Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீமைக் கருவேலமரத்தின் கதையும்... ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் நக்கலும்...!

சீமைக் கருவேல மரம்

''எங்களை அழிப்பதற்கு முடிவெடுத்துவிட்டீர்கள்; அதில், எங்களுக்கு மிகவும் சந்தோஷம். 'என்னால்தான் விவசாயம் பாதிக்கப்படுகிறது; நிலத்தடி நீரும் உறிஞ்சப்படுகிறது. ஆகவே, எங்களை அகற்ற வேண்டும்' என மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ.  இதையடுத்து, 13 மாவட்டங்களில் இருக்கும் எங்களை அகற்ற, இல்லையில்லை அடியோடு அழிக்க உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. அதற்கான பணிகளும் தீவிரமாய் அரங்கேறிவருகின்றன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நாங்கள் அகற்றப்பட்டு வருகிறோம். எங்களை முழுமையாக முடிப்பதற்குள், எங்கள் கதையைத் தன் வரலாறாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறோம். சீமைக் கருவேல மரம் (சில இடங்களில் காட்டுக்கருவை) என்பதுதான் எங்களுடையப் பெயர் என்பதை முதலில் உங்களுக்கு நினைவுபடுத்திக்கொள்கிறோம்.

'வேதனையும்... விடியலும்'!

இப்போது ஒரு முடிவோடு களத்தில் இறங்கி... எங்களை அழித்துவரும் வைகோவை, கடந்த 12-ம் தேதி சென்னை அயனாவரத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற 'வேதனையும்... விடியலும்' என்கிற பொதுக்கூட்டத்தில், அந்தக் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இப்படித்தான் வறுத்தெடுத்தார். 'கடந்த தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சியினர், விஜயகாந்த், தொல்.திருமாவளவன் என எல்லோரையும் முடித்துவிட்டு... இப்போது மரம் வெட்டுகிறார்; அவருடைய தொழில், இப்போது மரம் வெட்டுவது; வேட்டி கட்டினால் அடையாளம் தெரியும் என்பதற்காக பேன்ட்டையும் டிசர்ட்டையும் போட்டுக்கொண்டு, தலையில் சால்வையைப் போர்த்திக்கொண்டு மரத்தை வெட்டிக்கொண்டிருக்கிறார்; கல்லூரியிலே, எனக்குச் சீனியராக இருந்தவர்; மிகச் சிறந்த பேச்சாளர்; தமிழும் இலக்கியங்களும் அவரிடம் விளையாடும்; அவ்வளவு திறமையான மனிதர், இப்போது மரம் வெட்டச்சென்றுவிட்டாரே; வைகோ, இந்தத் திராணியை எதற்கெடுத்திருக்கிறார்; விறகு எதற்குத் தயார் செய்கிறார்; ஏற்கெனவே, பாடை தூக்கிப் பலபேரைத் தொலைத்தாகிவிட்டது. இப்போது தயார் செய்யும் விறகுகள் யாரை எரிப்பதற்கு' என வைகோவை வறுத்தெடுத்து, பார்வையாளர்களை வயிறுகுலுங்கச் சிரிக்கவைத்தார், ஈ.வி.கே.எஸ். இதனால், அவர் எங்களுக்கு ஆதரவளிப்பதாக நினைக்க வேண்டாம். எங்களைவைத்து வைகோவை வசைபாடிவிட்டார். அவ்வளவுதான்!

வைகோ

''ஆங்கிலேயர் ஆட்சியில் அறிமுகம்!''

அவர்மீது எந்தத் தவறுமில்லை; வளர்ந்ததும் வாழ்வை இழப்பதும் வருத்தப்படுவதும் நாங்கள்தான். ஆகையால், தேவையில்லாததைச் சொல்லி நேரத்தைக் கடத்துவதைவிட, எங்கள் கதையைத் தொடர்கிறேன். புரோசோபிஸ் ஜுலிபுளோரா என்பது எங்களுடைய அறிவியல் பெயர். வறட்சியைத் தாங்குபவையாகவும், விரைவாக இனத்தைப் பெருக்குபவையாகவும் நாங்கள் இருப்பதால்... எங்கேயும் எளிதாய் வளர்ந்து நிற்கிறோம். மெக்சிகோ, பெரு, சிலி போன்ற தென் அமெரிக்க நாடுகளே எங்களுடைய தாயகம். வேலிக்காத்தான், வேலிக்கருவை, உடைமரம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் எங்களின் விதைகள், கர்மவீரர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் விமானம் மூலம் பரப்பப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 

'சீமை' என்ற பெயர்!

ஆனால், 1876-ம் ஆண்டே நாங்கள் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஆவணங்கள் சொல்கின்றன. அவர்கள், அறிமுகப்படுத்தியதால்தான் என்னவோ தெரியவில்லை. நாங்கள் 'சீமை' என்ற பெயரைத் தாங்கி நிற்கிறோம். அன்றைய மதராஸ் மாகாணத்தில் இருந்த கடப்பாவில் உள்ள கமலாபுரத்தில் நாங்கள் விதைக்கப்பட்டதாக அவை சொல்கின்றன. ஆங்கிலேயர்களின் தேவைகளுக்காகவும், இதரப் பயன்பாட்டுக்காகவும் இங்கிருந்த சந்தனம், தேக்கு, வேங்கை முதலிய மரங்கள் அழிக்கப்பட்டதால், அதனை ஈடுகட்ட எங்களை நட்டதாகச் சொல்லப்படுகிறது. இவற்றையெல்லாம் நாங்கள் பெருமைக்காகச் சொல்லவில்லை. இருந்தாலும், இன்னும் மிச்சமிருக்கிற எங்கள் கதையைச் சொல்லிவிட்டு விடைபெறுகிறோம். 

''சிதைக்கக் கூடியவர்கள்!''

எங்களை அழிப்பதற்கான முதல் காரணம், நம் நாட்டில் உள்ள இருபத்தைந்தாயிரம் தாவர இனங்களில் நாற்பது சதவிகிதம் அயல்நாட்டைச் சார்ந்தவை; அவற்றில், பதினைந்து முதல் இருபத்தைந்து சதவிகித இனங்கள் மற்ற இனங்களுக்கும், உயிர்களுக்கும் தொல்லைகொடுப்பவை. இதில்,  நாங்களே முதலில் நிற்பவை. நாங்கள், விவசாய நிலங்களை மட்டுமல்லாது... சிறு புல் பூண்டுள்ள தாவரங்களையும் சிதைக்கக் கூடியவர்கள். எங்களைக் காப்பதற்காக நிலத்தடி நீரை நாங்கள் அதிக அளவில் உறிஞ்சுவதால்... எங்கள் அருகில் தஞ்சமடைந்திருக்கும் மற்ற இனங்கள் இதனால் மாண்டுவிடுகின்றன. நாங்கள் நூறு மீட்டர் ஆழத்துக்கு வேர்விட்டு, பன்னிரண்டு மீட்டர் உயரத்துக்கு வளர்வதாகவும், எங்களைச் சுற்றி ஐம்பத்தைந்து மீட்டர் அகலப் பரப்புக்கு நீர் எங்கிருந்தாலும் அதை நாங்கள் உறிஞ்சிவிடுவதாகவும்  ஆய்வாளர்கள் ஆய்ந்து சொல்லியுள்ளனர். விறகு தேவைக்காக, நாகை மாவட்ட சரணாலயத்தைச் சுற்றி நாங்கள் நடப்பட்டோம். எங்கள் இலைகளை உண்டு, இங்கிருந்த சில விலங்குகள் இனப்பெருக்கமின்றி அழிந்துபோனதாகவும், எங்கள் மரத்தின் கனிகளை (சுக்ரோஸ் என்ற இனிப்புச் சுவை உடையவை)  விரும்பியுண்ணும் கால்நடைகள் மலடாவதாகவும் ஆய்வில் சொல்லப்படுகிறது. 

சீமைக் கருவேல மரம்

''வேரோடு பிடுங்கி எறியுங்கள்!''

ஆக, எங்களை முற்றிலும் அழித்துவிட்டால், மண்வளம் கிடைக்கும்; மழை பொழியும் என்று சொல்வதை... எங்களால் முழுதாக ஏற்க முடியவில்லை. இருந்தாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் பறவைகள் தேசியப் பூங்காவில் நாங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதால்... குறைந்துகொண்டேபோன அந்தப் பூங்காவில் இருந்த பறவைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதை, ஐ.நா சபையும் பாராட்டியிருக்கிறது. எங்கள் அழிவில்தான் நாட்டின் வளம் இருக்கிறது என்பதை நாங்கள் ஒருவகையில் ஒப்புக்கொள்கிறோம். அதற்காக எங்களைப் பாதியோடு வெட்டிவிட்டு நிறுத்திவிடாதீர்கள். வேரோடு பிடுங்கி எறியுங்கள்; அதற்காக ஆசிட்டையோ அல்லது வேறு ஏதாவது ஒன்றை ஊற்றியோ அழிக்க நினைத்தால் உங்களுடைய மண்வளம்தான் கெட்டுப்போகும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். 

நடிகர் சூர்யா

பெருகும் ஆதரவு!

கடைசியாக, ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். 'எங்களை அகற்ற இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வருவது வரவேற்கத்தக்கது' என்று நடிகர் சூர்யா சொன்னதும், 'ஜாமீனில் வெளிவரும் குற்றம்சாட்டப்பட்டவர், இருபது நாட்களுக்குள் நூறு சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்' என அரியலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.ஏ.ரஹ்மான் உத்தரவிட்டிருப்பதும், 'நம் மனங்களில் மண்டிக்கிடக்கும் விஷச் செடிகளை அடியோடு களைந்து, புறத்தில் உள்ள எங்களையும் அகற்றவேண்டும்' என ஜோதிமலை இறைபணித் திருக்கூட்டம் அமைப்பின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகளும் களம் கண்டிருப்பது எங்களுக்கு மிகவும் சந்தோஷம். இதேபோல் மற்றவர்களும் எங்களை அழிப்பதில் தீவிரம் காட்டுங்கள்; இந்த நாட்டு மரங்களை வைத்து மண்வளத்தைப் பெருக்குங்கள். குட் பை.''
 

- ஜெ.பிரகாஷ் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement