Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நகக்கணுவில் நுழையும் சேறு' உழைக்கும் பெண்கள் பற்றிய கவிதையோடு தொடங்கட்டும் இந்நாள்!

பெண்கள்

 

இந்த உலகில் வேறு எதோடும் ஒப்பிட முடியாத அழகு என்ன தெரியுமா? உழைப்புதான். உழைக்கும்போதே மனிதர்கள் அழகாக தெரிகிறார்கள். பொங்கும் வியர்வையை ஒற்றை விரலால் வழிந்தெறித்துவிட்டு, தேநீரைச் சுவைக்கும் ஒருவர் எவ்வளவு பேரழகாக தெரிவார் இல்லையா? உழைப்பில் ஆண்கள், பெண்கள் எனும் பேதமில்லை.

உழைப்பு பற்றி பாவேந்தன் பாரதிதாசன் தன் கவிதையில்,

“உடலைக் கசக்கி உதிர்த்த
வேர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன்
இவ்வுலகு உழைப்பவர்க்கு
உரியதென்பதையே’’

என்று குறிப்பிடுவார். இந்தக் கவிதையில் மட்டுமல்ல பாரதிதாசனின் பல கவிதைகளிலும் உழைப்பை மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருப்பார்.

இன்னும் சொல்லப் போனால் ஆணை விட அதிக உழைப்பை பெண்கள் செலுத்துவதற்கு ஒருபோதும் தயங்குவதே இல்லை. வயலில் நாற்றுகளைப் பறிப்பது ஆண்கள் என்றால், முதுகு வலிக்க நாள் முழுவதும் அந்த நாற்றுகளை நடுவது பெண்கள்தான்.

விவசாயம் என்பதே பெண்களின் அளப்பரிய உழைப்பைக் கோருவதுதான். அந்த வேலைகளைக் கொஞ்சமும் சுணங்காமல் செய்துமுடிக்கவும் செய்கிறார் பெண்கள். நாற்று நடும்போது ஏற்படும் களைப்பைப் போக்கும்விதத்தில் பாடல்களைப் பாடிக்கொண்டே நடுவார்கள். அந்தப் பாடல் வரப்பு ஓரத்தில் புடவையில் தொட்டில் கட்டி தூங்க வைத்திருக்கும் குழந்தைகளுக்கு தாலாட்டு பாடலாகவும் மாறும். அந்தக் குழந்தையும் தன் அம்மாவின் குரலைக் கேட்டு, தூக்கம் கலைக்காமல் இருக்கும்.

அதெல்லாம் ஒரு காலத்தில் நடந்தது. இப்போதெல்லாம் இப்படி எங்காவது இருக்கிறதா என சந்தேகம் கொள்ள வேண்டாம். காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் நடக்கும்போது அங்கு சென்றால் இன்றும் அதைக் காணமுடியும். அற்புதமான நடவுப் பாடல்களைக் கேட்கவும் முடியும். அந்தப் பாடல்கள் களைப்பு நீக்கவும் குழந்தையின் தாலாட்டாகவும் மட்டுமல்ல. அந்தப் பகுதியின் வரலாறைப் பதிவு செய்வதாகவும் அமைந்திருக்கும். நாட்டுப்புற பாடல்களை ஆராய்ச்சி செய்யும் பலரும் இதை ஏற்றுக்கொள்கின்றனர். அந்தப் பாடல்களை அவர்களே உருவாக்கி, மெட்டமைத்து பாடுகிறார்கள். அதன் வழியே அவர்களிடம் இருக்கும் மொழியை, சொற்களை, பண்பாடுகளை பாதுகாக்கவும் செய்கிறார்கள்.

நடவு நடும் பெண்களைப் பற்றி, கவிஞர் யுகபாரதி எழுதிய கவிதை பலரின் விருப்பக் கவிதைகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனந்த விகடனில் 'தெரு வாசகம்' எனும் கவிதைத் தொடரில் அவர் எழுதிய கவிதைகளில் ஒன்று இது.

யுகபாரதி

நாற்று நடுபவள்


இன்னோரு இடத்தில்
வேரோடு
பாரியத் துயரை
பெண்களைப் போல
உணரமுடியாது ஆண்களால்

நகக்கணுவில் நுழைந்த
சேற்றுத் திமிரின்
ரணக் குறிப்புகளை எழுதுகிறாள்
ஏலேலோவில்

உழுத வயலின்
குழம்பு சொதசொதப்பில்
ஊறி வெடிக்கும்
பாத நுனிகளை

அள்ளித் தின்னும்
அத்தனை பருக்கையிலும்
காணச் சகியாதவர்கள்
பசிப் புரோகிதர்கள்

நாணிக் குனியாது
நடவுக்கு குனியுமிவள்
முதுகெலும்பில்
சோறுடைத்தக் குலப்பெருமை
சோரம் போனது

பேறுகாலத்து பெண்ணுடலில்
பால்வீச்சம் முகிழ்வதுபோல்
அடிக்கும் இவள்மீது
அடங்காத சேற்று வாடை

மண்வணக்கம் சொல்லி
அடைகிறாள் இடுப்புவலி
கதிர் பிரசவத்திற்கு

அக்குள் ஈரத்துடன்
தொடைதிரளும் வேர்வைக்கு
ஒப்புக்கொடுகிறாள் தன்னையும்

களஞ்சியம் நிறைக்க
நாற்று நட்ட சேதி போய்
கஞ்சிக்கு அலைகிறாள்
காவிரியம்மை.

வீடுகளிலும் வெளியிலும் பெண்களின் உழைப்புக்குத் தக்க மதிப்பும் சன்மானமும் கிடைப்பதில்லை. அவற்றைக் கோரிக்கொண்டே தன் பணிகளைச் செய்துவருகின்றனர். உழைக்கும் பெண்களின் வியர்வை மதிப்போம். பெண்கள் பற்றிய கவிதைகளை பரப்புவோம்.

- வி.எஸ்.சரவணன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close