Published:Updated:

"உலக பொறியியலாளர்கள் வியந்த தமிழக அணைக்கட்டுகள்!" : கார்ப்பரேட் கொள்ளையும்... நாம் கொடுக்கும் விலையும்! அத்தியாயம் - 9

"உலக பொறியியலாளர்கள் வியந்த தமிழக அணைக்கட்டுகள்!" : கார்ப்பரேட் கொள்ளையும்... நாம் கொடுக்கும் விலையும்! அத்தியாயம் - 9
News
"உலக பொறியியலாளர்கள் வியந்த தமிழக அணைக்கட்டுகள்!" : கார்ப்பரேட் கொள்ளையும்... நாம் கொடுக்கும் விலையும்! அத்தியாயம் - 9

"உலக பொறியியலாளர்கள் வியந்த தமிழக அணைக்கட்டுகள்!" : கார்ப்பரேட் கொள்ளையும்... நாம் கொடுக்கும் விலையும்! அத்தியாயம் - 9

திகளின், நீண்ட வாழ்க்கையில் அணைகளின் வருகை ஓர் அழகிய வரவு. நீரிலே கூடுகட்டிப் பார்க்கும் முயற்சியை மனிதன் முதலில் செய்துபார்த்தான். கட்டுப்பாடு இல்லாமல் வேகத்தோடு பாய்ந்து செல்லும் நீரை ஒரே இடத்தில் பிடித்து நிற்கவைப்பது அத்தகைய சுலபமானதல்ல. மனிதன் எப்படியோ அதனைக் கற்றுக்கொண்டுவிட்டான். அணைக்கட்டுகளின் வருகை நிகழவில்லை என்றால், வெள்ளத்தையும் வறட்சியையும் வென்று நிற்கும் வெற்றி முகம், ஆறுகளுக்கு கிடைத்திருக்காது. 

இந்த வெற்றிக்குமுன் அமைந்த மனித துயரங்கள் முக்கியமானவை. நீரற்ற காலங்களில் உணவு கிடைக்காமல் வயிற்றுப் பசிக்கொடுமை, கூட்டம் கூட்டமாக மக்களைக் கொன்று முடித்தது. இதைவிடவும் வேதனை, நீர் பெருக்கெடுக்கும் காலங்களில் வெள்ளம் விரட்டி, விரட்டி மனிதக் கூட்டத்தை நீரில் மூழ்கடித்தது. இவை எல்லாவற்றுக்கும் தீர்வுகண்ட விஞ்ஞானிகள்தான் அணைக்கட்டுகள். வெள்ளக் காலங்களில் உயிரைக் காப்பாற்றியதைப்போல, வறட்சிக் காலத்தில் தன் சேமிப்பிலிருந்து மதகு திறந்து... மனிதருக்கு மட்டுமல்லாது, அனைத்து உயிரினங்களின் தாகம் தீர்த்து, பசியைப் போக்க, விவசாய வாழ்க்கையை விரிவாக்கி உறுதிபடுத்திக்கொடுத்தன அணைக்கட்டுகள். வறட்சியைச் செழிப்பாக மாற்றும் தந்திரம் அறிந்த அணைக்கட்டுகள் பற்றி, இன்றைய சூழலியல் உலகு, மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளன.

பெரிய அணைகள், நெருக்கடி காலங்களில் பெரும் ஆபத்தைத் தந்துவிடுகின்றன என்பதை பிரசாரம் செய்கின்றன. சிற்றணைகளைக் கட்டுங்கள் என்கிறார்கள். மாபெரும் அணைகள் கட்டப்படுவதை எதிர்த்துப் போராட்டங்கள் தீவிரமடைகின்றன. பிரமாண்டங்கள் என்பதைவிட ஆபத்தற்றவற்றை யோசிக்க வேண்டும் என்பதே இன்றைய புரிதல். நதிகளுக்கும் அணைகளுக்குமான தொன்மையான தொடர்புகளை ஆய்வு செய்ததில், ஆரம்ப நாட்களில் தமிழக நதிகள் அனைத்திலும் அணைக்கள் இருந்தன என்பதற்கும், இவை ஆபத்தற்றவைகள் என்பதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. நதி போக்குக்கு ஏற்றவாறு தொடக்க காலங்களிலேயே நாம் அணைகளை அமைத்துள்ளோம். ஆனால், நமது நதிகளின் அணைகள் பற்றிய ஆவணங்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. சில ஆறுகளின் அணைகள் பற்றிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுபற்றிய முழுமையான ஆதாரங்கள் இல்லாமல்போனது வருத்தத்துக்குரியதுதான். நமது தொன்மையான அணைகளைப் பார்த்து, இன்றைய உலக பொறியாளர்கள் அனைவரும் பெரிதும் வியந்துபோகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியிலும், கிழக்குத் தொடர்ச்சி மலையிலும் நிறைந்துள்ள நீர்வளத்தை ஒன்றுதிரட்டி, ஆக்கப்பூர்வமான படை வீரர்களைப்போல, அழைத்துவரும் தென்பெண்ணைக்கு, ஆண்டில் பல மாதங்கள் வெள்ளப்பெருக்கு நிகழ்ந்த காலம் அது. அதில், வெள்ளத்தின் வேகத்தைக் குறைத்து, நீரின் ஓடு திசையை மாற்றி, வேளாண்மைக்கு நீரைப் பயன்படுத்தும் அணைகள் தேவைப்பட்டிருக்கும். காவிரியில் கல்லணையும், தாமிரபரணியில் மருதூர் அணையும் இருப்பதைப்போல தென்பெண்ணையிலும் ஏதேனும் ஆதி அணைகள் இருந்ததா? ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சில அணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆதிகாலத்தில் இருந்த கட்டுமானங்களை அறிந்து, அதிலிருந்துதான் அணைகட்டும் பணியை பிரிட்டிஷார் தொடங்கினார்களா போன்ற கேள்விகளை உள்ளடக்கிய ஆய்வுகள் எதிர்காலத்தில் தேவைப்படுகின்றன.

ஆங்கிலேயர் கட்டிய ஒவ்வோர் அணைக்கும் நம் பாரம்பர்ய நீர்த்தேக்கங்களுக்கும் உட்தொடர்பு இல்லாமல் இல்லை. இதற்கான தடயங்கள் குறைவாகவே நமக்குக் கிடைத்துள்ளன. எப்படிப் பார்த்தாலும், நீரியல் மேலாண்மையின் அணைகள் கட்டுமானத்தில் உலக அளவிலான பங்களிப்பு தமிழ் மக்களுக்கு உண்டு என்பதை மட்டும் யாராலும் மறுக்க முடியாது. தமிழக நுழைவாயில், சுதந்திரத்துக்குப் பின்னர், தென்பெண்ணையில் கெலவரப்பள்ளியில் கட்டப்பட்ட அணையைப்போல, காலந்தோறும் பல்வேறு அணைகள் இந்த நதியில் கட்டப்பட்டிருக்க வேண்டும். 1801-ம் ஆண்டுக்குப் பின்னர் பெண்ணையாற்றின் அனைத்துப் பகுதிகளும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. இதன் பின்னர், ஆங்கிலேயர் பெரிதும் கவனம் செலுத்திய ஆறுகளில் தென்பெண்ணையும் ஒன்று.  செழுமைமிகுந்த பெண்ணையின் வளங்களை முழுவதையும் சுரண்டிச் செல்லும் பேராசை, அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. இதற்கு தென்பெண்ணையின் தொன்மையான பாசன நீர்த்தடுப்புக் கட்டுமானங்களை, புதிய விஞ்ஞான வளர்ச்சியைப் பயன்படுத்தி புதிய கட்டுமானங்களாக ஆங்கிலேயர் மாற்றத் தொடங்கினார்கள.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்த நெடுங்கல் அணைக்கட்டு, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இதற்கு முன்னரே தொன்மையான அணை ஒன்று, தென்பெண்ணையில் இருந்ததது என்பற்கான ஆதாரத்தை பாரூர் ஏரி வழங்குகிறது. தமிழகத்தின் தொன்மையான ஏரிகளில் இதுவும் ஒன்று. பாரூர் ஏரியின் இன்றைய பரப்பளவு 688 ஏக்கர் நிலம். இப்போதும் இந்த ஏரியின் மீன் குத்தகை, ஒரு கோடி ரூபாயைத் தாண்டிவிடுகிறது என்ற தகவல் இதன் பிரமாண்டத்தைப் பற்றியதாக இருக்கிறது. இதில், இரண்டு போக்குக் கால்வாய்கள் இருக்கின்றன. தென்பெண்ணையிலிருந்து பெற்ற நீரை, அந்தப் பகுதி நிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் பொறுப்பை இந்தக் கால்வாய்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. நெடுங்கல் அணையின் இடது பக்கத்தில் ஒரு கால்வாய், அமைக்கப்பட்டுள்ளது, அதுதான், பாரூர் ஏரியைச் சென்றடைகிறது. கால்வாய் நீளம் 7 மைல். இதைத் தவிர, இடையில் ஏழு மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும், சுற்றியிருக்கும் குளங்கள் அனைத்தையும் நிரப்பி, நீர்ப்பாசனத்துக்குப் பயன்படும் திட்டத்துடனேயே காணப்படுகிறது. இவ்வாறு விரிந்த பாசன நிலப்பரப்பை ஒருங்கிணைத்தவிதம், ஒரு தொன்மையின் தொடர்ச்சி என்பதை எளிதில் புரியவைத்துவிடுகிறது. பாரூர் ஏரி ஆங்கிலேயர் காலத்தில் வெட்டப்பட்டதல்ல. ஆங்கிலேயர் எந்த ஏரிகளையும் வெட்டியதுமில்லை. மிகவும் எளிதாகப் புரிந்துகொள்ள, பெண்ணையாற்று நீர்தான் ஏரியின் ஆதாரம் என்றால், ஆங்கிலேயர் வருகைக்கு முன் நுற்றாண்டுகளாய் வாழ்ந்துவரும், பாரூர் ஏரிக்கு நீரைத்தேக்கி அனுப்பும் அணை இருந்திருக்க வேண்டும். இது ஒருவிதமான பாசனத் தடுப்பணையாக இருந்திருக்கக்கூடும்.

காவேரிபட்டினத்துக்குக் கிழக்கில் ஐந்து மைல் தொலைவில் அமைந்துள்ளது நெடுங்கல் அணை. இதனை தமிழ் மக்களின் நீர் மேலாண்மையின் வளர்ச்சித்தான் என்று குறிப்பிட முடியும். ஆங்கிலேயர் புனரமைத்த அணைகளில் இது மிகவும் முக்கியமானது. இதுதொடர்பான கட்டுமானம் பற்றியவை, பல்வேறு தகவல்களை நமக்குத் தருகின்றன. 1877-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1888-ம் ஆண்டில் அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 912 அடி. அணைக்கான கட்டுமானச் செலவு மொத்தம் 4 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் ஆகும். 11 ஆண்டு கால இடைவெளியில் செலவழிக்கப்பட்ட இதன் கட்டுமானச் செலவு, இன்றைய காலப் பின்னணியில் யோசிக்கும்போது, பணம் எவ்வாறு வீக்கமடைந்துள்ளது என்பது நமக்குப் பிரமிப்பைத் தருகிறது. இவையனைத்தும் ஆங்கிலேயரின் அன்றைய மாவட்ட நிர்வாகக் குறிப்புகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. பொய்யில்லாத கணக்குகளாக இன்னமும் ஆவணக் காப்பகங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

இந்த அணை பற்றிய விபரங்களும் அதன் பயன்பாடுகளும் அந்தப் பகுதி மக்களிடம் புகழ்மிக்க காவியமாகவே வாழ்ந்துவருகிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், விவசாயிகள் இயக்கத்தின் மூத்த தலைவருமான எம்.இலகுமையாவிடம் கேட்டபோது, ''இதன் தொன்மையான கட்டுமானங்கள் இன்றும் இருக்கின்றன என்றபோதிலும், அதன் புகழ்பெற்ற பாசன அமைப்புகள் பராமரிப்பு இல்லாமலும், ஆக்கிரமிப்புகளாலும் சிதைந்துபோய்விட்டன. இதனைப் புனரமைக்க புதிய திட்டங்கள் தேவை'' என்று வேதனையோடு குறிப்பிட்டார்.

(நதி ஓடும்)

சி. மகேந்திரன்