Published:Updated:

'கக்கனுக்கு பிறகு நான் தான் அங்க போயிருப்பேன் போல...!' திராவிட கட்சிகளை சீண்டிய அன்புமணி

'கக்கனுக்கு பிறகு நான் தான் அங்க போயிருப்பேன் போல...!' திராவிட கட்சிகளை சீண்டிய அன்புமணி
'கக்கனுக்கு பிறகு நான் தான் அங்க போயிருப்பேன் போல...!' திராவிட கட்சிகளை சீண்டிய அன்புமணி

ர்மபுரி மாவட்டம் கடத்தூரில் 20 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை பா.ம.க  சார்பாக தூர்வாரி கொடுத்துள்ளார் அன்புமணி. அதற்காக,  கடத்தூர் வணிகர் சங்கம் சார்பாக அவருக்கு நேற்று பாராட்டுவிழா நடத்தப்பட்டது. காலையில் தர்மபுரி மக்களுக்கு குடி தண்ணீர் வேண்டும் என்று ஆர்பாட்டம் நடத்தி முடித்துவிட்டு,  இரவு பாராட்டுவிழாவில் கலந்துகொண்டார்.

பாராட்டுவிழாவில் மைக் பிடித்த அன்புமணி, “ மன்னர் ஆட்சிக்காலத்தில் 42ஆயிரம் ஏரிகள் இருந்தன. இப்போதைய மக்களாட்சியில் 37 ஆயிரம் ஏரிகள்தான் இருக்கின்றன. 5ஆயிரம் ஏரிகள் மக்களாட்சியில் காணமல் போய்விட்டது. முன்பெல்லாம் கிராமத்தில் ஊர்மராமத்து என்று இருந்தது. கிராம மக்கள் எல்லாம் ஒன்று கூடி நீர்நிலைகளை தூர் வாருவார்கள். பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு அந்த நடைமுறை வழக்கொழிந்து போய்விட்டது. அரசாங்கம் நீர்நிலைகளை கண்டுகொள்வதில்லை. கடத்தூர் மக்கள் கேட்டுக்கொண்டதால் கடத்தூர் ஏரியை பா.ம.க சார்பாக தூர்வாரி கொடுத்துள்ளோம். இத்தோடு பணிகள் முடியவில்லை. ஏரியில் தண்ணீர் நிரம்பவேண்டும். வரத்துக்கால்வாய்கள், வடிகால்கள் தூர்வாரப்பட வேண்டும். அப்போதுதான்  இந்த பணியின் நோக்கம் முழுமை அடையும். மத்திய அரசு பாராட்டு, ஐ.நா சபை பாராட்டு என்று எத்தனையோ பாராட்டுகளை நான்  பார்த்திருக்கிறேன். ஆனால், கடத்தூர் மக்கள் கொடுக்கும் இந்த பாராட்டு எல்லாவற்றையும் விட மேலானது.

தண்ணீருக்கு போராட வேண்டிய நிலை தமிழகத்தில் இருக்கிறது. மூன்றாம் உலகப்போர் தண்ணீரால்தான் வரும் என்கிறார்கள்.  தண்ணீரால் நமக்கும் கர்நாடகத்திற்கும், கேரளாவுக்கும் உள்நாட்டு போர் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், நாம் நீர்நிலைகளை அழித்துக்கொண்டிருக்கிறோம். மழை நீரை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.  எல்லாம் காமராஜர் காலத்துல கட்டுன டேம்கள்தான் அதுக்கு பிறகு யார் என்ன கட்டுனாங்க.? 140 வருஷத்துல இல்லாத வறட்சி இப்போது தமிழகத்துல வந்திருக்கு.  போகப்போக இன்னும் மோசமாகிக்கொண்டேதான் இருக்கும். தர்மபுரியில் பல இடங்களில் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கிறார்கள். 'இரண்டுமாதங்களுக்கு முன்பே கலெக்டரிடம் வறட்சி வரப்போகிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள்' என்றோம். ஒண்ணுமே பண்ணல.

தர்மபுரியில மட்டுமில்ல தமிழ்நாடு முழுக்க தண்ணீரை வீணடித்துக்கொண்டுதான் இருக்கிறோம். தாமிரபரணி ஆற்றில் ஒவ்வொரு வருடமும் 13 டி.எம்.சி தண்ணீரை வீணடிக்கிறோம். அங்கு  6 ஆறுகளை இணைத்தால் போதும். முழுசா நான்கு மாவட்டங்களுக்கு குடிநீர் பிரச்னை தீரும். காவிரி ஆறு குண்டாறு திட்டம் இருக்கு. அத்திக்கடவு அவினாசி திட்டம் இருக்கு. நல்லாறு பாம்பாறு திட்டம் இருக்கு.  திட்டம் மட்டும் தான் இருக்கு  எல்லாரும் திருடி தின்னா யாரு செயல்படுத்துறது?. அட்டப்பாடியில் 6 தடுப்பணைகள் கேரளாக்காரன் கட்டுறான் நாம என்ன பண்றோம். சிறுவாணி தண்ணியும் போகப்போகுது.

தர்மபுரியில் எண்ணேகோல்புதூர் திட்டம், தொப்பையாறு திட்டம், வள்ளிமதுரை அணை திட்டம்னு  பத்து நீர்பாசன திட்டங்கள் இருக்கு. அதை நிறைவேறிட்டா போதும் தர்மபுரிக்கு காலாகலத்துக்கும் தண்ணீர் பிரச்னை வராது.  யாரும் வெளியூருக்கு போய் குப்பை பொறுக்க வேண்டியதில்லை. இங்கயே ராஜா மாதிரி வாழலாம். அதற்கு வெறும் 200கோடி ரூபாய்தான் செலவாகும். ஆனால், அரசாங்கம் செய்ய மாட்டேங்குது. என்னடா வெறும் 200 கோடி தான்னு சொல்றேன்னு பாக்காதீங்க. கடந்த ஆட்சியில் இலவசத்திற்கு மட்டும் 62ஆயிரம் கோடி ரூபாய் செலவு செஞ்சிருக்காங்க. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள்ல  வருஷம் மட்டும் 1900கோடி மது விற்பனை ஆகியிருக்கு. மக்களுக்கு தண்ணீர் கொண்டுவர 200 கோடிசெலவு செஞ்சா என்ன  தப்பு.? அரசாங்கத்து அதெல்லாம் பெரிய காசா.?

தர்மபுரியில ஜெகநாதன் கோம்பை திட்டம்னு ஒரு திட்டம் இருக்கு. 1962ல் காமராஜர் அறிவித்தார். கக்கன் வந்து அடிக்கல் நாட்டினார். அந்த திட்டம் கிடப்பிலேயே இருக்கிறது. அதற்கு வெறும் 3கோடிதான் செலாவகும் பல ஊராட்சிகள் பயன்பெறும். சில மாதங்களுக்கு முன்பு அங்கு போயிருந்தேன். 3 கிலோ மீட்டர் காட்டுக்குள் நடந்து போக வேண்டும்.  கக்கன் அடிக்கல் நாட்டின கல் அங்கு அப்படியே இருக்கிறது. அநேகமா கக்கனுக்கு பிறகு நான் ஒரு ஆள்தான் அங்க போயிருப்பேன் போல.  அரசு நீர்நிலைகளை மீட்டெடுத்டு, நீர்பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஏன்னா, தண்ணீர்தான் நம் உயிர்நாடி" என்றார்.

தமிழகத்தை அழிக்க நினைக்கிறது பி.ஜே.பி. என நெடுவாசலில் கொந்தளித்த அன்புமணி, இப்போது குடிநீர் பிரச்னையில் அலட்சியம் காட்டுவதாக திராவிட கட்சிகளை கண்டித்திருக்கிறார்.

-எம்.புண்ணியமூர்த்தி