திருவண்ணாமலையில் மடம் கட்டவும், மரங்களை வெட்டவும் தடை..! பின்வாங்கிய அறநிலையத்துறை | Ban on cutting down trees for building Math in Tiruvannamalai

வெளியிடப்பட்ட நேரம்: 16:27 (10/03/2017)

கடைசி தொடர்பு:17:53 (10/03/2017)

திருவண்ணாமலையில் மடம் கட்டவும், மரங்களை வெட்டவும் தடை..! பின்வாங்கிய அறநிலையத்துறை

திருவண்ணாமலை கோயில்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்குப் போதிய இடவசதியில்லாமல் வருடந்தோறும் அவதிப்படுகின்றனர். இந்தக் குறையைப் போக்குவதற்காக, யாத்ரி நிவாஸ் எனும் பெயரில் பக்தர்கள் தங்கும் மடத்தை அமைப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. இதற்காக கிரிவலப்பாதையை ஒட்டி உள்ள ஆணைப்பிறந்தான் கிராமத்தை ஒட்டியுள்ள சோனாநதி எனும் காட்டுப்பகுதியிலுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டடம் கட்டுவதற்கு அனுமதியும் வழங்கியது இந்து சமய அறநிலையத்துறை. அந்த உத்தரவில், மடம் அமைத்துக் கொள்ளவும், பார்க்கிங் வசதி அமைப்பதற்கு இடையூறாக இருக்கும் 545 மரங்களை வெட்டப் போவதாகவும் ஆணை வெளியிட்டது. அதன்படி அறநிலையத்துறை சார்பில் பூமி பூஜைகளும் போடப்பட்டது. இந்த உத்தரவு திருவண்ணாமலை மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் மரம் வெட்ட எதிர்ப்புத் தெரிவித்துக் கோவில் நிர்வாகத்துக்கு எதிராக வாகனப் பேரணி, கையெழுத்து இயக்கம் எனத் தங்களது அறப்போராட்டத்தைத் தொடங்கினர். இந்த அறவழிப் போராட்டத்தைக் கண்ட கோவில் இணை ஆணையர் ஹரிப்ரியா வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். 

கிரிவலப்பாதை ஆரம்பம்

இதுகுறித்து மலைச் சுற்றும் பாதை சூழல் பாதுகாப்புக் குழுவினைச் சேர்ந்த எழுத்தாளர் கருணா பேசும்போது, "அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு யாத்ரி நிவாஸ் கட்டுவது தேவைதான். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், கோயிலில் இருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கும் காட்டுப்பகுதியில் சென்று கட்ட வேண்டிய அவசியமில்லை. திருவண்ணாமலை நகரிலும் பிற பகுதியிலும் கோவிலுக்குச் சொந்தமான பல இடங்கள் உள்ளது. அந்த இடங்களில் 10-க்கும் மேற்பட்ட யாத்திரி நிவாஸ் மடம் கட்டலாம். 545 மரங்களில் 80% சதவீத மரங்கள் பழமையான அரியவகை மரங்கள். இதை அழித்தால் கிரிவலம் வரும் பக்தர்கள் சுத்தமான மூலிகைக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் போய்விடும். அதேபோல விலங்குகள் வராமல் இயற்கைச் சூழலை முற்றிலும் சீர்குலைத்துவிடும். இப்போது இருக்கும் சூழலில் திருவண்ணாமலை மலைப் பகுதி முழுவதும் மழை இல்லாமல் வறண்டுபோய்க் காட்சியளிக்கிறது. இதனால் மரங்களை வெட்டத் தடைவிதித்து, கோவில் ஆணையர் உத்தரவிட்டதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இந்த உத்தரவில் எங்கள் போராட்டக் குழுக்கு நம்பிக்கை இல்லை. மரம் வெட்டத் தடைவிதித்தால் மட்டும் போதாது. அந்த இடத்தை மாற்றி நகருக்குள் அல்லது கோவில் அருகில் வனங்களை அழிக்காத பகுதிக்கு மாற்ற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத் துறையும் செய்ய வேண்டும்" என்றார். 

வெட்டப்பட்ட மரங்கள்

இதற்கு முன்னர் இதேபோல கிரிவலப்பாதை விரிவாக்கம் என்ற பெயரில் கிரிவலப்பாதையில் ஓரமாக இருந்த 135 மரங்கள் வெட்ட முடிவு செய்யப்பட்டன. அதில் சில மரங்களை வெட்டி சாய்க்கவும் செய்தனர். ஆனால் அப்போதைய மக்கள் மற்றும் பக்தர்களால் மனிதச்சங்கிலி மற்றும் சாலைமறியல் என அப்போதைய போராட்டத்தாலும், தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பாலும் மரங்கள் வெட்டுவது நிறுத்தப்பட்டது. இந்த அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மரங்கள் என்றால் வெறும் விறகுகள்தான் என்பதுபோல வெட்டித் தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்... இதற்குக் கிடைக்குமா நிரந்தரத்தடை?

- கா.முரளி. 
 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close