினி தேவியாரை, நீங்கள் எங்களுக்குக் கொடுக்க வேண்டும். 'மறுப்பீர்கள்' என்று எனக்குத் தெரியும். இந்தியாவின் மாதர் குலவிளக்காகவும், மாதர்கள் விழிப்புக்குக் காரணபூதராகவும் விளங்கும் தேவியார், இந்திய மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி வருகிறார்.

அவர், உங்களுக்கு இன்றியமையாதவர் என்பதை நான் அறிவேன். தென்னாப்பிரிக்காவில் அவர் ஆற்றிய பணிகள் எங்களைக் கவர்ந்துவிட்டன. தேவியாரை அழைத்துச் செல்வதே எங்கள் வருகையின் நோக்கம். தேவியாரின் திருவுருவப் படம் ஒன்றை, நேற்று நான் காங்கிரஸுக்குப் பரிசாக வழங்கினேன். அழகான அந்தப் படத்தை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்; தேவியாரை, எங்களோடு தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்கிறோம்'' என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த உரை, தென்னாப்பிரிக்க இந்தியர்கள், அவர் மீது எத்தகைய அன்பையும் மரியாதையையும் கொண்டிருந்தனர் என்பதை, நமக்குத் தெளிவாக்குகிறது.

சிறைவாசத்தை நீட்டித்துக்கொண்டார்!

தன்னுடைய காதலிலும் வெற்றிபெற்ற சரோஜினி,  இல்லற வாழ்விலும் தன்னை முழுதாய் இணைத்துக்கொண்டார். நாட்டுப் பணியில் சேவையாற்றிச் சிறைவாசமும் அனுபவித்தார். சிறைத் தண்டனை காலம் முடிந்தும் கூடுதலாக அந்தச் சிறையிலேயே இருந்தவர் சரோஜினி. காரணம், அவர் சிறையில் நல்ல மணமிக்க மலர்ச்செடிகளை வளர்த்தார். அவைகள், நன்றாக வளர்ந்து பூக்கும் நேரத்தில், அவற்றைப் பார்க்காமல் எப்படி இருக்க முடியும்? பிரசவித்த குழந்தையைத் தன் தாய் பார்க்காமல் இருக்க முடியுமா? அதே ஏக்கம்தான், அவருக்குள்ளும் இருந்தது.  அதற்காகவே, தனது சிறைவாசத்தை ஒருவார காலம் நீட்டித்துக்கொண்டார்.

இந்திய விடுதலைக்காகத் தன் வாழ்நாளைக் கழித்த சரோஜினி தேவி, முன்பே தன்னைப்பற்றி இப்படியான கவிதைகளை எழுதியிருந்தார். 

'மலர்களை வலம்வரும் பறவைகாள்...
என்னை அழைத்துச் செல்லுங்கள்!
ரோஜா மலர்களால் 
என்னை மூடி மறைத்துவிடுங்கள்!'

'அழகும் பொலிவும் அமைந்த தரையும்
வண்ணப்பூச்சால் ஒளிரும் சுவர்களுமுள்ள
வீடுகளில் அடைபட்டு வாழ்ந்தது போதும்...
பூசலும் பாடலும் விழாவும் கேளிக்கையும்
எனக்கு அலுத்துவிட்டன!'

- என்று அவர் எழுதிய கவிதை வரிகளைப் பார்த்துத்தான் ஆண்டவனும் 
அவரை, மேலே அழைத்துக்கொண்டானோ?

- ஜெ.பிரகாஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்