Published:Updated:

காட்டுக்கு நடுவே குளம் வெட்டிய அம்மணி அம்மாள்! : “கார்ப்பரேட் கொள்ளையும்... நாம் கொடுக்கும் விலையும்!” அத்தியாயம் - 10

காட்டுக்கு நடுவே குளம் வெட்டிய அம்மணி அம்மாள்! : “கார்ப்பரேட் கொள்ளையும்... நாம் கொடுக்கும் விலையும்!” அத்தியாயம் - 10

காட்டுக்கு நடுவே குளம் வெட்டிய அம்மணி அம்மாள்! : “கார்ப்பரேட் கொள்ளையும்... நாம் கொடுக்கும் விலையும்!” அத்தியாயம் - 10

காட்டுக்கு நடுவே குளம் வெட்டிய அம்மணி அம்மாள்! : “கார்ப்பரேட் கொள்ளையும்... நாம் கொடுக்கும் விலையும்!” அத்தியாயம் - 10

காட்டுக்கு நடுவே குளம் வெட்டிய அம்மணி அம்மாள்! : “கார்ப்பரேட் கொள்ளையும்... நாம் கொடுக்கும் விலையும்!” அத்தியாயம் - 10

Published:Updated:
காட்டுக்கு நடுவே குளம் வெட்டிய அம்மணி அம்மாள்! : “கார்ப்பரேட் கொள்ளையும்... நாம் கொடுக்கும் விலையும்!” அத்தியாயம் - 10

சுயசார்புடைய வளர்ச்சி என்ற கொள்கையை அரசின் கொள்கையாக அறிவித்துக்கொண்ட சுதந்திர இந்தியாவும், நீர்ப்பாசனத்துக்கான அணைகளைக் கட்டத் தொடங்கின. இதன் நோக்கங்களிலும் அணையின் கட்டுமானத் தன்மைகளிலும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்தன. ஆங்கிலேயர் காலத்தில் தென் பெண்ணையில் கட்டிய அணைகளைவிட, சுதந்திர இந்தியாவில் கட்டிய அணைகள் பிரமாண்டமானவை. ஒருவிதத்தில் பார்த்தால், சுதந்திரம் பெற்றதின் உத்வேகத்தை, அணைகள் பற்றிய தொழிற்நுட்ப வளர்ச்சியோடு இணைத்ததால், இந்தப் பிரமாண்டங்கள் உருவாகியிருக்கலாம். கிருஷ்ணகிரி அணையும், சாத்தனூர் அணையும் இவ்வாறான தொழிற்நுட்பத்துடன் கட்டப்பட்டவையாகும். புதிய வாழ்க்கையில் தொலைநோக்குப் பார்வையில் அணைகளைக் கட்டுவது அவசியம் என்பதை இந்திய அரசு உணர்ந்து, ஐந்தாண்டுத் திட்டங்களை வகுத்தது. அத்துடன், அதற்காக இவ்வாறான அணைகளுக்குப் பெருந்தொகையை ஒதுக்கியது.

கிருஷ்ணகிரிக்கு ஏழரை மைல் தெற்கு காவிரிப்பட்டினத்துக்கு வடமேற்கு, நான்கு மைல் தொலைவில், குன்றுகளும் மலைத் தொடர்களும் அமைந்த பகுதியில், மிகுந்த நுட்பத்துடன் கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டுள்ளது. இது, கட்டப்படுவதற்கு முன்னரே பெண்ணையாற்றின் இந்தப் பகுதிக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. எல்லா நீர்வளம் நிறைந்த பகுதிகளையும் ஆதிக்க சக்திகள் கைப்பற்றி வைத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன. வளம்கொழித்த இந்த நிலப்பகுதியைக் கைப்பற்றுவதில் ஆதிக்கச் சக்திகளுக்கிடையே பல்வேறு போட்டிகள் நிகழ்ந்தன. இதனால் தொடர்ந்த போர்களையும், இந்த மக்கள் சந்தித்தார்கள். போருக்கும் கோட்டைகளுக்கும் நெருக்கமானத் தொடர்பு உண்டு. காவிரிப்பட்டினத்தில், பல்வேறு யுத்தங்களை நடத்திப் பார்த்த ஒரு கோட்டை இன்று அழிந்துவிட்டது. கோட்டை இருந்ததற்கான அடையாளமாக இன்று இருப்பது, ஓரே ஒரு கோயில்தான். அந்தக் கோயிலின் பெயர் கோட்டைக்கோயில். அழிவின் இறுதிக்கட்டத்திலிருந்த கோட்டையின் கற்களைக்கொண்டு, இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதனால், இதற்குக் கோட்டைக் கோயில் என்று பெயர்வைத்துள்ளார்கள். முற்றாக அழிந்து, முழு அடையாளத்தையும் இழந்த கோட்டை, நமக்குப் பல்வேறு தகவல்களைச் சொல்கிறது. தென்னகத்தில் மாபெரும் சக்தியாக, ஹைதர் அலியும் திப்புவும் திகழ்ந்த காலத்தில், இந்தக் கோட்டை முக்கியப் பங்காற்றியுள்ளது. முதல் மைசூர் போர், மூன்றாம் மைசூர் போர் காலங்களில் மிகுந்த பாதிப்பு இந்தக் கோட்டைக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்கிலேயரிடமும், ஹைதர் அலியிடமும், திப்பு சுல்தானிடம் மாறிமாறி இந்தக் கோட்டை இருந்தது. இவை அனைத்துக்கும் பெண்ணையின் நீர்வளமும், அதன்மூலம் கிடைத்த வருமானமும்தான் காரணம்.

ஆதிக்காரர்களின் கோட்டைக்கும் பாதுகாப்புக்கும் பயன்பட்ட மலைகளும் குன்றுகளும் சுதந்திரத்துக்குப் பின்னர், அணை கட்டுவதற்குப் பயன்பட்டது சுவையான நிகழ்வாகும். மலைகளுக்கிடையே மிகுந்த நுட்பத்துடன் அணை கட்டப்பட்டுள்ளது. தென் பெண்ணையில் கட்டப்பட்ட அணைகளில், காவிரிப்பட்டினத்துக்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில், இரண்டு மலைகளுக்கு இடையில், முக்கால் கிலோமீட்டர் தூரத்தில் அமைந்த கிருஷ்ணகிரி அணைக்கட்டு முக்கியமானதாகும். இந்த அணை, 7,500 ஏக்கர் பரப்பளவுக்குப் பாசன வசதியை செய்துகொடுக்கிறது. 1959-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணைக்கான அன்றையச் செலவு, ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய். சுதந்திர இந்தியாவின் சாதனைகளில் ஒன்றாகக் கட்டப்பட்ட இந்த அணையின் சாத்தியம் குறித்து ஆங்கிலப் பொறியாளரான தாம்சன் என்பவர் கனவு கண்டார். 1875-ம் ஆண்டிலேயே அதற்கான திட்டத்தை இவர் வகுத்தளித்தார். நெடுங்கல், திருக்கோவிலூர், சாத்தனூர் முதலான அணைக்கட்டுகள் பின்னர் கட்டப்பட்டன. 1955-ம் ஆண்டில் கட்டத் தொடங்கிய அணையை முடிக்க நான்காண்டுகள் தேவைப்பட்டன. அணையின் உயரம் 75 அடி. நீளம் 3,251 அடி. 241 கோடி கன அடி தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் ஆற்றல் பொருந்திய அணை இது. இதனால், 7,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. சுதந்திரத்துக்குப் பின்னர் கட்டப்பட்ட இந்த அணைப் பற்றிய தகவல், ஒரு காவியத்தைப்போல இந்தப் பகுதி மக்களிடம் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

கிருஷ்ணகிரி அணையைப்போலவே, வறண்ட திருவண்ணாமலை மாவட்டத்தின் தாகத்தைத் தணிப்பதற்கு உருவாக்கப்பட்ட மற்றொரு அணைதான் சாத்தனூர் அணை. கல்வராயன் மலைக்கும் தென் மலைக்கும் இடையில் செங்கம் கணவாயை ஒட்டி இது அமைந்துள்ளது. இந்தச் சூழலைப்போல அரிய மலை சூழ்ந்த பகுதி பெண்ணையாற்றங்கரையில் எங்குமே இல்லை. இந்தப் பின்னணியைக் கணக்கில் கொண்டுதான் சாத்தனூர் அணை கட்டப்பட்டுள்ளது. சாத்தனூர் என்னும் ஊருக்கு நான்கு மைல் தூரத்தில், பூண்டி மலைக் கணவாயின் இடையில் ஒரு நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. அணையின் நீளம் 2,583 அடி, உயரம் 143 அடி, 700 கோடி கன அடி தண்ணீர் தேக்கி நிற்கவைக்கும் வசதிகொண்டது. அணையைச் சுற்றிய பகுதிகள் அனைத்தும் மலைப் பிரதேசங்கள். இதனால் அணையில் நேரடியாக நீரை எடுத்துச்செல்லும் கால்வாய்களை வெட்ட முடியவில்லை. நாலரை மைல் தூரத்துக்கு மற்றொரு கால்வாய் வெட்டப்பட்டு, மீண்டும் அணையில் நீரைச் சேமிப்பதற்கான ஏற்பாடு சாத்தனூர் அணையில் அமைக்கப்படடுள்ளது. இதன் பின்னர் இங்கிருந்து, பாசனத்துக்கான நீர், கால்வாய்கள் மூலம் அனுப்பப்படுகிறது. 22 மைல் தூரத்துக்கு ஒரு கால்வாய் பிரிந்துசென்று செங்கம், திருவண்ணாமலை பகுதிகளுக்கு தண்ணீரைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. இதனால் 16 ஆயிரத்து 700 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன. இதைப்போலவே, அணையிலிருந்து திருக்கோயிலூர் அணைக்கும் நீர் பங்கிட்டு அனுப்பப்படுகிறது. இதனால் திருக்கோயிலூர் வட்டத்தில் 3 ஆயிரத்து 138 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. சாத்தனூர் அணை கட்டும் திட்டத்தை ஆங்கிலேயர் ஆராய்ந்து அதற்கான திட்டத்தை 1903-ம் ஆண்டில் வகுத்தார்கள். ஆனால், அதனை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. 1954-ம் ஆண்டில் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, அணையைக் கட்டத் தொடங்கினார்கள். 1959-ம் ஆண்டு அணை தொடங்கிவைக்கப்பட்டது.

சாத்தனூர் அணையைச் சுற்றிலும் தென் பெண்ணையோடு இணைந்த வரலாற்றுச் சுவடுகள் பதிந்துகிடக்கின்றன. காலம் காலமாக மக்கள் கொண்டாடும் விழாக்கள், காடுகளையும் நதிகளையும் வழிபட்டு, காப்பாற்றும் நமது தொன்மையான வாழ்க்கையை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. செங்கம் வட்டத்தில் காட்டுப் பகுதியில் பொரசப்பட்டு என்ற ஊரில் பெண்ணையாறு சிறுகுன்றுகளைப் பிளந்து கொண்டு செல்கிறது. அங்குள்ள மீப்பத்துறையில், ஆடிமாதம் பெண்ணை ஆற்றுக்கு விழா எடுக்கிறார்கள். விவசாயிகள் ஒன்றுகூடி, வேப்பமரம், புங்க மரம், நாவல் மரம் ஆகியவற்றின் விதைகளை காடுகளுக்குக் கொண்டுசென்று... பம்பை, உடுக்கை ஆகியவற்றை அடித்து விதைகளைக் காட்டில் புதைத்துவிட்டு வருகிறார்கள். இது, தொன்மையான தமிழ் மக்களின் இயற்கை நேயத்தின்  தொடர்ச்சியாக உணரப்படுகிறது. சாத்தனூர் அணையை ஒட்டிய செங்கம் பெண்ணையாற்றால் சிறப்புற்ற ஊர். மலைபடுகடாம் என்னும் சங்கப்பாடலில் செங்கண்மா என்றே இந்த ஊர் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கணவாய், செங்கமா கணவாய் என்றே கூறப்படுகிறது. இந்த ஊர், பெரும்பாணாற்றுப் படையின் தலைவர் செங்கண் மாத்துவேள் என்பவரின் தலைநகரமாகவும் அமைந்துள்ளது. பெண்ணையாற்றின் நீரைப்போலவே கருணை கொண்டவர்கள், பெண்ணையாற்று மக்கள் என்பதற்கு நிறைந்த உதாரணங்கள் இருக்கின்றன. வள்ளல்கள் பலர், இதன் கரையில்தான் வாழ்ந்தனர் என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும்... மறுபுறம், பிறர் நலத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் சமுதாய மரபை இந்த மக்கள் சிறந்த ஒழுக்கமாகக் கடைப்பிடித்து வந்துள்ளனர். இதில், கருணையும் பிறர் நலத்தில் தொலைநோக்கு அக்கறையும் கொண்ட பெண்ணின் வாழ்க்கை தனித்த ஈர்ப்பைத் தருகிறது.

சென்னை சமுத்திரம் என்னும் ஊர், தென் பெண்ணை நீர் வாழும் சாத்தனூர் அருகே அமைந்த செங்கத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் 17-ம் நூற்றாண்டில் பிறந்தவர்தான் அம்மணி அம்மாள். இவர், துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. பெண்ணையாற்றங்கரையில் வாழ்ந்த இவர், மைசூரு நாடு வரையிலான பல சிற்றரசர்களைச் சந்தித்து, அவர்களிடம் பொருள் உதவி பெற்று திருவண்ணாமலை திருக்கோயிலில் ஒரு கோபுரத்தை அமைத்துள்ளார். இன்றும் அம்மணி அம்மாள் கோபுரம் என்னும் பெயரில் இது வாழ்ந்து கொண்டிருக்கிறது. தென் பெண்ணைக் கரையில் அம்மாப்பேட்டை என்னும் ஊரை இவர் அமைத்துள்ளார். இவை எல்லாவற்றையும்விட அம்மணி அம்மாளின் தனிச்சிறப்பு புலி, சிறுத்தை, கரடி முதலிய விலங்குகள் நிறைந்த அடர்வனத்தின் நடுவில் குளம் ஒன்றை வெட்டி வைத்ததுதான். நீர் எதுவுமற்ற வறண்ட கோடைக்காலத்தின் தன்மையை உணர்ந்து, அந்த விலங்குகளின் மீது அன்புகொண்டு குளத்தை வெட்டி வைத்துள்ளார் அம்மணி அம்மாள். இன்றும் இந்த இடம் அம்மணியம்மாள் குளம் என்று அழைக்கப்படுகிறது. செங்கத்துக்கு அருகில் ஒரு பாறை உள்ளது. அதை, அம்மணி அம்மாள் பாறை என்றே அழைக்கிறார்கள். 

வரலாற்றுப் புகழ்மிக்க பெண்ணை நதியைப் பல்வேறு புலவர்கள் பல்வேறு விதத்தில் வர்ணனை செய்துள்ளார்கள். பெண்ணின் அழகிய கூந்தலின் கருமையைப்போலத் தென்பெண்ணையின் நுண்மைக் கரும் மணல் அமைந்திருந்ததாகச் சங்கப்பாடல் ஒன்று விவரிக்கிறது. தென் பெண்ணை பாயும் லிப் பகுதி நெல் மிகுந்து விளையும் வளமிக்க பூமியாகும். செஞ்சாலி என்னும் தனித்த சிறப்புமிக்க நெல், பெண்ணை நதிக்குச் சொந்தமானது. நவீன விவசாய வாழ்க்கை, பலவற்றை அழித்துவிட்டது. அப்படி அழிந்துபோன நெல்மணிகளில் செஞ்சாலியும் ஒன்று. இதன் வயல்வெளிகளில் கரும்புகளும், பாக்கு மரங்களும் செழிப்புடன் வளர்ந்தன. விறால் மீன்களும் வாளை மீன்களும் துள்ளி விளையாடும் பேரழகை, பசுமையான வயல்வெளிகளில் காணமுடிந்தது. சுவைமிகுந்த வாழையின் கருங்கதலி வகையினம் நிலமெங்கும் ஓங்கிச் செழித்திருந்தன. இந்த ஆதாரங்கள் அனைத்தும் சங்கத்திலும் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. தென் பெண்ணை கடலில் கலப்பதற்கு முன்னர் உருவாக்கி வைத்திருக்கும் நிலப்பரப்பு மருதத்தின் பேரழகையும், நெய்தலின் சாயலையும் ஒருங்கிணைத்து நிற்கிறது. தமிழின் சிறப்பு இலக்கண விதியான திணைக் கோட்பாட்டை அறிந்தவர்களால்கூட, இந்தப் பகுதியில் எது மருதம், எது நெய்தல் என்று பகுத்துச் சொல்ல முடியாத இயற்கையின் இணைக்கம், இதன் புவியழகில் இணக்கமுற்று நிற்கிறது. விழுப்புரம், கடலூர் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த நிலப்பகுதி தென் ஆர்க்காடு மாவட்டம் என்ற பெயரில்தான் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிர்வாகம் செய்யப்பட்டது. அவர்கள் காலத்தில் இந்த நிலப்பரப்பு கூடுதல் முக்கியத்துவத்தைப் பெற்றதற்கு இதன் நீர்வளம்தான் காரணமாகத் தெரிகிறது. இங்கு அமைந்த தென் பெண்ணையின் இணையாறுகளும், துணையாறுகளும் நீர்வளம் கொண்டவை. கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைக்கம்பளம் விரித்ததைப்போன்ற வயல்வெளிகள் வியாபார பேரசையில் இருந்த ஆங்கிலேயரை மயங்கவைத்தது. முதலில் நிலத்தை அளவிடும் துறையை உருவாக்கி நிலத்தை அளக்கத் தொடங்கினார்கள். பெண்ணையின் அன்றைய தென் ஆர்க்காடு மாவட்டத்தில் அவர்கள் கணக்குப்படி நன்கு நெல்விளையும் வயல்களின் மொத்த பரப்பு, 6,13,785 ஏக்கர். மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில், இது 46.7 சதவிகிதமாகும்.

ஆங்கிலேயரின் கழுகுப் பார்வையில் பெண்ணை நதியின் கடல் சார்ந்த பிரதேசம் சிக்கிக்கொண்டது. வளம் கொழிக்கு இந்த நிலப்பகுதி யோசிக்கத் தொடங்கி, சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிக்கும் திட்டத்தில் இறங்கியது. ஆதாயம் கிடைக்காத எதிலும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை. ஆனால், இங்கு முதலீடு செய்வதில் ஆங்கிலேயர் எந்தவிதமான தயக்கத்தையும் காட்டவில்லை. ஆசை காட்டி மோசம் செய்வதில் ஆங்கிலேயரின் தந்திரம் உலகப் புகழ்பெற்றது. நீர்வளம் நிரம்பிய தென் பெண்ணையில் எத்தகைய அளவில் முதலீடு செய்தாலும், தங்கள் செய்த முதலீட்டைவிட, பல மடங்கு அதிகமாகத் திரும்பப் பெற்றுவிடலாம் என்பது ஆங்கிலேயருக்கு நன்கு தெரிந்திருந்தது. புதிய திட்டம் ஒன்றை ஆங்கிலேயர் உருவாக்கினர். அதுதான் பெண்ணையாற்றிலும் அதனுடைய துணை நதிகளிலும் அணைகளை உருவாக்கும் திட்டம். தென் பெண்ணையாற்றிலும் அதன் துணை, இணை ஆறுகளிலும் ஆங்கிலேயர் கட்டிய அணைகள் நம்மைப் பெரிதும் வியப்படைய வைக்கின்றன என்றபோதிலும் திருக்கோயிலூர் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ள அணை ஒன்று இருப்பதை அறிய முடிகிறது. இதனை நேரில் பார்த்து, தகவல்களைச் சேகரிக்கும் ஆர்வம் ஏற்படுகிறது. இந்த அணையைப் பற்றியும் பெண்ணையைப் பற்றியும் அறிந்த அறிஞர்கள், ஆய்வாளர்களின் கூட்டம் ஒன்றை திருக்கோயிலூரில் நடத்தப்பட்டது. அதை, தோழர்கள் ஏ.வி.சரவணன், சௌரிராஜன், கலியபெருமாள், வளர்மதி போன்றவர்கள் பெரும் முயற்சிசெய்து கூட்டியிருந்தார்கள். அதில் கலந்துகொண்டு சிறந்த தெளிவை உருவாக்கியவர், கவிஞர் பெண்ணை வளவன். அவருக்கு வயது 74. பெண்ணையாற்றுக் கரையிலேயே பிறந்து, வளர்ந்த கவிஞர். தன் பெயரையே, பெண்ணை வளவன் என்று மாற்றிக்கொண்டார். அவர், பல்வேறு அரிய தகவல்களைக் கூறினார். கரை ஓரத்தில் ஆற்று நீரில் சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கும் பரிசில் கூட்டங்களிலிருந்து தனது தகவல்களைக் தொடங்கினார்.

 - சி. மகேந்திரன்