வெளியிடப்பட்ட நேரம்: 11:48 (16/03/2017)

கடைசி தொடர்பு:11:48 (16/03/2017)

24 மணி நேரத்தில் கட்டபட்ட உலகின் முதல் வீடு..! #3Dtechnology

வீடு

மேலும் படங்களுக்கு

உலகில் மனிதனின் தேவைக்கும் அவனின் சுமையைக் குறைப்பதற்கும் புதுப்புது கருவிகளும், தொழில்நுட்பங்களும் வந்த வண்ணமே இருக்கின்றன. தற்போது அதனுடைய தாக்கம்தான் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி பிரதமர் மோடியை இழுத்தது எனச் சொல்லலாம். 2022-க்குள் இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் வீடு எனும் மோடியின் அறிவிப்பும் டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பாகம்தான். ஆனால் இப்போது ரஷ்யாவில் வெளிவந்திருக்கும் தொழில்நுட்பம் அதை உறுதிப்படுத்தும் விதமாக அறிமுகமாகியுள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தில் வசிக்கும் மனிதனுக்கு இன்றைய சூழ்நிலையில் சொந்த வீடு என்பது சற்று கடினமான காரியம்தான். அதுவும் இடம் வாங்கி நல்ல பொறியாளர் ஒருவரிடம் வீட்டைக் கட்ட பணம் கொடுத்து, கடைசிக் கட்டத்தில் பொறியாளர் கை விரிக்க மீண்டும் கடன் வாங்கி வீடு கட்டி முடித்தால் கிட்டத்தட்ட 5, 6 மாதங்கள் கடந்திருக்கும், அதற்குள் சாதாரண வீடு கட்ட குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் செலவாகியிருக்கும். உங்களுக்காகவே புதிதாக வந்திருக்கிறது புதிய 3D தொழில்நுட்பம். 

இந்தியாவில் சாதாரணமாக கட்டப்படும் வீடுகளைத் தவிர்த்து புதிய தொழில்நுட்பமான ரெடிமேட் கட்டடங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவில் அதிக அளவில் பரவவில்லை என்பதே உண்மை. ஆனால் அதற்குள் ரஷ்யாவில் 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் புதிய கட்டடங்களை வடிவமைக்கும் தொழில்நுட்பத்தினை அபிஸ் கோர் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தி ஒரு வீட்டையும் கட்டியுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின்படி, கம்ப்யூட்டரில் கட்டட வரைபடமானது 3D வடிவில் வரையப்படுகிறது. வீடு கட்டுவதற்கென்றே பிரத்யோகமாக 3D பிரிண்டிங் இயந்திரம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரமானது, கட்டட 3D வரைபடத்துக்கு ஏற்ப கம்பி, சிமென்ட் கலவை ஆகியவற்றைக் கொண்டு தானே வடிவமைத்துக் கொள்கிறது. இந்த இயந்திரம் 360 டிகிரி கோணத்தில் சிமென்டையும், கம்பியையும் மாற்றி மாற்றிப் பொருத்துகிறது. இயந்திரத்தின் முன்னே உள்ள பகுதியில் சிமென்ட் கொண்டு கலவை நிரப்பப்படுவதால் எளிதாக அதனை எடுத்துக்கொள்ளும். இதன் மூலம் இயந்திரமானது துரித வேகத்தில் செயல்பட்டு கட்டடத்தை வடிவமைக்கிறது. 

வீடு

மேலும் படங்களுக்கு

இந்த இயந்திரமானது கட்டடத்தை கட்டிக் கொண்டிருக்கும்போதே ஆட்கள் கதவுகளையும், ஜன்னல்களையும் வரைபடத்தில் இருப்பதுபோல வடிவமைத்து விடுகிறார்கள். சுற்றுப்புற சுவர்கள் கட்டி முடிக்கப்படும்போது ஒரு பணியாள் துரிதமாகச் செயல்பட்டு கட்டடத்துக்கு வண்ணங்களைப் பூசுகிறார். இதில் இன்னொரு சிறப்பு, வீட்டின் உட்கட்டமைப்புக்கு ஏற்றார்போல் தண்ணீர் குழாய்கள், மின்சார வசதி என அனைத்து வசதிகளும் இந்த வீட்டில் அமைக்கப்படுகிறது. தற்போது அந்தத் தொழில்நுட்பத்தில் நான்கு அறைகளாக பிரித்துக் கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டை முழுமையாகக் கட்டி முடிக்க ஆகும் மொத்த செலவு, 6.77 லட்ச ரூபாய் மட்டுமே என்பது கூடுதல் சிறப்பம்சம். இந்த வீடு வெறும் 24 மணிநேரத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனுடைய ஆயுட்காலம் 175 ஆண்டுகளாகும். மேலும் இந்த வீடானது அனைத்துத் தட்பவெப்ப நிலைகளுக்கும் தாக்குப்பிடிக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்தத் தொழில்நுட்பமானது, அனைத்து நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் அதனுடைய அறிவிப்பில் சொல்லப்பட்டது. மேலும் உலகில் ஒரே நாளில் கட்டப்பட்ட முதல் வீடு என்ற பெருமையையும் இந்த வீடு பெற்றுள்ளது. பிரதமர் மோடி 2022-க்குள் அனைவருக்கும் வீடு என அறிவித்துள்ள நிலையில், அரசாங்கம் மூலம் ஏலம் விட்டு டெண்டர் கொடுத்து கட்டடம் சரியாகக் கட்டப்படாமல் ஆயுட்காலம் முடிவதற்கு முன்னரே கட்டடங்கள் சரியும் நிலையைத் தடுக்கலாம். ரஷ்யாவில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் போன்றே அதே தொழில்நுட்பத்தில் இங்கும் வீடுகளை வடிவமைக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யலாம். நாட்டின் நலன் என்ற பெயரில் பல்வேறு ஒப்பந்தத்தினை அமைக்கும் பிரதமர் இந்த விஷயத்திலும் காட்டலாமே... 
 

மேலும் படங்களுக்கு

 

- துரை.நாகராஜன்.


டிரெண்டிங் @ விகடன்