Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாம சாப்பிடுற ஒவ்வொரு மீனுக்குப் பின்னாடியும்... - மீனவர்களுடன் ஒரு கடல் பயணம்! #VikatanExclusive #MustKnow

மீனவர்களுடன் ஒரு கடல் பயணம்

நானும் புகைப்படக் கலைஞரும் ராயபுரத்தில் உள்ள  N4  மீன்பிடி துறைமுகத்தில் நின்று கொண்டிருக்கிறோம். ஆழ்கடல் மீன்பிடி படகுகள் தொடங்கி கட்டுமரங்கள் வரை தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு அமைதியாக அணிவகுத்துச் செல்கின்றன பல வகைப் படகுகள். 'கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் படகில் ஒருநாள் பயணம் செய்தால் எப்படி இருக்கும்?' என்று ஒரு யோசனை மனசுக்குள் அலையடித்தது.  துறைமுகமே அமைதியாக இருக்க, ஒரு விசைப்படகு மட்டும் பரபரப்பாக இருந்ததைப் பார்த்து அவர்களிடம் பேசினோம்.

"கடல்ல கச்சா எண்ணெய் கொட்டுச்சே. அந்த நேரத்துல பெரிய இழப்புப்பா. இந்தப் பிரச்னைக்கு அப்புறம் கடலுக்குப் போகாதவங்க தப்பிச்சுக்கிட்டாங்க. மாசக் கணக்குல கடலுக்குள்ள தங்கி மீன் பிடிச்சுக் கொண்டு வந்தவங்க  விற்பனை செய்ய முடியலை. 7000 ரூபாய்க்கு விற்க வேண்டிய மீன் 2000 ரூபாய்க்கு கூட போகலை. கச்சா எண்ணெய் எல்லாத்தையும் காலி பண்ணிடுச்சு. இப்போ நாங்களும் ஆழ்கடலுக்குப் போறதுக்காகதான் தயாராகிட்டு இருக்கோம். கடலுக்குள்ள இறங்கிட்டா கரையேற பதினஞ்சு, இருவது நாள் ஆகிடும். சோறு தண்ணிலாம் உள்ளயேதான்.  நடுக்கடல்ல எதுவும் பிரச்னைன்னு வந்துட்டா யாரும் மிஞ்ச மாட்டோம். அதனால படகுல எல்லாம் சரியா இருக்கானு பார்க்க டிரையல் பார்ப்போம். உள்ளே போனா திரும்ப அஞ்சாறு மணி நேரம் ஆகும். நீங்களே கூட வந்து எங்க பொழப்பைப் பார்த்து எழுதுங்களேன்..." என்றார் விசைப்படகின் உரிமையாளர் காந்தி. நாங்களும் படகில் ஏறினோம். 

நங்கூரத்தை மேலே ஏற்றுகிறார்கள்

மணி மதியம் 12.15. நல்ல உச்சி வெயில். ராயபுரம் N4 மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் நுழைந்தது நாங்கள் சென்ற விசைப்படகு. எல்லோரும் அவரவர் வேலைகளில் மும்முரமானார்கள். 

காந்தியிடம் பேச்சுக் கொடுத்தோம். "எனக்கு ராமநாதபுரம் மண்டபம் முகாம் தான் சொந்த ஊர். பாரம்பர்யமான மீனவக் குடும்பம். 1964 புயலுக்கு அப்புறம் தனுஷ்கோடியிலிருந்து மண்டபத்துக்கு வந்துட்டாங்க. தனுஷ்கோடியில் கரைமடி வலை போட்டு மீன்பிடிக்குறது வழக்கம். என்னோட 17 வயசுல முதல் முறையா நண்பர் ஒருத்தரோட படகுல சும்மா கடலுக்குள்ள போயிட்டு வந்தேன். அதுக்கப்புறம் அப்பப்போப் போய் வாறதுண்டு. அப்பதான் இந்த தொழில் மேல ஒரு ஈர்ப்பு உருவாச்சு. இதுதான் நம்ம தொழில்னு முழு நேரமா இறங்கிட்டேன். ராமேஸ்வரத்துல இருந்தப்போ கவர்மென்ட்டே மீன்பிடிக்கப் பயிற்சி கொடுத்து எங்களுக்குன்னு ஒரு போட் கொடுத்தாங்க. இந்தியாவிலேயே நாங்கதான் முதல்முதல்ல அந்த போட்டுக்கான பணத்தை திருப்பி கொடுத்து அதை சொந்தமாக்கிக்கிட்டோம். பசங்கள நல்லா படிக்க வைச்சிருக்கேன். இதோ ரெண்டு மாசம் முன்னாடி என்னோட போட் ஒன்னு நடுக்கடல்ல பழுதாகிப் பாதி முழுகிடுச்சு. அப்புறம் அதை மீட்டு வந்தோம். அந்த இடத்துல பழுதான எந்த போட்டுமே இதுவரைக்கும் மீட்டுக் கொண்டு வந்ததில்லை.

காந்தி மீனவர்

முதல் முதல்ல சென்னைக்கு வந்தப்போ ஒரு காக்கி டிரவுசர், சட்டையோடதான் வந்தேன். இப்போ இந்த நிலைமைல இருக்கேன்னா. எல்லாமே இந்த கடல் கொடுத்ததுதான். கண்டல், பாறை, வௌவால், வஞ்சிரம், ஊடகம், காலா, முள் வாழை, கிழங்கா, காரல், நெத்திலி, நண்டு, இறால், திருக்கை, கேரை, கோலா, மயில்கோலா, பர்லா, ஏமங்கோலா, கோட்டாந்திருக்கை, வழுவாடித் திருக்கை, புள்ளித் திருக்கை, செம்மடங்கான், மடக்கரா, சிங்கிரா, சம்காரா, துள்றா, மாப்புரான்னு  ஏராளமான மீன் வகைகள் இந்தப்பகுதிகள்ல கெடைக்கும். இப்போ நிறைய மீன்களைக் கண்ணுல கூட பார்க்க முடியல..."- பேசியபடியே வலையை இறக்குகிறார் காந்தி.

டிரைவர் முருகன் கேபினில் இருந்து உத்தரவுகளைப் பிறப்பிக்க மற்றவர்களும் பாட்டுப்பாடிக் கொண்டு வலை இறக்கும் பணியில் இணைகிறார்கள். 

இழுவை வலையை சீராகக் கடலில் இறக்கியதும் படகு நகரத் தொடங்கியது. எல்லோரும் கடலையே பார்த்துக் கொண்டிருந்தோம். மற்றவர்கள் ஓய்வெடுக்க உட்கார்ந்திருந்தார்கள். சில நிமிடங்களில் பரபரப்பானார் டிரைவர். "வலையை எடுங்க... பலகை சேத்துல மாட்டிக்கிச்சு" எனச்சொன்னதும் இறக்கிய வலையை மீண்டும் படகுக்கு இழுக்க ஆரம்பித்தார்கள். ஆச்சரியம் விலகாமல் "கடலுக்குள் இறங்கிய வலை சேற்றில் தான் சிக்கிருக்கும்னு எப்படி கண்டுபிடிச்சிங்க?" அவரிடமே கேட்டோம். "வலை கடல்ல இறங்கினதும் எனக்கு இங்க வலையோட லோடு எவ்வளவுன்னு காட்டும். வலை இறக்கி கொஞ்ச நேரத்துல வெயிட் அதிகமாயிடுச்சு. நிச்சயம் சேத்துலதான் சிக்கியிருக்கும்னு கண்டுபிடிச்சுட்டேன்." என்றார்.

கேபினில் டிரைவர் முருகன்

படகில் கிடந்த வலையில் சில மீன்களே சிக்கியிருந்தன. எல்லாவற்றையும் அள்ளிக் கடலில் போட்டார் ஒரு முதியவர். எல்லோருடைய முகத்திலும் சோகம் நிழலாடியது. "இன்னொரு முறை இறக்கிப் பார்ப்போமா?" அப்பு கேட்க. எல்லோரும் காந்தி முகத்தையே பார்த்தார்கள். "இல்லை திரும்பிடுவோம்" எனச் சொல்லிவிட்டு. யோசித்தவர்.. "எல்லாத்தையும் சரி பண்ணுங்க. இன்னொருக்கா வலை விரிப்போம்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். இன்னும் உற்சாகமாய் வேலையைத் தொடங்கினார்கள். முதல் முறை சரியான அளவில் கயிறுகள் இறங்கவில்லை. அதை முதலில் சரி செய்தார்கள். எல்லாம் சரியாக இருக்கிறதா எனச் சரி பார்த்துவிட்டு மீண்டும் வலை இறக்கப்பட்டது.

உணவு தயாராகிறது

வலையை இறக்கி முடித்த திருப்தியில் அணியத்தில் (படகின் முன்பகுதி) வந்து அமர்ந்தோம். உணவு ஒரு பக்கம் தயாராகிக் கொண்டிருந்தது. "அண்ணே உப்பு கொஞ்சமாத்தான் இருக்கு. என்ன பண்ணலாம்?" என ஒருவர் ஷாக் கொடுக்க "அதுக்கென்னயா கடல் தண்ணிய மொண்டு இரண்டு டம்ளர் குழம்புல ஊத்தி வை." என்றார் ஒரு பெரியவர்.

மீன் மார்க்கெட்டுகள், ஹோட்டல்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் மீன் விற்பனை நடைபெறுவது வீடுகளுக்குத்தான். ஆயிரக்கணக்கான பெண்கள் இந்தத் தொழிலை நம்பி இருக்கிறார்கள். அவர்களின் தொழில்முறையைப் பற்றி பகிந்து கொள்கிறார் காந்தி..
"இந்தத் தொழிலை பொறுத்தவரைக்கும் பெண்கள் நேரடியா கடலுக்கு வர்றது குறைவுதான். ராமேஸ்வரம் பக்கத்துல எல்லாம் கரைவலை மீன் பிடிக்கப் போவாங்க. இங்க அப்படி கிடையாது. மீனைக் கரையில ஏலம் விடும்போது அதை வாங்கிட்டு போய் ஒவ்வொரு ஏரியாவுல விப்பாங்க. வழக்கமா ஒரு கூடை மீன் 3000 ரூபாய்க்கு வாங்கிட்டுப் போனா அவங்களுக்கு கையில  500 ரூவா மிஞ்சும். இந்தத் தொழில்ல மட்டும் 2000 பேருக்கு மேல இருப்பாங்க. நிரந்தரமான வருமானம்னு அவங்களுக்கு எதுவும் இல்லை.

ஓய்வு நேரத்தில் வலையை சரி பார்க்கிறார் ஒரு பெரியவர்

தொழில் சரியா இல்லாத நேரத்துல கடன் வாங்கித்தான் சமாளிப்பாங்க. நீங்கள்லாம் சுலபமா கடையில மீன் வாங்கி சாப்பிடுறீங்க. ஆனா, நாங்க மழை, வெயில், புயல்னு எல்லாத்தையும் கடந்து கொண்டு வர்றது பத்தி யாருமே யோசிக்கிறது இல்லையே தம்பி. இதுல பக்கத்து நாட்டு கடற்படைகிட்ட மாட்டிக்கிட்ட நிலைமை இன்னும் மோசமாகிடும். கடல் எல்லோரையும் ஒண்ணாதான் பார்க்குது. நாமதான் கோடு போட்டு பிரிச்சு வைச்சுக்கறோம். ஆனா எப்பவும் கடலுக்குள்ள போக நாங்க தயங்கினது கிடையாது."  என்கிறார்.

மீனவர் அப்பு

அந்தப் படகிலேயே இளையவர் அப்பு. வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தார். அப்புவிடம் பேசினோம்.

"நான் சின்ன வயசுலயே இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன். பழவேற்காடு, ஆந்திரா, கேரளா, ராமேஸ்வரம்னு எங்கே ஆள் தேவைப்பட்டாலும் கிளம்பிப் போயிடுவேன். கடல் தான் எல்லாமும். அதனால் எதுக்குமே பயந்தது இல்லை. நானும் ஒருமுறை இலங்கை கடற்படைகிட்ட மாட்டி இருக்கேண்ணே. ஒருநாள் ராத்திரி ராமேஸ்வரத்துல மீன் பிடிச்சுக்கிட்டு இருந்தப்போ இலங்கைக் கடற்படைப் பிடிச்சுக்கிட்டு போயிடுச்சு. மொத்தம் 52 நாள் இலங்கை ஜெயில்ல இருந்தேன். இதோ இந்த கையில பாருங்க." எனச் சொல்லி தன் கையை நீட்டிக் காட்டினார். 

மணிக்கட்டுக்கு கீழே கறுப்பு நிறத்தில் ஒரு காயத்தின் தழும்பு இருந்தது. "திருக்கைங்கிற மீனுக்கு ரொம்ப விஷத்தன்மை உண்டு. அந்த மீனோட முள்ளால கையில குத்தினாங்க. நல்ல வேளை, சீக்கிரமே விட்டதால திரும்பி வந்துட்டேன். அம்மாதான் ரொம்ப பயப்படுவாங்க. ஆனா கடலை நம்பி வந்துட்டோம்ங்கிற தைரியம்தான். இப்போதான் திரும்பி வருவேன்னுலாம் கிடையாது. டீசல் எவ்வளவு இருக்குதோ, போய்க்கிட்டே இருப்போம். இவ்வளவுதான் மீன் கிடைக்கும்னு இல்லை. நிறைய கிடைச்சாலும் ஒண்ணுமில்லை. ஒண்ணுமே கிடைக்காம போனாலும் கவலைப்பட மாட்டோம். சந்தோஷமா போய்கிட்டே இருக்க வேண்டியதுதான். இங்க பெரியவங்க சின்னவங்கல்லாம் கிடையாதுண்ணே" எனச் சொல்லி முடிக்கவும் உணவு தயார் ஆகவும் சரியாக இருந்தது.

இது சாப்பாட்டு நேரம்

சுடச் சுட சோறு, காரக்குழம்புடன் முட்டைப் பொறியல். கடல் நீர் கலந்திருந்தாலும் அன்பால் பரிமாறப்பட்ட அந்த உணவில் அத்தனை இனிப்பு.

சூரியன் மேற்கில் மறையத் துவங்கியிருந்தது. இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் வலை மேலே இழுக்கப்பட்டது. படகுக்குள் கிடந்த வலையை எல்லோரும் ஆர்வமாய் எட்டிப் பார்க்க வலையைப் பிரித்தார்  அப்பு. சில காரை மீன்கள், ஒரு பாறை மீன், ஒரு பிலாச்சை, சில நெத்திலிகள், இரண்டு பாம்புகள், நண்டுகள் இவ்வளவுதான் மிஞ்சியது.

கடைசியில் கிடைத்த மீன்கள்

எல்லோரும் சோகத்தோடு அங்கிருந்து நகர்ந்து செல்ல. காந்தியிடம் கேட்டேன் "என்ன சார் இது இவ்வளவு நேரம் முயற்சி பண்ணியும் கொஞ்ச மீன்கள்தான் கிடைச்சிருக்கு உங்களுக்கு வருத்தமா இல்லையா?".

"வருத்தமெல்லாம் ஒண்ணுமில்ல தம்பி. இதெல்லாம் எங்க தொழில்ல சாதாரணம். வர்றப்போ என்ன எடுத்துக்கிட்டு வந்தேன். எல்லாத்தையும் இந்த கடல்தான் கொடுத்துச்சு. இன்னைக்கு ஒண்ணும் இல்லைனாலும் நாளைக்குக் கொடுக்கும்." என்றார் சிரித்துக் கொண்டே..!

- க. பாலாஜி
படங்கள் : பா. காளிமுத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement