Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தூக்கத்தைக் கெடுக்கணும்னே வருவீங்களாய்யா? - ஆம்னிபஸ் அடாவடிகள்!

சென்னை ட்ராஃபிக் வெள்ளத்தில் நீந்தி, வியர்வையில் கசங்கி ஊருக்குப் போகும் பஸ்ஸைப் பிடிப்பதுதான் கொஞ்ச காலம் முன்புவரை 'மேன் வெர்ஸஸ் வைல்டு' ரக சாகசமாக இருந்தது. இப்போது அந்த பஸ்களில் பயணிப்பதே பெரிய அட்வென்ச்சராகத்தான் இருக்கிறது. அடிக்கடி சென்னையில இருந்து வெளியூர் போற ஆளா பாஸ் நீங்க? அப்போ கண்டிப்பா இதெல்லாம் உங்களுக்கும் நடக்கும்தானே?

பஸ்

* எங்கே பஸ் ஏறுவது என்பதில் தொடங்குகிறது முதல் பஞ்சாயத்து. முதலில் டிக்கெட் புக் பண்ணும்போது சென்னைக்குள் நமக்கு வசதியான இடத்தில் ஏறுவதாக டிக் அடித்திருப்போம். கடைசி நேரத்தில் போன் செய்து, 'செல்லாது செல்லாது, நாங்க அப்டிக்கா பைபாஸ் வழியாதான் பரதேசம் போறோம்' எனப் பதற வைப்பார் டிரைவரண்ணன். அப்புறமென்ன அவசர அவசரமாய் ஆட்டோ, கார் என சிக்குவதில் ஏறி அவர்கள் சொன்ன இடத்துக்குப் போக வேண்டியதுதான்.

* எம்.டி.சி பேருந்துகளில் 'சீட் மாறி உட்காருப்பா' எனச் சொல்பவர்களைக்கூட விட்டுவிடலாம். ஆம்னி பஸ்ஸிலும் அதே அக்கப்போரா? கஷ்டப்பட்டு விண்டோ சீட் புக் செய்தால், 'சார் எனக்கு அப்பப்போ வாந்தி வரும்' என நம் புது சட்டையைப் பார்த்துக்கொண்டே சொல்வார்கள். தியாகம் செய்துவிட வேண்டியதுதான். இப்போதெல்லாம் ஸ்லீப்பர் பஸ்களிலும் சீட் மாறச் சொல்கிறார்கள். அடப்பாவிகளா இங்கேயுமா?

* பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் மட்டுமல்ல, சில சமயம் எதிரில் உட்கார்ந்திருப்பவரும் பிரச்னைதான். முழு ஜன்னலையும் திறந்து வைத்துவிட்டு தூங்கிவிடுவார்கள். அடிக்கிற காத்துக்கு நமக்குத்தான் அடிவயிற்றில் திரவம் முட்டும். அதையும் தாண்டி லைட்டாக கண்ணசரும்போது 'டொய்ங்' என ஹாரன் அடித்து வண்டிகள் கடக்கும். இந்தச் சத்தத்தில் தூக்கம் கோவிந்தாதான். 

* தொண்டை வரை தின்றால் பயணத்தின்போது அவஸ்தை என காலி வயிற்றைத் தண்ணீர் கொண்டு நிரப்பி வைத்திருப்போம். நம் நேரத்திற்கென கமகமவென மசால் தோசையை மடியில் வைத்து சாப்பிட்டுக் கதறவிடுவார் பக்கத்து சீட்டு ஜென்டில்மேன். முந்தின சீட் சிட்டிசன் சாப்பிட்டுக் கை கழுவிய தண்ணீர் காற்றில் நம் முகத்தில் அபிஷேகம் செய்ய, வயிற்றில் கிடக்கும் ஈரத்துணியை வைத்தே துடைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

* ஹெட்செட் மாட்டினாலும் சரி, ஹர்பஜன் ஸ்டைலில் இறுக்க அடைத்து துண்டு கட்டினாலும் சரி, இதில் இருந்து தப்பிக்கவே முடியாது. 'குறட்டை'. அமைதியாய் செல்லும் பேருந்தில் திடீரென ஜூராசிக் பார்க் சவுண்ட் எஃபெக்ட்ஸ் எல்லாம் கேட்கும். காது வைப்ரேஷன் மோடிலேயே இருக்கும். தூக்கத்தை பக்கத்து பஸ்சில் ஏற்றி அனுப்பிவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

* ஸ்லீப்பர் பேருந்துகளில் மட்டும் நடக்கும் அக்கப்போர் இது. பஸ் பிடிக்க வந்த களைப்பில் ஏறியதும் ஸ்க்ரீனை எல்லாம் இழுத்துவிட்டு கையை சுகமாய் முட்டுக் கொடுத்து தூங்கத் தொடங்கியிருப்போம். சட்டென ஸ்க்ரீனை தூக்கி, 'ஓ ஆள் இருக்கா? சாரி' என நகர்வார்கள். ஒரு ஸ்டாப்ல இப்படி நடந்தா பரவாயில்ல, ஒவ்வொரு ஸ்டாப்லேயும் இப்படி நடந்தா என்ன நியாயம் பாஸ்?

* இத்தனைத் தொல்லைகளையும் தாண்டி அதிகாலையில் தூக்கம் தூக்கிக்கொண்டு போயிருக்கும். விழித்துப் பார்க்கும்போது இறங்க வேண்டிய இடம் தாண்டி பத்து கிலோமீட்டர்கள் வந்திருப்போம். அப்புறமென்ன, தூங்கவிடாமல் செய்த ஒவ்வொருவரையும் மனசுக்குள் திட்டி, அத்துவானக் காட்டில் இறங்கி இன்னொரு பஸ் பிடித்து ஊருக்குப் போக வேண்டியதுதான்.

ஹேப்பி Journey ப்ரோ!

-நித்திஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement