பெண்ணுக்குப் பாதுகாப்பு அவளேதான்... 'அவளதிகாரம்' குறும்படம் சொல்லும் செய்தி! | The only defence for women is herself - A message from short film 'Avalathigaram'

வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (09/03/2017)

கடைசி தொடர்பு:19:02 (11/03/2017)

பெண்ணுக்குப் பாதுகாப்பு அவளேதான்... 'அவளதிகாரம்' குறும்படம் சொல்லும் செய்தி!

குறும்படம்

நம் தெருக்கள் இன்னும் பெண்களுக்குப் பாதுகாப்பானவையாக  இல்லை. இந்தச் சூழலில், ஒரு பெண் தன்னை நோக்கி வரும் கேலிகளையும் சீண்டல்களையும் எவ்வாறு தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை, தன் 'அவளதிகாரம்' குறும்படம் வழியாக பேசியுள்ளார் இயக்குநர் அருண் நரேன். இந்த மகளிர் தினத்தில் அதை வெளியிட்டிருப்பவருடன் பேசினோம்.

''என்னோட சொந்த ஊர் திருநெல்வேலி. ஆனா கோயம்புத்தூர்ல செட்டில் ஆகிட்டோம். பி.இ படிச்சிருக்கேன். காலேஜ் நாட்களில் கல்சுரல்ஸ்ல மிம்க்ரி பண்ணுவேன். நானும் என் ஃப்ரெண்ட்ஸும் சேர்ந்து குறும்படம் எடுக்கலாம்னு ஒரு டீமை உருவாக்கினோம். இப்படித்தான் என்னோட குறும்பட பயணம் ஆரம்பிச்சது.

2011ல் இருந்து குறும்படங்கள் எடுக்குறேன். இதுவரை 20க்கும் மேற்பட்ட குறும்படங்கள் எடுத்துருக்கேன். ஆனா, அதுல ஐந்து படத்தை மட்டும்தான் ரிலீஸ் பண்ணிருக்கேன். ஏன்னா, 'இந்தப் படத்துல இத சரி பண்ணனும், அது சரியில்ல'னு நானே ஒதுக்கி வெச்சிருவேன். ஒரு தரமான படத்தைதான் மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்கணும் என்பது என் உறுதி. அப்படி நான் திருப்தியா எடுத்த படம், 'அவளதிகாரம்'.

அருண்

சமூகத்துல நிறைய பிரச்னைகள் பெண்களுக்குதான் இழைக்கப்படுது. குறிப்பாக, இன்றைய சூழல்ல அவங்களோட பாதுகாப்பு ரொம்பவே கேள்விக்குறியா இருக்கு. யாரையும் எதிர்பார்க்காம பொண்ணுங்க தங்களைத் தாங்களே பாதுகாத்துக்க முடியும்னு நினைக்கணும், நம்பணும், பாதுகாத்துக்கணும். அதை மீண்டும் மீண்டும் அவங்களைச் சென்றடையுற மாதிரி அறிவுறுத்திட்டே இருந்தாதான் அந்த மாற்றம் சாத்தியமாகும். அப்படி ஒரு முயற்சிதான், 'அவளதிகாரம்'. ஒரு பதின் வயதுப் பள்ளிச் சிறுமி ஆண்களால பாலியல் தொல்லைக்கு ஆளாக, அதுக்கு அந்தப் பொண்ணோட அக்கா எப்படி தைரியமா முற்றுப்புள்ளி வைக்கிறா என்பதுதான் கதை நிகழ்வு. 2015ல் இந்தப் படத்தை எடுத்தேன். இப்போதான் வெளியிட்டிருக்கேன். 'பாஸ்டா பிலிம் அவார்டு'ல சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகர்னு மூணு பிரிவுகளில் இந்தப் படத்துக்கு விருது கிடைச்சிருக்கு.

இப்போ வெற்றிமாறன் சார் இயக்கிட்டு இருக்கிற 'வடசென்னை' படத்துல உதவி இயக்குநரா வேலை பார்த்துட்டு இருக்கேன். நல்ல இயக்குநர் என்ற பேர் வாங்குறதோட கூடவே, மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்ற இயக்குநர் என்ற பேரும் வாங்கணும்!"

- வெ. வித்யா காயத்ரி(மாணவப் பத்திரிகையாளர்)


டிரெண்டிங் @ விகடன்