டைட்டானிக்கை தின்னும் பாக்டீரியா... 14 ஆண்டுகளில் காணாமல் போகுமா கப்பல்? | A Bacteria eating Titanic Shipwreck... Titanic may disappear in 14 years

வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (13/03/2017)

கடைசி தொடர்பு:14:57 (13/03/2017)

டைட்டானிக்கை தின்னும் பாக்டீரியா... 14 ஆண்டுகளில் காணாமல் போகுமா கப்பல்?

இதை ஒரு கதையாக நீங்கள் கேட்டிருக்கலாம். ஒரு படமாக நிச்சயம் பார்த்திருக்கலாம். 1912-ம் ஆண்டு, ஏப்ரல் 15-ம் தேதி அதிகாலை நேரம். வட அட்லாண்டிக் கடல் பகுதியில் நீளமாக... மிக நீளமாக இருந்த அந்தக் கப்பல் மெதுவாக போய்க் கொண்டிருந்தது. அதை வானில் பறந்துக் கொண்டிருந்த கடற்பறைவைக் கூட்டம் அத்தனை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தன. திடீரென... ஒரு பறவை அதைப் பார்க்கிறது. அதிர்ச்சியோடு மற்ற பறவைகளிடம் சொல்கிறது. அந்த பெரும் கப்பல் ஒரு பனிப் பாறையை இடிப்பது போல் போகிறது. பெரும் விபரீதம் நடக்க இருப்பதை அறிந்து சில பறவைகள் பயத்தில் பறந்து போகின்றன. சில வானில் வட்டமிட்டபடியே அந்த வரலாற்று துயரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. டைட்டானிக் கப்பல் உடைகிறது. உடைந்த கப்பல் மூழ்குகிறது. அந்த சில்லிட்ட விறைக்கும் கடல் நீர் 1500க்கும் அதிகமான உயிர்களை பலி வாங்குகிறது.

டைட்டானிக் மிச்சங்கள் அட்லாண்டிக் கடல் பாக்டீரியா

உலகையே உறைய வைத்த இந்த நிகழ்வின் மிச்சங்களாக இருந்த, உடைந்த டைட்டானிக் கப்பல் கடலில் எங்கு போனது என்பது பல ஆண்டுகளாக  யாருக்கும் தெரியவில்லை. பின்பு, 1985ல் ராபர்ட் பல்லார்ட் என்ற கடல் ஆராய்ச்சியாளர் , அமெரிக்காவின் மூழ்கிய இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களைத் தேடி அலைந்த போது டைட்டானிக்கின் மிச்சங்களைக் கண்டுபிடித்தார். அது தொடர்ந்து, டைட்டானிக் சம்பந்தப்பட்ட எத்தனையோ ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வரப்பட்டன. 3.8 கி.மீ ஆழத்தில், கும்மிருட்டில் புதைந்துக் கிடக்கும் டைட்டானிக்கின் மிச்சங்கள் இன்னும் 14 ஆண்டுகளில் முற்றிலுமாக அழிந்து போய்விடும் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதற்கு காரணம்... ஒரு பேக்டீரியா. 


டைட்டானிக் மிச்சங்கள் அட்லாண்டிக் கடல் பாக்டீரியா1991ல் கனடாவைச் சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் டைட்டானிக் மிச்சங்களைப் பார்க்க கடலுக்கடியில் சென்றார்கள். அப்போது, இரும்பிலிருந்த துருக்கள் பல ஒன்று சேர்ந்து சிறு, சிறு “துரு கூம்புகளாக"  இருப்பதைக் கண்டனர். அதைப் பெயர்த்து எடுத்து வந்து சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.

அந்த "துரு கூம்புகளில்" நுண்ணுயிரிகள் இருப்பதையும், அந்த நுண்ணியிரிகள் தொடர்ந்து பெருக்கமடைவதையும் கண்டறிந்தனர். பின்பு, 2010ல் ஹென்ரிட்டா மேன் என்கிற விஞ்ஞானி அறிவியல் உலகுக்கே தெரியாத ஒரு பேக்டீரியா அதில் இருப்பதைக் கண்டறிந்தார். அதற்கு "ஹலோமோனஸ் டைட்டானிகே" ( Halomonas Titanicae) என்ற பெயரையும் சூட்டினார். 

கடலின் 3.8‘ கிமீ ஆழம் என்பது மிக அடர்த்தியாக இருக்கும். கும்மிருட்டாகவும், அதிகப்படியான அழுத்ததோடும் இருக்கும். இந்தச் சூழலில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் மிக அரிது. ஆனால், இந்தச் சூழலில் ஹலோமோனஸ் வாழ்கிறது. எக்டாய்ன் (Ectoine) என்ற ஓர் மூலக்கூறினை (Molecule) பயன்படுத்தியே இந்த பாக்டீரியா அவ்வளவு மோசமான சூழலிலும் உயிர் வாழ்கிறது.  இந்த பாக்டீரியா கொஞ்சம், கொஞ்சமாக டைட்டானிக் மிச்சங்களைத் தின்று வருகிறது. இதே நிலை தொடரும் பட்சத்தில் இன்னும் 14 ஆண்டு காலத்துக்குள், மொத்த டைட்டானிக் மிச்சங்களும் மறைந்துவிடும். 

 

டைட்டானிக் மிச்சங்கள் அட்லாண்டிக் கடல் பாக்டீரியா

டைட்டானிக் சில ஆச்சரியங்கள்...

1. டைட்டானிக் கப்பல் இரண்டாக உடைந்தது. ஆழ் கடலில் இரண்டு துண்டுகளுக்கும் இடையே 2000 அடி இடைவெளி இருக்கிறது. 

2. ஒரு நாளைக்கு 600 டன் நிலக்கரி எரிக்கப்பட்டது. 100 டன் அளவுக்கான சாம்பல் தினமும் கடலில் கொட்டப்பட்டது. 

3. முதல் வகுப்பு பயணிகளுக்காக 20,000 பாட்டில் பீர், 1500 பாட்டில் வைன் மற்றும் 8000 சுருட்டுகள் டைட்டானிக்கில் வைக்கப்பட்டிருந்தன. 

4. கப்பலில் இருந்த 9 நாய்களில் 2 நாய்கள் காப்பற்றப்பட்டன. ஒன்று பொமரேனியன் மற்றொன்று பெகினிஸ் வகையைச் சேர்ந்தது. 


பொதுவாக, இதுபோன்ற கப்பல்களின் மிச்சங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள், மிச்சங்களை அரிப்பிலிருந்து தடுப்பதே வழக்கம். எளிதாக... இரும்புக் கப்பலோ, மரக் கப்பலோ கடலின் ஆழத்திலிருக்கும்போது கடலின் உப்புத் தன்மை அதை அரிக்க ஆரம்பிக்கும். ஆனால், அதன் மீது படரும் பாக்டீரியாக்கள் அந்த அரிப்புகளை நேரடியாக நடக்காமல் தடுக்கும். அப்படித்தான் 14-ம் நூற்றாண்டில் கப்பல் மிச்சங்கள் உட்பட 2000க்கும் அதிகமான இதுபோன்ற கப்பல் மிச்சங்கள் கடலின் ஆழத்தில் புதைந்து கிடக்கின்றன.

டைட்டானிக் மிச்சங்கள் அட்லாண்டிக் கடல் பாக்டீரியா

ஆனால், இந்த அறிவியலுக்கு மாறாக,  டைட்டானிக் மிச்சங்களின் மேல் படர்ந்திருக்கும் ஹலோமோனஸ் பாக்டீரியா, தானே அந்த மிச்சங்களை அரித்து உணவாக்கிக் கொள்கிறது. 47 ஆயிரம் டன் எடை கொண்ட டைட்டானிக் இன்னும் சில ஆண்டுகளில் இருந்த இடமே தெரியாமல் கரைந்து போக போகிறது என்பது மற்றுமொரு வரலாற்று துயரமாகவே இருக்கும். 

டைட்டானிக் மிச்சங்கள் அட்லாண்டிக் கடல் பாக்டீரியா

அடர்ந்த இருட்டில் புதைந்துக் கிடக்கும் டைட்டானிக்கின் வரலாறும் இன்னும் சில ஆண்டுகளில் இருண்டு போகும். அடுத்தடுத்த தலைமுறைகள் அதை மறந்தும் போகும். உண்ண வேறு உணவில்லமால் அந்த 4  கிமீக்கும் மேற்பட்ட ஆழத்தில், அந்த பாக்டீரியாக்கள் என்ன செய்யும்? மற்றுமொரு பெரிய கப்பலின் மிச்சங்களுக்காக காத்துக் கொண்டிருக்குமோ?!
 

- இரா. கலைச் செல்வன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்