வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (25/03/2017)

கடைசி தொடர்பு:13:32 (26/03/2017)

இயற்கையையும், பழங்குடி இனத்தையும் அழிக்கும் அந்தமான் ரயில்வே திட்டம்..!

இவர்கள் அடர்ந்த காடுகளை அநாயசமாக வெறும் காலிலேயே கடப்பார்கள். ஆர்ப்பரிக்கும் கடலில் நெடுந்தூரம் நீச்சலடிப்பார்கள். உடைகள் இவர்கள் உடலை மறைக்காது. உலகில் இருக்கும் பழங்குடிகளின் "பழைய குடி"  இவர்கள். அழிவின் விளிம்பில் இருக்கும், அந்தமான் தீவுகளைச் சேர்ந்த ஜாரவா பழங்குடியினரின் ஒட்டு மொத்த அழிவிற்கும் வித்திடும் ஒரு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது மத்திய அரசு. 

அந்தமான் - நிக்கோபர் தீவுகளின் தலைநகரமான போர்ட் பிளேரில் இருந்து வட உச்சியிலிருக்கும் டிக்லிபூரை இணைக்க புதிய ரயில்வே திட்டத்தை முன்வைத்துள்ளது மத்திய அரசு. 240 கிமீ தூரத்திற்கு அமைக்கப்படவிருக்கும் இந்த ப்ராட் கேஜ் ரயில்வே பாதையின் திட்ட மதிப்பு தோராயமாக 2,413 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. தற்போதைய நிலையில், அந்தமானில் எங்குமே ரயில் தடம்  கிடையாது. சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து மட்டுமே.

அந்தமான் தீவில் புதிய ரயில்திட்டம்

போர்ட் ப்ளேயரிலிருந்து டிக்லிபூருக்கு இருக்கும் 350 கிமீ தூரத்தை சாலை வழியில் கடக்க 14 மணி நேரங்கள் ஆகிறது. கப்பலில் செல்ல முழுதாக ஒரு நாள் தேவைப்படும். ஆனால், இந்தப் புது  ரயில்வே திட்டம் அமல்படுத்தப்பட்டால் 3 மணி நேரங்களில் சென்றுவிடலாம். இந்தத் திட்டத்திற்கான ஆய்வறிக்கை 2014ம் ஆண்டு டிசம்பர் மாதமே மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்ப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அது அடுத்தக் கட்டத்தை எட்டாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது இந்தத் திட்டத்தை துரிதமாக அமல்படுத்த ஆர்வம் காட்டுகிறது மத்திய அரசு. இந்தத் திட்டத்தை சுற்றி நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன. 

இந்திய ரயில்வே துறை ஒரு புதிய ரயில் தடத்தை அமைக்கிறது  என்றால், அதிலிருந்து 12% லாபமாவது வர வேண்டும்  என்ற அடிப்படையை வைத்திருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தின் மூலம் 10 சதவீதம் வரை நஷ்டம் ஏற்படவே அதிக வாய்ப்புகள் இருக்கிறன. இருந்தும்,  "இத்திட்டத்தின் தனித்தன்மை மற்றும் வியூக முக்கியத்துவத்தை" கருத்தில் கொண்டு இதை செயல்படுத்த இருப்பதாக சொல்லியிருக்கிறது. 

இந்தத் திட்டத்திற்கான செயல்பாட்டு செலவுகள் மற்றும் ஏற்படும் நஷ்டத்தில் 50% அந்தமான் நிர்வாகம் ஏற்றுக் கொள்வதாக சொல்லியிருக்கிறது. இதன் மூலம், வருடத்திற்கு 4,50,000லிருந்து ஆறு லட்சமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்றும் அந்தமான் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், இதையெல்லாம் கடந்து இந்தியப் பெருங்கடலில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கத்தை அடக்க, இந்திய ராணுவத்தை பலப்படுத்த அந்தமானில் இந்தத் திட்டம் கொண்டு வருவது முக்கியம் என்ற அடிப்படையிலேயே மத்திய அரசு இந்த திட்டத்தில் முனைப்பு காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. 

அந்தமான் பழங்குடி ஜாரவா

டிக்லிபூரிலிருந்து சில நூறு கிமீ தூரத்திலிருக்கும், பர்மாவைச் சேர்ந்த கோகோ தீவுகளில் சீனா தன் ராணுவத் தளத்தை அமைத்திருக்கிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியாவும் அந்தப் பகுதியை பலப்படுத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல், 2015ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், இந்தியாவும், ஜப்பானும் பத்தாயிரம் கோடி  ரூபாயில் அந்தமானில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஒப்பந்தமிட்டது. இதையெல்லாம் ஒரு புள்ளியில் இணைத்தால், அந்தமானில் இந்தத் திட்டம் கொண்டு வருவதற்குப் பின்னணியில் இருக்கும் பெரும் அரசியல் புலப்படும். 

வளர்ச்சி, அரசியல் என எந்தக் காரணங்கள் இருந்தாலும் இதனால் பாதிக்கப்படவிருப்பது அந்தமானின் பழங்குடி இனம் தான். இது குறித்து சூழலியலாளர் நக்கீரன் பேசும் போது,

நக்கீரன் "உலகிலேயே மூத்த தொல்குடியினம் ஜாரவா தான். இப்போது மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் இந்த ரயில் திட்டம், ஜாரவா பழங்குடிகள் இருக்கும் நிலப்பரப்பில் தான் பெரும் பகுதி வரவிருக்கிறது. ஜாரவாக்கள் பொது மனித சமுதாய ஓட்டத்திலிருந்து ஒட்டுமொத்தமாக பிரிந்து தனியாக வாழ்பவர்கள். ஏற்கனவே, அவர்கள் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் அந்தமான் டேங்க் ரோட்டினால், அவர்களுக்குப் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. அந்த சாலையை பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தக் கூடாதென்று 2013 உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பிறகு, இப்போது கடுமையான விதிகளுக்குட்பட்டு அந்த சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இன்றைய தேதிக்கு நானூறுக்கும் குறைவான ஜார்வாக்களே உள்ளனர். அவர்கள் உடல் கூறுகள் நம்மிலிருந்து நிறையவே வேறுபட்டவை. நம்மிடமிருந்து அவர்களுக்குப் பரவும் வைரஸ் தொற்று மிக எளிதில் அவர்கள் உயிரைப் பறித்துவிடும். நினைத்துப் பாருங்கள், அவர்களின் காடுகளில் ரயில் போக்குவரத்து என்றால்.. மனித நடமாட்டம் அதிகரிக்கும். ரயில்நிலையங்கள், கடைகள், அதிகரிக்கும் மக்கள் கூட்டம், குப்பை... இந்தத் திட்டம் தொடங்கி, கட்டுமானம் முடிப்பதற்குள்ளாகவே அந்த இனம் அழிந்துவிடும். மேற்கிந்தியத் தீவுகளில் கொலம்பஸ் கால் வைத்த போது, அவர் சுட்டுக் கொன்ற பழங்குடிகளை விட , கொலம்பஸ் ஆட்களிடமிருந்து பரவிய "சிஃபிலிஸ்" என்ற வைரஸ் தாக்குதலால் உயிரிழந்த பழங்குடிகள் தான் அதிகம். அதே போல்தான், ஆஸ்திரேலியாவில் அபாரிஜன் இனம், வெள்ளையர்கள் கொடுத்த கம்பளிகளில் இருந்த கிருமிகளின் காரணமாக கொத்து கொத்தாக உயிரிழந்தார்கள். 

அந்தமானின் ஜாரவா, கிரேட் அந்தமானிஸ், சென்டினலிஸ் போன்ற பழங்குடிகளிடையே மனித இனத்தின் மொத்த வரலாறும் புதைந்துக் கிடக்கிறது. 60 ஆயிரம் ஆண்டுகளாக பேசப்பட்ட "போ" என்ற மொழி கடைசியாக அந்தமானில் உயிரிழந்த 85 வயது மூதாட்டியோடு அழிந்து போனது. இப்படியாக, இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மிகப் பெரிய வரலாற்றை நிச்சயம் அழிக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்று உணர்ச்சிப் பொங்க சொல்லி முடிக்கிறார். 

எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும், அதற்கு ஏதாவது எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டேயிருந்தால் எப்படி? வளர்ச்சி எப்படித் தான் சாத்தியமாகும்? என்ற கேள்வியை ஒரு தரப்பினர் முன்வைக்கின்றனர். சரி தான்... ஆனால், ஒரு இனத்தை அழித்து, ஒரு இடத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நினைப்பதை எப்படி வளர்ச்சியாக கருத முடியும்? இயற்கையை அழிப்பதும், இனங்களை ஒழிப்பதுமே தான் வளர்ச்சியின் தடங்கள் என்றால்... இதோ, இங்கு இன்னொரு இனம் அந்த வளர்ச்சிக்கு தங்களைக் காவு கொடுக்கத் தயாராகிவிட்டது. துப்பாக்கி சத்தங்களின் முன் இவர்களின் வில் அம்புகள் நிசப்தமாகிப் போகும் காலம் வெகு தூரமில்லை. 

அந்தமான் பழங்குடி ஜாரவா

 

1. சில ஆண்டுகளுக்கு முன்னர், சுற்றுலாப் பயணிகளும், அந்தமானின் சில காவலர்களும் ஜாரவா பழங்குடி மக்களை ஆட வைத்து குரங்குகளுக்கு வாழைப்பழம் வீசுவது போல உணவுகளை வீசிய காட்சி யூ - ட்யூபில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இன்றும் யூ-ட்யூபில் காணக் கிடைக்கும் அந்த வீடியோவைப் பார்த்தால் ஒரு மூதாதைய இனத்தை எவ்வளவு கேவலமாக நடத்தியிருக்கிறார்கள் என்பது தெரியும். 

2. ஜப்பானுடன் சேர்ந்து அந்தமானில் டீசல் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த இருக்கிறது. 

3. கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் எரிகா ஹேகல்பெர்க், ஜாரவா பழங்குடி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ஆப்ரிக்காவிலிருந்து கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெயர்ந்தவர்கள் ஜாரவாக்கள். கிட்டத்தட்ட 60 ஆயிரம் ஆண்டுகளாக, வெளியுலக தொடர்பில்லாமல் அந்தமானில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் டி.என்.ஏக்களை ஆராய்ந்தால் பல கொடிய நோய்களுக்கான மருந்துகளைக் கண்டறிய முடியும். மேலும், மனித இனம் தோன்றிய வரலாற்றையும் கண்டெடுக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், இவரின் ஆராய்ச்சிக்கு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. 

4. அந்தமானின் வடக்கு சென்டினல் தீவிலிருக்கும் செண்டினலிஸ் பழங்குடி முற்றிலுமாக வெளியுலகத் தொடர்பேயில்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் தீவை யாராவது நெருங்கினாலே அம்புகளை எய்து எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். 

 

 

5. 2004 யில் ஏற்பட்ட சுனாமியில் அந்தமானைச் சேர்ந்த ஒரு பழங்குடி கூட இறக்கவில்லை. பேரழிவை முன்கூட்டியே உணர்ந்து, மலைகளின் உச்சிக்கு சென்று பாதுகாப்பாக தங்கிவிட்டனர். 

                                                                                                                                                                                                 - இரா. கலைச் செல்வன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்