மொபைல் இல்லை... லேப்டாப் இல்லை... உலகின் மிகச் சிறந்த "ஊர்சுற்றி”!

"பயணம் வலிக்கும். கொஞ்சம் சிரிக்க வைக்கும், நிறைய அழ வைக்கும். நீங்கள் அறிந்திராத உங்களை, உங்களுக்கு அறிமுகப்படுத்தும். அந்த முகம் அசிங்கமானதாகவும் இருக்கலாம். இதுவரை நீங்கள் நம்பிய அத்தனை உண்மைகளையும் பொய்யாக்கும். பொய்களை உண்மையாக்கும். நடுங்கச் செய்யும், நெகிழச் செய்யும். இதையெல்லாம் கடந்த பிறகு தான், பயணம் உங்களைப் பக்குவப்படுத்தும். பயணிக்கத் தொடங்குபவர்களுக்கு, தங்களது பயணத்தை எப்பொழுது முடிக்க வேண்டும் என்றும் தெரிந்திருக்க வேண்டும்..." பயணங்களைப் பூக்களின் பாதையாகவே அறியும் நமக்கு, அவர் சொல்லும் யதார்த்தம் புரிய சில நிமிட யோசனை தேவைப்படுகிறது.

பயணம் ஊர்சுற்றி உலகம்

13 வயது சிறுவன் அவன். 1967 ஆம் ஆண்டு... ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் வாழும் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் கால்கள் ஒருபொழுதும், ஒரு இடத்தில் நிலை கொண்டதில்லை. ஒரு மழைக் கால இரவு. வீட்டில் தன் அப்பாவின் மேஜையில் இருக்கும் அட்லஸைப் பார்க்கிறான். உலகம் இவ்வளவு சின்னது தானா?. சரி கிளம்பலாம் என முடிவு செய்கிறான்.  அன்று தொடங்கிய பயணம்... பனி சூழ்ந்த துருவங்கள், அனல் கக்கும் பாலைவனங்கள், மழைப் பொழியும் மலைக் காடுகள், மக்கள் நிறைந்த நகரங்கள் என உலகின் அத்தனை நாடுகளையும் சுற்றி முடித்திருக்கிறார்... தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறார், 62 வயதான ஜார்ஜ் சன்ஷேஸ் (Jorge Sanchez). ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவைச் சேர்ந்த சான்ஷேஸ், உலகின் மிக சிறந்த "ஊர்சுற்றியாக" கருதப்படுபவர். இணைய வழியில் அவரை தொடர்பு கொண்டோம்...

பயணம் ஊர்சுற்றி உலகம்கிட்டத் தட்ட 30 ஆண்டுகள் பயணத்தில் கழித்திருக்கிறீர்கள் ? ஏன் பயணம்?

"பயணம் மீதான ஆர்வம் எனக்கு இயற்கையாகவே இருந்தது. பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்னரே பயணங்களைத் தொடங்கிவிட்டேன். இந்த உலகை என் யூனிவர்சிட்டியாக மாற்றிக் கொண்டேன். ஒவ்வொரு நாட்டையும் ஒவ்வொரு பாடமாக எடுத்துக் கொண்டேன். பயணங்களின் வழிப் படித்தேன். இந்துக் கோயில்களில், சர்ச்களில், மசூதிகளில், புத்த கோயில்களில், சாதுக்களின் குகைகளில் என பல்வேறு இடங்களில் தங்கியுள்ளேன். எதையும் தெரிந்தவனாக நான் எங்கும் செல்லவில்லை. எதையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பயணித்தேன். சிறகற்ற பறவையாய் திரிந்து, மனிதனாய் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளேன்..."

பயணிக்க பணம்?

"நான் ரொம்பவே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். பயணிக்க வேண்டுமென்ற உறுதியான எண்ணம் மட்டுமே என்னிடம் இருந்தது. கிடைத்த வேலைகளைச் செய்தேன். கார்பெண்டராக, ஹோட்டலில் பாத்திரம் தேய்ப்பவனாக, பேருந்து கிளீனராக, சுரங்கத் தொழிலாளியாக... என கிடைத்த வேலைகளையெல்லாம் செய்தேன். அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பயணித்தேன். என் பயணத்திற்கும் பெரிய செலவுகள் இருக்காது. தங்குவதற்கு பெரும்பாலும் ரூம் எடுக்க மாட்டேன். இந்தியாவில் பாலங்களின் அடியில் தூங்குவேன், சீனாவில் டெலிபோன் பூத், பிரேசிலில் மரங்களின் மேல்...  சில மணி நேரம் தூங்க ஒரு இடம் தேவை அவ்வளவு தான். ஐரோப்பிய நாடுகள் முழுக்க வண்டிகளில் லிப்ட் கேட்டுத்தான் பயணித்தேன்...எனக்குப் புகை, மது என எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. ஒரு மாதம் வீட்டிலிருந்தால் செய்யும் தொகையைவிட, பயணத்தில் குறைந்த அளவே செலவாகும்." 

இந்தியப் பயணம்?

"இதுவரை 7 முறை இந்தியா வந்துள்ளேன். இந்தியாவில் எனக்கு மிகப் பிடித்த இடம் மகாபலிபுரம். சென்னையில் இருந்து மகாபலிபுரத்திற்கு பஸ்சில் போய்க் கொண்டிருந்தேன். அப்போது என் பக்கத்தில் இருவர் காஞ்சிபுரம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே இறங்கி காஞ்சிபுரம் போனேன். அங்கிருந்து திரும்பும் போது, திருப்பதி பற்றி கேள்விப்பட்டு அங்குப் பேனேன். ஒரு வழியாக மகாபலிபுரமும் பார்த்தேன். அவ்வளவு அழகாக இருந்தது. என் பயணம் மக்களை விட்டு விலகியதில்லை. மக்களோடு மக்களாகவே பயணிக்கிறேன்..."

இந்தியப் பயணங்களில் மறக்க முடியாதது?

"ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் இருந்து ஜெய்ப்பூருக்கு சாதுக்களோடு, ரயிலின் கூரையில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தது என்னால் மறக்க முடியாதது. அதே போன்று கன்னியாகுமரியின் சூரியோதய காட்சியும், விவேகானந்தர் பாறையும் எனக்குள் ஒரு பெரிய அமைதியை ஏற்படுத்தித் தந்தன..."

       பயணம் ஊர்சுற்றி உலகம்                                 பயணம் ஊர்சுற்றி உலகம்

பயணங்களில் பிரச்சினைகள்?

"தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பெர்க்கில் ஒருமுறை என்னைத் தாக்கி கொள்ளையடித்தார்கள். ஆனாலும் அந்த ஊர் எனக்கு ரொம்ப பிடிக்கும். 1989யில் பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு விசா இல்லாமல் பயணித்தேன். என்னை உளவாளி என்று சந்தேகித்து, 4 மாதங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள். பரவாயில்லை இலவசமாக தங்க இடம் கிடைத்தது என்று இருந்துவிட்டேன்... (சிரிக்கிறார்). அதே போன்று ஜியார்ஜியா, கொலம்பியா, பராகுவே போன்ற இடங்களிலும் சில மாதங்கள் சிறை வைக்கப்பட்டிருக்கிறேன். மற்றபடி எந்தப் பிரச்சினைகளும் வந்ததில்லை. சாதாரண மக்களிடம் மனிதம் ஓங்கியிருக்கிறது... " 

பயணம் ஊர்சுற்றி உலகம்இன்று பயணம் என்பது ஒரு ஃபேஷன் ட்ரெண்டாக உருமாறியிருக்கிறதே?

"பயணம் ரொம்ப பெர்சனலான விஷயம். அது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு உணர்வை, பார்வையைக் கொடுக்கும். விடுமுறை நாட்களில் போகும் வெக்கேஷன்களைப் பற்றி நான் சொல்லவில்லை. பயண வாழ்க்கைக்குள் வர விரும்புவோர்... வெறும் அதன் மீதான் ஈர்ப்பில் வரக் கூடாது. ஒரு ஊர்சுற்றியாக உருமாற உடல் பலமும், மன வலிமையும் அதிகம் தேவைப்படும். பயணங்கள் ரொம்ப உணர்ச்சிகரமானவை. அதை சமாளிக்க வேண்டும். பயணத்தில் என்ன பெறுகிறோம், என்ன கொடுக்கிறோம் என்ற தெளிவிருந்தால் பயணம் சிறக்கும்..." என்று சொன்னவர் சில நிமிடங்களில் வருகிறேன் என்று சொல்லி சென்றார். 

வெகுஜன மக்களின் தொடர்பை முற்றிலும் துண்டித்துவிட்டு, தனியாக ஒரு கூட்டத்தில் வாழ்வதல்ல பயணம் என்பது ஜார்ஜின் வாதம். பயணம் மக்களிடம் அதிகம் நெருங்க, இந்த சமூகத்தின் கவனிக்கப்படாத பக்கங்களை புரிந்து கொள்ள அவசியம் என்கிறார். ஜார்ஜிடம் செல்ஃபோன், லேப்டாப் போன்ற கருவிகள் கிடையாது. முதுகில் மூன்று கிலோ அளவிற்கான பொருட்களை மட்டுமே எடுத்துக் கொண்டு பயணிக்கிறார். தற்போது துபாயில் நடக்கும் ஒரு "ஊர்சுற்றிகளின் திருவிழா"வில் கலந்து கொண்டிருக்கிறார் ஜார்ஜ். அங்கு ஒரு ப்ரெளசிங் சென்டரில் யதேச்சையாக அவர் தன் மெயில்களைப் பார்க்க, சரியாக நாமும் அதே நேரத்தில் அவரைத் தொடர்பு கொள்ள, இந்த இணைய சந்திப்பு சாத்தியமானது. ஜார்ஜ் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு குழந்தையும் உண்டு. தன்னுடைய பயணங்களில், தன் குடும்பத்தையும் இயன்றவரை கூட்டி செல்கிறார். 

தன் குழந்தையுடம் ஸ்கைப் கால் முடித்துவிட்டு மீண்டும் நம்முடன் பேசத் தொடங்குகிறார்...

பயணம் ஊர்சுற்றி உலகம்

தன் குழந்தையுடன் ஜார்ஜ்...

உங்களைப் பார்த்து நிறைய இளைஞர்கள் பயணிக்கத் தொடங்குகிறார்களாமே?

"ஆமாம்... ஆனால், அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் பயணம் திட்டமிடாமல், தெளிவில்லாமல் இருக்கலாம். அது அப்படித்தான் இருக்கும். ஆனால், ஒரு பயணி அடிப்படைத் தெளிவில்லாமல் வெறும் ஈர்ப்பின் காரணமாக மட்டுமே பயணிக்கத் தொடங்கினால், அது அவரின் வாழ்வையே பாதிக்கலாம். பயணத்தைவிடவும் முக்கியமான விஷயங்கள் இங்கு நிறைய இருக்கின்றன. முக்கியமாக உங்களை நம்பியிருக்கும் குடும்பம்..."

பயணம் ஊர்சுற்றி உலகம்

பயண வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தற்கு என்றாவது வருத்தப்பட்டது உண்டா?

"நிச்சயம் இல்லை. நான் மழைக் காலத்திற்கு சேமித்து வைக்கும் எறும்பாக வாழவில்லை. மழையை ரசித்து ஆடும் ஒரு வெட்டுக் கிளியாகவே இருந்துள்ளேன். அதன் பாதிப்புகளையும் நான் எதிர்கொள்கிறேன். இது என் வாழ்க்கை. ( யோசிக்கிறார்...) என் அப்பா, அம்மாவுடன்... குறிப்பாக என் அம்மாவுடன் இன்னும் கொஞ்ச காலத்தைக் கழித்திருக்கலாம் என்ற ஏக்கம் மட்டும் இன்னும் மனதில் இருக்கிறது...” என்று சொல்லி மெளனமாகிறார். பின்னர், ஒரு சிறிய புன்சிரிப்போடு நமக்கு விடை கொடுக்கிறார். 

- இரா. கலைச் செல்வன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!