உலகம் முழுக்கவே காடுகளை காவு கேட்கும் வறட்சி..! அதிர்ச்சி ஆய்வு

காடு

இயற்கை வளமே! நாட்டின் நிலையான வளம்!. ஒரு நாட்டின் அனைத்து வித வளர்ச்சிக்கும் இயற்கையின் பங்களிப்பு என்பது அளப்பரியது. ஆனால் இன்று தொடர்ந்து நிகழ்ந்து வரும் பருவ நிலை மாற்றங்களால் இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன. இதே நிலைமை நீடித்தால் என்ன நடக்கும் என்பதை யூகித்து கூடப் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் நாம் பெரிதும் ரசிக்கும் காடுகள் வறட்சியினால் பாதித்து வருகிறது என்ற திடுக்கிடும் தகவலை ஸ்டெர்லிங் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். உலகம் முழுதும் இயற்கையின் அரணாக உள்ள காடுகள் கடும் வறட்சியினால் மரணிக்கும் தருவாயில் உள்ளதாம்.

ஈகாலஜி லெட்டர்ஸ் (Ecology Letters) என்னும் ஆய்வு இதழில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வறட்சியின் காரணமாக உலகெங்கும் உள்ள காடுகள் பேராபத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவானது உலகம் முழுதும் ஒரே மாதிரியான  தகவல்களை தருகிறது. அதாவது காடுகளில் மரங்கள் அழிந்து வருவதன் முக்கிய காரணம் கடும் வறட்சி தான் என்பதை தெள்ளத்தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.  

முனைவர் சாரா கிரீன்வுட், ஆராய்ச்சியாளர் கூறுகையில் ”உலகில் வறட்சியினால் மரங்கள் அழிவது பல்வேறு சூழ்நிலைகளிலும் ஒரே சீராக தான் இருக்கிறது. ஐரோப்பாவில் உள்ள வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல காடுகளில் உள்ள மரங்கள் வெப்பநிலை உயர்வதால் ஏற்படும் கடும் வறட்சியாலும்,  மழை இல்லாததன் விளைவினாலும் தான் அழிந்து வருகின்றன. 

உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிஞர்கள் சில குறிப்பிட்ட மரங்கள் இந்த வறட்சியை தாங்கி வளர்கிறது என்பதையும் கண்டறிந்து சொல்கிறார்கள். அடர்த்தியான தண்டு மற்றும் சிறிய தடிமனான இலைகளைக் கொண்ட மரங்கள் இந்த வறட்சியை தாங்கி வளர்வதாக இவர்கள் நடத்திய  தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியர் அலாஸ்டெய்ர் ஜம்ப் கூறுகையில், 'மரங்களில் வறட்சி பாதிப்பைக் காட்டும் குறிப்பிட்ட பண்புகளை நாம் கண்டறிவதன் மூலம் உலகளாவில் மரங்கள் இறப்பை கண்காணிக்க ஏதுவாக இருக்கும். அதுமட்டுமன்றி மழை இல்லாமையையும், வறட்சியையும் காடுகள் எப்படி எதிர்கொள்கின்றன என்பது குறித்த தெளிவு பிறக்கும்' என்றும் கூறி உள்ளார்.

இந்த பூமியை மனிதர்கள் அவர்கள் வாழ்வதற்கான இடமாக மட்டுமே பார்ப்பது ஆபத்தானது. அது இறுதியில் மனிதர்களுகே பயன்படாமல் போய்விடலாம். பல கோடி ஆண்டுகள் எந்த சூழலியல் சிக்கலும் இல்லாமல் இருந்துவந்த பூமி, சில நூற்றாண்டுகளிலே இந்த நிலைக்கு வந்துவிட்டது. அபப்டி என்றால், இது ஆபத்தின் எல்லையைத் தொட இன்னும் பல நூற்றாண்டுகள் தேவைப்படாது என்பதுதான் யதார்த்தம். வறட்சியினால் காடுகள் மட்டும் அல்ல. விலங்குகளும் பிரச்னைகளை எதிர்கொண்டு வருவது உலகம் முழுவதும் நடந்து வருகிறது. 

பூமியின் வெப்ப நிலை உயர உயர அதிக அளவில் நாம் காடுகளில் உள்ள மரங்களை இழக்க நேரிடும் என்பது மறுக்கப்படாத உண்மையே. இனியாவது மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து காடுகளை பாதுகாக்கும் பணியில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஏனெனில் காடுகளை அழித்ததும் மனிதர்கள் நாம்தான்

-மு. முருகன் 
(மாணவப் பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!