வெளியிடப்பட்ட நேரம்: 11:06 (27/03/2017)

கடைசி தொடர்பு:12:17 (27/03/2017)

இணையத்தில் ஆபாசப் படங்களை தடுக்க முடியுமா? கூகுளின் ஸ்ட்ரிக்ட் பதில்!

ஒரு கல்லூரி மாணவி. காதலிக்கிறார். காதலனின் ஏமாற்றுப் பேச்சுகளுக்கு மயங்குகிறார். அந்தப் பெண்ணுக்கே தெரியாமல் அவரை போதைக்குள்ளாக்கி, தன் உடல் இச்சைக்கு அவரைப் பாழாக்கி அதைப் படம்பிடித்து மிரட்டுகிறான். அந்தப் படத்தை இணையத்தில் உலவ விடுகிறான். தமிழகத்தின் ஏதோவொரு மூலையில் வாழும் அந்தப் பெண்ணின் உடல், உலகின் மற்றொரு மூலையிலிருக்கும் ஒரு ஆணின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. அந்த உடலைக் காட்சிகளின் வழி அவன் புணர்கிறான். தன் இச்சைகளை நிறைவேற்றிக் கொள்கிறான். ஏதும் செய்திடாத அந்தப் பெண்  உடை உடுத்தியும் நிர்வாணமாய் உணர்கிறாள், வாழ்வைத் தொலைக்கிறாள், சமயங்களில் தற்கொலை செய்து கொள்கிறாள். இதையெல்லாம் செய்த ஒருவன், தன் வாழ்வை மிக இயல்பாக வாழ்கிறான். இது ஒரு பெண்ணின் கதை மட்டுமே அல்ல. 

இரண்டாம் உலகையும் நிறைத்திருக்கும் இணையம், பெண்களுக்கு எதிரான மூன்றாம் உலகப் போரைத் தொடுத்திருக்கிறது. பெண்களைக் கேவலப்படுத்தும் ஆபாசக் காட்சிகள் மற்றும் வன்புணர்வுக் காட்சிகளை இணையத்தில் பதிவேற்றுவதைத்  தடுக்க வேண்டும் என்ற வழக்கு பிப்ரவரி இறுதியில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

ஆபாசப் படங்கள் இணையத்தில் தடுக்க முடியாது

நீதிபதிகள் எம்.பி.லோகூர் மற்றும் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு கூகுள் நிறுவனத்திடம் சில கேள்விகளை முன்வைத்தது. முக்கியமாக..." இதுபோன்ற காட்சிகளை பதிவேற்றம் செய்யும் போதே கண்டறிந்து அதைத் தடுக்க முடியுமா?" என்று கேட்டது. 

கூகுள் இந்தியாவின் பிரதிநிதி அபிஷேக் மனு சிங்வி, " அதற்கான வாய்ப்புகளே இல்லை. அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் அரசோ, அரசின் சார்பிலோ ஒருவர் அதை நீக்க வேண்டும் என்று சொன்னால் அடுத்த  36 மணி நேரத்திற்குள்  நீக்க முடியும்" என்று பதிலளித்திருக்கிறார். அபாரமான தொழில்நுட்ப வளர்ச்சிகள் நிறைந்துகிடக்கும் யுகத்தில் இதைத் தடுப்பதற்கான சாத்தியங்களே இல்லையா? என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது. 

யூட்யூபில் மட்டும் ஒரு நிமிடத்திற்கு 300 மணிநேர அளவிற்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. உலகம் முழுக்க ஒவ்வொரு நாளும் 30 மில்லியன் உபயோகிப்பாளர்கள், 5 பில்லியன் வீடியோக்களைக் காண்கிறார்கள். மேலும், லட்சக்கணக்கான ஆபாச இணையதளங்கள், லட்சக்கணக்கான வீடியோக்களை ஒவ்வொரு நாளும் பதிவேற்றிக் கொண்டுதானிருக்கின்றன. இன்றைய தொழில்நுட்பத்தைக் கொண்டு இதைத் தடுக்க வாய்ப்பே இல்லை என்கிறது கூகுள் தரப்பு. 

ஆபாசப் படங்கள் இணையத்தில் தடுக்க முடியாது

அதே சமயம் யூட்யூபில் Content ID என்றொரு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு டிஜிட்டல் கைரேகைப் போன்றது. காப்புரிமைப் பெற்ற வீடியோவை இதில் பதிந்துவிட்டால், அதே வீடியோவோ அல்லது அந்த வீடியோவின் வேறு வடிவங்களோ உலகின் எந்த மூலையிலிருந்தும் உரிமையாளர் அல்லாத ஒருவரால் பதிவேற்றம் செய்ய முடியாது. இதன் அடிப்படையில், பெண்களுக்கெதிரான ஆபாச வீடியோக்களைப் பதிவேற்றம் செய்வதைத் தடுக்க முயற்சி செய்யலாம் என சொல்லப்பட்டாலும், அதிலும் நிறைய தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாக சொல்கிறார்கள் வல்லுநர்கள். 

அமெரிக்கா போன்ற நாடுகளில் பாதுகாப்பு ஏஜென்சிகளோடு இணைந்து குழந்தைகளை ஈடுபடுத்தும் ஆபாசக் காட்சிகள், தீவிரவாத அமைப்புகளின் வீடியோக்கள் போன்றவற்றை பதிவேற்றுவதற்கு முன்பே தடுக்கும் முயற்சியில் இருக்கிறது கூகுள். மேலும், பதிவேற்றப்படும் விளம்பரங்களின் தன்மைகளை கூகுளால் கண்காணிக்க முடியும் போது இதையும் தடுக்க முடியும். ஆபாச இணையதள வர்த்தகத்தில் புழங்கும் பல ஆயிரம் கோடி ரூபாயே கூகுளை இதை செய்ய தடுக்கிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. 

காரணங்கள் எதுவாக இருப்பினும், இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள் தான். இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் ஓவியாவிடம் பேசிய போது,

ஆபாசப் படங்கள் தடுக்கப்பட வேண்டும் - ஓவியா" மனித சமுதாயத்தில் 'நிர்வாணம்' என்றைக்கு மறைக்கப்பட்டதோ, அன்றிலிருந்தே அதை ஊடுருவிப் பார்க்கும் தூண்டுதல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு காலத்திற்கும் அது ஒவ்வொரு வடிவங்களை எடுக்கும். அதன் இன்றைய வடிவம் தான் 'பார்ன்' என்று சொல்லக் கூடிய இந்த ஆபாச வீடியோக்கள். இன்றைய தொழில்நுட்பத்தைக் கொண்டு அதைத் தடுக்க முடியாது என்று சொல்வதை ஒரு வகையில் ஏற்றுக் கொண்டாலும், இதனால் பெண்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். 

தொழில்நுட்பத்தில் இதற்கான பதில் இல்லை என்றால், இதைக் கட்டுப்படுத்தும் மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும். 36 மணி நேரத்தில் அந்த வீடியோவை நீக்க முடியும் என்று சொல்லும் கூகுள், அந்த வீடியோ எங்கிருந்து பதிவேற்றப்பட்டது என்ற தகவல்களை நம் காவல்துறையிடம் பகிர வேண்டும். காவல்துறையும் குற்றவாளியை உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும். கடுமையான தண்டனைகளை விட, உடனடி தண்டனைகள் தான் முக்கியம். இப்படியான ஒரு வீடியோவைப் பதிவேற்றம் செய்தால், தண்டிக்கப்படுவோம் என்கிற பயம், குற்றம் செய்பவர்களுக்கு வர வேண்டும். அதுவே பல குற்றங்களைத் தடுக்கும். இது மட்டும் நடந்திருந்தால், சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் வினுப்ரியா என்ற கல்லூரி மாணவி இறந்திருக்க மாட்டார்.  காவல்துறையில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படாததால் தான் அந்தக் குற்றவாளிக்கு மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிடும் தைரியம் வந்தது. அந்த போட்டோ வினுப்ரியாவின் உயிரைப் பறித்தது. 

பெண்களின் உடலைப் புணரும் நோக்கிலேயே காணும் கண்கள்  குருடாகி, ஒரு சமூகப் பண்பாட்டு மாற்றம் என்றைக்கு வருகிறதோ, அன்று தான் இந்தப் பிரச்னை முடியும். இல்லாதபட்சத்தில் பதிவேற்றேம் செய்வதைத் தடுக்கும் தொழில்நுட்பம் வந்தாலும் கூட, அதற்கான மாற்று வழிகளை அந்தக் தவறான கண்கள் நிச்சயம் கண்டெடுக்கும்" என்று உணர்ச்சிப் பொங்க சொல்லி முடிக்கிறார்.

இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும் சில நிமிடங்களில் கூட, இணைய வழியில்  எத்தனையோ பெண்களின் வாழ்வு சீர்குலைக்கப்பட்டிருக்கும். வக்கிரத்தை எடுப்பவனை விட, அதைப் பார்ப்பவனும், பகிர்பவனுமே பெரும் பிழையானவர்கள். பிழைகள் நிறைந்த இந்த உலகில் பிழைக்க, பெண்கள் உக்கிரமாய்ப் போராட வேண்டிய தருணம் இது. ஆண்கள் தங்கள் வக்கிரங்களைத் தொலைத்து, பெண்களுக்குத் தோள் கொடுக்க வேண்டிய தருணமாகவும் இது இருக்கிறது.  தொழில்நுட்ப முன்னேற்றங்கள் "நம்" நலத்திற்கானது தானே அன்றி சீர்குலைக்க இல்லை. இந்த "நம்"மில் பெண்களும் அடங்குவார்கள் என்பதை ஆண்கள் உணர வேண்டும். 

ஆபாசப் படங்கள் இணையத்தில் தடுக்க முடியாது

1. கனடாவில், குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம், "ப்ராஜெக்ட் அரக்னிட்" (Project Arachnid) என்ற திட்டத்தின் கீழ் ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளது. இந்த மென்பொருள், குழந்தைகளை ஈடுபடுத்தும் ஆபாசக் காட்சிகளைக் கண்டறிந்து, அதைப் பதிவேற்றம் செய்தவருக்கு உடனடியாக அதை நீக்க ஒரு நோட்டீஸ் அனுப்புகிறது. அதை செய்யாதவர்கள் மீது, காவல்துறையினர் உதவியோடு நடவடிக்கைகளும் எடுக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 12 ஆயிரம் நோட்டிஸ்களை அனுப்பியிருக்கிறது. அதில் 98 சதவீதக் காட்சிகள், 22 மணி நேரத்திற்குள்ளாகவே இணையத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. 

2. கனடாவில் இருக்கும் மானிடோபா யூனிவர்சிட்டியைச் சேர்ந்த மெஹ்ர்தாத் (Mehrdad) மற்றும் பிங்க்லின்  லீ (Binglin Li) ஆகியோர் இணைந்து குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசக் காட்சிகளை பதிவேற்றம் செய்வதற்கு முன்னரே தடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்கு ப்ராஜெக்ட் சீஸ் (Project Cease) என்று பெயரிட்டுள்ளார்கள். " இது தொழில்நுட்பத்திற்கு சவால்விடும் தொழிநுட்பம்" என்று சொல்லி சிரிக்கிறார், ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவி பிங்க்லின் லீ. 

- இரா. கலைச் செல்வன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்