வெளியிடப்பட்ட நேரம்: 08:51 (07/03/2017)

கடைசி தொடர்பு:08:50 (07/03/2017)

ஒரு ரசிகனா இருக்குறதோட கஷ்டம் ரசிகனுக்குத்தான் தெரியும்!

ரு குறிப்பிட்ட நடிகருக்கு ரசிகரா இருக்கிறதிலேயும், ஒரு அரசியல்வாதிக்கு அபிமானியா இருக்கிறதிலேயும் பல கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கு. ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் படம் வந்தா கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்றதிலேர்ந்து தேர்தல்ல ஜெயிச்சா பழனிக்குப் பால்காவடி எடுக்கிறவரைக்கும் கேப்பே விடாம கரகரனு கம்பு சுத்தணும். அதுபோக, இவற்றை எல்லாம் தாண்டி கண்ணுக்குத் தெரியாத கஷ்டங்களும் இருக்கு பாஸ்...

சமந்தா ரசிகர்கள்

* நமக்குப் பிடிச்சிருக்குங்கிற ஒரே காரணத்துக்காக அந்தக் கதாநாயகன் நடிச்ச மொக்கைப் படத்துக்கு வெறித்தனமா முட்டுக் கொடுக்கணும். நல்லாவே இல்லைன்னாலும் 'என்னா கதை... என்னா களம்..!'னு வாயைப் பொளந்துக்கிட்டே ரசிகர்களோட ரசிகர்களா தரையில் புரண்டு களமாடணும். 

* அந்த நடிகர் நடிச்ச படம் நல்லா ஓடிட்டாகூட பிரச்னை இல்லை. கல்லா கட்டிடுச்சுனா 300 கோடி டாவ்வ்வ்னு அள்ளிப்போட்டு வடை சுடலாம். ஒருவேளை ஓடாமல் போச்சுனா 'நல்ல படங்களுக்கு இங்கே மதிப்பில்லை. இதே படத்தை கொரியாவில் ரிலீஸ் பண்ணிருந்தா...'னு ஆரம்பிச்சு அந்தப் படத்தின் எடிட்டர், லைட்மேன், கார் வாடகைக்கு விடுறவர், சாயங்காலம் ஸ்நாக்ஸ்க்கு யூனிட்டில் பானிபூரி வாங்கிட்டு வர்றவர்னு எல்லோரையும் பாராட்டித் தள்ள வேண்டியிருக்கும். 

* அந்தப் படத்தோட டைரக்டர், இதுக்கு முன்னாடி எதிரணி நடிகர் படத்தை எடுத்திருப்பார். அப்போ இதே வாயால 'என்னய்யா படம் எடுத்திருக்காப்ள...'னு கழுவி ஊத்தியிருந்தாலும் அதையெல்லாம் பட்டும்படாமலும் துடைச்சு விட்டுட்டு 'வேற வேற மாதிரி' பேச ஆரம்பிக்கணும். 

* அபிமான நடிகரோ, அரசியல்வாதியோ ஒரு பேட்டியில் சொன்னது தப்புதான்னு நமக்கு நல்லாவே தெரிஞ்சாலும், விட்டுக் கொடுக்காம 'ம்ம்... ம்ம்... போ போ... கூட்டம் போடாத..'னு மல்லுக்கட்டுறவங்களைக் கலைச்சு விட்டுட்டு 'அப்பாடா... போய்ட்டாய்ங்க'னு மூச்சு விடணும்.

* அந்த நடிகர் படத்தில் வரும் பாட்டு ஏற்கெனவே வந்த பாட்டுகளோட மிக்ஸிங்னு ஆதாரத்தோட ஊரே சேர்ந்து காறித்துப்பும். நமக்கும் கொஞ்சம் சங்கடமா இருந்தாலும் வெட்கமே படாம 'அது வேற... இது வேற...'னு பாட்டுக்கே பக்கம் பக்கமா எழுதித் தனியாளா வெற்றிவிழா நடத்தணும்.

* பாட்டு ஃபுல்லா நடந்துக்கிட்டே திரியறவரை 'டான்ஸ்ல பிரிச்சிட்டார்ல'னு வாய் கூசாம வாழ்த்தணும். வாயைத் திறக்காமலேயே டயலாக் பேசுறவரை மாஸ் பெர்ஃபார்மன்ஸ்னு ஏத்திவிட்டு எங்கிட்டாவது கோத்துவிடணும். (இவை யாரையும் குறிப்பிடுவன் அல்ல).

ரசிகர்கள்

* அடுத்த படத்தில் ஹீரோ எந்த லுக், ஹேர்ஸ்டைல்ல வர்றாரோ அதே மாதிரி நம்மளையும் மாத்திக்கிட்டு ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கப் போகணும். கழுத... அது நல்ல வேஷமா இருந்தாலும் பரவாயில்லை; பொறுத்துக்கலாம். அந்த நடிகர் பாலா படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்தார்னா ரசிகன் நிலைமை என்னாகும் பாருங்க..!

* விசுவாசமான தொண்டனா இருந்தா அந்தத் தலைவர் பண்ணின ஊழல்களையெல்லாம் எதிர்க்கவும் முடியாம கர்ச்சீப்பை வெச்சு வாயைப் பொத்திக்கிட்டு கம்முனு உட்கார்ந்திருக்கணும். மொத்தமா திரண்டு வர்ற எதிர்க்கட்சி குரூப்புகள்கிட்ட தம் கட்டி சண்டை போட்டு சட்டையைக் கிழிச்சுக்கவும் தயாரா இருக்கணும். 

* அதே தலைவர் ஒவ்வொரு தேர்தல்லேயும் எந்தக் கூட்டணிக்குப் போறாரோ, அந்தக் கட்சித் தலைவர்களுக்காகவும் உங்க கொள்கை கோட்பாட்டையெல்லாம் உதிர்த்து விட்டுட்டு வாதாடணும். 'இதெல்லாம் ஒரு பொழைப்பா...'னு கேட்கிறவங்களைக் கண்டுக்காம நம்ம கடமையை ஆத்தணும். 

* இதையெல்லாம் விடுங்க. இந்த ஹீரோயின்களோட ரசிகர்களா இருக்கிறது கொடுமையிலும் கொடுமை. எல்லா போட்டோவிலேயும் சிரிச்சிக்கிட்டே இருக்கிற ஹீரோயினைக் கலாய்ச்சு ஸ்டிக்கர் மீம்லாம் போட்டு அதுக்கு நம்மளை டேக் பண்ணுவாய்ங்க. நாம ரசிகரா இருக்கிற கதாநாயகிக்குக் கல்யாணப் பேச்சு எடுத்தாங்கனா அந்த நியூஸை நமக்கே ஃபார்வர்டு பண்ணிக் கண்கலங்க வைப்பாய்ங்க. ஒண்ணு ரெண்டுனா பரவால்ல... பதினாறு பேரும் அதையே அனுப்புறதெல்லாம் ரொம்ப ஓவர்யா!

-  விக்கி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க