வெளியிடப்பட்ட நேரம்: 20:38 (02/03/2017)

கடைசி தொடர்பு:20:37 (02/03/2017)

புற்றுநோய் பரப்பும், வெள்ளம் கொல்லும் ஆறுகள்..! உலகின் மோசமான ஆறுகள் இவை

ஆறுகள்

நதிகள் என்பது இயற்கை நமக்குத் தந்த வரங்கள். ஒரு நாட்டின் குடிநீர்த் தேவையில் ஆரம்பித்து ஒரு நாட்டின் வளர்ச்சி வரைக்கும் நதிகளுக்கு முக்கியப்பங்கு உண்டு. இந்த நதிகளானது இயற்கையின் கணிக்க முடியாத மிகப்பெரிய சக்திகளுள் ஒன்று. மக்கள் வாழ்வதற்குத் தேவையான வாழ்வாதாரமும் நதிகள்தான். ஒரு நாட்டினுடைய நாகரிகமும் ஆற்றங்கரையோரத்தில்தான் ஆரம்பிக்கிறது. இந்த ஆறுகளானது பெரிய வனப்பகுதிகள், மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றைக் கடந்தே சமவெளிப்பகுதிக்கு வருகின்றன. உலகில் பாதுகாப்பான ஆறுகள் பல இருந்தாலும், மிரட்டும் ஆபத்தான ஆறுகளும் இருக்கத்தான் செய்கின்றன. 

1. யாங்ஜி ஆறு: 

யாங்ஜி ஆறு

ஆசியாவிலேயே 4,000 மைல்கள் பயணிக்கும் மிக நீளமான ஆறு இதுதான். இந்த ஆற்றின் பெரும்பகுதியானது சீனாவில் பாய்கிறது. மேலும், மக்கள் வாழ்வாதாரத்துக்கு முக்கிய ஆதாரமாகவும் இது விளங்குகிறது. இந்த ஆற்றில் சீன முதலைகள், கடற்பன்றிகள், துடுப்பு மீன்கள் ஆகிய உயிரினங்கள் கொண்டதாகவும், மேலும் உலகப்புகழ்பெற்ற கோர்ஜஸ் அணையும் இந்த நதியில் அமைந்துள்ளது. இந்த கோர்ஜஸ் அணையில் ஹைட்ரோ-மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்துமே ஒருங்கே அமையப்பெற்ற இந்த வளங்கள் யாங்ஜி ஆறுக்கு நல்லதல்ல. ஆனால் கடந்த பல ஆண்டுகளாகத் தொழில் நகரமயமாக்கல் காரணமாக தீவிரமாகப் பரவிய மாசினால் ஆற்றின் வளம் பாதிக்கப்பட்டது. இதனால் அதனைச் சார்ந்திருந்த விவசாயத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. இந்த ஆற்றில் மே முதல் ஆகஸ்ட் வரை பெய்யும் மழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இந்த ஆற்றில் 1954-ம் ஆண்டு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 30,000 மக்கள் உயிரிழந்தனர். 

2. பரணா ஆறு: 

பரணா ஆறு

பரணா ஆறு 3,030 மைல்களைத் தாண்டி பயணிக்கும் மிகப்பெரிய ஆறு. தென் அமெரிக்காவில் மற்ற நதிகளைவிட (அமேசான் நதி உட்பட) இதுதான் நீளமானது. பரணா ஆற்றில் ஏற்படும் எதிர்பாராத வெள்ளம் கட்டுப்படுத்த முடியாத வலுவான நீரோட்டம் ஆகியவற்றால் இந்த நதியானது ஆபத்தான நதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது மக்கள் தமது வீடுகளை இழப்பது நிச்சயம். ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தால் அதிகமான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து விடுகின்றனர். 

3. காங்கோ ஆறு: 

காங்கோ ஆறு

ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோ ஆறு மிக ஆழமான மற்றும் நீளமான ஆறு, இதுவும் 3,000 மைல்களைக் கடக்கிறது. இந்த ஆற்றுக்கென தனி வரலாறு உண்டு. இந்த ஆறானது கருமை நிற இதயம் கொண்ட ஆறு என அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றில் 75 மைல் நீளமான கணிக்க முடியாத பயங்கரமான பள்ளத்தாக்குகளைக் கொண்டுள்ளதால் 'நரகத்தின் வாயில்' எனவும் அழைக்கப்படுகிறது. 

4. அமேசான் ஆறு: 

அமேசான் ஆறு

அமேசான் நதி உலகின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றாகவும், உலகின் இரண்டாவது நீளமான நதியாகவும் விளங்குகிறது. இது இரண்டாவது நைல் நதி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த அமேசான் காடுகளில் மிகப்பெரிய அனகோண்டா பாம்புகளும், நதியில் காளை சுறாக்கள் எனப் பலவகையான நீர்வாழ் உயிரினங்கள் இருக்கின்றன. மேலும் உலகின் மிக ஆபத்தான நதியாகவும் இந்த நதியானது விளங்குகிறது. 

5. ஒரினோகோ ஆறு: 

ஒரினோகோ ஆறு: 

தென் அமெரிக்காவின் முக்கியமான நதியாகும். இது 1330 மைல் நீளமானது. இந்த ஆறானது கொலம்பியா, வெனிசுலா மற்றும் அடர்ந்த வனங்கள் ஆகியவற்றைக் கடந்து பயணிக்கிறது. கிட்டத்தட்ட 200 கிளை நதிகளையும், ஆபத்தான பல அருவிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த ஓரினோகொ எல்லையில் வாழும் மக்கள் ஆண்டு முழுவதும் ஏற்படும் வெள்ளத்தைச் சந்தித்து வருகின்றனர். 

6. மீகாங் ஆறு: 

மீகாங் ஆறு

ஆசியாவின் 7-வது நீளமான நதியாகும். மீகாங் நதியானது சீனா, பர்மா, லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் ஆகிய 6 நாடுகளில் பயணிக்கிறது. இந்த மீகாங் நதியில் மென்மையான ஷெல் ஆமைகள், முதலைகள், பெரிய டால்பின்கள் போன்ற அரியவகை உயிரினங்கள் காணப்படுகின்றன. மேலும் உப்பு எடுக்கும் தொழிலும் இந்த ஆற்றங்கரையில் பிரபலம். இந்தக் கடல் போக்குவரத்துக்குப் பெரிதும் உதவுகிறது. ஆனால் நெடுந்தூரம் பயணிக்க முடியாது. இந்த ஆற்றில் ஏற்ற இறக்கங்கள் நீண்டும், குறுகியும் காணப்படுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு மீகாங் ஆறானது 12 மீட்டர் உயரத்துக்கு மோசமான வெள்ளத்தைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

7. எநிசி ஆறு: 

எநிசி ஆறு

மங்கோலியா மற்றும் சீனா வழியாக இந்த நதி சென்று ஆர்டிக் கடலில் கலக்கும் பெரிய நதியாகும். இந்த ஆற்றில் இருக்கும் நச்சுத்தன்மை மற்றும் அதன் கதிர்வீச்சானது ஆற்றை ஆபத்தான பட்டியலில் சேர்த்துள்ளது. நீர்வாழ் அறிஞர்களின் ஆய்வுப்படி, புளுட்டோனியம் சுத்தம் செய்யும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆற்றினை சுற்றியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மரபணு பிறழ்ச்சி மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவை ஏற்படுகிறது. 

8. மிசி சிப்பி ஆறு: 

மிசி சிப்பி ஆறு

வடமெரிக்காவின் பெரிய நதியாகக் கருதப்படும் மிசி சிப்பி ஆறு மினசோட்டா, விஸ்கான்சின், அயோவா, ஆர்கன்சாஸ் மற்றும் லூசியானா உட்படப் பல அமெரிக்க மாநிலங்களைக் கடந்து செல்கிறது. இந்த ஆற்றில் சில பகுதிகளில் காளை சுறாக்கள் மற்றும் ஈட்டி மீன்கள் போன்ற மிகப்பெரிய நீர்வாழ் விலங்கினங்கள் வாழ்கின்றன. இந்த ஆறானது 2340 மைல் நீளமுடையது. இந்த ஆறானது பிளாஸ்டிக்குகள், மிதக்கும் மற்ற குப்பைகள் எனப் பலவகை குப்பையால் மாசடைந்து காணப்படுகிறது. 

 மேற்கண்ட ஆறுகளைப்போல நம் நாட்டில் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆறுகள் இல்லை. இன்றைய நிலையில் மனிதர்களால்தான் இந்திய ஆறுகளுக்குப் பாதிப்பே தவிர ஆறுகளால் மனிதர்களுக்குப் பாதிப்பு இல்லை. நம் நாட்டில் இருக்கும் வளங்களையும், நதிகளையும் பாதுகாத்தாலே போதும். ஆனால் தண்ணீர் ஓடவேண்டிய ஆறுகளில் பெரும்பாலானவற்றில் புழுதிக்காற்று மட்டுமே வீசுகிறது...இனியாவது இயற்கை வளங்களைப் பாதுகாப்போம். 

- துரை.நாகராஜன்.


டிரெண்டிங் @ விகடன்