சாய்ஸே வேண்டாம்.. வெற்றிக்கு எப்பவும் ஒரே பக்கம்தான்! #MorningMotivation | Success has only one side - Morning motivation

வெளியிடப்பட்ட நேரம்: 07:46 (17/03/2017)

கடைசி தொடர்பு:07:45 (17/03/2017)

சாய்ஸே வேண்டாம்.. வெற்றிக்கு எப்பவும் ஒரே பக்கம்தான்! #MorningMotivation

Morning motivation

"எதை மனித மனம் ஆழமாக சிந்தித்து நம்புகிறதோ, அதை ஒரு நாள் சாதிக்கும்" அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர் நெப்போலியன் ஹில் சொன்ன நம்பிக்கை வார்த்தைகள் இவை. நன்றாக யோசித்து பார்த்தால் அவர் சொன்னதில் 100% உண்மை இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். நம் எல்லா செயல்களும் முதலில் எண்ணங்களாக தோன்றியே செயல் வடிவம் பெறுகின்றன. எண்ணங்கள் இல்லாமல் செயல்கள் இல்லை, செயல்கள் இல்லாமல் நாமும் இல்லை தானே!?

ஒரு செயலை வெற்றிகரமாக செய்ய ஆசைப்படுகிறோம். அதற்காக முதலில் என்ன செய்வோம் அதற்கேற்ற மனநிலையை உருவாக்கிக் கொள்வோம் அல்லவா? எண்ணங்கள்தான் உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ளும். குழந்தையின் பிறந்தநாள், திருமண நாள், அலுவலகத்தில் பிரமோஷன் போன்ற தருணங்களில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும், முகத்தை கோபமாகவா வைத்திருப்பீர்கள்? அதே தான் அந்த நல்ல விஷயங்களை உள்ளுக்குள் வைத்திருக்கும் மனநிலை தானே நம்மை உற்சாகமாக வைத்திருக்கும். அந்த உற்சாகத்தை யாரும் நமக்கு தந்து விடுவதில்லை.

நாமாகத்தான் உருவாக்கிக் கொள்கிறோம். ஒவ்வொரு நாளையும் நல்ல மனநிலையோடு துவங்குங்கள். 

ஒரு குட்டிக்கதையை பார்ப்போமா..

"வருடம் மும்மாரி பொழியும் மழை, செழிப்பான விவசாயம், வணிகத்தில் முதலிடம் என பூம்பொழில் நாட்டில் இல்லாத வளங்களே இல்லை எனச் சொல்லலாம். இந்த எல்லா வளங்களையும் தன் மக்களுக்கு பகிர்ந்தளிக்க அந்த மன்னன் என்றும் தயங்கியதே இல்லை. தன் நாட்டு மக்கள் பயன்படுத்தியது போக எஞ்சியவை மட்டுமே பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் வணிகத்தை மட்டுமே நம்பியிருந்த நாடுகளின் மன்னர்களின் கண்களில் சிக்கிக் கொண்டது பூம்பொழில் நாடு. எதிரி நாடுகளின் மன்னர்கள் ரகசியமாக கூடிப் பேசினார்கள். பூம்பொழில் நாட்டின் மீது போர் தொடுக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. எதிரி நாடுகளின் சார்பாக வந்த தூதுவனுக்கு பூம்பொழில் நாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவன் போருக்காக அழைக்க வந்திருக்கிறான் எனத் தெரிந்தும் அவனுக்கான மரியாதையை கொடுக்க சொன்னான் பூம்பொழிலின் மன்னன்.

அரசவை கூடியது மன்னனும் அமைச்சர்களும் தீவிரமாக ஆலோசித்தார்கள். மன்னனுக்கோ, படை வீரர்களுக்கோ துளியும் பயமில்லை. ஆனால், அமைச்சர்கள்தான் கொஞ்சம் கலங்கிப் போனார்கள். எதிரி நாடுகளோடு ஒப்பிடுகையில் பூம்பொழிலின் படைபலம் மிகச் சிறியது. ஒரு வேளை போரில் தோற்றுவிட்டால், நாட்டை யாரிடமிருந்தும் காப்பாற்றிக் கொள்ள முடியாதே என புலம்பித் தீர்த்தார்கள். ஆனால், ‘மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி தானே’. 'பூம்பொழில் நாடு யாருக்கும் கீழ் இருப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் போருக்கு தயார்' என ஓலை அனுப்பினான் பூம்பொழிலின் மன்னன். எதிரி நாட்டு மன்னர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். போருக்கான ஆயத்த வேலைகள் மும்முரமாக நடைபெறத் தொடங்கின. போருக்கான நாளும் வந்தது. பூம்பொழில் நாட்டின் எல்லையில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தன எதிரிகளின் படைகள்.

அவர்களோடு ஒப்பிடுகையில் பூம்பொழிலின் படைபலம் மிகச் சிறியதுதான். போர் ஆரம்பித்தது, நேரமாக நேரமாக பூம்பொழிலின் படைபலம் குறைந்து கொண்டு வருவதை தளபதி உணர்ந்தான். 

'இனிமேலும் போரிட்டால் மீதம் இருக்கும் வீரர்களையும் இழந்து விடுவோம். வீரர்களுக்கு எதிரி படைகளை பார்த்து மனக்கலக்கம்

ஏற்பட்டு இருக்கிறது. ‘உடனே இருப்பிடம் திரும்புவது நல்லது.’ என ஓலையில் குறிப்பிட்டு மன்னனுக்கு அனுப்பி வைத்தான். மன்னனுக்கு இதை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருந்தாலும் போரில் வெற்றி நமக்குத்தான் என்பதை உறுதியாக நம்பினான். பூம்பொழில் படைகள் பின்வாங்கின.. யாருக்கும் மன்னனின் முகத்தை பார்க்கும் சக்தியில்லை. எல்லையில் இருந்த தங்களது எல்லைச் சாமியின் கோவிலை கடந்த போதுதான் மன்னனுக்கு அந்த யோசனை வந்தது. வீரர்களுக்கு அந்த கடவுளின் மீது அவ்வளவு நம்பிக்கை. உடனே படைகளை நிற்குமாறு கட்டளையிட்டான். குதிரையை விட்டு இறங்கி கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. கோவிலின் முன் நின்ற மன்னன் கர்ஜிக்கும் குரலில் வீரர்களிடையே பேசத் துவங்கினான். 

"இதோ என் கையில் இருக்கும் இந்த நாணயத்தை இங்கே சுண்டி விடுகிறேன். தலை விழுந்தால் திரும்பி விடுவோம், பூ விழுந்தால் மீண்டும் போர்களத்துக்கே திரும்பி வெற்றி வாகை சூடி வருவோம். சரியா!?" என கேட்டுவிட்டு வீரர்களை பார்க்க, அவர்களும் அதை ஆமோதித்தார்கள். நாணயம் காற்றில் அபப்டியே மிதந்து, தரையில் வீழ்ந்தது. தலை மன்னன் முகம் பார்த்து சிரிக்க, வீரர்களுக்கோ இனம் புரியாத புத்துணர்ச்சி கிடைத்தது போல் இருந்தது.

motivation

எதிரிகளின் படைபலத்தை பார்த்து துவண்டு கிடந்த மனது வெற்றியை கொண்டாடுவதைப் பற்றி மட்டும் யோசிக்கத் துவங்கியது.  மீண்டும் போர் களத்துக்கு திரும்பினார்கள். எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்து வெற்றி வாகை சூடி திரும்பினார்கள். தளபதிக்கோ ஆச்சர்யம் தாங்கவில்லை 'எப்படி மன்னா.. தலை விழும் என்ற நம்பிக்கை உங்களுக்கு முன்பே இருந்ததா!?" என கேட்க.. மென் புன்னகையை உதிர்த்த மன்னன் நாணயத்தை தளபதியின் கையில் திணித்து விட்டு நடக்க ஆரம்பித்துவிட்டான். 

கையை திறந்து பார்த்த தளபதியால் நம்ப முடியவில்லை.. நாணயத்தின் இரண்டு பக்கத்திலும் தலைதான் இருந்தது.

நாணயத்தைப் போலவேதான் வெற்றியும். வெற்றிக்கு ஒரு பக்கம் தானே இருக்கிறது. ஆனால் அது நல்ல மனநிலையை கொண்டவர்களின் பக்கமே நிற்க ஆசைப்படுகிறது. எந்த வேலையைச் செய்தாலும், அதை நல்ல விதமான எண்ணங்களோடு துவங்குகையில் பூம்பொழிலை போல வெற்றியை ருசிக்கத் துவங்கியிருப்போம்.

 - க. பாலாஜி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்