Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அன்னி பெசன்ட் அம்மையாருக்கும் சகோதரி நிவேதிதாவுக்குமான 7 ஆச்சர்ய ஒற்றுமைகள்!

அன்னி பெசன்ட் அம்மையார்

ந்தியாவில் பிறக்காவிட்டாலும் அன்னை தெரசா போலவே, இந்தியாவின் அன்னையர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள், அன்னி பெசன்ட் அம்மையாரும் சகோதரி நிவேதிதாவும். இந்த இருவருக்கும் ஆச்சர்யமான சில ஒற்றுமைகள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்வோமா? 

* இருவரின் தாய்நாடும் அயர்லாந்து. ஐரிஷ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அக்டோபர் மாதம் பிறந்தவர்கள். மார்கரெட் எலிசபெத் நோபல் (Margaret Elizabeth Noble) என்கிற இயற்பெயர் கொண்ட சகோதரி நிவேதிதா, அக்டோபர் 28, 1867-ல் அயர்லாந்து நாட்டின் வடபகுதி மாகாணமான, டைரோனில் உள்ள டங்கனன் எனும் ஊரில் பிறந்தார்.

 
அன்னி வூட் பெசன்ட் (Annie Wood Besant), அக்டோபர் 1, 1847-ல் லண்டனில் பிறந்தவர். எனினும், இவரின் தந்தை வில்லியம் பைஜ்வூட் அயர்லாந்தில் பிறந்து லண்டனில் குடியேறியவர்.

* இருவரும் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர்கள். மார்கரெட் எலிசபெத் நோபலின் தந்தை சாமுவேல் ரிச்மண்ட், மத போதகராகப் புகழ்பெற்றவர். ஏழைகளுக்குச் சேவை புரிந்து வந்தவர். கடின உழைப்பு காரணமாக, முப்பத்து நான்காம் வயதிலேயே மறைந்தார். அன்னி பெசன்ட், தனது ஐந்தாவது வயதிலேயே தந்தையை இழந்தவர். 

* சிறு வயதிலேயே ஏசு கிறிஸ்து மீது ஈடுபாடு மிக்கவராக இருந்தாலும், மதம் என்பது கோட்பாடுகளை நம்புவதல்ல; உண்மைப் பொருளுக்கான தேடல் என்ற தமது கருத்தால், சர்ச்சுக்கு செல்வதை நிறுத்தியவர் மார்கரெட் எலிசபெத். பிறகு, மாற்று மதத்தில் உள்ள கோட்பாடுகளை அறியும் பொருட்டு, புத்த மதம் பற்றி பயின்று, அந்தப் போதனைகளில் ஈடுபாடுகொண்டார்.


பிராங்க் பெசன்ட் என்ற மத குருவை மணந்த அன்னி பெசன்ட், இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட நோயினால் மனமுடைந்து நாத்திகரானவர், சீர்திருத்தக் கருத்துகளைப் பிரசாரம் செய்ததால், மத குருமார்களின் எதிர்ப்புக்கு ஆளானார்.

* ஆசிரியையாக தமது பணியைத் தொடங்கிய மார்கரெட் எலிசபெத், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெஸ்டலாஜி எனும் ஆசிரியர் கண்டுபிடித்திருந்த புதிய கல்விமுறையின் மீது ஈடுபாடு ஏற்பட்டு, அதனை அனைவருக்குமான கல்வியாக நடைமுறைக்குக் கொண்டுவர, 1890-ம் ஆண்டு லண்டனுக்குச் சென்றார். சமூகப் பிரச்னைகளுக்கான கருத்துகளைத் தனது எழுத்துகள் மூலம் வெளிப்படுத்தினார்.

 
பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்த அன்னி பெசன்ட், கணவன் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து லண்டனுக்குத் திரும்பினார். 'நியூமால் தூசியன் அமைப்பு' என்ற சீர்திருத்தச் சங்கத்துக்குத் தலைவியானார். 'லிங்க்' என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி... பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார். 

* 1895-ம் ஆண்டில் லண்டனில் விவேகானந்தரைச் சந்தித்து அவருடைய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார் மார்கரெட் எலிசபெத். எனினும், விவேகானந்தருடன் பல்வேறு விஷயங்களில் கடுமையான விவாதங்களை நடத்தினார். '’என் நாட்டுப் பெண்களின் கல்வி குறித்த திட்டங்களில் நீ பெரிதும் உதவ முடியும்'' என்ற விவேகானந்தரின் அழைப்பை ஏற்று, 1898-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார்.

 
1889-ம் ஆண்டில் பாசிரில் 'The Secret Doctrine' என்ற நூலை எழுதிய பிளேவட்ஸ்கி அம்மையாரைச் சந்தித்தது, அன்னி பெசன்ட் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. நாத்திகத்தைக் கைவிட்டு ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் பிரும்மஞான சங்கத்தில் உறுப்பினரானார். 1891-ம் ஆண்டு பிளேவட்ஸ்கி இறந்ததை அடுத்து, 1893-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார். 

சகோதரி நிவேதிதா

* சுவாமி விவேகானந்தரிடம் பிரம்மச்சரிய தீட்சை பெற்று நிவேதிதா ('தெய்வத்துக்கு அர்ப்பணிப்பு' என்று பொருள்) என்ற பெயரைப் பெற்றார் மார்கரெட் எலிசபெத். அன்னை சாரதா தேவி நடத்திய பள்ளியில் கல்விப் பணி, பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி எனப் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டார். 1902 டிசம்பர் 19-ம் தேதி சென்னைக்கு வந்தவர், சொற்பொழிவுகளில் பங்கேற்றார்.

 
சென்னைக்கு வந்து அடையாற்றில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார் அன்னி பெசன்ட். இந்து சாத்திரங்களை ஆழ்ந்து படித்து, பல நூல்களை எழுதினார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'காமன் வீல்' என்ற வார இதழையும், 'நியூ இந்தியா' என்ற நாளேட்டையும் ஆரம்பித்து, சுதந்திரப் போராட்டம் மற்றும் சமூகப் பிரச்னைகளை எழுதினார்.

* சகோதரி நிவேதிதாவை, மகாகவி பாரதியார் தமது குருவாகக் குறிப்பிடுவார். ஒருமுறை, ''உங்கள் மனைவியை அழைத்து வரவில்லையா?'' என பாரதியாரிடம் கேட்டார் சகோதரி நிவேதிதா. அதற்கு பாரதியார், ''சமுதாய வழக்கப்படி அவரை வெளியில் எங்கும் அழைத்துச் செல்வதில்லை'' என்றார். ''உங்கள் மனைவிக்கே நீங்கள் சம உரிமையும் விடுதலையும் கொடுப்பதில்லை. நாட்டுக்கு எவ்வாறு விடுதலை பெற்றுத்தரப் போகிறீர்கள்?'' எனக் கேட்டு, பாரதியாருக்குப் பெண்களின் முன்னேற்றத்துக்கான சிந்தனையைத் தூண்டியவர். இந்தியர்களின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து உழைத்த நிவேதிதா, அக்டோபர் 13, 1911 அன்று டார்ஜிலிங்கில் மறைந்தார்.

 
சுதந்திரப் போராட்டத்துக்காக இந்திய அரசியலிலும் ஈடுபட்டு, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் ஓராண்டுக்கு இருந்த அன்னி பெசன்ட் அம்மையார், பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகினார். இந்திய மெய்யியலாளரான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி உதவியுடன், பிரும்மஞான சபையின் முன்னேற்றத்தில் முனைப்பாக ஈடுபட்டார். 1933-ம் ஆண்டு செப்டம்பர் 20-ல் சென்னையில் காலமானார்.

- கே.யுவராஜன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement