இருட்டில் மிரட்டிய சிறுத்தை... வழிமறித்த குட்டியானை..! ஒரு வைல்ட் லைஃப் பெண் போட்டோகிராபரின் அனுபவம் | A wildlife photographer experience

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (05/03/2017)

கடைசி தொடர்பு:13:06 (06/03/2017)

இருட்டில் மிரட்டிய சிறுத்தை... வழிமறித்த குட்டியானை..! ஒரு வைல்ட் லைஃப் பெண் போட்டோகிராபரின் அனுபவம்

பூஜா சோர்தியா -  வைல்ட் லைஃப்ஃ போட்டோகிராபர்

குட்டிகளைப் பாதுகாப்பாக அரண் அமைத்து அழைத்துச் செல்லும் யானைக் கூட்டம், புதருக்குள் மறைந்துகொண்டு சீறும் சிங்கம் என ஒரு வனத்தையே தன்னுள் அடக்கி வைத்திருந்தது அந்த அரங்கு. அந்தப் புகைப்படங்களின் சொந்தக்காரர் சென்னையைச் சேர்ந்த பூஜா சோர்தியா. தென்னாப்பிரிக்கக் காடுகளில் பயணம் செய்து அதைப் புகைப்படக் காட்சியாக வைத்திருக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆர்ட் ஹவுஸ் அரங்கத்தில் நடந்துகொண்டிருக்கும் புகைப்படக் காட்சியைப் பார்க்கச் சென்றிருந்தோம்.

அரங்கில் நுழையும் இடத்திலேயே வரையாடு ஒன்று அமைதியாக நம்மை வரவேற்றுகிறது.  புகைப்படக்காட்சியைப் பார்க்க வந்திருந்த வாண்டுகளிடம் அந்தப் படங்களுக்குப் பின்னணியில் இருக்கும் அனுபவத்தைச் சொல்லிக்கொண்டிருக்க, அதை விழிகள் விரிய கேட்டுக் கொண்டிருந்தனர் அந்த சுட்டீஸ். நாமும் கதை கேட்க ஆரம்பித்தோம்.

"நாள் முழுக்க காட்டுல சுத்திட்டு, ஈவ்னிங் தங்கியிருக்கிற இடத்துக்கு போயிட்டு இருந்தோம். அங்கே 5.30 மணிக்கு மேலே காட்டுக்குள்ள சுத்தக்கூடாதுன்னு சட்டம் இருக்கு. நாங்க கேம்ப்க்கு திரும்பிட்டு இருந்த நேரத்துல ஒரு சிறுத்தை ரோட்டைக் கடந்து போய்க்கிட்டு இருந்துச்சு. டிரைவர் வண்டியை நிறுத்திட்டாரு. சிறுத்தை ரொம்ப தனிமை விரும்பி. அவ்வளவு சீக்கிரம் அதை போட்டோ எடுக்க முடியாது. அது கடந்து போன பக்கம் எட்டிப் பார்த்தோம். ஒரு விலங்கை வேட்டையாடிட்டு இருந்துது. கூட வந்தவங்க எல்லாம் ‛கிளம்பலாம் இங்கே இருப்பது பாதுகாப்பு இல்லை’னு சொன்னாங்க. ‛அது நிச்சயமா இங்கேதான் பக்கத்தில இருக்கும். இல்லைனா  இதைத் தேடி வேறு ஏதாவது விலங்கும் வர வாய்ப்பிருக்கு’னு  சொன்னேன். கொஞ்ச நேரம் காத்திருந்தோம். ரொம்ப இருட்டீருச்சு.  திடீரென பக்கத்திலிருந்து உறுமல் சத்தம். டிரைவர் வண்டியை கிளப்பத் தயாரானார்.

பூஜா சோர்தியா - வைல்ட் லைஃப்ஃ போட்டோகிராபர்

மேலும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...

சத்தம் வந்த பக்கம் என் கேமராவோடு திரும்பவும், எங்களுடன் இருந்தவர் இன்ஃபிராரெட் லைட்டை அங்கே அடிக்கவும் சரியாக இருந்தது. கிளிக் பண்ணிட்டேன். வண்டி சத்தம் கேட்டதுல அந்தச் சிறுத்தை அங்கிருந்து ஓடிருச்சு. அப்புறம்தான் சொன்னாங்க அவ்வளவு இருட்டுல இப்படி சிறுத்தையை யாருமே பார்த்தது இல்லையாம்." கதை சொல்லி முடிக்க, குழந்தைகள் ஆச்சர்யம் விலகாமல் அந்தப் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பூஜாவிடம் பேசினோம். "நான் வளர்ந்தது படிச்சது எல்லாமே சென்னையிலதான். ஸ்டெல்லா மேரிஸ்ல பி.காம் படிச்சேன். போட்டோகிராபி மேல இன்ட்ரஸ்ட். உடனே கிளாஸ்ல சேர்ந்து போட்டோகிராபி சம்பந்தப்பட்ட அடிப்படையான விஷயங்களைக் கத்துக்க ஆரம்பிச்சேன். அடிக்கடி வீட்ல காடுகளுக்கு சின்ன சின்ன ட்ரிப் போவோம். ஸ்கூல்லையும் முழுக்க முழுக்க மரம் செடியாதான் இருக்கும். இப்படி சின்ன வயசுல இருந்து இயற்கையான சூழல்லையே வளர்ந்ததால வைல்ட் லைஃப்  போட்டோகிராபி மேல ஆர்வம் வந்துடுச்சு. வீட்லயும் எல்லோரும் என்னப் போலத்தான். அதனால பெருசா எதிர்ப்பு இல்லை. 'உனக்குப் பிடிச்சதை ரசிச்சு செய். அப்போதான் நல்ல ரிசல்ட் கிடைக்கும்'னு தன்னம்பிக்கை கொடுத்தாங்க. அதுதான் இந்த ஷோ வரைக்கும் கொண்டுவந்திருக்கு.  

யானைகள் எப்பவுமே குட்டிகளை ரொம்ப பாதுகாப்பாக வெச்சுக்க விரும்பும். குட்டிகளோடு இருக்கும்போது யாரையும் பக்கத்துல நெருங்க விடாது. துரத்த ஆரம்பிச்சுடும். அவ்வளவு கவனமா குட்டிகளை கூட்டிட்டுப் போகும். அந்தக் காட்சியைப் படம்பிடிச்சதை மறக்கவே முடியாது.

பூஜா சோர்தியா - வைல்ட் லைஃப் போட்டோகிராபர்

மேலும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...

இப்படி இங்கே இருக்கிற எல்லாப் படங்களுக்குப் பின்னாடியும் அவ்வளவு கதைகள் இருக்கு. கார்ல போய்க்கிட்டு இருந்தப்போ ஒரு குட்டி யானை  சாலையை மறிச்சு நின்னுகிட்டு தன்னோட காலை கிராஸா வெச்சு விளையாட ஆரம்பிச்சுடுச்சு. நாங்களும் சந்தோஷமா படம் எடுத்தோம். பின்னாடி பார்த்தா தாய் யானை குட்டியை நோக்கி வந்துட்டு இருக்கு. எல்லோரும் பயந்துட்டாங்க. யானை அவ்வளவு பக்கத்துல வந்தும் கூட நான் பயப்படவே இல்லை. ஏன்னா இயற்கையை நாம நேசிக்க ஆரம்பிக்கும்பொழுது அந்த பயமெல்லாம் ஓடியே போயிடும்" என்றார் பூஜா..

சில நொடிகளில் "இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். இந்தப் புகைப்படக் கண்காட்சிக்கு என்ன பெயர் தெரியுமா!?  "Respect Nature" எனக் கண்சிமிட்டி சிரிக்கிறார்..!

வைல்டு லைஃப் போட்டோகிராபியில் ஆர்வமா? அப்போ... இதெல்லாம் ரொம்ப முக்கியம்

- க. பாலாஜி 

படங்கள் : பூஜா சோர்தியா, சொ. பாலசுப்பிரமணியம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்