57.71 லட்சத்துக்கு 2017 மெர்சிடீஸ் பென்ஸ் E-க்ளாஸ்: என்ன ஸ்பெஷல்? #NewEClass

 

மெர்சிடீஸ் பென்ஸ்

V213 என்ற புனைப்பெயரைக் கொண்ட புதிய E-க்ளாஸ் காரைக் களமிறங்கியுள்ளது மெர்சிடீஸ் பென்ஸ். இந்தக் காரின் முக்கிய போட்டியாளர்களான XF - S90 ஆகிய கார்களின் அடுத்த தலைமுறை மாடல் ஏற்கெனவே அறிமுகமாகிவிட்டதுடன், 5 சீரிஸ் காரின் முற்றிலும் புதிய மாடலும் விரைவில் வர உள்ளது அறிந்ததே. E200 பெட்ரோல் - 57.71 லட்சம் மற்றும் E350d டீசல் - 71.40 லட்சம் (விலைகள் அனைத்தும் சென்னை எக்ஸ் ஷோரும்) என இரு வேரியன்ட்டில் வெளியாகியிருக்கிறது E-க்ளாஸ். சீனாவுக்கு அடுத்தபடியாக, E-க்ளாஸ் காரின் Long WheelBase மாடல் விற்பனை செய்யப்படுவது இந்தியாவில் மட்டும்தான்! சீனாவில் LHD என்றால், இந்தியாவில் RHD செட்-அப் இருக்கிறது.

 

மெர்சிடீஸ் பென்ஸ்

காரைப் பார்க்கும்போது அதிக இடவசதியை எதிர்பார்க்கலாம் என்பதுடன், டிரைவர் வைத்து ஓட்டுபவர்களுக்கு ஏற்ற சாய்ஸாக இது மாறியுள்ளதும் தெரிகிறது. 2017 E-க்ளாஸ் கார் பார்ப்பதற்கு, S-க்ளாஸ் காரை நினைவுபடுத்துவது பெரிய ப்ளஸ். இதன் கேபினும் அப்படியே அமைந்திருக்கிறது; சீனாவில் இருக்கும் E-க்ளாஸ் காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருந்த நிலையில், இந்திய E-க்ளாஸ் காரில் அனலாக் டயல்கள் - TFT டிஸ்பிளே உடனான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்தான் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கக் கதவு மற்றும் விண்ட்ஷீல்ட்டில் Blind, பனரொமிக் சன்ரூஃப் இருந்தாலும், பின்பக்க இருக்கைக்கான கப் ஹோல்டர் - மசாஜ் வசதி - இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டத்துக்கான கன்ட்ரோல் ஆகியவை இல்லாதது நெருடல்! 

 

மெர்சிடீஸ் பென்ஸ்

E200-ல் இருப்பது, 184bhp பவர் - 30kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின். இதுவே E350 என்றால், 258bhp பவர் - 62kgm டார்க்கை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர், 6 சிலிண்டர் டீசல் இன்ஜின். இந்த இரு இன்ஜின்களும், ரியர் வீல் டிரைவ் செட்-அப் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பைக் கொண்டுள்ளன. இந்த காரின் பாதுகாப்புக்காக ABS, EBD, TVS, ESP, PRE-SAFE, AIRMATIC சஸ்பென்ஷன், 360 டிகிரி கேமரா - Parking Pilot சிஸ்டம், டிராக்‌ஷன் கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா - சென்ஸார், 7 காற்றுப்பைகள், Attention Assist ஆகியவை இடம்பெற்றுள்ளன. E-க்ளாஸ் காரின் அடுத்த தலைமுறை மாடல், லக்ஸூரி செடான் செக்மென்ட்டின் தலைவராக மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகம்! 


மெர்சிடீஸ் பென்ஸ் E-க்ளாஸ் - சில குறிப்புகள்!

பிரதான போட்டியாளர்கள்: ஆடி A6, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஜாகுவார் XF, வால்வோ S90 

இரண்டு வேரியன்ட்கள்:  E200 (பெட்ரோல்) மற்றும் E350d (டீசல்)

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம், இந்தியாவில் விற்பனை செய்துள்ள கார்களில், 34% E-க்ளாஸ் கார்தான்!

தமிழ்நாட்டில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான E-க்ளாஸ் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.

E-க்ளாஸ் அறிமுகமாகி, ஒரு வாரமே ஆகியிருந்தாலும், இந்தியா முழுவதிலும் இருந்து 500-க்கும் அதிகமான புக்கிங்குகளைப் பெற்றிருக்கிறது.

வெறும் 48 மாதங்கள்: E-க்ளாஸ் காரைத் தயாரிப்பு நிலைக்குக் கொண்டு வருவதற்குத் தேவைப்பட்ட நேரம்.

உலக கார் சந்தையில், 20 ஆண்டுகளாக இருந்துவரும் E-க்ளாஸ், தற்போது 10வது தலைமுறை மாடல் வெளிவந்திருக்கிறது.

இந்தியாவில் 5 தலைமுறை E-க்ளாஸ் கார்களை விற்பனை செய்துள்ளது பென்ஸ்.

உலகளவில் 1.30 கோடி E-க்ளாஸ்  கார்கள் விற்பனையாகியுள்ளன; இதில் இந்தியாவில் பங்கு 34 ஆயிரம் கார்கள்!

இந்த காரின் 65% பாகங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை; மேலும் Made In India, For India என்ற கோட்பாடுக்கு ஏற்ப புனேவில் இது உற்பத்தியாகிறது.

RHD செட்-அப்பில், LWB உடன் இந்தியாவுக்கு எனப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட முதல் பென்ஸ் கார் E-க்ளாஸ் தான்!

பழைய காருடன் ஒப்பிடும்போது, 204மிமீ கூடுதல் வீல்பேஸ் மற்றும் 184மிமீ கூடுதல் நீளத்தைப் பெற்றிருக்கிறது புதிய E-க்ளாஸ்.

உலகத்திலே முதன்முறையாக, ஸ்டீயரிங் வீலில் Touch Sensitive Touch Control பயன்படுத்தப்பட்டிருப்பது E-க்ளாஸ் காரில்தான்!

மேலும் E-க்ளாஸ் காரின் வரலாற்றிலே, 37 டிகிரி சாய்மானம் மற்றும் மெமரியுடன் கூடிய பின்பக்க இருக்கை, Air Body Control, 12.3 இன்ச் டச் ஸ்கிரீன், Park Pilot வசதி, 64 கலர்களுடன் கூடிய Ambient Lighting, 13 ஸ்பீக்கர் உடனான Burmester சவுண்ட் சிஸ்டம், 9G-Tronic ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை முதன்முறையாக, இந்த 10வது தலைமுறை E-க்ளாஸ் காரில் இடம்பெற்றுள்ளன!

லக்ஸூரி கார்களிலே இதுவரை இல்லாத அம்சமாக, அசத்தலான சர்வீஸ் பேக்கேஜ்களைக் கொண்டிருக்கிறது புதிய E-க்ளாஸ். அதாவது, இரண்டு வருடங்களுக்கு 64,700 ரூபாய் - பெட்ரோல் E-க்ளாஸ்; இரண்டு வருடங்களுக்கு 94,400 ரூபாய் - டீசல் E-க்ளாஸ்.

 - ராகுல் சிவகுரு.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!