வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (07/03/2017)

கடைசி தொடர்பு:12:06 (07/03/2017)

கிளட்ச் இல்லாத டியாகோ வேண்டுமா? #TataTiago

டியாகோ

மாருதியின் செலெரியோ மற்றும் ஹூண்டாயின் i10 கார்களுக்குப் போட்டியாக, IMPACT டிஸைன் கோட்பாடுகளின்படி தயாரிக்கப்பட்ட டியாகோ ஹேட்ச்பேக்கைக் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது டாடா. இது டாடா எதிர்பார்த்த வெற்றியை அளித்துவிட்டது (13 விருதுகள் மற்றும் மாதத்துக்கு 4,000 கார்கள் விற்பனை) என்றாலும், செலெரியோவில் இருந்த AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் இதில் இல்லாதது, ஒரு குறையாகவே இருந்துவந்தது. இதனைத் தொடர்ந்து, டியாகோவில் AMT கியர்பாக்ஸைச் சேர்த்து, கடந்த ஆண்டிலேயே டெஸ்ட்டிங் பணிகளைத் துவக்கிவிட்டது டாடா. தற்போது 5.39 லட்சத்துக்கு (டெல்லி எக்ஸ் ஷோரும் விலை) இதனைக் களமிறக்கிவிட்டது டாடா. XZA எனும் ஒரே டாப் வேரியன்ட்டில் வெளிவந்திருக்கும் டியாகோவின் AMT மாடல், 85bhp பவர் - 11.4kgm டார்க் - 23.84கிமீ மைலேஜை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது. டீசலில் AMT மாடல் இல்லாதது, சிலருக்கு ஏமாற்றமாக இருக்கலாம்;

டியாகோ

டியாகோவின் பெட்ரோல் AMT மாடல், பெட்ரோல் Manual மாடலைவிட சுமார் 40 ஆயிரம் மட்டுமே விலை அதிகமாக இருப்பது பெரிய ப்ளஸ்! அந்த காரின் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினில் இருந்த City மற்றும் Sport டிரைவிங் மோடுகள், இந்த AMT கியர்பாக்ஸிலும் இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. இந்த வசதி செலெரியோவில் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். இதனுடன் Creep வசதி மற்றும் Automatic, Manual, Reverse, Neutral ஆகிய கியர் மோடுகளும் இந்த AMT கியர்பாக்ஸில் உள்ளன. எனவே நீங்கள் சிக்னலில் நிற்கும்போது, கியர்பாக்ஸில் டிரைவ் மோடைச் செலக்ட் செய்துவிட்டால், ஆக்ஸிலரேட்டரை அழுத்தாமலே கார் தானாக முன்னே நகரத் துவங்கும். இந்நேரத்தில் பிரேக்கின்மீது கால்களை வைத்திருக்காமல் இருப்பது அவசியம். மேலும் மலைச் சாலைகளில் பார்க் செய்யப்பட்டிருக்கும் காரை எடுக்கப் போகிறீர்கள் என்றால், கார் ஸ்டார்ட் ஆனவுடன் பின்னோக்கிச் செல்லாது. இந்த வசதி, நம்மூரின் நெரிசல்மிக்க சாலைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பலாம்.

டியாகோ

ரெனோ நிறுவனம், க்விட்டில் AMT ஆப்ஷனை அறிமுகப்படுத்திய போது, அதனை டாப் வேரியன்டடான RXZ-ல்தான் முதலில் அறிமுகப்படுத்தியது. பின்பு வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு இணங்க, மிட் வேரியன்ட்டான RXL-ல் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. எனவே வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப, டாடாவும் இதுபோன்றதொரு முடிவை இனி வரும் நாட்களில் எடுக்கும் என எதிர்பார்க்கலாம். டியாகோவின் AMT மாடலுடன் ஒப்பிடும்போது, செலெரியோவின் AMT மாடல் சுமார் 15 ஆயிரம் ரூபாய் குறைவாக இருப்பது, மாருதிக்குச் சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இக்னிஸ், கிராண்ட் i10, ஹோண்டா பிரியோ, நிஸான் மைக்ரா ஆகிய பெட்ரோல் கார்களிலும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இருக்கின்றன என்றாலும், அவை டியாகோவை விட விலை அதிகமானதாக இருக்கின்றன. டியாகோ ஹேட்ச்பேக்கை அடிப்படையாகக் கொண்டு, டிகொர் எனும் காம்பேக்ட் செடானை விரைவில் களமிறக்க உள்ளது டாடா. இது Notchback கார்களைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளதால், B-பில்லர் வரை பார்ப்பதற்கு டியாகோ போலவே இருந்தாலும், அதன் பிறகு விலை அதிகமான கூபே கார்களில் காணப்படும் ரூஃப்லைனைக் கொண்டிருக்கிறது டிகொர். காம்பேக்ட் செடான்களிலே, அதிக பூட் ஸ்பேஸைக் (420 லிட்டர்) கொண்டிருக்கும் காராக, டிகொர் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்! 

 - ராகுல் சிவகுரு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்