Published:Updated:

'கட்சி மாறப்போகிறேன்!' - நிர்மலா பெரியசாமி காட்டம் #VikatanExclusive

விகடன் விமர்சனக்குழு
'கட்சி மாறப்போகிறேன்!' - நிர்மலா பெரியசாமி காட்டம் #VikatanExclusive
'கட்சி மாறப்போகிறேன்!' - நிர்மலா பெரியசாமி காட்டம் #VikatanExclusive

திமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி பன்னீர்செல்வம் குறித்துப் பேச, 'அவரைப் பற்றி இங்கு பேசக் கூடாது' என்று வளர்மதி கோபமாக குரலை உயர்த்தியிருக்கிறார். 

'மக்கள் செல்வாக்கு உள்ளவரைப் பற்றி பேசுவதில் தவறில்லை' என்றவரிடம் , 'நீங்கள் எல்லாம் ஒரு முடிவோடுதான் இருக்கிறீர்களா? அப்படியென்றால் ஏன் இங்கு வருகிறீர்கள்?' என்றிருக்கிறார் வளர்மதி. 'ஜெயலலிதா தொடங்கிய கட்சியும், இரட்டை இலைச் சின்னமும் இங்கு இருப்பதால்தான் வருகிறோம்' என்றவருக்கு எதிராக சி.ஆர்.சரஸ்வதி, குண்டு கல்யாணம் கிளம்ப, கூடவே வளர்மதியும் சேர்ந்துகொள்ள ரகளையாகிப் போனது கூட்டம். அதைத் தடுக்க நினைத்த நிர்மலா சட்டென அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். 

நிர்மலா பெரியசாமியிடம் பேசினோம்... ‘‘நேற்று அஜய்ரத்னம், விக்னேஷ் மற்றும் நான் மூவரும் பேசிக் கொண்டிருந்தோம். அச்சமயத்தில் ஓ.பி.எஸ் அண்ணன் மட்டும் எதிரியா...? கண்டிப்பா எல்லாரும் இங்கேயே திரும்ப வந்திருவாங்கனு பேசிட்டு இருந்தோம். ஆனா வளர்மதி நாங்க பேசினதைச் சரியா காதுல வாங்கிக்காம, 'ஓ.பி.எஸ் பத்தி நீங்கப் பேசக்கூடாது. உங்களுக்கு பிடிச்சா அங்கப் போங்க'னு என்னோட வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பிச்சுட்டாங்க. அவருக்கு ஆதரவாக சி.ஆர். சரஸ்வதியும், குண்டு கல்யாணமும் சேர்ந்து கொண்டார்கள். இவர்கள் யாரையும் நான் எனக்குச் சரிசமமாக நினைக்கவில்லை என்பது அவர்களுக்குத் தெரியாது. 

சி.ஆர். சரஸ்வதி, ஓ.பி.எஸ் அணியில் தாவுவதற்கு தூது விட்டவர். அவரை ஓ.பி.எஸ் வேண்டாம் என்று சொல்லிவிட்ட கடுப்பில் இருக்கிறார். அந்தக் கதையெல்லாம் எனக்குத் தெரியாதுனு நினைச்சுட்டாங்க. வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதியோட மறுபக்கம் மக்களுக்குத் தெரிய வேண்டும். 

கட்சியில இருந்து விலகிப் போன எல்லாரும் ஒண்ணு சேரணும்னுதான் எனக்கு ஆசை. அதையேதான் தினகரனும் சொல்லியிருக்காரு. அந்த அடிப்படையில் நாங்கள் எங்களுக்குள் பேசிட்டு இருந்தோம். ஆனா தேவையில்லாமல் உள்ளே நுழைந்து அரசியல் பண்ணின வளார்மதிகிட்ட 'உங்களோட லெவலுக்கு என்னால் இறங்க முடியாது'னு சொல்லிட்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்பிட்டேன். 

எனக்கு ஓ.பி.எஸ் அண்ணன் உட்பட நிறைய பேர்கிட்ட இருந்து அழைப்பு வந்துட்டு தான் இருக்கு. இவ்வளவு நெகடிவ்வான ஆட்கள் மத்தியில் இனிமேல் வேலை பார்க்க முடியுமானு தெரியல. இப்படியொரு சூழலை உருவாக்கணும்னு பிளான் பண்ணித்தான் செஞ்சிருக்காங்க. கட்சித் தலைமை வேறு எங்கும் செல்ல வேண்டாம்னு வேண்டுகோள் விடுத்திருக்காங்க. ஆனா உங்களுக்கு மட்டும் சொல்றேன்... இதுக்கு மேல் அதிமுக.வில் தொடர எனக்கு விருப்பமில்லை. நிச்சயம் கட்சி மாறப் போகிறேன்'' என்று முடித்துக் கொண்டார். 

நிர்மலா பெரியசாமியின் முடிவு பற்றி அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதியிடம் கேட்டோம். ‘அதிமுகவைப் பொறுத்தவரை அனைவருமே சமம்தான். நாம் எங்கு இருக்கிறோமோ அந்த இடத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். வளர்மதி அக்கா எவ்வளவு சீனியர், அவங்க உட்பட எல்லாரையும் எடுத்து எறிஞ்சு பேசினாங்க. தன்னைப் பெரிய ஆளா நினைச்சுக்கிறாங்க. இந்த விஷயம் தலைமை அலுவலகத்துல தான் நடந்தது. என்ன நடந்ததுனு எல்லாருக்கும் தெரியும். இந்த விஷயத்துல கட்சித் தலைமைதான் இனி முடிவு எடுக்கணும்’ என்று முடித்துக் கொண்டார்.

- ஆர். ஜெயலெட்சுமி.

அடுத்த கட்டுரைக்கு