Published:Updated:

"கொலை..கொடுமை..கொட்டும் மலம்!" - 'சாதி தேசத்தின் சாம்பல் பறவை' புத்தக விமர்சனம் #BookReview

"கொலை..கொடுமை..கொட்டும் மலம்!" -  'சாதி தேசத்தின் சாம்பல் பறவை' புத்தக விமர்சனம் #BookReview
"கொலை..கொடுமை..கொட்டும் மலம்!" - 'சாதி தேசத்தின் சாம்பல் பறவை' புத்தக விமர்சனம் #BookReview

"கொலை..கொடுமை..கொட்டும் மலம்!" - 'சாதி தேசத்தின் சாம்பல் பறவை' புத்தக விமர்சனம் #BookReview

”இப்பலாம் யாருங்க சாதி பாக்குறாங்க!” என்று ஆண்டாண்டு காலமாய் கூறப்பட்டுவரும் சமாதானத்துக்கெல்லாம் சாட்டையடியாய் அமைந்துள்ளது, எவிடன்ஸ் அமைப்பின் கதிர் எழுதிய 'சாதி தேசத்தின் சாம்பல் பறவை' புத்தகம். இங்கே அநீதிகள் இழைக்கப்படுவதில்லை என்கிறோம். நீதிமன்றங்களில் இன்றும் தராசு ஏந்திய பெண்ணின் உருவம் இருக்கிறது. ஆனால், சொல்லின்படிதான் செயலும் இருக்கிறதா? சமத்துவமும் சமநீதியும் கிடைக்கிறதா?  பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று அண்மையில் வெளியிட்ட புள்ளிவிபரத் தகவலின்படி, கடந்த வருடத்தில் மட்டும் குஜராத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை 900 சதவிகிதம்வரை அதிகரித்துள்ளது என்கிறது. உண்மையில், இந்திய அளவில் கணக்கீடு செய்தாலும் கிட்டத்தட்ட இதே மாதிரியான புள்ளிவிபரம் கிடைக்கும். அதற்குச் சாட்சியம்... ஏப்ரல் தொடங்கி, ஜிஷா, நந்தினி எனத் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட பெண்களின் மீது நிகழ்ந்த பாலியல் தாக்குதல்கள். அவை நீதிமன்றப் படியேறி எந்தவித தீர்வும் கிடைக்காமல் நிலுவையிலேயே இருப்பதுதான் இதில் இருக்கும் பெருஞ்சோகம். ஆனால் ஜிஷா, நந்தினி போன்றவர்களுக்காக எழுந்த குரல்கள்கூட, விருத்தாசலத்தைச் சேர்ந்த சிறுமி தனலட்சுமிக்கு எழவில்லை. கேரளாவில் வீட்டு வேலைக்குச் சென்ற இடத்தில், வீட்டு எஜமானர்களால் கொடுமை செய்யப்பட்டு இறந்துபோனார் அந்தச் சிறுமி.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிவாசி சமூகத்தினரான ராணி, தனிப்பட்ட காரணங்களுக்காக புதுக்கோட்டை மாவட்ட காவலர்களால் கடத்தப்பட்டது; பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த நாகம்மாள் சில ஆதிக்க கும்பலால் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டது என நாமே எதிர்பார்க்காத வகையில் பட்டியல் நீளுகிறது. பெண்கள் மட்டும்தான் தாக்கப்படுகிறார்களா என்றால், இல்லை... ஆண்களும் பலிகடா ஆக்கப்படுகிறார்கள். பிரபல அரசியல்புள்ளியின் சகோதரரால் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படும் பெரியகுளத்தைச் சேர்ந்த பூசாரி நாகமுத்து, தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக தற்போது வழக்கு முடித்து வைக்கப்பட்டிருக்கும் இளவரசன், வெட்டிக் கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ், நட்சத்திரமாக வேண்டும் என்கிற ஏக்கத்துடன் தூக்கிட்டுக்கொண்ட ரோஹித் வெமூலா, உடுமலைப்பேட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கர்... இப்படிப் பக்கம் பக்கமாக ஆவணங்களைக் காட்டி, ’சாதிகள் இல்லையடி பாப்பா’ என்கிறாய். ஆனால், 'இதற்கான பதிலை முதலில் கூறு' என்கிறது, 'விகடன்' பிரசுரம் வெளியிட்டுள்ள எவிடன்ஸ் கதிரின் இந்தப் புத்தகம்.

தாக்குதல்கள் மட்டுமல்ல, கோயில்களில் நுழையத் தடை, அவர்கள் குறிப்பிட்ட சமூகம் என்பதாலேயே மலம் அள்ள அவர்களை நிர்பந்திப்பது என்று சிறு சமூகங்களின் மீது பெரும் சமூகங்கள் நடத்தும் தாக்குதல்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. புத்தகத்தில் ஓர் இடத்தில் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது, ”மலத்தொட்டியில் இறங்கும் ஒரு தொழிலாளி, கண்களை மூடிக்கொண்டு 2 நிமிடம் உள்ளே முங்குவார். அது, ஒரு நரக வேதனை. காதுகளிலும் மூக்கிலும் புழுக்கள் உள்ளே செல்ல நேரிடும். கடுமையான துர்நாற்றம். ஊசி, பிளேடு போன்ற ஆபத்தான கருவிகள், நாப்கின், மலம் போன்ற அருவருப்பான பொருள்கள் போன்றவற்றில் முங்கிஎழும் தொழிலாளி மிகக் கொடூரமான அனுபவத்துடன் மேலே வருவார். இறங்கும்போது, கண்டிப்பாக அந்தத் தொழிலாளி மது குடித்துவிட்டுத்தான் இறங்குவார். ஒரு தொழில், ஒரு சமூகத்தை... ஒரு குடும்பத்தைக் குடிக்கு அடிமையாக்கி இருப்பது இந்தியாவைத் தவிர, வேறு எங்கும் நடக்காத கொடுமை.”

உண்மையை உரக்கச் சொல்லவில்லை, உறைக்கும்படி சொல்லியிருக்கிறது புத்தகம். சாம்பல் பறவை, இறந்துபோனது என்று நாம் நினைத்தாலும் எரிந்த சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்பெற்று எழுவது. அப்படித்தான், இங்கே சாதியும்... என்று சமகால ஆவணங்களின் மூலம் சொல்லியிருக்கிறார் கதிர்.

- ஐஷ்வர்யா 

அடுத்த கட்டுரைக்கு