நீரிலும் ஒட்டிக்கொள்ளும் பசை - விஞ்ஞானிகளை வியக்க வைத்த இயற்கை..! | Scientists made the underwater glue 'biomimetic' from Shellfish

வெளியிடப்பட்ட நேரம்: 16:27 (17/03/2017)

கடைசி தொடர்பு:17:29 (17/03/2017)

நீரிலும் ஒட்டிக்கொள்ளும் பசை - விஞ்ஞானிகளை வியக்க வைத்த இயற்கை..!

தியிலிருந்து இயற்கையைச் சார்ந்து வாழ்ந்துகொண்டிருந்த மனிதன், அதன்பின் விஞ்ஞான வளர்ச்சி மற்றும் தொழில்புரட்சி காரணமாக மனிதன் நாளுக்கு நாள் இயற்கையின் வளங்களை சுரண்ட ஆரம்பித்தான். ஆனால் மனிதனால் ஒருபோதும் இயற்கையை வெல்ல முடியாது என்பதை அவ்வப்போது இயற்கை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இயற்கைக்கு முன்னால் மனிதன் சிறியவன்தான் தான் என்பதை காலம் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது

நிலத்தில் ஒட்டிக்கொள்ளும் கடினமான பசை கூட, பொதுவாக நேரடியாக நீருக்கடியில் ஒட்டிக்கொள்ளாது. தொலைத்தொடர்பு வசதிக்காக கடலுக்கடியில் பதிக்கப்பட்டும் கேபிள்களில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் கூட, கேபிளின் எந்த இடத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து அதை கடலுக்கு வெளியே எடுத்து சரிசெய்யும் முறைதான் தற்போது கடைபிடிக்கப்படுகிறது. சாதாரணமாக நீச்சல் குளத்தில் ஏதாவதொரு டைல் உடைந்தால் கூட அதை சரிசெய்ய நீச்சல் குளத்தில் உள்ள மொத்த நீரையும் வெளியேற்றியபின்தான் அதை சரிசெய்ய முடிகிறது. காரணம் தற்போது கிடைக்கும் நீருக்கடியில் ஒட்டிக்கொள்ளும் தன்மைகொண்ட பசைப்பொருள்கள் அவ்வளவு வீரியமாக செயல்படுவதில்லை. இதற்குத் தீர்வு கிடைக்காதா என மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்த விஞ்ஞானிகளுக்கு, இயற்கை ஒரு வழியைக் காண்பித்திருக்கிறது.

பறக்கும் விமானம், நீர்மூழ்கிக் கப்பல் போன்ற உலகை மாற்றியமைத்த பலவிதமான கண்டுபிடிப்புகளுக்கு உந்துதலாக இயற்கைதான் இருந்துள்ளது. விமானம் கண்டுபிடிக்கப்பட்டதால் தான், உலகம் இன்று சில வாரங்களில் சுற்றிப்பார்க்கும் அளவுக்கு சுருங்கியுள்ளது. சமீபத்தில் அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கும் நீரிலும் ஒட்டிக்கொள்ளும் பசைக்குக் கூட இயற்கைதான் உந்துதலாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு உயிரினமும் தன்னை தாக்கவரும் எதிர் உயிரினத்திடமிருந்து தற்காத்துக்கொள்ள ஒரு வழியைக் கடைப்பிடிக்கும். வீட்டின் சுவர்களில் நடமாடும் பல்லியானது, தனது வாலை துண்டித்து எதிர் உயிரினத்தின் கவனத்தை திசை திருப்பி தன்னை தற்காத்துக்கொள்ளும். இதைப் போலவே சிப்பி வகை மீன்களில் ஒன்றான ஷெல் மீனானது, தன்னை எதிரிகள் தாக்கவரும்போது அருகிலுள்ள கடினமான பாறையில் வேகமாகச் சென்று மறைந்துகொள்ளும். எதிரியால் ஷெல் மீனை பாறையிலிருந்து அவ்வளவு எளிதாகப் பிரிக்க முடியாது. ஏனென்றால் தனது உடலில் உள்ள புரதத்தால் ஒருவிதப் பசையை உற்பத்தி செய்து அதன்மூலம் பாறையில் தன்னை ஒட்டிக்கொள்ளும். ஆபத்து நீங்கியபின் தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்ளும். இதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் நீருக்கடியிலும் ஒட்டிக்கொள்ளும் வலுவான பசையைத் தற்போது உருவாக்கியுள்ளார்கள்.

ஷெல் மீன்களின் உந்துதலில் கண்டுபிடிக்கப்பட்ட நீரிலும் ஒட்டிக்கொள்ளும் பசை

அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வேதியியல் விஞ்ஞானிகள் இதுகுறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். ஷெல் மீன்கள் வெளியிடும் பசையில் அமினோ அமிலமான டை-ஹைட்ராக்சி பினைல் அலனின் என்ற வேதிப்பொருள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதை அடிப்படையாகக் கொண்டு பாலி கேட்டகால் சிரன் என்ற பாலிமர் கலவையை, புரதத்தோடு சேர்த்து செயற்கை முறையில் பசையாக உருவாக்கியுள்ளனர். இந்தப் பசையானது ஷெல் மீன்களின் பசையைவிட 17 மடங்கு அதிகம் வலிமையானதாக இருப்பதாக விஞ்ஞானிகள் முதற்கட்ட ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், "ஷெல் மீன்கள் இதைவிடவும் வலிமையாக பசையை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஆபத்து நீங்கியபின் பாறைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு ஏதுவாக, குறைந்த அளவே வலிமை கொண்ட பசையை அது உற்பத்தி செய்ய வாய்ப்பிருக்கிறது" என செயற்கை பாலிமர் பசையைக் கண்டறிந்துள்ள வேதியியல் விஞ்ஞானி ஜானதன் வில்கர் (Jonathan Wilker) தெரிவித்துள்ளார். இந்த பாலிமர் பசையானது தற்போது கிடைக்கும் பசைகளை விட அலுமினியம், மரம் மற்றும் டெப்லான் பொருள்களை பத்து மடங்கு வலுவானதாகவும், விரைவாகவும் நீருக்கடியில் இணைக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இந்தப் பசைதான் தற்போதைக்கு நீருக்கடியில் ஒட்டிக்கொள்ளும் வலிமையான பசையாகக் கருதப்படுகிறது.

இயற்கையின் உந்துதலில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பசையைக் கொண்டு இனி நீருக்கடியில் மராமத்து வேலைகளை செய்வது எளிதாகும் எனக் கருதப்படுகிறது. இதை மேலும் வலிமையானதாக உற்பத்தி செய்யவும், நடைமுறைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் நீருக்கடியில் உள்ள பொருள்களை ரிப்பேர் செய்வது இந்தப் பசை மூலம் மிகவும் எளிதாகும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும், இயற்கைக்கு முன்னால் மனிதன் சிறியவன்தான் தான் என்பதை காலம் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

- கருப்பு
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close