எடிசனின் சூப் டெஸ்ட், 100 முறை தலைசீவிய சார்லஸ் டிக்கன்ஸ்! - மேதைகளின் விநோதப் பழக்கங்கள் | Different habits of geniuses

வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (15/03/2017)

கடைசி தொடர்பு:13:26 (15/03/2017)

எடிசனின் சூப் டெஸ்ட், 100 முறை தலைசீவிய சார்லஸ் டிக்கன்ஸ்! - மேதைகளின் விநோதப் பழக்கங்கள்

 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பழக்கங்கள்

நாம் அனைவரும் நமக்கு மட்டும் தெரிந்த சில சென்டிமென்ட்களை வைத்திருப்பதுண்டு. உதாரணத்துக்குச் சிலர், வெளியே கிளம்பும் பொழுது தடுக்கினால், நீர் அருந்திவிட்டுத் தான் கிளம்புவார்கள். சிலர் ‘எங்க போற?’ என்று கேட்கக் கூடாது என்பார்கள். இதுபோன்ற வித்தியாசமான பழக்கங்கள், சென்டிமென்டுகள் என்று நிக்கோலா டெஸ்லா, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற மாபெரும் மேதைகளுக்கும் இருந்தது. அவை என்னவென்று பார்ப்போம்.

மீட்டர் கணக்கில் கதை எழுதிய எட்கர் ஆலன் போ

1800-களில் வாழ்ந்த எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் எட்கர் ஆலன் போ. சிறுகதைகளை எழுதுவதில் வல்லவர். இவரது மரணத்துக்குப் பல வருடங்களுக்குப் பின்னர் தான், இவரது கதைகள் அங்கீகரிக்கப்பட்டன. இவருக்கு இருந்த வித்தியாசமான பழக்கம்; தாள்களை ஒன்றின் கீழ் ஒன்றாக இணைத்து, தன் கதையை எழுதிக் கொண்டே போவாராம். அவர் எழுதி முடித்தப் பிறகு பல மீட்டர் அளவு கொண்ட ஒரே தாளாக இருக்குமாம் அவரது கதைகள். கதையின் கோர்வை சரியாக வர வேண்டும் என்பதற்காகவே, இவ்வாறு தாம் செய்ததாக அல்லன் கூறுவாராம்.

மரணம் வரை சென்று கண்டுபிடிப்புகளை உருவாக்கிய யோஷிரோ நகாமட்சு

Nakamatsu

ஃப்ளாப்பி டிஸ்க்கை கண்டுபிடித்தவர்தான் யோஷிரோ நகாமட்சு. தனது 74 வருட வாழ்க்கையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு மூலாதாரமாக இருந்தார். மரணத்துக்கு மிக அருகில் சென்று வந்தால்தான், இவருக்கு புதிய கண்டுபிடிப்புக்கான யோசனை வருமாம். தண்ணீருக்குள் குதித்து நீச்சல் அடிக்காமல் இருப்பாராம். இதனால் மூளைக்குச் செல்ல வேண்டிய ஆக்சிஜன் கிடைக்காமல் போகுமாம். இதனையடுத்து மரணத்துக்குச் சில நொடிகளே இருக்கும் நிலையில் இவருக்கு ஒரு புதிய யோசனை தோன்றுமாம். அப்போவ்! 

மேசையையே பயன்படுத்தாமல் எழுத்தாளரான அகாதா க்றிஸ்டி

சென்ற நூற்றாண்டின் மிக முக்கியமான எழுத்தாளர் அகாதா க்றிஸ்டி. இவர் அறுபத்து ஆறு நாவல்களும் பதினான்கு சிறுகதை தொகுப்புகளையும் படைத்துள்ளார். ஆனால், இவர் எழுதுவதற்கு மேசையையே பயன்படுத்த மாட்டாராம். எப்பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுது, எங்கு இருக்கிறாரோ அங்கேயே எழுதுவாராம். சமையலறை, உறங்கும் படுக்கை என எல்லா இடத்திலிருந்தும் எழுதி இருக்கிறாராம் அகாதா. இவரின் மற்றொரு வித்தியாசமான பழக்கம், ஒரு நாவலை எழுதுவதற்கு முன், இதுதான் கதை என்று முடிவு செய்யமாட்டாராம். ஒரு நிகழ்வைப் பற்றி விரிவாக எழுதிவிட்டு அதனைச் சுற்றி கதைகளத்தை அமைத்துக் கொள்வாராம்.

ஹானரி டி பால்சாக்கின் காபி காதல்

பிரெஞ்சு மொழி எழுத்தாளர் ஹானரி டி பால்சாக் மிகவும் பிரபலமானவர். இவர் தினமும் ஐம்பது தடவையாவது காபி அருந்துவாராம். தனது மிக முக்கியமான படைப்பான ‘லா காமெடி ஹுமைன்’னை படைக்கும்பொழுது நிறைய காபி குடித்ததால் உறங்கவே இல்லையாம். 'காபி அருந்தியவுடன் உடலுக்குள் ஒரு போராட்டம் நடக்கும். யோசனைகள் இங்கும் அங்கும் அலை பாய்ந்து போர்க்களம் போல தோன்றும். போரில் வெற்றி பெரும் யோசனைதான் எனது படைப்புகள்’, என்று கூறுவாராம்.

புகைப்பிடித்தலின் உச்சத்துக்குச் சென்ற சிக்மன்ட் பிராய்ட்

நரம்பியல் துறையில் முக்கியமான பல பங்களிப்புகளை கொடுத்தவர் சிக்மன்ட். ஆனால், அவை அனைத்துக்கும் இவருக்கு ஊக்கமாக இருந்தது புகைப் பழக்கம்தான். ஒரு கட்டத்தில், இதற்குமேல் புகை பிடித்தால் மாரடைப்பு நிகழும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதற்கு பின், புகையை கை விட நினைத்தார் சிக்மன்ட். ஆனால், அதன்பிறகுதான் தனக்கு மாரடைப்பு வந்ததாகவும், தான் இறப்பது போன்ற காட்சிகள் தோன்றி தோன்றி மறைந்ததாகவும் கூறியிருந்தார் சிக்மன்ட். புகையினால் வாயில் ஏற்பட்ட புற்றுநோயை அகற்ற அவருக்கு முப்பத்து மூன்று அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டன. அதன் பிறகும், அவரால் அந்த பழக்கத்தை விட முடியவில்லை. புகைபிடிப்பதை பெருமையாகப் பேசி சில கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

மொழியுடன் தடுமாறிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

E = mc2 என்ற ஃபார்முலாவை பார்த்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான். இது மட்டுமல்லமால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புகளுக்கும் கோட்பாடுகளுக்கும் சொந்தமானவர் இவர். இவ்வளவு மூளையா என்று வியக்கும் அளவுக்கு சாதனை படைத்த ஐன்ஸ்டீனுக்கு, சிறு வயதில் மொழியைப் பயன்படுத்துவதில் சிரமம் இருந்ததாம். இதனால், இவர் மூளை வளர்ச்சி இல்லாதவர் என்று கருதப்பட்டாராம். ஆனால், இந்த தாமதமான மூளை வளர்ச்சி தான், தனக்கு உலகத்தை ரசித்து அதனைப் பற்றி யோசிக்க நிறைய நேரத்தை கற்றுக்கொடுத்ததாக ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.

நான்கு மணிநேரம் மட்டும் தூங்கிய நிக்கோலா டெஸ்லா

Nikola Tesla

நிக்கோலா டெஸ்லா இல்லாமல் போயிருந்தால், மின்சாரம் பற்றிய புரிதலில் உலகம் நூறு வருடங்கள் பின்னால் இருந்திருக்கும். அவ்வளவு பெரிய பங்களிப்பை அளித்தவர் டெஸ்லா. தன் பெயரில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளைக் கொண்டவர். இவரின் வினோதமான பழக்கம், இரவு பதினொன்று முதல் விடியற்காலை மூன்று மணி வரை தான் ஓய்வெடுப்பார். இதனால், தனது இருபத்து ஐந்தாவது வயதில் மன நலம் குன்றிப் போனார். ஆனால், அதையும் தாண்டி உடலையும் மனதையும் மேம்படுத்தி தனது வாழ்வின் அடுத்த முப்பத்து எட்டு வருடங்களுக்கு அதேபோல் கடுமையாக உழைத்து பல பங்களிப்புகளை ஆற்றினார்.

வினையடை இல்லாமல் எழுதிய ஸ்டீபன் கிங்

எழுத்தாளர்கள் என்றாலே, இலக்கணத்துக்கென்று ஒரு தனி கண் உடையவர்களாய் இருப்பார்கள். சிறு இலக்கணப்பிழையைக் கூட, பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அமெரிக்க நாவலாசிரியரான ஸ்டீபன் கிங்கும் இதுபோன்று தான். ஒரு படி மேல் சென்று தனது மொழியில் வினையடைகள் (Adverbs) இல்லாமல் எழுத நிறைய முயற்சி செய்துள்ளார். மொழியின் தனித்துவத்தை வினையடைகள் கெடுத்துவிடும் என்று நம்பினார். வினையடைகளைப் பயன்படுத்தும் பழக்கம் குறைய, தினமும் இரண்டாயிரம் வார்த்தைகள் கொண்ட கட்டுரைகளை வினையடைகள் இல்லாமல் எழுதி வந்துள்ளார். 

 தாமஸ் ஆல்வா எடிசன் பழக்கங்கள்

சூப்பில் உப்பு போட்டுக் குடித்தால் வேலை கொடுக்காத எடிசன்

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளைத் தன் பெயரில் கொண்ட பெருமைக்குரியவர், தாமஸ் ஆல்வா எடிசன். இவர் தனக்கு ஆராய்ச்சியில் உதவி செய்ய ஆட்களைத் தேர்ந்தெடுக்கும்போது, ஒரு 'சூப் டெஸ்ட்' வைப்பாராம். சூப்பை ருசித்துப் பார்க்காமலே உப்பு அல்லது மிளகு சேர்த்துக் கொண்டால் அவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ள மாட்டாராம். ‘சூப்பை குடித்து பார்க்காமலே எப்படி உப்பு சேர்த்துக் கொண்டார்? இவ்வாறு ஆராய்ச்சியில் முன்கூட்டிய அனுமானத்தை வைத்துக் கொண்டால் அது சரியான முடிவைத் தராதே!’ என்று நம்பினார் எடிசன். மேலும் “Polyphasic Sleep Cycle” என்றுக் கூறப்படும் ஒரு தூங்கும் முறையை பின்பற்றினார். அதாவது, அவ்வப்போது பதினைந்து நிமிடங்கள் தூங்கிக் கொள்வது. இவ்வாறு செய்தால் ஒரு மனிதர் விழித்திருக்கும் நேரம் அதிகரிக்கும் என்றே எண்ணினார். இன்று நிறைய மேல்நாடுகளில் இந்த தூக்க முறையில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு, அது பின்பற்றபட்டு வருகிறது.

தினம் நூறு முறை தலை சீவிய சார்லஸ் டிக்கன்ஸ்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சமூக எழுத்தாளர்களில் ஒருவர் சார்லஸ் டிக்கன்ஸ். இவருக்கு “Obsessive Compulsive Disorder” இருந்ததாம். இவர்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்ப எண்ணற்ற முறை செய்வார்கள்.

சார்லஸ் டிக்கன்ஸுக்கு  தலையில் ஒரு முடி படியாமல் இருந்தால் கூட, பொறுத்துக் கொள்ள முடியாதாம். அதனால், தினம் நூறு முறையாவது தலையைச் சீவுவாராம். புத்தகங்கள் அடுக்கப்படும் வரிசையில் தொடங்கி, எழுதும்போது மையின் நிறம் ஒவ்வொரு வரியிலும் ஒரே மாதிரி இருப்பதுவரை அனைத்திலும் பெர்ஃபெக்ஷன் எதிர்பார்ப்பாராம் சார்லஸ்.

- ம.சக்கர ராஜன் (மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்