இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால்.. அசால்ட் காட்டலாம் ஃப்ரெண்ட்ஸ்! #MondayMotivation

தினசரி பிரச்னைகளையும் சரி, நிரந்தரப் பிரச்னைகளையும் சரி, ஐந்து விஷயங்களைக் கையாண்டால் அசால்டாகக் கடந்துவிடலாம் என்கின்றனர் அறிஞர்கள். எழுதவோ, படிக்கவோ ஈஸியாகத் தோன்றுகிற விஷயங்கள்தாம். ஆனால், பின்பற்றத்தான் கடினமாக இருக்கும். ஆனால் பின்பற்றிவிட்டால், ‘நான் ராஜா.. நான் ராஜா!’ (இல்லன்னா.. ராணி) என்று பாட்டுப் பாடிக்கொள்ளலாம்.  படித்து முடித்ததுமே இந்த ஐந்து பாய்ண்ட்ஸையும் நீங்கள் உங்கள் மேஜையில் எடுத்து ஒட்டிவைத்துக் கொள்ளப்போகிறீர்கள் என்பது உறுதி!

1. பழையன கழி

பழைய விஷயங்களை மனதில் இருத்திக் கொண்டு இருப்பதே பெரும்பாலான பிரச்னைகளில் இருந்து நம்மை வெளிக்கொண்டு வராமல் சுழலவைக்கிறது. ’அன்னைக்கு அவன் அப்டிச் சொன்னானே’வில் ஆரம்பித்து ‘மேனேஜர் திட்டுவாரே.. போன வாட்டியும் அப்படித்தான்’,   ‘அவளை மறக்க முடியலடா’ என்று நட்பு, அலுவல், பெர்சனல் என்று எல்லா இடங்களிலும் பழையதை  மனதில் வைத்துக்கொண்டு கையாண்டால்... சிக்கலை அவிழ்க்கவே முடியாது ஃப்ரெண்ட்ஸ். தூக்கித்  தூரப்போடுங்க!
 
2. உங்களை நீங்களே குறைச்சுக்காதீங்க

மனம் கலக்கமாக  இருக்கும்போது நம்மைப் பத்தி நாமே கழிவிரக்கமாக சிந்திப்பது பலரின் இயல்பு. ‘எனக்கு ஏன் இப்டி ஆச்சு. நான் இதை எப்படிக் கடந்து போவேன்’  என்று ஆரம்பித்து நம்மைத் தாழ்த்திக்கொள்வது மிகவும் தவறு. அப்படி ஒரு மனநிலைக்கு நாம் தள்ளப்பட்டால், பிறகு அந்தப் பிரச்னையைக் கையாள்வதிலும் சிக்கல் வரும். ‘இதெல்லாம் பார்த்துக்கலாம்பா’ என்ற ஒரு திடமான மனநிலையில் இருங்கள்.

3. எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது

ஒரு பெரிய அண்டர்லைன் செய்துகொள்ளுங்கள் இந்த வாக்கியத்திற்கு. ஒரு விஷயத்தில் முடிவெடுக்க, கடந்து போக  நாம் காலம் தள்ளுவதும் தயங்குவதும் இந்த ஒரு காரணத்தால்தான். பலவாறாக சிந்தித்து ‘அவன் என்ன சொல்லுவான்.. இவன் என்ன சொல்லுவான்’ என்று நினைப்போம். ஒரு கல்யாணத்துக்கு கார்ட் தேர்வு செய்வதில் இருந்து, பெரிய ஒரு ப்ராஜெக்டை ஒப்புக்கொண்டு கையெழுத்து போடுவதுவரை இந்தச் சிக்கல் இருக்கும்.  எப்போதும் இந்த 3வது பாய்ண்டை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

monday motivation

4. மாற்றத்திற்கு பயப்படுதல்  

சில பிரச்னைகள், சூழ்நிலைகளின்போது, அதற்குப் பிறகான மாற்றத்திற்கு நம் மனம் தயாராகாது. உதாரணமாக, சிலருக்கு அவர்கள் வேலை செய்யும் அலுவலகம் குறித்த குறைகள் இருக்கும். பிடிக்காது. ஆனாலும் திட்டிக்கொண்டே அங்கேயேதான் வேலை செய்வார்கள். ஏனென்றால், புதிய இடம், புதிய சூழலுக்கு பயம்.  “ஒரு 5000 ரூபாய் ஜாஸ்தி கிடைக்கும்தான். ஆனாலும் இந்த ஆஃபீஸை விட்டுப் போக மனசில்லை” என்பார்கள். ஆனால் புதிய மாற்றத்திற்கு பயப்படாமல் துணிந்து அடி எடுத்து வைத்த பலரும் வெற்றியை மட்டுமே எட்டியிருக்கிறார்கள்.  

 5. அளவுக்கதிகமாக சிந்தித்தல்

இது மிகவும் ஆபத்தானது.  ஆனால் இதைச் செய்கிறோம் என்று நமக்கே தெரிவதில்லை என்பதுதான் உண்மை. ஒரு விஷயத்தைப் பற்றி நினைத்துக்கொண்டே இருப்பது. இதனால் சாதக பாதகங்களைக் குறித்த அச்சமே அதிகமாகும். ஒருமுறைக்கு இருமுறை.. ஏன் நான்கைந்து முறைகூட அலசுங்கள். ஆனால் நாள் முழுவதும் அதையே நினைத்துக்கொண்டிருப்பது இடியாப்பச் சிக்கலைத்தான் தரும். 

இவற்றையெல்லாம் பின்பற்றிப் பாருங்கள்.  ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றுவது பிறகு சுலபமாகும். சுலபமானால், அது பழக்கமாக மாறும்.  எந்தச் சிக்கலையும் எளிதில் கையாளப்பழகுவீர்கள். பிறகு வெற்றிகள் வசமாகும்! 
 

- பரிசல் கிருஷ்ணா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!